சிறுகதை: பூமாலையே தோள் சேர வா!

Women holding a bouquet in her hand and a men and a women exchanging flower garlands
Valentine's Day gift tamil short story
Published on
Mangayar malar strip
Mangayar malar strip

அன்று காதலர் தினம். பொது இடத்தில் அனைவரையும் கம்பெனி பேருந்து விட்டு சென்ற நிலையில்தான் அவள், காதலர் தின மகிழ்வாக ஒரு பூங்கொத்தை வாங்கி ஆர்வத்துடன் அதை கொடுப்பதற்கு ஸ்வரனுக்காக காத்திருந்தாள். வருடா வருடம் இது அவர்கள் வழக்கம்.

இந்த வருடம் கம்பெனியில் அவளுக்கு பிரமோஷனும் கிடைத்ததால், நிச்சயம் ஸ்வரனிடம் தன் திருமணம் பற்றி பேசியே தீர வேண்டும் என்று ஒரு ஆனந்த வெறியுடன் காத்திருந்தாள். அதற்கு ஒரு காரணமும் இருந்தது. இவள் குடும்பம் சற்று ஏழ்மை நிலையில் இருந்தது. ஸ்வரனோ பெரும் செல்வந்தர் குடும்பம். அதனாலயே காதலில் இருந்த ஆழம் திருமணம் பற்றி பேசுவதில் இல்லை. காரணம் அச்சம் தான். "இப்படியே தொடர்ந்தால் ஒரு முடிவு வேண்டாமா?" என்ற எண்ணத்தில் இன்றைய காதலர் தினத்தில் ஒரு முடிவு எடுக்க வேண்டும் என்று காத்திருந்த நிலையில் தான் ஸ்வரனின் வருகையின் தாமதம் அவளுக்கு எரிச்சலை கொடுத்தது.

ஒரு கட்டத்தில் வெறுப்புடன் அந்த பூங்கொத்தை தூக்கி எறிந்து கிளம்பி விடலாம் என்று நினைத்து, சற்று நாழியில் அவள் அந்த பூங்கொத்தை கசக்கி தூக்கி எறியவும், அதை தாவி பிடித்த ஸ்வரன், "என்ன இது? ஒரு நாளைக்கு கூட எனக்காக காத்திருக்க கூடாதா? என் மீது அவ்வளவு வெறுப்பா? இல்லை நம் காதலை நிராகரித்து விட்டாயா? பிரமோஷன் அலுவலகத்தில் மட்டும் இல்லை பாவனா, உன் எண்ணத்தில் அது இருக்க வேண்டும். வாழும் வாழ்க்கையிலும் இருக்க வேண்டும்" என்று ஸ்வரன் சிரித்துக் கொண்டே கூறினான்.

இதுதான் அவனின் இயல்பான குணம். ஒரு கோபம் முகத்தில் பார்க்க முடியாது. அமைதி, பேச்சில் நிதானம் மற்றும் முதிர்ச்சி, செயலில் உத்வேகம், குறிக்கோளில் வெற்றி. இந்த குணங்களால் ஈர்க்கப்பட்டு தான் பாவனா தானாக ஒரு நாள் கோயிலில் எதேச்சியாக சந்தித்த போது கொஞ்சம் அச்சத்துடனேயே அவனிடம் பேசியது, இப்போது காதலாக மலர்ந்து, நான்கு வருடங்களில் ஈர் உடல் ஓர் உயிர் என்ற ரீதியில் ஆகிவிட்டது.

பாவனாவுக்கு எல்லாமே ஸ்வரன் தான். அவளுக்கும் உண்மையான நம்பகமான நட்பு கிடையாது. எல்லாமே காரிய நட்பு தான். அதனால் பெற்றோரிடம் சொல்ல முடியாததையும் அவனிடம் தான் கூறி மன ஆறுதல் பெறுவாள். அவன் கோயில் வருவதே தன் சகோதரியின் திருமண தோஷத்துக்காகவும் நல்ல இடத்தில் இருந்து மணமகன் கிடைக்க வேண்டும் என்றும் தான் என்பதையும் அவன் மூலம் பாவனா அறிந்திருந்தாள்.

போன மாசம் தடபுடலாக திருமணமும் நடந்தேறியது. அப்போது பாவனாவை மட்டுமே திருமணத்துக்கு அழைத்திருந்தான். அதனால் தான் தன் திருமணத்தை முடிவு செய்ய இந்த காதலர் தினத்துக்காக காத்திருந்தாள். எப்படியோ கால தாமதம் ஆனாலும் அவன் முகத்தில் தவழும் சாந்த புன்னகை அவன் சொன்ன காரணம் இதெல்லாம் பார்த்ததும், கேட்டதும், கோபம் எல்லாம் அப்படியே தலைகீழாக மாறி அவன் மீது இன்னும் காதலை அதிகப்படுத்தியது.

"பாவனா, காதலர் தினத்தில் பூக்கொத்தையும் எறிந்து விட்டாயே! எனக்கு என்ன பரிசு?" என்றான் ஸ்வரன்.

"மன்னிச்சிருங்க. கோபம், தப்பு தான். சரி ஸ்வரன் நீ எனக்கு என்ன கொடுக்கப்போறே!"

"பாவனா காதலர் தினம் நம் சம்பிரதாயமே இல்லை. அது வெளிநாட்டு மோகம். ஆனால், எனக்கு உடன்பாடு இல்லாவிட்டாலும் நான் அதை எதிர்க்கவில்லை. காரணம் இந்த நாளில் தான் பல பூக்காரர்கள் நல்ல வருமானம் ஈட்ட முடிகிறது!" என்றதும் கோபத்துடன்,

"சரி சரி வளவள பேச்சு வேண்டாம். உங்க சம்பிரதாயத்தை சொல்லுங்க..."

