சிறுகதை: சீதாராம கல்யாணம்!

Tamil Short Story | Marriage
Tamil Short Story | MarriageAI Image
Published on
Mangayar malar strip
Mangayar malar strip

கையில் ஒரு கூடையை எடுத்துக்கொண்டு வேண்டா வெறுப்பாக மார்க்கெட்டுக்கு கிளம்பிய கணேசனை "ஐயோ எதுக்கு இந்த கூடையை எடுத்துண்டு போறேள்? வழி எல்லாம் காயை இறைச்சுண்டே வரவா" என்று தலையில் தட்டிக் கொண்டாள் அவன் தர்ம பத்தினி துர்கா.

"ஏன் இதுக்கு என்ன குறைச்சல்" என்று கேட்டு கூடையை பார்த்தவன் "ஓ சைட் எல்லாம் ஓட்டையா இருக்கா?" என அசடு வழிந்தான்.

"ஆமா எங்க ஆத்து மனுஷா வரான்னா உங்களுக்கு கறிகாய் வாங்கிண்டு வரதுக்கு கூட சலிப்பா இருக்காக்கும்?" என்ற மனைவியிடம் கணேசன் மேலே பேசி சண்டையை வளர்த்தாமல் "சரி வேற பையை எடுத்துக் கொடு," என்றான் சிடுசிடுப்பாக.

"இப்படி கடுப்போட மார்க்கெட்டுக்கு போயி ஏதாவது அழுகலையும் பிழுகலையும் வாங்கிண்டு வந்துடாதீங்கோ" என்று கூறிய துர்காவை முறைத்தபடி அவள் கையில் இருந்த பையை வெடுக்கென பறித்துக் கொண்டு செருப்பில் கால்களை வேகமாக நுழைத்தபடி வெளியேறினான் கணேசன்.

"குடைமிளகாயை மறக்காம வாங்கிண்டு வந்துடுங்கோ" என்று மனைவியின் குரல் துரத்தவும் "இவ வேற என்னமோ எல்லாரும் லண்டன்ல பிறந்து வளர்ந்தவா மாதிரி இங்கிலீஷ் காய்கறி தான் வாங்கணுமாக்கும். சும்மாவே ஆடுவா, கால்ல சலங்கையை கட்டிவிட்டா கேட்கவே வேண்டாம்..." முணுமுணுத்தப்படியே நடந்தான் கணேசன்.

மார்க்கெட்டில் இருந்து வீட்டுக்கு வந்த கணேசன் துர்காவிடம் வேலைக்காரி ராஜாத்தி ஒட்டடைக் கொம்புடன் மாட்டிக் கொண்டு தவிப்பதை பார்த்தான். இவளோட அலப்பறைக்கு ஒரு அளவில்லாமல் போச்சே என மனைவியை மனதில் கடிந்தவன், "துர்கா இங்கே வா கறிகாய் எல்லாம் சரியா இருக்கான்னு பாரு" என்று கேட்டு அவளை சமையல் அறைக்கு தள்ளிக் கொண்டு போனான்.

"துர்கா! இப்படியே நீ ராஜாத்தி அம்மாவ படுத்தினேன்னு வச்சுக்கோ, அவங்க லீவு போட்டுருவாங்க அப்புறம் எல்லா வேலையும் நாமதான் செய்யணும் ஞாபகம் வச்சுக்கோ," என்று கணேசன் அவளிடம் மிரட்டலாக கூறினான்.

"ம்ஹும்... அதெல்லாம் ராஜாத்தி செய்யவே மாட்டா. ஏன்னா அவளுக்குத்தான் அமெரிக்காவில் இருந்து ஸ்மார்ட்போன் வருதே!" என்று அசத்தலாக கூறினாள் துர்கா.

"யாரு உன் தம்பி சீமாச்சு வாங்கிண்டு வர போறானா?" என்ற கணேசனிடம் "எஸ்," என்றாள் துர்கா பெருமையாக.

'அவனே ஒரு கஞ்ச பிசினாரி அவன் போய் வாங்கிண்டு வரப் போறானாக்கும்' கணேசன் மனதில் நினைத்ததை முகம் பிரதிபலித்தது.

"என்ன 'அவனெல்லாம் போன் வாங்கிண்டு வருவானாக்கும்' உங்க மைண்ட் வாய்ஸ் கேட்கிறது எனக்கு," என்றாள் துர்கா கோபமாக.

"நீ எல்லாத்துக்கும் கோபப்படாத சாயங்காலம் உங்க அப்பா அம்மா வேற வரப்போறா போய் வேலையை பாரு..." என்று கணேசன் மனைவியின் மூடை மாற்றினான்.

