

கோவில் என்றாலே விபூதி, குங்குமம், லட்டு மற்றும் சர்க்கரை பொங்கல் ஆகியவைதான் நம் நினைவுக்கு வரும். ஆனால், இங்கு ஒரு கோவிலில் பாரம்பரிய பிரசாதங்களுக்குப் பதிலாக பீட்சா, பர்கர், பாஸ்தா மற்றும் பிறந்தநாள் கேக்குகள் FSSAI தரச் சான்றுடன் பிரசாதமாக வழங்கப்படுகின்றன. இந்த வினோத கோவிலின் முழுத் தகவல்களை படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்!
கோவிலுக்கு சென்றால் வழக்கமாக சிவன் கோவில் என்றால் விபூதி, வில்வ இலை, அம்மன் கோயில்களில் குங்குமம் போன்றவையும், பெருமாள் கோவிலுக்குச் சென்றால் துளசி தீர்த்தம், சந்தனம் போன்றவையும் பிரசாதமாக வழங்கப்படும்.
அத்துடன் சாப்பிடுவதற்கு பிரசாதமாக பழனி கோவில் என்றால் பஞ்சாமிர்தம், சபரிமலை ஐயப்பன் கோவில் என்றால் அரவணை பாயாசம், பெருமாள் கோவில் என்றால் சர்க்கரை பொங்கல், மிளகு புளியோதரை, தயிர் சாதம், சுண்டல் என்றும், வெண்பொங்கல் லட்டு என விதவிதமாக பிரசாதங்கள் வழங்கப்படும்.
ஏன் திண்டுக்கல் தாடிக்கொம்பு சுந்தரராஜப் பெருமாள் ஆலயத்தில் இருக்கும் தன்வந்திரி பகவான் சன்னிதியில் லேகியம் மற்றும் தைலம் கூட பிரசாதமாக வழங்கப்படுகிறது. நாமும் அவற்றை மகிழ்ச்சியுடன் பெற்று சாப்பிட்டு விட்டு வருவோம். ஆனால் சென்னை அருகே படப்பையில் அமைந்துள்ள ஸ்ரீ ஜெயா துர்கா பீடம் கோவிலில் இம்மாதிரியான பிரசாதங்கள் எதுவும் தரப்படுவதில்லை. மாறாக இன்றைய இளைஞர்கள் மிகவும் விரும்பும் பீட்சா, பாஸ்தா, பர்கர், பிரவுனி, கேக் போன்றவையே பிரசாதமாக வழங்கப்படுகிறது. இதனால் இன்றைய இளைஞர்கள் அதிகம் இக்கோவிலுக்கு வருகின்றனர். தங்களுக்குப் பிடித்த உணவுகளை சாப்பிடுவதுடன் அம்மனையும் தரிசித்த மாதிரி ஆகிவிட்டது என்று நினைத்து இங்கு அதிக கூட்டம் வருகிறது.
தரமான மற்றும் சுகாதாரமான பிரசாதம் தயாரிப்பு:
இக்கோவிலில் பாரம்பரிய பிரசாதங்களுக்கு பதிலாக பர்கர், சாண்ட்விச், பிரவுனி, பாஸ்தா போன்றவை அம்மனுக்கு படைக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகின்றன. இந்தக் கோவிலில் சமையலறையில் தானியங்கி இயந்திரங்கள் (Vending Machines) வைக்கப்பட்டு மிகவும் சுகாதாரமான முறையில் தயாரிக்கப்படுகிறது. பக்தர்கள் டோக்கன் பெற்று தங்களுக்குத் தேவையான பர்கர் அல்லது பாஸ்தாவைத் தேர்ந்தெடுத்து தங்கள் கைகளாலேயே அம்மனுக்குப் படைக்கலாம்.
அப்படி படைக்கப்பட்ட பிரசாதங்கள் திரும்பவும் பக்தர்களுக்கே தரப்படுகிறது. இதனால் இன்றைய இளைஞர்கள் கூட்டம் இக்கோவிலுக்கு நிறைய படையெடுக்கின்றனர்.
தரச் சான்றிதழ் (FSSAI approved):
இங்கு வழங்கப்படும் நவீன பிரசாதங்கள் அனைத்தும் தூய்மையான முறையில் தயாரிக்கப்பட்டு, இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாட்டு ஆணையத்தின் (FSSAI) சான்றிதழ் பெற்றவை ஆகும். மேலும் இந்த உணவுப் பொட்டலங்களின் மீது தயாரிப்பு தேதி மற்றும் காலாவதி தேதியும் துல்லியமாக அச்சிடப்பட்டிருக்கும்.
பிறந்தநாள் கேக்:
கோவிலுக்கு வழக்கமாக வரும் பக்தர்களுக்கு ஒரு சிறப்பு வசதியும் செய்யப்பட்டுள்ளது. இக்கோவிலுக்கு தவறாமல் வருபவர்களின் பிறந்த தேதியும், பெயரும் அங்குள்ள பதிவேடுகளில் இடம்பெறும். கோவிலில் பதிவு செய்துள்ள பக்தர்கள் தங்களின் பிறந்தநாளில் இங்கு வரும்போது அன்று பிரசாதமாக பிறந்தநாள் கேக்குகள் தயாரிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது. இதனை அனைவரும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்கிறார்கள். இக்கோவிலில் பணம் காணிக்கை செலுத்தும் உண்டியல்கள் இல்லை. அத்துடன் பிளாஸ்டிக் பயன்பாடுகளுக்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கோவிலை கே.ஸ்ரீதர் என்பவர் நிறுவியுள்ளார். இவர் ஒரு மூலிகை புற்றுநோயியல் நிபுணர் (Herbal Oncologist) என்பதால் உணவு சுகாதாரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து இக்கோவிலை சிறப்பாக நிர்வகித்து வருகிறார்.
கோவில் திறந்திருக்கும் நேரம்:
காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் திறந்திருக்கும்.
இந்தக் கட்டுரையை வாசிப்பதன் மூலம், வாசகர்கள் ஆன்மீகத்தின் மீது புதிய ஈர்ப்பைப் பெறுவதோடு, பாரம்பரியம் மற்றும் நவீன கலாச்சாரத்தின் கலப்பான இந்த வினோதமான கோவில் பற்றிய முழுமையான புரிதலைப் பெற்று வியப்படைவார்கள்.