

முதல் மற்றும் இரண்டாம் குழந்தைக்கு இடையே இருக்க வேண்டிய சரியான வயது இடைவெளி என்ன? இரட்டையர்களிடம் ஏன் இந்த போட்டி இருப்பதில்லை? உடன்பிறந்தவர்கள் சண்டைக்குப் பின்னால் இருக்கும் உளவியல் உண்மைகளையும், ஆய்வுகள் வெளிப்படுத்தும் திடுக்கிடும் ரகசியங்களையும் இந்தத் தொகுப்பில் முழுமையாக அறிந்து கொள்ளலாம்.
மனித வாழ்க்கையில் ஒருவர் முதன்முதலாக சந்திக்கும், நீண்டகால உறவு எது என்றால் அது உடன் பிறந்த உடன்பிறப்புகளுடனான பிணைப்பு தான்.. பிறப்பு முதல் வளரும் வரை ஒருவருக்கொருவர் அவ்வப்போது சண்டையிட்டுக் கொண்டாலும், உடன்பிறப்புகளிடையே நிலவும் அன்பு தனித்துவம் வாய்ந்தது.
ஒரே பெற்றோரைக் கொண்ட உடன்பிறப்புகள் தங்கள் டி.என்.ஏ-வில் 50%-ஐப் பகிர்ந்து கொள்கிறார்கள். அதேசமயம், ஒரே பெற்றோரைக் கொண்ட உடன்பிறப்புகளான அரை-உடன்பிறப்புகள் (சகோதரன்- சகோதரி), சுமார் 25% ஒத்த மரபணுப் பொருளைக் கொண்டுள்ளனர் என்கிறது ஆய்வு.
அவ்வகையில் இந்தச் சகோதரத்துவப் பிணைப்பு, வாழ்க்கையில் மற்றவர்களிடம் காட்டும் அன்பையும், பிற உறவுகளைக் கையாளும் முறையையும் அமைதியாகப் பக்குவப்படுத்துகிறது; அது மற்ற உறவுகளையும் நிலைக்க செய்யும் வழிகாட்டியாகவும் திகழ்கின்றது என்கின்றனர் மனோவியல் நிபுணர்கள்.
சகோதரத்துவத்தில் கற்றுக்கொள்ளும் இந்தச் சிறிய பாடங்களே, வாழ்நாளில் மனிதர்கள் பேணும் அனைத்து உறவுகளையும் பண்படுத்தி வலுவாக்குகின்றன என்பது உளவியல் வல்லுநர்களின் கருத்து.
உடன்பிறந்தவர்கள் எப்போதும் ஒருவருக்காக ஒருவர் விட்டுக்கொடுத்துப் பழகுகிறார்கள். முதலில் சண்டையிட்டாலும், எப்போதும் 'நான் சொல்வதே நடக்க வேண்டும்' என்ற எண்ணத்தைத் தவிர்த்து, ஒருவர் மற்றொருவருக்காக இறங்கி வரும் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை, அனைத்து சமூக, குடும்ப உறவுகளுக்கும் அடித்தளமாக அமைகிறது என்கின்றனர் உளவியல் நிபுணர்கள்.
எல்லாச் சகோதரர்களும் தங்கள் அன்பை 'வார்த்தைகளால் வெளிப்படுத்துவது இல்லை. தங்களுக்குப் பிடித்த உணவை உடன்பிறப்புக்காக விட்டுக்கொடுப்பது, ஆபத்தான சூழலில் பக்கபலமாக நிற்பது, பிறர் முன்பாக விட்டுக்கொடுக்காமல் அவர்களுக்காக பேசுவது போன்ற சின்னஞ்சிறு செயல்களிலேயே அவர்களின் அளப்பரிய பாசம் வெளிப்படுகிறது என்கிறார்கள்..
உடன்பிறப்புகளிடையே நிலவும் அன்பு, பாசம் மற்ற உறவுகளையும் நிலைக்க செய்யும் வழிகாட்டியாகத் திகழ்கின்றது என்பதை கூறும் உளவியல் நிபுணர்கள். சில நேரங்களில் இந்த உன்னதமான உறவுகளுக்கிடையே பொறாமை தலை தூக்குவது ஏன்? என்பதை அறிய ஆய்வு மேற்கொண்டனர். இது பற்றி ஆய்வு மேற்கொண்ட விஞ்ஞானிகள் தெரிவித்துள்ள கருத்து ஆச்சரியமான ஒன்றை கூறுகிறது.