'இவ அப்பா அம்மா வந்தாலே இவள கையிலேயே பிடிக்க முடியாது. போதாக் குறைக்கு தம்பி வேற அமெரிக்கால இருந்து வரான் ஐயோடா' என நினைத்து தலையில் கை வைத்துக் கொண்டு அமர்ந்தான் கணேசன்.

துர்காவின் தம்பி சீமாச்சு என்கிற சீதாராமன் ஐந்து வருடங்கள் கழித்து அமெரிக்காவிலிருந்து நாளை சென்னை வருகிறான். அவனுக்கு பெண்பார்க்க அவன் பெற்றோரும் திருச்சியில் இருந்து இங்கு வருகின்றனர். 'குடும்பமாக சேர்ந்து கும்மி அடிப்பாங்க நாம வேடிக்கை பார்ப்போம்' என நினைத்தவன் 'என்ன இது அத்திம்பேரா லட்சணமா நாம கலந்துக்க வேண்டாமா, இருந்தாலும் அக்காவும் தம்பியும் பண்ணும் அலம்பல் தான் கொஞ்சம் அதிகமா இருக்கும்' என்று இரு வேறுபட்ட சிந்தனையில் அமர்ந்திருந்தான் கணேசன்.

"ஏன்னா நீங்க ஸ்டேஷன் போயி அம்மா அப்பாவை கூட்டிண்டு வந்துடுறேளா?" என்று கணேசனின் அடுத்த வேலைக்கு அடி போட்டாள் துர்கா. "அதெல்லாம் மாமா ஆட்டோ புடிச்சு வந்துடுவார். வீக் எண்டுல கடுப்படிக்காத" என்றான் கணேசன் மறுப்பாக.

"சரி, சீமாச்சுவை கூட்டிண்டு வரதுக்கு ஏர்போர்ட்டுக்கு வருவேளா இல்லை..." என்று இழுத்தவளை "அதுக்கு எல்லாருமே போகலாம்" என்றான் கணேசன்.

மறுநாள் காலை சீமாச்சுவை வரவேற்க இரண்டு காரில் குடும்ப சகிதம் ஏர்போர்ட்டுக்கு போனார்கள். ஒரு மணி நேர காத்திருப்புக்குப் பின் மெகா சைஸ் சூட்கேஸ்களை தள்ளியபடி வந்த சீமாச்சு, "இமிகிரேஷன்ல லேட் லக்கேஜ் எடுக்க லேட் ஆகுது என்ன ஊருப்பா சிஸ்டமே சரியில்ல ஐ டோன்ட் லைக் இட்" என்று தோளை குலுக்கியபடி வந்தான்.

முகத்தில் பெருமை பொங்க தம்பியின் கைகளைப் பாசமாக பிடித்த துர்கா "தம்பி நீயும் இந்த ஊர்க்காரன் தான்டா; அஞ்சு வருஷமா அமெரிக்காவில இருந்தா அதையே மறந்துடுவையா?" என்றாள்.

கணேசனின் பிள்ளைகள் இருவரும் "மாமா மாமா" என சீமாச்சுவை கட்டிக் கொண்டனர். "ஹவ் ஆர் யூ அத்திம்ஸ்" என்று கேட்டு அமெரிக்கன் ஸ்டைலில் கணேசனை அணைத்துக் கொண்டான் சீமாச்சு. "பைன் பைன்" என்றான் கணேசன் நெளிந்தபடி.

"வாடா பயலே ரெண்டு நாளா குளிக்காம கொள்ளாம பிளைட்ல வந்திருக்க. ஆத்துக்கு போய் குளிச்சுட்டு எல்லாரையும் கட்டிப்பியாம்" என்றார் சீமாச்சுவின் அம்மா. நான், பன்னீர் பட்டர் மசாலா, பிரைடு ரைஸ், உருளைக் கிழங்கு போண்டா, பால் பாயாசம் என சமையலறை திமிலோகப்பட்டது. "அடிப்பாவி உனக்கு இதெல்லாம் செய்ய தெரியுமா?" என வியந்த கணேசனை, "ஏன்னா நீங்களும் சீக்கிரமா சாப்பிட வாங்கோ சீமாச்சுக்கு ஜெட்லாக்கா இருக்கும்," என்றாள் துர்கா.

