

எனக்கு இது உறுத்திக் கொண்டே இருந்தது. நம்ம நிறைய படிக்கிறோம். நிறைய பேசுறோம்; நிறைய கலந்துரையாடல்கள் செய்கிறோம்; எல்லாவற்றிருக்கும் மேலாக சென்னை மாநிலக் கல்லூரியில் பேராசிரியராக இருக்கிறோம். தத்துவத்துல Phd வாங்கியாச்சு. உலக இலக்கியத்திலிருந்து உள்ளூர் வரலாறு வரை பேசி ஆகிவிட்டது.
என்னதான் இருந்தாலும் 'சுரேஷ்' மாதிரி சிறுகதை, நாவல் என இலக்கியத்தில் பயணப்பட முடியவில்லை. அந்த பரிமாண வளர்ச்சி அவனுக்கு எப்படி வந்தது? இதை அவனிடமிருந்து நாம் கற்றுக் கொண்டே ஆக வேண்டும் என்கிற ஒரு உந்தலில் சுரேஷை அழைத்தேன் நான்.
சுரேஷ் ஒரு தொழில்முறை எழுத்தாளன் கிடையாது. அவன் வங்கியில் பணியாற்றிக் கொண்டிருக்கிறான். எனக்கு தெரிந்து ரொம்ப படிப்பவனும் கிடையாது.
நானும் அவனும் பிளஸ் டூ முதல் காலேஜ் டிகிரி வரை ஒன்றாக படித்தோம்.
நான் இப்பவும் சாந்தோம்-இல் இருக்கிறேன். அவன் மயிலாப்பூரில் இருக்கிறான். இவ்வாறாக எங்களுடைய நட்பு 25 வருடங்களாக தொடர்ந்து வருகிறது.
எனக்கு அவனுடைய எழுத்துக்கள் பற்றி கொஞ்சம் பொறாமை தான். இதை நான் ஒத்துக் கொள்கிறேன்.
இருவரும் விடுமுறை நாட்களில் செயின்ட் தாமஸ் மவுண்ட் செல்வோம். பள்ளிப் பருவங்களில் எங்களுக்கு அதுதான் கோடை வாசஸ்தலம். எவ்வளவு முறை சைக்கிளில் சென்றிருப்போம் என்பது கூட எங்களுக்கு தெரியாது.
அங்கேயே ஒரு ஞாயிற்று கிழமை தொடங்கியது. உரையாடலை ஆரம்பித்தேன்...
"சுரேஷ் நீ இன்னைக்கு ஒரு கதை எழுதி இருந்த, அதை முடிக்கும் போது ஒரு பஞ்ச் டயலாக் இருந்தது. அது எனக்கு ஒரு கவிதையாக மனதில் மலர்ந்தது.
'இருந்து என்ன ஆகப்போகிறது; செத்து தொலைக்கலாம்..
செத்து என்ன ஆகப்போகிறது; இருந்து தொலைக்கலாம்..'
ரொம்ப ரொம்ப அருமை டா!. எப்படி உன்னால் இந்த அளவுக்கு சிந்திக்க முடிகிறது. அதை வார்த்தையில் அடக்கி நீ கையாளுகிற விதம் மக்களுடைய மனதில் ஏதோ ஒன்றை செய்கிறது.
நான் எவ்வளவோ விஷயத்த உன்கிட்ட சொல்லி இருக்கேன். மறைச்சது ஒண்ணே ஒண்ணு தான். நானும் உன்ன மாதிரி எழுதணும்னு ஆசைப்பட்டு கடைசியில் ஒன்றுமே முடியல.
இந்த ரகசியத்தை கொஞ்சம் எனக்காக சொல்லேன்."
"டேய் கணேசா.. இதுக்காக சிரமப்பட்டு மலையேறி வந்திருக்க வேண்டியது இல்ல... இத நான் உன்கிட்ட போன்லயே சொல்லி இருப்பேன். சரி பரவால்ல; ரொம்ப நாளுக்கு அப்புறம் சந்திக்கிறோம்... எப்படி இருக்க.."
"இதெல்லாம் போதும்டா! விஷயத்துக்கு வா!!"
"வந்துட்டேன்; வந்துட்டேன்; கூப்பிட்ட அதனால தானே வந்து இருக்கேன். எனக்கு தெரிஞ்சது சிம்பிளா சொல்லிடுறேன். துறவிக்கும், ஞானிக்கும் என்ன வித்தியாசம்?"
"முற்றிலும் துறந்தவன் துறவி! எல்லாம் தெரிந்தவன் ஞானி!"
"தப்பு. முற்றிலும் துறந்தவர்கள் இந்த உலகத்தில் யாருமே கிடையாது! துறவு என்பது ஒரு முயற்சி. அந்த முயற்சியை அவர்கள் ஒரு கட்டுப்பாடாக தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார்கள். அதே மாதிரி யாருக்கும் எல்லாமும் தெரியாது... ஞானி உள்பட!!??
உனக்கு சிம்பிளா சொல்லணும்னா 'இளையராஜா' எடுத்துக்க. 'எனக்கு இசையே தெரியாதுங்கறாரு'. ஆனா, அவரை 'இசை ஞானி' என்று தமிழகமே கொண்டாடுகிறது.
