சின்ன வெங்காயம் பெரிய சரித்திரம்: 5,000 ஆண்டுகாலச் சுவையும் ரகசியமும்!

ஐயாயிரம் ஆண்டு கால சின்ன வெங்காயத்தின் வரலாறு, பலன்கள், சாகுபடி முறைகள் மற்றும் விலை உயர்வைக் கட்டுப்படுத்த அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள்.
சின்ன வெங்காயம் | shallot
சின்ன வெங்காயம் | shallot Image credit: Chatgpt
ரெ. ஆத்மநாதன்

ரெ.ஆத்மநாதன், பொருளாதாரம், இதழியல்-மக்கள் தொடர்பியலில் முதுகலைப் பட்டங்கள் பெற்றவர். இவரது 4 நாடகங்கள் வானொலியில் ஒலிபரப்பாகியுள்ளன. அனுபவம் மிக்க எழுத்தாளர்.ஆக்கபூர்வமான கட்டுரைகள், சிந்திக்க வைக்கும் சிறுகதைகள், கவிதைகள் என்று இவரது எழுத்துகள் பல பரிமாணங்களைக் கொண்டவை. கடந்த பல வருடங்களாக கல்கி ஆன்லைனில் எழுதி வருகிறார்.

Updated on: 
MM strip
MM strip

கிலோ இருபது ரூபாய்க்கு விற்கப்பட்ட சின்ன வெங்காயம், இன்று இருநூறு ரூபாயைத் தாண்டி புதிய வரலாறு படைக்கிறது! சமையலறையின் தவிர்க்க முடியாத சுவையாக மட்டுமல்லாமல், ஐயாயிரம் ஆண்டுகாலப் பாரம்பரியமும் நோய் எதிர்ப்புச் சக்தியும் கொண்ட வெங்காயத்தின் பின்னணி என்ன?

சின்ன வெங்காயம் அல்லது சாம்பார் வெங்காயம் (Allium Cepa Var Aggregatum or Shallot) ஐயாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாகப் பயன்பாட்டில் இருப்பதாக வரலாற்றுச் சான்றுகள் பகிர்கின்றன. காலமும் நேரமும், சில நேரங்களில் சிலவற்றின் பெருமையை உலகுக்குப் பறை சாற்றுவது உண்டு.

போர்க் காலங்களில் தீரமிக்க வீரர்கள் போற்றிப் புகழப் படுவதுண்டு; விளையாட்டுப் போட்டிகளின் போது பலவான்கள் பாராட்டப் படுவதுண்டு; தொல்லுலகைத் தொற்று நோய்கள் ஆக்கிரமிக்கும் போது அயராது உழைக்கும் மருத்துவர்கள் ஆண்டவனுக்கு நிகரானவர்களாக மதிக்கப்படுவதுண்டு; கொரோனாவின் கொடுந் தாக்குதலின்போது தூய்மைப் பணியாளர்கள் தூக்கி நிறுத்தப்பட்டு ஆராதிக்கப்பட்டதை அனைவரும் கண்கூடாகக் கண்டோம்!

இது வெங்காயத்தின் காலம்! அதன் சிறப்பினை மதிக்க வேண்டிய நேரம்! கிலோ ரூ 20, 30 க்கு விற்கப்பட்ட காலமெல்லாம் வரலாறாகிப் போய் இன்று ரூ 230/- என்ற நிலையை எட்டியுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இது ஒரு புது வரலாறு அல்லவா?

பிறந்த இடமும் புகுந்த இடமும்:

சின்ன வெங்காயத்தின் பிறப்பிடமாக தென்மேற்கு ஆசியா, ஈரான் மற்றும் மேற்கு பாகிஸ்தான் பகுதிகளையே சரித்திரம் குறிப்பிடுகிறது. அங்கிருந்து வணிக ரீதியாக இந்தியா, சீனா மற்றும் மத்தியத் தரைக் கடல் நாடுகளுக்குப் பரவி அங்கெல்லாம் தன் தனித்தன்மையால் கோலோச்ச ஆரம்பித்ததாம் இந்த வெங்காயம்.

சாகுபடிக்காலம்:

வெங்காயம் குறுகிய காலப் பயிர்தான். சுமார் 90, 100 நாட்களில் அறுவடைக்கு வந்து விடும். ஆடிப்பட்டமும், அக்டோபர், நவம்பர் மாதங்களும் பயிரிட ஏற்ற பருவங்களாகும்.