இந்தப் பெண்களுக்கு மட்டும் பிறந்த வீட்டு மனிதர்களிடம் இருக்கும் பாசத்துக்கு அளவே இல்லையேப்பா என நினைத்து புன்னகைத்தான் கணேசன். தன் குடும்பத்தாருடன் அரட்டை அடித்து விட்டு இரவு பனிரெண்டு மணிக்கு மேல் அவர்கள் அறைக்கு வந்த துர்காவிடம் "என்ன உன் தம்பி என்ன சொல்றான் பெண் பார்க்க போறதுக்கு?" என்று கணேசன் சற்று கிண்டலாகவே கேட்டான்.

"ச்... ஒண்ணும் பிடி கொடுத்து பேச மாட்டேங்கறான். இந்த கால பெண்களோட ட்ரெண்டே அவனுக்கு புரிய மாட்டேங்கறது. நாளைக்கு தான் கொஞ்சம் பேசி புரிய வைக்கணும்" என்றாள் துர்கா சற்று கவலையுடன்.

"ஒருவேளை அங்கேயே ஏதோ செட் ஆயிடுத்தோ என்னவோ? நான் அங்கிருந்து வரும் போதே அவளையும் கூட்டிண்டு வருவான்னு நினைச்சேன்," என்ற கணேசனை எரிக்கும் கண்களால் துளைத்தாள் துர்கா.

"உங்களுக்கு ஆனாலும் இத்தனை க்ருத்துமம் ஆகாது. இதே நான் உங்காத்து மனுஷாளைப் பத்தி ஏதாவது சொன்னா நீங்க சும்மா இருப்பேளா? ருத்ரதாண்டவம் ஆடிட மாட்டேள்?" என்றாள் மூச்சு விடாமல், "சரி சரி நீ டென்ஷனாகாத நான் சொன்னதை வாபஸ் வாங்கிக்கிறேன் போதுமா நீ தூங்கு" என்று அந்த உரையாடலை முடித்து வைத்தான் கணேசன்.

அன்று மாலை ஆபீசிலிருந்து திரும்பிய கணேசனிடம் "ஒரு லாங் டிரைவ் போயிட்டு வருவோமா?" என்று கேட்டான் சீமாச்சு 'எங்கே, எதுக்கு' என்ற கேள்விகளுடன் பார்த்த கணேசனை 'ப்ளீஸ்' என கெஞ்சியது சீமாச்சுவின் கண்கள். அதை பார்த்த கணேசன் "ஓகேடா போலாம்," என்றான்.

இருவரும் பீச்சுக்கு வந்தனர் சீமாச்சு தன்னிடம் ஏதோ சொல்ல முயற்சிக்கிறான் என புரிந்து கொண்ட கணேசன், அவனே பேசட்டும் என காத்திருந்தான். "அத்திம்ஸ் என் கல்யாணத்தைப் பற்றி ஒரு சில விஷயங்கள் பேசணும் அதான் உங்களை..." என்று இழுத்தான்.

'நான் நினைச்சது சரிதான். பையன் அமெரிக்காவிலேயே பெண் பார்த்துட்டான் போல... வெள்ளக்காரியா, இந்திய வம்சாவழியா ஆப்பிரிக்கன் அமெரிக்கனா தெரியலையே?' கணேசன் மனதில் ஏதேதோ ஓடியது.

இதையும் படியுங்கள்:
சிறுகதை: விழுந்தால் எழ வேண்டாமா?
Tamil Short Story | Marriage

"சொல்லு சீமாச்சு என்ன விஷயம்" என்று அவனை ஊக்கிய கணேசனிடம் "அத்திம்ஸ் எனக்கு பொண்ணு எல்லாம் பார்க்க வேண்டாம் என்று அக்கா கிட்ட சொல்லுங்கோ" என்று கெஞ்சினான் சீமாச்சு. "ஏன் வேண்டாம்?" என்று புரியாதது போல் கேட்ட கணேசனிடம் "நான் ஒரு பொண்ண லவ் பண்றேன் அத்திம்ஸ்" என்றான் சீமாச்சு வெட்கத்துடன்.

"அட்ரா சக்கை அமெரிக்க பொண்ணா இந்திய வம்சா வழியா?" என்று கேட்டு சிரித்தான் கணேசன். "இந்தியா பொண்ணு தான் அத்திம்ஸ்" என்ற சீமாச்சுவிடம், "நீ எதுக்கும் கவலைப்படாத நான் உன் அக்காவையும் உன் பேரன்ட்ஸையும் சமாதானப்படுத்தி இந்த கல்யாணத்தை நடத்தி வைக்கிறேன் போதுமா?" என்று வாக்கு கொடுத்தான் கணேசன்.

