

அரண்மனையில் துள்ளி விளையாடிக்கொண்டிருந்த யாழினி, அந்தப்புரத்தின் ஓர் அறைக்குள் ஒதுங்கி இருக்கிறாள். ஆம்! அவள் பருவமடைந்துவிட்டாள். அறையின் வாசலருகே எட்டிப் பார்த்தாலே மகாராணியாரின், "எங்கே போகிறாய்?" என்ற கட்டளைக் குரல் அவளைக் கட்டிப்போட்டுவிடுகிறது.
ஆதலால், அவள் அரண்மனைக்குள்ளும் அரண்மனைத் தோட்டத்திற்குள்ளும் நடமாட முடியாமல் தவித்தாள். அங்குதான் அவள் வழக்கமாகப் பேசும் கிளிகளும், புறாக்களும், மயில்களும் காத்திருக்கும். மலர்களும் பூத்துக் காத்திருக்கும்; மலர்களைப் பறிப்பதுகூட அவற்றிற்கு வலிக்காமல் மென்மையாகப் பறிப்பாள். ஆதலால், "தங்கள் மீது யாழினியின் கரங்கள் படாதா?" என மலர்களும் ஏங்கிக் காத்திருக்கும். அந்த அளவுக்கு எல்லா உயிர்களிடத்திலும் அன்பை மட்டுமே பாராட்டுபவள் அவள்.
தோழிகளுடன் எவ்வளவு நேரம்தான் உரையாடுவது? மிகவும் சலித்துக்கொள்வாள். தோழியிடம், "அடியே தர்ஷிணி! மகாராணியாருக்குத் தெரியாமல் தோட்டம் பக்கம் சென்று வரலாமே? அங்கு போனால் இனிமையான தென்றல் வீசும்; பறவைகளின் 'கீச்.. கீச்..' குரல்கள் கேட்கலாம். அதையெல்லாம் கேட்டு எத்தனை நாட்களாயிற்று?" என்று கவலை தோய்ந்த முகத்துடன் கேள்வி எழுப்பினாள்.
"அதற்கென்ன? மகாராணியார் அறைக்குள் இருக்கிறாரா என்று பார்க்கிறேன்," என அறைக்குள் எட்டிப் பார்த்தாள் தோழி தர்ஷிணி. மகாராணியார் அங்கு இல்லை. அவ்வளவுதான், உற்சாகம் மேலிட, "இளவரசி! ஓடி வா!" என்று கூப்பிட்டாள். தோழியின் குரலுக்குக் காத்திருந்தவள், மானாய் துள்ளிக் குதித்து ஓடி வந்தாள்.
அரண்மனைத் தோட்டத்திற்குள் சென்றார்கள். யாழினியின் முகத்தில் மகிழ்ச்சி தாண்டவமாடியது. "எத்தனை நாட்களாயிற்று இந்த இனிமையான சூழ்நிலையை அனுபவித்து" என்று எண்ணிக்கொண்டே வந்தவளின் எதிரே, ஓர் அழகான இளங்காளை வாலிபன் தென்பட்டான். அந்த வாலிபனின் கண்கள் குறுகுறுவென இளவரசியின் கண்களை ஊடுருவின.
இளவரசிக்கு ஏதோ இனம்புரியா உணர்வு மேலிட்டது. அவள் மனது அவளிடம் இல்லாமல் எங்கோ பறப்பது போன்ற உணர்ச்சிப் பிழம்பானாள். நாணத்தால் கண்களைச் சற்றே மூடினாள்; ஓரக்கண்ணால் வாலிபனை நோக்கினாள். பற்றிக்கொண்டது காதல் நோய்! இருவரின் விழிகளும் உணர்வுகளைப் பரிமாறிக்கொண்டன.
சட்டெனச் சுதாரித்துக்கொண்டு, "யாரப்பா நீ? அந்தப்புரத்துத் தோட்டத்தில் உனக்கென்ன வேலை?" என மடக்கினாள்.
வாலிபன், "பெண்ணே! நான் தோட்டக்காரனின் மகன். தந்தைக்கு உடல்நலம் குன்றியதால் தோட்டப் பராமரிப்பு வேலையைப் பார்க்க வந்துள்ளேன்," என்று விளக்கமளித்தான்.
"சரி! சரி! இன்று ஒரு நாள் மட்டுமா? அல்லது...?"
"தந்தைக்கு உடல்நலம் நன்றாக ஆகும்வரை நான் வருவேன்!" என்றான். இளவரசியின் முகம் மாறியதை தோழி தர்ஷிணியும் பார்த்தாள். "ஆகா! இளவரசிக்குக் காதல் நோய் பற்றிக்கொண்டது" என்று தீர்மானித்தாள்.