இதையும் படியுங்கள்:
பப்ளிக் டாய்லெட், ATM பட்டன் தொட பயமா? கிருமிகளை விட ஆபத்தான விஷயம் இதுதான்!
சின்ன வெங்காயம் | shallot

பழம் பெருமை:

பழங்கால எகிப்தியர்கள் வெங்காயத்தின் அடுக்குகளை நித்திய காலத்தின் அடையாளமாகக் கருதினார்களாம். மம்மிகளைப் பதப்படுத்தும் சடங்குகளிலும், கல்லறை ஓவியங்களிலும் இதனைப் பயன்படுத்தினராம்.

பண்டைய கிரேக்க வீரர்கள் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதற்கு முன்னராக உடலை வலிமையுடையதாக்கிக் கொள்ள வெங்காயச் சாற்றைப் பருகுவார்களாம்.

ரோமானியர்கள் சமையலுக்குச் சுவை சேர்க்கவும், சளி மற்றும் காயங்களிலிருந்து எளிதாக விடுதலை பெறவும் வெங்காயத்தைப் பயன்படுத்துவார்களாம்.

நம் நாட்டிலும் பெரிய வெங்காயம் அறிமுகமாவதற்கு முன்பிலிருந்தே சின்ன வெங்காயம் உபயோகத்தில் இருந்திருக்கிறது. சமையலிலும் முக்கிய இடத்தைப் பிடித்து இருந்து வந்திருக்கிறது.

நமது சித்த வைத்தியத்தில், உடல் சூட்டைத் தணிக்கும் உணவாகவும், பல நோய்களைத் தீர்க்கும் மருந்தாகவும் இன்றளவும் பயன்பாட்டில் இருந்து வருகிறது.

சத்துக்கள்:

சரி! இதில் அப்படி என்னதான் உள்ளது என்று ஆராய்ந்தால், மனித உடலுக்கு வேண்டிய அனைத்துமே இருக்கிறது என்றே சொல்லி வைத்துள்ளார்கள். நமது சித்தர்களும், முன்னோர்களும் வந்தபின் அல்லல்பட்டுச் சிரமப்பட்டு நோயிலிருந்து மீள்வதைக் காட்டிலும் ‘வருமுன் காப்பதே சிறப்பு’ என்பதுதானே நம்மிடையே உலவும் வேதம். அதற்கு அடித்தளமாக உள்ளது இந்த வெங்காயமே! ஆம்!நோய் எதிர்பாற்றலை உடலில் வளர்க்கும் உன்னத சக்தி, இந்த வெங்காயத்திற்கு அதிகமுண்டு என்றே மருத்துவத்துறை கூறுகிறது.

கார்போஹைட்ரேட், நார்ச் சத்துக்கள், கொழுப்பு, புரதம், உயிர் சத்துக்களான தயாமின், நியாசின் போன்றவையும், இரும்பு, மங்கனீசியம், பொட்டாசியம் போன்ற கனிமங்களையும் தன்னகத்தே அடக்கி வைத்திருக்கிறதாம் நம் சின்ன வெங்காயம்!

சின்ன வெங்காயம் | shallot
சின்ன வெங்காயம் | shallot

இல்லத்தரசிகளும் இனிய வெங்காயமும்: 

வீட்டிலும் விசேஷங்களிலும் சமையல் என்று வருகின்றபொழுது நமது இல்லத்தரசிகளின் முக்கியத் தேர்வு வெங்காயமும் தக்காளியுமே! எப்படித் திருமண நிகழ்ச்சியில் மாப்பிள்ளையும், மணப் பெண்ணும் முக்கியமோ, அந்த அளவுக்கு வெங்காயமும் தக்காளியும் முக்கியம்! ’உப்பில்லாப் பண்டம் குப்பையிலே!’ என்று சொல்வார்கள்.

சில உணவுத் தயாரிப்புகளில், உப்பைக் கூட இறுதியாகச் சேர்த்துக் கொள்ளலாம். ஆனால் வெங்காயத்தையும், தக்காளியையும் அவ்வாறு சேர்க்க இயலாது. அதனால்தானோ என்னவோ அவற்றின் விலை சில காலம் விண்ணைத் தொடுவதுமாய் சில நேரம் சீண்டுவாரின்றிச் சிறப்பை இழப்பதுமாய்ப் போய்க் கொண்டிருக்கிறது!