அன்று இரவு உணவின் போது "சீமாச்சு, அந்தப் பெண்ணாத்துல எப்போ வரேள்னு கேட்டு போன் பண்ணி இருந்தா நான் உனக்கு ஜெட்லாக் கொஞ்சம் சரியானதும் வெள்ளிக்கிழமை வரேன்னு சொல்லி இருக்கேன் சரி தானே?" என்று கேட்டாள் துர்கா.

சீமாச்சு கணேசனை பார்க்க, கணேசன் துர்காவிடம் "அவனுக்கு இந்த பொண்ணெல்லாம் பார்க்க வேண்டாம்.." என்றான் அமர்த்தலாக.

"ஏன் மாப்பிள்ளை இப்படி சட்டுனு அபசகுனமா பேசறேள்" என்றார் அவன் மாமியார் கோபமாக.

இதையும் படியுங்கள்:
சிறுகதை: அம்மாவும் அரங்கனும்!
Tamil Short Story | Marriage

"நான் அத பத்தி தான் சொல்ல போறேன். கோபப்படாம கேளுங்கோ," என்ற கணேசன் துர்காவிடமும் அவள் பெற்றோரிடமும் சீமாச்சுவின் காதலை பற்றி கூறினான்.

"கடைசில உங்க அத்திம்பேர் சொன்ன மாதிரி அமெரிக்காக்காரியத்தான் கல்யாணம் பண்ணிக்க போறியா?" என அங்கலாய்ப்புடன் கேட்டாள் துர்கா.

"காதல் ஒண்ணும் தப்பான விஷயம் இல்லையே! அவனுக்கு பிடிச்ச வாழ்க்கை அமைய அவன் காதலிக்கிற பெண்ணையே அவனுக்கு கல்யாணம் செய்து வைச்சுடலாம்" என்றான் கணேசன் சீமாச்சுவுக்கு ஆதரவாக.

"எந்த ஊர் பொண்ணுடா?" என்று கேட்டார் சீமாச்சுவின் தந்தை. "இந்த ஊர் பொண்ணு தான் பா. அதுவும் உங்களுக்கெல்லாம் தெரிஞ்ச பொண்ணு தான்," என்ற சீமாச்சுவிடம், "யாருடா அது தெரிஞ்ச பொண்ணு?" என்று வினவினாள் துர்கா.

"அத்திம்பேரோட அக்கா பொண்ணு மாதங்கியைத் தான் அக்கா நான் காதலிக்கிறேன்..." என்று சீமாச்சு கூற,

"அடப்பாவி டேய் இதுக்குத்தான் நீ என்னை முதல்ல சரி கட்டினியா?" என நினைத்து விழித்தான் கணேசன்.

"ஓ எப்போலேந்து நடக்கிறது இது?" என்று துர்கா கணேசனை முறைத்தபடி கேட்டாள் சீமாச்சு விடம். "அது ஒரு நாலஞ்சு வருஷமாவே ஓடிண்டு இருக்கு அக்கா" என்றான் சீமாச்சு அசடு வழிந்தபடி.

இதையும் படியுங்கள்:
சிறுகதை: மாறிய மனம்!
Tamil Short Story | Marriage

"ஏன்னா இப்ப எங்களையெல்லாம் சமாதானப்படுத்தி அவன் காதலிக்கிற பொண்ணையே கல்யாணம் பண்ணி வச்சிடலாம்னு சொன்னேள். உங்க அக்கா அத்திம்பேரை எப்படி சமாளிக்க போறேள்? காதலாம் கத்திரிக்காயாம் எல்லாம் அலையறதுகள் ம்பாரே உங்க அத்திம்பேர்?" வாழைப்பழத்தில் ஊசி ஏற்றினாள் துர்கா.

"நம்ம சீமாச்சுக்கு என்ன குறைச்சல், இல்ல மாதங்கி மட்டும் இளைச்சவளா நன்னா படிச்சு காலேஜில புரஃபசரா வேலை பார்க்கறா. பகவான் ஜாடிக்கேத்த மூடியைத் தான் படைச்சிருக்கார். எல்லாம் நான் பார்த்துக்கிறேன்," என்றான் கணேசன் தைரியமாக.

கணேசன் தன் அக்கா அத்திம்பேரை சமாளித்து இவர்களின் திருமணத்திற்கு சம்மதிக்க வைத்தது தனிக்கதை.

எது எப்படியோ சீமாச்சு ஒரு சுபயோக சுபதினத்தில் மாதங்கியின் கழுத்தில் தாலியை கட்ட, துர்கா பெருமையுடன் நாத்தனாராக தாலி முடிந்தாள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com