சிறுகதை: ஜில்லென்று காதல்!

பஸ் பயணத்தில் பார்த்த நிலாவை மனதில் பச்சக் ஒட்டிக்கொண்டு, ஆறு மாதம் மௌனமாக காதலை வளர்த்த ராகேஷின் இதயத் துடிப்பை, ஒரு சிவப்பு ரோஜாவும் வித்தியாசமான திருமண அழைப்பிதழும் ஜில்லென்று மாற்றிய தருணம்
Tamil Love Story - Rakesh and Nila
Tamil Love Story - Rakesh and NilaImage credit: AI
Updated on
MM strip
MM strip

ராகேஷ் நெடுநடு உயரத்துடன் கோதுமை நிறத்தில் இருக்கும் ஒரு ஆரோக்கியமான திருமணமாகாத இளைஞன். மல்டி நேஷனல் கம்பெனியில் நல்ல பதவியில் வேலை. அன்பான பெற்றோரின் ஒரே மகன். வீட்டில் திருமணம் செய்து கொள்ளச் சொல்லி பெற்றோரின் அன்புத் தொல்லை. ஆனால் ராகேஷுக்கு காதல் திருமணம் செய்யவே ஆசை. அவன் பெற்றோரும் காதலை எதிர்க்க போவதில்லை. ஏனென்றால் அவர்களே காதல் திருமணம் செய்தவர்கள் தான்.

ஆனால் அலுவலகத்திலும் மற்ற வெளியிடங்களிலும் பார்க்கும் எந்த பெண்ணும் அவனைக் கவரவில்லை. காதலுக்கான சின்ன சிலிர்ப்பு கூட அவனுக்கு உண்டாகவில்லை. "ஏன் ராகேஷ், தரகர் கிட்ட சொல்லி உனக்கு பெண் பார்க்க சொல்லலாமா டா" என்ற அவன் அம்மா கமலத்திடம் "ஒரு ஆறு மாசம் பொறுத்துக்கமா" என தவணை கேட்டிருந்தான். இந்த நிலையில் தான் ஒரு நாள் நிலாவை ஒரு பஸ் பயணத்தில் சந்தித்தான் ராகேஷ் .

நிலாவை கண்டதும் அவன் வயிற்றுக்குள் காதல் பட்டாம்பூச்சி பறந்தது. அதன் பின் அவளைப் பற்றிய அனைத்து விவரமும் அவன் விரல் நுனியில் இருந்தது. நிலா கல்லூரியில் பயிலும் இளம்பெண். ஆனால் தோற்றத்தில் பழமையும் புதுமையும் கலந்த கலவையாய் தெரிந்தாள். அதனால் இவள் தான் என் காதல் மனைவி என முடிவு செய்த ராகேஷ் மனதில் பச்சக் என ஒட்டிக்கொண்டாள் நிலா.

ஆறு மாதங்களாக நிலா செல்லும் பூங்கா, கோவில் அவள் கல்லூரிக்கு போக வரும் பஸ் ஸ்டாப் என அவளை தொடர்ந்தான் ராகேஷ். ஆனாலும் ஏனோ அவள் அருகில் சென்று தன் காதலை சொல்ல ராகேஷுக்கு தைரியம் வரவில்லை. அடிக்கடி சந்திப்பதால் இருவரிடையிலும் பார்வை பரிமாற்றங்களும் சில நேரங்களில் சின்ன முறுவல்களும் மட்டுமே தோன்றும். அந்தப் பார்வை கலப்பில் நிலாவின் காதல் பளிச்சிட்டது ராகேஷுக்கு புரிந்தது.

இந்த நிலையில் ஒருநாள் அவன் நண்பன் பாலாஜி இவர்களின் மௌன உரையாடலை கவனித்தவன் "என்னடா லவ்வா அந்த பொண்ணு கிட்ட சொல்லிட்டியா" என்றான். "இல்லடா அதுக்கு தான் தைரியம் வர மாட்டேங்குது" என்றான் ராகேஷ் அசடு வழிந்தபடி.