அதற்கு காரணம், கடைசி வரை அவர் 'இசையை' தெரிந்து கொள்ள முயற்சி செய்து கொண்டே இருக்கிறார்.
துறவி விவேகானந்தரை எடுத்துக்க..
அவர் ராமகிருஷ்ணரிடம் 'கடவுளை காண வேண்டும்' என்று சொல்லும் போது; அதை உன்னிடத்தில் தான் காண வேண்டும். அதை போய் வெளியில் தேடுவது மடமை என்றார். ஆகவே சொல்கிறேன்....
'மனசு' வேற, 'அறிவு' வேற....
எழுதுறவனுக்கு மனசு 'உள் மூகமாக' பயணப்படும்.
அறிவுங்கிறது 'வெளியில் தான்' பயணப்படும்.
நாம் 'அறிவு' கொண்டு செயல்பட வேண்டும்.
அதற்கு முன் நம் ''மனக்கண்களில்' நம் எண்ணங்களை, நம்முடைய செயல்களை தீர்மானித்து அவற்றை நாம் ஒழுங்கு படுத்த வேண்டும்.
அந்த 'ஒழுக்கம் புரியாத புதிர்' கிடையாது.
ஆனால், அதை 'புரிந்து கொள்ள' முயற்சிக்க வேண்டும்.
அந்த 'முயற்சி தொடர்ந்து' நடைபெற வேண்டும்.
இந்த உலகத்துல எல்லாம் 'சாத்தியம்' தான்.
'மனசு' ஒரு 'குரங்கு' மாதிரி. பல எண்ணங்கள் நம் மனசுல ஓடிக்கிட்டு இருக்கும். அவற்றை சீர்படுத்த வேண்டும். அதற்கு பேரு தான் Journaling.....
நம் 'அறிவு' கொண்டு நம் எண்ணத்தை எழுத தெரிந்து கொள்...
அவை சில குறிப்புகளாக இருக்கலாம்....
நமக்கு நடந்த 'நிகழ்ச்சிகளாக' இருக்கலாம்;
ஏற்பட்ட 'அனுபவங்களாக' இருக்கலாம்;
'அவமானங்கள்', 'அவதூறுகள்', 'வெற்றிகள்', 'தோல்விகள்' , 'கேட்டவைகள்', 'பார்த்தவைகள்' என எல்லாவற்றையும் குறிப்புகளாக எடுத்துக் கொள்ள பழகிக் கொள்.
கடைசியா இப்படி சொல்றேன்.
உன்ன பத்தி உனக்கு என்ன தெரியும்?"
"ஒண்ணுமே தெரியாது."
"பொய் சொல்லாத... உனக்கு இப்ப 51 வயசு... படித்ததை மறந்துட்டியா, கூடி விளையாண்டதை மறந்துட்டியா, சண்டை போட்டதை மறந்துட்டியா, அப்பா கிட்ட அடி வாங்கினதை மறந்துட்டியா, அம்மா கிட்ட பொய் சொன்னதை மறந்துட்டியா, அக்காவை மாட்டி விட்டதை மறந்துட்டியா, தம்பிக்கு உதவினதை மறந்துட்டியா, எதையும் உன்னால் மறக்க முடியாது. எனக்கு எவ்வளவு வாட்டி 'காலேஜ்ல ஃபீஸ் கட்டி' படிக்கிறதுக்கு உதவி செய்திருப்பே!!!
'எழுது', 'எழுது' எல்லாவற்றையும் குறித்துக் கொண்டு எழுதிக்கொண்டே இரு.... எழுத்து சீர்படும்... அதுவே வகைப்படும்.... அப்பொழுது அது கவிதைகளாக, சிறுகதைகளாக, நாவல்களாக இந்த சமுதாயத்தில் பிரதிபலிக்கும்.
நீ ஒரு 'தேங்கி நிற்கும் குட்டை' அல்ல. எப்பொழுதுமே ஓடிக் கொண்டிருக்கும் ஒரு ஜீவ நதி.... உன் எண்ணங்கள் உன் மனதை சிதைக்கலாம்...
அறிவு கொண்டு அவற்றை வகைப்படுத்தி முன்னேறிக் கொண்டே இரு..
'நாளை' என்பது 'நமக்காகவே' இருக்கட்டும். அதற்காக இன்றைக்கு ஓய்வெடுக்காதே! இப்போதே அதற்கான முயற்சியை எடுத்துக் கொண்டே இரு...
கணேஷ் இப்படி நான் உன்னிடத்தில் சொல்லிக்கிட்டு இருக்கேன் இல்ல!! ...
இத வச்சு நான் ஒரு கதை எழுதிடுவேன்.
இப்ப நான் உன்கிட்ட சொன்னது கூட ஒரு கதை தான்.
நம்ப முடியலையா!? நாளைக்கு பாரு!?
இது பத்திரிகையில் வரும்."
இருவரும் ஒன்றாக மலையில் இருந்து இறங்கினோம்.
Neither Leaders Nor Writers are Borne; They are Made.