மகாராணியார் இல்லாத நேரத்திலெல்லாம் தோட்டத்திற்குச் செல்வதும், வாலிபன் வீரசேகரனைப் பார்ப்பதும், காதல் நோய் பெருகி ஒருவரை ஒருவர் தொட்டு விளையாடுவதும், கொஞ்சுவதுமாய் எல்லை மீறுவதைக் கண்டு தோழி துணுக்குற்றாள். "இப்படியே விட்டால் நாளை நம் மீது பழி வந்துவிடுமே! மன்னரின் கோபத்திற்கு ஆளாகி நாம் அல்லவா தண்டனைக்குள்ளாவோம்?" என்று பயந்தாள். இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டுமென்று தீர்மானித்தாள்.
இளவரசி - தோட்டக்காரன் மகன் வீரசேகரன் நெருக்கம் பற்றி இன்னொரு தோழியின் காதில் கிசுகிசுத்தாள். அந்த கிசுகிசு அப்படியே அரண்மனை முழுவதும் பரவி மகாராணியின் காதுகளில் விழுந்தது.
"நமது அந்தஸ்து என்ன? தோட்டக்காரனா?" என மகாராணியார் கொதித்தார். மன்னரிடம் தனது மகளின் காதல் நோய் பற்றி ஆலோசித்தார். மன்னர் உடனே, "யார் அவன்? அவன் தலையைக் கொய்கிறேன்!" என்று வாளெடுத்தார்.
மகாராணியார் தடுத்தார். "காதல் நோய் முற்றிவிட்டது, இதைப் பக்குவமாக கையாள வேண்டும். நீங்கள் போர்க்களத்தில் முரட்டுத்தனமாகச் செய்வது போல இதைச் செய்ய முடியாது," என்று எடுத்துரைத்தார். தோட்டக்காரனைப் பிடித்து வர உத்தரவிட்டார். விசாரணை நடைபெற்றது.
"உன் மகன்தானே என் மகளின் மனதைக் கெடுத்தது?" என்றார் மன்னர்.
"இல்லை மகாராஜா! அவனின் வயது அப்படி; அதேபோல் இளவரசியின் வயதும் அப்படிச் செய்துவிட்டது," என்று வாதாடினான்.
"அவனுக்கு என்ன தண்டனை வழங்கலாம்? நீயே முடிவு சொல்!"
"அவன் தலையைக் கொய்துவிடலாம் மகாராஜா!" என்றான் தோட்டக்காரன்.
"ஓர் தந்தையே மகனைக் கொல்லச் சொல்வதா?" என மன்னர் யோசித்தார். இதில் ஏதோ ரகசியம் அடங்கியிருக்கிறது எனத் தீர்மானித்தார். மீண்டும் விசாரித்தார்: "ஒழுங்காக உண்மையைச் சொல்! அவன் உன் மகன்தானா?"
"நான் இந்த அரண்மனைக்கு வருவதற்கு முன்பு இன்னொரு தேசத்து அரண்மனையில் தோட்ட வேலை செய்து கொண்டிருந்தேன். தோட்டத்தில் ஒருநாள் ஒரு குழந்தை அழுதுகொண்டிருந்தது. அதை நான் எடுத்து வளர்த்து வந்தேன். அவன்தான் இவன்," என்றான் தோட்டக்காரன்.
மகாராஜா ஆலோசித்தார். ஒற்றர் படையை அனுப்பி அந்த அரண்மனை விவரங்களைச் சேகரித்து வரச் செய்தார். சில தகவல்கள் உறுதியானது. இடையில், இளவரசி யாழினி தன் தோழியிடம், "அடியே! என் காதலை ஊரறியச் செய்துவிட்டாயே! நீயெல்லாம் உயிர்த்தோழியா? இப்போது வீரசேகரனுக்கு மன்னர் என்ன தண்டனை தரப்போகிறாரோ?" என்று பயந்தாள்.
தர்ஷிணியோ, "ஆம், நான் உயிர்த்தோழிதான். உயிர்த்தோழியாக இருந்தால் மட்டுமே தலைவியின் உள்ளக் கிடக்கையை நல்வழிப்படுத்த முடியும்," என்று வாதாடினாள்.
ஒற்றர்களின் தகவல்கள் மகாராஜாவின் காதுகளுக்குக் கொண்டு செல்லப்பட்டன. வீரசேகரன் உண்மையில் ஓர் இளவரசன் என்பது உறுதியானது. மன்னர் திருப்தியடைந்தார். யாழினி - வீரசேகரன் திருமணம் ஆடம்பரமாக நடத்தப்பட்டது.
திருமணத்தின்போது யாழினியின் காதில் தர்ஷிணி, "காதல் நோய் பீடிக்கப்பட்டவர்களுக்கு மிகவும் பாதுகாப்பானது அதனை ஊரறியச் செய்வதுதான்; அதைத்தான் நான் செய்தேன்," என்று கிசுகிசுத்தாள். இதனைத்தான் நம் திருவள்ளுவரும் இன்பத்துப்பாலில்,
"காமம் உழந்து வருந்தினார்க் கேமம்
மடல்அல்லது இல்லை வலி!"
என்று கூறியுள்ளார்.