

ஆவிகளின் ராஜ்யம் ! - சிறுகதை
“புளியமரத்துக்கிட்ட போனா ஆவி பிடிச்சுக்கும்” என்று சின்ன வயசில் அம்மா சொன்னது புண்ணியகோட்டியின் மனசில் ஆழமாகப் பதிந்துவிட்டது. அதனால் புளியமரப் பக்கமே போகக்கூடாது என்று வைராக்கியமாய் இருந்த புண்ணியகோட்டிக்கு ஒரு சோதனை வந்தது!
பேய்க்காற்றுடன் பேய்மழையும் சுழட்டியடிக்க, அவனின் வைராக்கியம் மழையில் கரைந்தது. வேறு வழியில்லாமல் அன்று ஒரு புளியமரத்தடியிலேயே ஒதுங்கினான். ஒதுங்கிய நேரத்தில் மனதிற்குள்ளே, ஆவிகள் உலாவி வருவதைப் போல நிழல் நிழலான பிம்பங்கள் நடனமாடி அவனை இன்னும் பீதிக்குள்ளாக்கின. மழையில் நனைந்ததால் உண்டான நடுக்கத்தோடும், உள்ளத்தில் இருந்த பீதியோடும் அவசரமாக வீட்டிற்குள் நுழைந்தான்.
பீதியிலேயே உறங்கிவிட்டான். மறுநாள் காலை, “ஏங்க, பால்காரன் இன்னைக்கு வரல. அதனால நீங்க போய் ஆவின் வாங்கிட்டு வாங்க” என்றாள் மனைவி புண்ணியவதி.
இவன் காதில் “ஆவின்” என்பது “ஆவி” என்றே ஒலித்தது. “என்னது ஆவியா? ஏண்டி காலையிலேயே பயமுறுத்துற?” என்று சினிமாவில் ராகவா லாரன்ஸ் பயப்படுவதைப் போலவே புண்ணியகோட்டியும் பயந்தான்.
“ஆவி இல்லீங்க, ஆவின் பாலுங்க” என்று விளக்கமாகச் சொல்லிவிட்டு, “பால் வாங்கிட்டு அங்கயும் இங்கயும் உலாவிட்டு வராதீங்க, சீக்கிரமா வந்துடுங்க” என்றாள்.
மறுபடியும் அவன் காதில் “உலாவி” என்ற வார்த்தையில் இருந்த “ஆவி” என்ற சத்தம் மட்டும் ஆவிக்கணக்காய் ஒட்டிக்கொண்டது. மனசுக்குள்ளே, “புளியமரத்துக்குக் கீழே ஒதுங்குனதுல, ஏதாச்சும் ஆவி கீவி நம்மளைப் பிடிச்சிருக்குமோ? நல்ல சாமியாரைப் பார்த்து மந்திரிச்சுக்கணும்” என்று தனக்குத்தானே புலம்பிக் கொண்டான்.
ஆவின் பால் வந்தது. சிறிது நேரத்தில் டீபாயின் மேல் காபியை வைத்துவிட்டு, “இந்தாங்க காபி, ஆவி பறக்குது, நல்லா ஆத்திக் குடிங்க” என்றாள் மனைவி. மனைவி காபியின் ஆவியைச் சொல்ல, புண்ணியகோட்டி புளியமரத்து ஆவியை (Ghost kingdom) நினைத்துக்கொண்டான்.
அந்தப் பயத்திலேயே செய்தித்தாளைப் பிரித்துப் படிக்க, அதில் “நடுரோட்டில் ஒரு விபத்து; அநேகமாக அது ஆவியின் வேலையாக இருக்கும் என்று கிராமவாசிகள் பூசாரியைக் கூப்பிட்டுப் பூஜை போட்டார்கள்” என்ற செய்தி அவன் கண்ணில் பட்டது.
