

அத்தைக்கு உயிர் ஊசலாடிக் கொண்டிருக்கிறது; இது எங்களுடைய கணிப்பு. கடவுளுடைய சித்தம் என்பது யாருக்குத் தெரியும்? ஒன்று மட்டும் தெளிவாகத் தெரிந்தது; வயது ஆகிறது, "இதற்கு மேல் இவர்கள் இன்னமும் கஷ்டப்படக் கூடாது" என்கிற பேச்சு நாலாபுறமும் கேட்கிறது. ஆனால், மனம் மட்டும் கேட்க மாட்டேன் என்கிறது!
என் அத்தையினுடைய உடல்நலம் இப்படியாக இருக்கிறது என்பதை உங்களுக்கு விவரிக்கிறேன். அத்தைக்கு வயது இப்போது 89; என் அப்பாவிற்கு இப்போது 92 வயதாகிறது. அவருக்குக் காது கேட்கவில்லை. அவ்வப்போது எதையோ புரிந்துகொண்டு தலையை ஆட்டிக்கொண்டு, மற்றவர்கள் சொல்வதைக் கேட்டு, தனக்கு வேண்டியதை உரக்கச் சொல்லி, அதன் மூலம் தன் சுயநம்பிக்கையை இழக்காமல் வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரு ஜீவன் அவர்.
என்னதான் அவருக்குத் தனியாக ஆள் போட்டுப் பணிவிடை செய்து கொண்டிருந்தாலும், அவருடைய வேலையை அவரே முடிக்க வேண்டும் என்பதுதான் அவருடைய விருப்பம். வயோதிகம் அவரை முழுமையாகச் செயல்பட அனுமதிக்காத நிலையிலும், அவரே குளிக்கிறார்; அவருக்குப் பணிவிடை செய்யப்படும் எளிய உணவுகளைக் கேட்டு விரும்பிச் சாப்பிடுகிறார்.
அவருக்கு இப்போது இரத்த உடன் பிறந்த உறவு என்று இருப்பதோ ஒரே தங்கை மட்டும்தான். கடந்த இரு வருடங்களாக அவருடைய இரண்டு அண்ணன்மார்களும், ஒரு அக்காளும் மூப்பின் காரணமாகச் சிவலோகம் அடைந்தனர். இதனை அவ்வப்போது கால இடைவெளி விட்டு மெதுவாக அவரிடம் சொல்லி வந்தோம். எல்லாவற்றையும் ஏற்றுக்கொண்டு காலத்தின் போக்கைக் கணக்கிடவே செய்தார்.
ஆனால், கொடுமை என்னவோ வேறு விதமாக இருக்கிறது. அவருடைய தங்கையின் பாசம் எங்களுக்குத் தெரியும். எப்போதுமே தங்கையைப் பற்றியும், அவள் கூட்டுக் குடும்பமாக இருந்தபோது பொறுப்புடன் செயல்பட்டு நாத்தனார், கொழுந்தியார் என எல்லோருடனும் சுமுகமாக இருந்ததையும், வாழ்க்கையில் சிக்கனம் மற்றும் கஞ்சத்தனம் இவற்றின் வேறுபாடுகளைத் தன் வாழ்நாள் முழுவதும் உணர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு மாபெரும் பெண் ஆளுமையைப் பற்றியும் அவர் பெருமையாகப் பேசுவார்.
என் அத்தையை இன்றும் கவனிக்கப் பேரனும், ஏன் கொள்ளுப் பேரனும் கூட அன்பு செலுத்திப் பணிபுரிந்து கொண்டிருக்கின்றனர். அதனால்தான் என்னவோ, "என்னப்பா, ஏன் அத்தையை அடிக்கடிக் கேட்டுக்கொண்டிருக்கிறார்?" என்று நாங்கள் வியக்கிறோம். "ஏன் ஒரு மாதமாக என்னை பார்க்க வரவில்லை?" என்று அவர் கேட்கிறார். இதற்கான காரணத்தை நாங்கள் மூடி மறைத்துச் சொன்னாலும், ஏதோ விபரீதம் நடக்கப் போகிறது என்பது அவருக்குத் தெரிந்துவிட்டது.
பாசப்பிணைப்பு அவரைக் கட்டிப்போட்டிருக்கிறது. காலம் அவரை கடுமையாகத் தாக்கினாலும், தன் பாசத்தால் தன் தங்கையின் நலனை இன்றளவும் சிறிதும் குறையாமல் விசாரிப்பதும் வேண்டுவதுமாக இருக்கிறார். இப்படியான ஒரு உன்னத வாழ்வு என் அப்பாவினுடையது என்பதை நான் எண்ணிப் பார்க்கிறேன். இப்படியான ஒரு குடும்பத்தில் பிறந்து, இப்படியான ஒரு உறவைக் காணும்போது என் மனசு முழு நிறைவடைகிறது.
அப்பா தன் துணைவியாரை இழந்து 7 வருடங்கள் ஆகின்றன. தனிமை ஒருபுறம்; தங்கை மறுபுறம். எப்படியாவது தன் தங்கையைப் பார்த்துப் பேச, படுத்த படுக்கையில் இருக்கும் ஒரு அண்ணன் முற்படுகிறான் என்றால், அது இந்தியப் பண்பாட்டின் ஒரு உன்னதக் கூறு!
இந்த அளவோடு இந்தச் சம்பவங்களை முடித்துக்கொள்கிறேன்.