இதையும் படியுங்கள்:
சிறுகதை: காணாமல் போவேனோ!
Tamil Love Story - Rakesh and Nila

"டேய் சொல்லிடு இல்லன்னா காத்திருந்தவன் பொண்டாட்டி நேத்து வந்தவன் கொண்டு போனாங்கற மாதிரி இலவு காத்த கிளி ஆயிடாதடா" என அவனை வெறுப்பேற்றினான் நண்பன் பாலாஜி. "டேய் ஏண்டா நீ வேற கடுப்பேத்துற" என எரிச்சலுற்றான் ராகேஷ். "டேய் நான் யதார்த்தவாதிடா உன்னை மாதிரி கற்பனையிலேயே மிதந்துட்டு அப்புறம் நடக்கலையேன்னு வருத்தப்பட மாட்டேன்" என்றான் பாலாஜி சற்று கோபத்துடன்.

"டேய் காதல்னா என்னன்னு தெரியுமாடா உனக்கு? அது பூ மாதிரி மலரும் டா அதுக்கு காத்துக்கிட்டு தான் இருக்கணும்" என்றான் ராகேஷ் ரசித்த குரலில். "போடா டேய் நீயே காத்துட்டு இரு எனக்கெல்லாம் வெட்டு ஒண்ணு துண்டு இரண்டு தான். எப்படியோ உனக்கு நல்லது நடந்தா சரி" என்றவன் "சரிடா நான் வீட்டுக்கு கிளம்புறேன்" என்று கூறி சென்றான்.

அன்று காதலர் தினம். இன்றாவது தன் காதலை நிலாவிடம் துணிந்து சொல்லி விட வேண்டும் என்று நினைத்த ராகேஷ் கையில் ஒரு சிவப்பு ரோஜாவுடன், அவள் வழக்கமாக வரும் பூங்காவினுள் நுழைந்தான். எப்படிச் சொல்வது என தன் மனதில் ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்தவன் நிலா பூங்காவினுள் வருவதைப் பார்த்தான். தன் உடல் பரபரப்பாவதை மிகுந்த சிரமத்துடன் அடக்கி கொண்டான் ராகேஷ். பூங்காவிற்குள் வந்த நிலா நேராக அவன் அருகில் வரவும் ராகேஷுக்கு இதயம் தடக் தடக் என எகிறியது.

இதையும் படியுங்கள்:
சிறுகதை: நண்பேன்டா...!
Tamil Love Story - Rakesh and Nila

நிலா அவனைப் பார்த்து சிரித்தபடி தன் ஹேண்ட் பேகில் இருந்து ஒரு திருமண அழைப்பிதழை எடுத்து "நீங்க கண்டிப்பா வரணும்" என்று அழைப்பிதழை ராகேஷிடம் கொடுத்தாள்.

ராகேஷின் இதயம் நின்று விட்டது போல் ஆகியது. முகத்தில் ஏமாற்றமும் வருத்தமும் பரவ, 'நாம் இலவு காத்த கிளி தானா' என நினைத்தபடி அழைப்பிதழை பிரித்தான்.

அதில் எதுவும் அச்சாகாமல் திருமாங்கல்யம் கட்ட நீங்கள் தான் வரவேண்டும் என எழுதி அதன் கீழ் ஒரு சிவப்பு ரோஜா ஒட்டப்பட்டு இருந்தது. அட காதலை இப்படியும் சொல்லலாமோ என நினைத்த ராகேஷ் மனமும் முகமும் மலர்ந்திட நிமிர்ந்தான்.

அங்கு குறும்பு பார்வை மிளிரிட நின்றிருந்தாள் அவன் நிலா. ராகேஷுக்கு ஜில்லென்ற காதலில் வானில் பறப்பது போல் இருந்தது.

logo
Kalki Online
kalkionline.com