"பூங்கொத்து நம் சம்பிரதாயம் அல்ல. மாறாக பூமாலை தான் நம் வழக்கம்."

"அப்ப என்னை சாகச் சொல்றீங்களா?" அவளும் பெரும் கோபத்துடன் தான் கேட்டாள்.

"சாரி. இப்ப நான் என்ன சொன்னாலும் உனக்கு புரியாது. பூமாலை இறைவனுக்கும் சூடுவார்கள் தானே. ஒரு படத்துல யானைய வெச்சு எப்படி உபயோகப்படுத்தலாம்னு வடிவேலு சொல்றப்போ அவர் கூட்டாளி பிச்சை எடுக்க பயன்படுத்தலாம் என்பார். செம காமெடி. நீ அந்த ரகமாகத்தான் பேசுகிறாய். சரி விடு. இப்போது என்னுடன் வரணும்" என்றவன் தன் பைக்கில் அழைத்து செல்ல,

"ஸ்வரன் எனக்கு எந்த ஓட்டலும் வேணாம். எதுவும் சாப்பிட விருப்பமில்லை!" என்று முகத்தில் அறைந்த மாதிரி கூறினாள் பாவனா.

"இங்க சாப்பிடாம நீ இருக்கவே முடியாது!" என்றவன் நேராக பைக் ஓட்டி பாவனாவின் இல்லத்தை அடைந்தான்.

ரெடியாக இரண்டு மாலைகள் பைக்கில் வாங்கி வைத்திருந்ததை எடுத்தான். "பாவனா! இதை உன் அம்மாவுக்கு கொடு" என்றான். அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை. தன்னிடம் இருந்த இன்னொரு மாலையை எடுத்து பாவனாவின் அப்பாவிடம் கொடுத்தான். பாவனா அதிர்ச்சியானாள்.

"ஸ்வரன் என்ன இதெல்லாம்?"

"நான் சொல்றேம்மா!" என்று பாவனாவின் அப்பாவே பேசினார்.

"பாவனா, தம்பி வந்தாரு. எனக்காக காத்திருந்தாரு. நான் டெக்ஸ்டைல்ஸ் ஷாப்பில பர்மிஷன் போட்டு வந்தேன். உங்க காதல் விவகாரத்தை அக்கு வேறு ஆணிவேறாக சொன்னாரு. அவர் தந்தை மிகப்பெரிய டெக்ஸ்டைல்ஸ் ஏற்றுமதியாளர் என்றும் பெரும் கோடீஸ்வரர் என்றும் சொன்னார். ஆனால், கல்யாணம் பணத்துக்கும், பணத்துக்கும் அல்ல.

இதயத்துக்கும், இதயத்துக்கும்னு சொல்லி உன்னை அவர் திருமணம் செய்ய சம்மதம் கேட்டாரு. நான் தயங்கினேன். உடன் ஒரு போன் பேசினாரு. அவ்வளவுதான் இரண்டு கார்கள் வந்து விட்டன. ஒன்றில் ஸ்வரன் தம்பியின் பெற்றோர்கள். அடுத்த காரில் இப்போது திருமணம் ஆகி சென்ற ஸ்வரனின் சகோதரியும் அவர் புருஷனும் தான்.

அவர்கள் முழுக்க இந்த கல்யாணத்தை ஆதரித்து சம்மதித்தார்கள். நீயும் ஸ்வரனும் காதலிப்பது அவர்களுக்கும் தெரியுமாம். அதனால் தான் உன் ஒருத்திக்கு மட்டும் அவர்கள் அன்பு மகள் திருமண அழைப்பிதழ் கொடுத்தார்களாம். உன்னை கல்யாணத்தில் பார்த்ததுமே அவர்களுக்கும் பிடித்து விட்டதாம். என்னையும் சிந்திக்க விடவில்லை. கட்டாயப்படுத்தினார்கள். நானும் அம்மாவும் மகிழ்ச்சியோட சம்மதித்தோம்!" என்றதுமே,

உள்ளே ஒரு அறையில் இருந்து ஸ்வரன் பெற்றோர்களும் வந்து ஸ்வரன் கையில் பூமாலை கொடுத்து அதை பாவனாவுக்கு அணிவிக்குமாறு அறிவுறுத்த, அவனும் அணிவித்தான். உடன் சகோதரி ஒரு ஐந்து பவுன் நெக்லசை தர, ஸ்வரன் ஆசையுடன் அதை பாவனாவுக்கு அணிவித்தான். அதே போல் அவன் கொடுத்த இரண்டு பூமாலைகளையும் பெருமாளுக்கு அணிவித்தார் பாவனாவின் தந்தை பயபக்தியுடன்.

இதையும் படியுங்கள்:
சிறுகதை: செஸ்!
Women holding a bouquet in her hand and a men and a women exchanging flower garlands

இப்போது பாவனா அழுதாள். "ஸ்வரன் என்னிடம் உனக்கு கொடுக்க ஒன்றுமே இல்லையே!" என்றதும் "ஏன் இல்லை. நான் போட்டதை விட விலை உயர்ந்தது உன் அன்பின், பண்பின் அடையாளம்" என்று அவள் கசக்கி தூற எறிந்ததை தாவி பிடித்த கசங்கிய பூச்செண்டை அவளிடம் கொடுத்து, அதையே கொடுக்குமாறு கண்களால் பேசினான்.

பாவனா பூக்கொத்துடன் அவன் மார்பில் சாய்ந்து தன்னையே அவனுக்குப் பரிசாக கொடுத்தாள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com