
உலகின் அதி அற்புதமான ஒரு சாதனையைப் பெண்கள் நிகழ்த்தி இருக்கிறார்கள். ஆறு பெண்கள் மட்டுமே விண்ணில் பறந்து மீண்டும் பூமிக்குத் திரும்பி இருக்கிறார்கள்.
ஆண் துணை இல்லாமல் ஆறு பெண்கள் விண்கலத்தில் ஏறிப் பறந்தது இதுவே முதல் தடவையாகும். அறுபது ஆண்டுகளுக்கு முன்னர் ரஷிய வீராங்கனையான வாலண்டினா தெரஷ்கோவா விண்ணில் பறந்தார்.
அதற்குப் பின்னர் பல்வேறு விண்வெளித் துறைகளில் பெண்கள் முனைப்பாக ஈடுபட்டிருந்தாலும் அவர்கள் விண்ணில் தனியே சென்றதில்லை.
இந்த நிகழ்வு 2025 ஏப்ரல் 14ம் தேதி நடைபெற்றது.
நியூ ஷெப்பர்ட் ராக்கெட் அமெரிக்காவில் உள்ள மெற்கு டெக்ஸாஸ் ஏவுதளத்திலிருந்து இவர்கள் பிரிட்டிஷ் சம்மர் டைம் (BST) 14.30க்கு கிளம்பினர்.
ஜெஃப் பெஜோஸின் ப்ளூ ஆரிஜின் ராக்கெட்டில் ஏறி விண்ணில் பறந்த இவர்கள் பத்திரமாக பூமிக்குத் திரும்பினர்.
பாப் ஸ்டார் கேதி பெர்ரியும் (Katy Perry) இன்னும் ஐந்து பெண்மணிகளும் பயப்படாமல் உற்சாகத்துடன் பூமிக்கு மேல் 62 மைல் உயரத்தில் பறந்தனர்.
11 நிமிடங்கள் நீடித்த இந்தப் பயணத்தில் பன்னாட்டு விண்வெளி எல்லையைத் தாண்டிச் சென்று சாதனையை நிகழ்த்தி விட்டு விண்ணில் மட்டுமே அனுபவிக்கக் கூடிய எடையற்ற தன்மையையும் அனுபவித்து விட்டு பூமிக்குத் திரும்பினர்.
பூமிக்குத் திரும்பிய பெர்ரி “பூமியுடன் சூப்பராக நான் கனெக்ட் ஆகி விட்டேன். அதே போல லவ்-வுடனும் கனெக்ட் ஆகி விட்டேன்” என்று பெருமிதத்துடன் கூறினார். விண்வெளியில் அவர், “ What a Wonderful World’ என்ற பாடலையும் பாடினார்.
அவருடன் முன்னாள் நாஸா ராக்கெட் விஞ்ஞானியான அயிஷா போவே, (Former Nasa engineer Aisha Bowe) மனித உரிமைகளுக்கான சமூகப் போராளி அமந்தா குயென் (Civil rights activist Amanda Nguyen), அமேஸான் நிறுவனரான ஜெஃப் பெஜோஸின் துணைவியான லாரன் சன்செஸ் (Lauren Sanchez,fiance of Amazon founder Jeff Bezos), திரைப்படத் தயாரிப்பாளர் கெரியான் ஃப்ளின் (Film producer Kerianne Flynn) மற்றும் பத்திரிகையாளர் கெய்ல் கிங் (Journalist Gayle King) ஆகியோர் பறந்தனர்.
விண்வெளியிலிருந்து விண்கலம் பாராசூட்டின் உதவியுடன் பத்திரமாக பூமியில் டெக்ஸாஸில் இறங்கியது. ஜெஃப் பெஜோஸ் கலத்தின் கதவைத் திறந்து முதலில் இறங்கிய தன் துணைவியாரை வரவேற்றார்.
“இந்தக் குழுவினரை நினைத்து கர்வம் கொள்கிறேன். இவர்களைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை” என்றார் லாரன்.
அடுத்து வெளியே வந்த கேதி பெர்ரி பூமியை முத்தமிட்டார். பின்னர் வெளியே வந்த கெய்ல் கிங் மண்டியிட்டு பூமியை முத்தமிட்டார்.
ஒவ்வொருவராக வெளியே வர உலகில் உற்சாகம் கரை புரண்டு ஓடியது. உலகெங்குமுள்ள விண்வெளி ஆர்வலர்கள் ஏராளமான புகழ்மாலைகளை சூட்டலாயினர்.
விண்வெளி வீராங்கனைகளை விட பிரபலங்கள்தான் அதிக கவனத்தை ஈர்க்கின்றனர் என்ற விமரிசனம் எழுந்தாலும், இதை ஏராளமானோர் பார்த்து வரவேற்கின்றனர். “இனி பெண்கள் அச்சமின்றி விண்ணில் பறக்கலாம் என்பதற்கு இது ஒரு சான்று” என்ற பொதுவான கருத்தாக நிலவுகிறது.
விண்வெளியில் பறக்க உரிய பயிற்சி வேண்டும் என்று அமெரிக்க சட்டம் சொல்கிறது. ப்ளூ ஆரிஜின் நிறுவனம் இவர்களுக்கு இரண்டு நாட்கள் முழுப் பயிற்சி அளிக்கப்பட்டது என்று கூறுகிறது.
விண்வெளிப் பெண் பயணிகளுக்கு வாழ்த்துக்கள்!