சமையலின் அடிப்படையாய் அவை இருப்பதோடு, உணவின் ருசியையும் உயர்த்துவதாய் இருப்பதால்தான், அவற்றின் விலை உயர்ந்தால் இல்லத் தரசிகள் கொதித்துப் போய் விடுகிறார்கள்; விலையைக் குறைக்க வேண்டுமென்று வேண்டுகோள் விடுக்கிறார்கள்.

எதிர்பார்ப்பு:

நோய் எதிர்ப்பாற்றல் தொடங்கி அதிக மருத்துவ குணங்களையும் கொண்ட வெங்காயத்தின் விலையேற்ற இறக்கங்களைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டியது அரசு மற்றும் அதிகாரிகளின் கடமையாகும்.

அதற்கு அரசு கீழ்க்கண்டவற்றில் அதிகக் கவனம் செலுத்த வேண்டும்.

  • கடந்த பத்தாண்டுகளில் வெங்காய உற்பத்தி செய்யப்பட்ட பரப்பைக் கணக்கிட்டு, அதிலிருந்து சராசரியாக வெங்காயம் சாகுபடி செய்யப்பட வேண்டிய பரப்பினைக் கணித்து, ஒவ்வோர் ஆண்டும் அந்தப் பரப்பளவில் வெங்காயம் பயிரிடப்படுவதை உறுதி செய்ய வேண்டும். 10 சதவீதம் கூடுதலாகவோ குறைவாகவோ இருக்கலாம்.

  • அதிகம் விளைந்தால் அதனைச் சேமிக்கவும், மதிப்புக் கூட்டுப் பொருளாக்கவும் உரிய உபாயங்களைத் தயாராக வைத்திருக்க வேண்டும்.

  • ஒருமுறை வெங்காயத்திற்கு அதிக டிமாண்ட் வந்து விலை கூடினால், பல விவசாயிகளும் அதனைப் பயிரிட முன் வருவதாலும், விளைச்சலும் அதிகமாக இருந்து உற்பத்தி கூடுவதாலும் விலை வீழ்ச்சி அடைந்து விடுகிறது. இதனைத் தடுக்கவே மேற்கண்ட ஏற்பாடு.

இதையும் படியுங்கள்:
கீழே விழுந்தாலும் பயந்தாலும் ஏன் 'அம்மா' என்று கத்துகிறோம்? அறிவியல் ரகசியம்!
சின்ன வெங்காயம் | shallot
  • இப்பணிகளை நமது வேளாண் துறை கவனிக்கலாம்.

  • ஓரளவுக்காவது லாபகரமாக இருந்தால்தான் விவசாயிகள் எதனையும் தொடர்ந்து பயிரிட முன் வருவார்கள். நஷ்டம் ஏற்பட்டால் அந்தப் பயிரின் பக்கம் போகவே  யோசிப்பார்கள். அந்த நிலையை மாற்ற அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

  • நுகர்வோர்களாகிய மக்கள் எதனையும் நியாய விலைக்கும், குறைந்த விலைக்கும் வாங்கவே ஆசைப்படுவார்கள். உற்பத்தியாளர்களுக்கும் நுகர்வோருக்கும் இடையே பாலமாகச் செயல்பட வேண்டியது அரசும், அதிகாரிகளுந்தானே!

  • மகசூல் குறைகையில் விவசாயிகளும் பாதுகாக்கப்பட வேண்டும்; நுகர்வோரும் பாதிக்கப்படக் கூடாது.

அரசுக்குக் கத்திமேல் நடப்பது போன்ற அபாயந்தான்! இருப்பினும் தக்க நடவடிக்கைகள் மூலம் சமாளித்துத் தானே ஆக வேண்டும். வெங்காயத்தின் விலையைக் கட்டுப்படுத்த அரசுகள் முயற்சி மேற்கொள்வதுடன், வருங்காலங்களில் இவ்வாறான நிகழ்வுகள் ஏற்படாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும். அரசு முயன்றால் ஆகாததும் உண்டோ?!