

சமீபத்தில் ஒரு விளம்பரத் தயாரிப்புக்கு மொழி மேற்பார்வையாளராக சென்றிருந்த போது, நான் பார்த்து அனுபவித்த சுவாரசியமான செய்திகளை இக்கட்டுரை வாயிலாக உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்...
டிவியில் காட்டப்படும் விளம்பரங்கள் அநேகமாக 30 வினாடிகள் தான் வரும். 30 வினாடி விளம்பரத்திற்கு பின் எத்தனை பேர் வேலை செய்கிறார்கள் என்பதைக் காண்கையில் ஒரு பக்கம் வியப்பு; மறுபக்கம் படித்த மற்றும் படிக்காத அநேகம் பேர்களுக்கு இதன் மூலம் வேலை கிடைக்கிறது என்று அறிகையில் மகிழ்ச்சி. விளம்பரத்தின் தன்மையை பொறுத்து லட்சம் அல்லது கோடிக்கணக்கில் பணம் செலவு செய்யப்படுகிறது என்பது மேலும் ஆச்சரியம் அளிக்கும் உண்மை.
தவிர, ஒரு குறிப்பிட்ட பொருளின் விளம்பர படத்திற்கு, பட தயாரிப்பு நிறுவனம், விளம்பர கம்பெனி, பொருள் தயாரிக்கும் நிறுவனம் என கூட்டணி தேவைப்படுகிறது.
டைரக்டர், 4-5 உதவி டைரக்டகள், உயர் தர கேமரா, கேமராவை நகர்த்தும் டிராலி மற்றும் ஒரு இடத்தில் காட்சியை படமெடுக்கையில், விளம்பர நிறுவனம் அதிகாரி, பொருள் தயாரிப்பாளர், இன்னும் சில முக்கியமானவர்கள் சற்றே தள்ளியிருந்து காண்பதற்காக 6-7 மானிட்டர் கேமராக்கள் வைக்கப்படுகின்றன. ஒருவருடன் ஒருவர் பேச, சுமார் 50 பேர்களிடம், 50 வாக்கி டாக்கிகள்.
குறிப்பிட்ட விளம்பர படத்திற்கு செட் அமைக்கத் தனியாக ஆட்கள். காஃபி, டீ, ப்ரேக்ஃபாஸ்ட், லன்ஞ், மாலை நேர தேநீர், பிஸ்கட், வடா பாவ் ஆகியவைகளை செய்ய தனி சமையல் டீம். மற்றும் அனைவரும் சாப்பிடுவதற்காக, ஷுட்டிங் இடத்திற்கு சற்று தள்ளி அமைக்கப்படும் 2 டென்ட்கள்.
கல்யாண வீடு மாதிரி ஜே-ஜே என்றிருக்கும்.
மேக்-அப் டீம், காஸ்ட்யூம் டீம் என பல்வேறு குழுக்கள் ஓடி ஓடி செயல்படும் அழகே அழகு. உடைகளை ஆல்ட்ரேஷன் செய்ய 2-3 தையல்காரர்கள் மெஷினுடன் அமர்ந்திருப்பார்கள்.
குறைந்த பட்சம் 4 வேனிட்டி வேன்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும். டைரக்டர், முக்கியமான நபர்கள், பெண் கலைஞர்கள், ஆண் கலைஞர்கள் போன்றோர்கள் சிறிது நேரம் தங்கலாம். மேக்அப் போட, ஆடை மாற்ற என சௌகரியமாக இருக்கும்.
விளம்பரப் படத்திற்கு ஏற்ற வார்த்தைகளை மொழிக்கேற்ப எழுதிக் கொடுக்க மற்றும் சரி பார்க்க தனி டீம்.
சில விளம்பரங்களை மற்றைய மொழிகளில் விளம்பரம் செய்வதற்காக தேர்ந்தெடுக்கப்படும் கலைஞருக்கு மொழி தெரியாது.
விளம்பரத்தில் பேசப்படும் வார்த்தைகளை, மொழி தெரியாத கலைஞர்களுக்கு திருப்பி - திருப்பி கற்று கொடுக்க வேண்டும். பின்னர் அவர்கள் நடிக்கையில் மேற்பார்வையிட்டு, கரெக்ட் செய்ய வேண்டும். Language Supervisor என்று இவர்கள் அழைக்கப்படுகின்றனர்.
பெரிய ஹாலுக்குள்ளேயே, பச்சை பசேலென கிரிக்கெட் கிரவுண்ட் அமைத்தது ஆச்சரியம். அதுமட்டுமல்ல, ஸ்டேடியம், ஏர்போர்ட் லான்ச், டிக்கெட் கவுண்டர் என ஹாலுக்குள்ளேயே செட் அமைத்து ஒரே அமர்க்களம்தான். டிவி விளம்பரத்தில் பார்க்கையில், உண்மையான கிரவுண்ட், ஸ்டேடியம் என எண்ண வைக்கும். அப்படி ஒரு தத்ரூபம்.
சுமார் 500க்கும் மேல் ஆட்கள் ஒடி-ஓடி உழைக்கின்றனர்.
பின்னர் எடிட்டிங்/டப்பிங் ஆகியவைகளுக்குப் பிறகு, விளம்பரம் டிவியில் காட்டப்படுவது 30 - 40 வினாடிகள் மட்டுமே.
டைரக்டர் "பேக் அப்" கூறிய பிறகுதான் வீடு செல்ல முடியும்.
விளம்பரத்தைப் பொறுத்து 12, 14, 16, 18 மணி நேரங்கள், ஏன் சில நேரங்களில், 24 மணி நேரங்கள் கூட ஆகலாம். மொழி மேற்பார்வையாளராக அடியேன் அங்கிருந்தது 18 மணி நேரங்கள்! அநேகருக்கு போர் அடிக்கும். Passion வேண்டும். கிடைத்த வாய்ப்பை உபயோகப்படுத்திக் கொள்ள வேண்டும். பொறுமை வேண்டும். புதுப்புது விஷயங்களை அறியலாம்.