உடன்பிறந்தவர்கள் பொறாமை மற்றும் வயது இடைவெளி இடையேயான தொடர்பு:
முதல் குழந்தைக்கும் இரண்டாவது குழந்தைக்கும் போதிய இடைவெளி விட வேண்டும் என மருத்துவர்கள் கூறி வருகின்றனர். ஆனால் தகுந்த கால இடைவெளிக்கு பிறகு பிறக்கும் குழந்தைக்கு இடையே போட்டி, பொறாமை மனப்பான்மை அதிக அளவில் இருப்பதாக பிலிப்பைன்ஸ் நாட்டில் நடைபெற்ற ஆய்வில் தெரியவந்துள்ளது.
சோதனை முறையில் நடைபெற்ற இந்த ஆய்வில் கால இடைவெளியும், குழந்தைகளின் நடத்தையும் அதிக அளவில் தொடர்பு கொண்டு இருப்பதாக தெரியவந்துள்ளது.
இரட்டை குழந்தைகளிடையே நடத்தப்பட்ட ஆய்வில் அவர்கள் இருவருக்கிடையே கால இடைவெளி ஏதும் இல்லாததால் அந்த குழந்தைகள் இருவரும் போட்டி பொறாமை ஏதுமின்றி பரஸ்பர புரிந்து கொள்ளுதலுடன் இருப்பதாக அந்த ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன.
இதனால் ஒரு குழந்தைக்கும் மற்றொரு குழந்தைக்கும் இடையே 3 ஆண்டு இடைவெளி இருக்க வேண்டும். முதல் குழந்தை பெற்றவுடன் அடுத்த குழந்தை வேண்டும் என்று முடிவு செய்தால் மூன்று ஆண்டுகளுக்கு பிறகு பெற்றுக் கொள்ளலாம். 5 ஆண்டுகள், 7 ஆண்டுகள் என இடைவெளி இருந்தால் குழந்தைகள் உணர்வு ரீதியாக பாதிக்கப்படுவதாக அந்த ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
வயதின் காரணமாக மூத்த குழந்தை செய்வதை அடுத்து பிறக்கும் குழந்தை செய்ய இயலாத போது உருவாகும் எண்ணமே பொறாமையாக உருவாகிறது என்கிறார்கள்.
ஒரு குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் போதிய கால இடைவெளி விட வேண்டும் என்ற கருத்தில் மருத்துவர்களும், உளவியல் நிபுணர்களும் மாறுபடுகின்றனர்.
குழந்தை பெற்ற தாய் ஒருவர் மீண்டும் கர்ப்பிணி ஆவதை 59 மாதங்களுக்கு மேல் தள்ளிப் போடக் கூடாது என அமெரிக்க மருத்துவ சங்கம் கூறுகிறது. அதே போல் திருமணம் ஆன தம்பதிகள் முதல் இரண்டு ஆண்டுகள் வரை மட்டுமே குழந்தை பேற்றை தள்ளிப் போடலாம் என்கிறது.
வீட்டிற்குள் உடன்பிறந்தவர்களிடையே நிலவும் சின்னச் சின்ன சண்டைகள் அன்பின் முடிவல்ல. சில நிமிடங்களிலேயே அதை மறந்து மீண்டும் ஒன்றாக விளையாடத் தொடங்கிவிடுவார்கள். மனிதர்களிடம் உள்ள சிறிய எரிச்சலூட்டும் குணங்களைவிட, அவர்கள் மீதுள்ள அன்பே பெரியது என்பதையும் புரிந்துகொள்ள இந்தக் குணம் உதவுகிறது.
அது தான் மன்னிக்கும் மனப்பக்குவம் என்றும் விளக்குகின்றனர் நிபுணர்கள். அவ்வகையில், அன்பு என்பது வெறும் காதல் சார்ந்த உணர்வு மட்டுமல்ல; அது உடன்பிறப்புகளிடையே பிறந்து, குடும்பம், உற்றார் சுற்றத்தாரிடம் பரவும் ஒரு உன்னதமான பிணைப்பாகும்.
இந்தக் கட்டுரையை வாசிப்பதன் மூலம், உங்கள் குடும்பத்திலுள்ள குழந்தைகளின் மனநிலையைப் புரிந்து கொண்டு, அவர்களுக்கிடையேயான பிணைப்பை வலுப்படுத்தவும், ஆரோக்கியமான வளர்ப்பை உறுதி செய்யவும் தேவையான தெளிவைப் பெறலாம்.