அதை வாசிக்கும்போதே, “அடியே, அரிசியைத் தண்ணிய விட்டு நல்லா துழாவி துழாவிக் களைஞ்சு கழுவினால்தானே அழுக்கு போகும்!” என்று மருமகளிடம் சொல்லிக்கொண்டிருந்தார் புண்ணியகோட்டியின் அம்மா. ஏற்கனவே பீதியில் இருந்த புண்ணியகோட்டிக்கு, அம்மாவின் “துழாவி”யில் இருந்த ஆவிகள் மேலும் பயமுறுத்தத் தொடங்கின.
காலை உணவு நேரத்தில், “சீக்கிரம் வாங்க, இட்லி ஆவி பறக்கச் சுடா இருக்கு. சூடு ஆறுவதற்குள் சாப்பிடுங்க” என்று இட்லி ஆவியின் வழியாகவும் பயமுறுத்தினாள் மனைவி. பயத்திலேயே இட்லியை அவசர அவசரமாக விழுங்கினான். மதியச் சாப்பாட்டு நேரத்திலும் சமையலில் ஆவி பறக்கச் சுடச்சுடப் பரிமாறினாள் அன்பு மனைவி. ஆனால் ஆவி பயத்தில் சரியாகச் சாப்பிடாமல் அரைகுறையாக எழுந்துவிட்டான்.
தான் பயப்படுவதைச் சொன்னால் மனைவி கிண்டல் செய்வாளோ என்று பயந்து அம்மாவிடம் சென்றான். “அம்மா, நீ சின்ன வயசுல புளியமரம் பக்கம் போகாதன்னு சொன்னே. அப்போ போகல, ஆனா இப்போ ஒதுங்க வேண்டியதாயிடுச்சு. மனசுக்குள்ள ஆவிகளா உலாத்துற மாதிரி இருக்குதும்மா. நீதான் ஏதாச்சும் வைத்தியம் செய்யணும்” என்றான்.
“டேய், இதுக்கு ஏன்டா பயப்படணும்? கொஞ்சமா நெருப்புத் துண்டுகளை எடுத்து அதுல சாம்பிராணித் தூளைத் தூவினா, ஆவிக்கணக்கா புகை வரும் பாரு... அதை முகத்துல காண்பிச்சா ஆவி பறந்தே போயிடும்டா!” என்றாள் அம்மா.
“மறுபடியும் ஆவியா?” என்று மயங்கினான் புண்ணியகோட்டி.
அம்மா பூசாரியிடம் கூட்டிப் போக வேண்டும் எனச் சொல்ல, மனைவியோ டாக்டரிடம் கூட்டிப் போக வேண்டும் எனச் சண்டையிட, கடைசியில் டாக்டரிடம் சென்றார்கள்.
“திஸ் இஸ் வெரி சிம்பிள் (This is very simple). அவருக்கு மனப்பிராந்தி, நான் குணப்படுத்திடறேன்” என்று சொல்லி புண்ணியகோட்டியை உட்கார வைத்தார் டாக்டர். மெதுவாக, “ப்ளீஸ் கண்ணை மூடுங்க. நான் சொல்ற வார்த்தைகளைத் திரும்பச் சொல்லுங்க” என்றார்.
“மாயாவியிடம் கொஞ்சம் நேரம் அளவளாவியதில், அவன் ஒரு மேதாவி என்றே தன்னைத்தானே வானளாவிப் புகழ்ந்து கொண்டது பிடிக்காததால், அவனின் வானளாவிய புகழ்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க...” என்று டாக்டர் சொல்லிக்கொண்டிருக்கும் போதே, “நர்ஸ், நான் குடிக்க வெந்நீர் கேட்டேனே, கொண்டு வாங்க” என்றார்.
“இருங்க டாக்டர், தண்ணி ரொம்பச் சூடாயிடுச்சு, அதுல ஆவி பறக்குது” என்றாள் நர்ஸ்.
அதைக் கேட்ட புண்ணியகோட்டி, “அதோ பறக்குது ஆவி! அதோ ஆவி!” என்று கத்திக்கொண்டே கண்விழித்தான். “எங்கே ஆவி? எங்கே ஆவி?” என்று கேட்டவாறே பயத்தில் டாக்டர் அரைமயக்கத்தில் கீழே விழுந்தார்.