

வானவில்லின் ஏழு வண்ணங்களும் ஒன்றிணைந்தால் பிறப்பது மையிருட்டு! ஆனால், அதே கரிய நிறத்தை மட்டும் நமது சமூகம் ஏன் இன்றும் ஒதுக்கப் பார்க்கிறது? விளம்பரங்கள் கட்டமைக்கும் போலி அழகுப் பிம்பங்களையும், அன்றாட வாழ்வில் நாம் அறியாமல் கடந்து செல்லும் மௌன வன்முறைகளையும் உடைத்தெறிகிறது இந்தக் கட்டுரை.
வண்ணங்களை வெளியே தள்ளுவது மேன்மை என்றால், வண்ணங்களை தன்னுள் அரவணைத்துக் கொள்வதை என்னவென்று சொல்வது?
வாழ்க்கை என்பது வானவில்லைப் போன்றது என்பார்கள். ஆனால், அதில் இருக்கும் ஏழு வண்ணங்களும் ஓரிடத்தில் சங்கமித்தால் அங்கே பிறப்பதுதான் இந்த 'மையிருட்டு'.
உள்வாங்கும் பேராற்றல்:
அறிவியல் ரீதியாகப் பார்த்தால், ஒரு பொருள் தன் மீது விழும் ஒளியை அப்படியே பிரதிபலித்தால் அது வெண்மையாக தெரிகிறது. ஆனால், தனக்குள் விழும் அத்தனை ஒளியையும், அத்தனை வண்ணங்களையும் தன்னுள் உள்வாங்கிக் கொள்ளும் ஒரு பேராற்றல்தான் இந்தக் கரிய நிறம். இது ஒரு 'பெருந்தன்மை'.
நமது ஆதி வேர்களில் இந்த நிறப் பாகுபாடு இருந்ததில்லை. மகாபாரதத்தின் நாயகி திரௌபதி முதல், ஞானத்தின் உச்சமான வியாசர் வரை அனைவரும் இந்தக் கரிய செழுமையான நிறத்தைக் கம்பீரமாகச் சூடிக்கொண்டவர்களே.
'மாயோன்' எனும் திருமால் வரை அனைவரும் இந்த 'அளவிட முடியாத' பிரபஞ்சத்தோடு ஒரு பிணைப்பைக் கொண்டவர்களாகவே போற்றப்பட்டனர்.
சந்தையும்... விசித்திர முரணும்!
பண்டைய காலத்தில் இல்லாத இந்த நிற உணர்வு, இடைப்பட்ட காலத்தில் எப்படி இவ்வளவு தீவிரமானது? இதற்குப் பின்னால் ஒரு மிகப்பெரிய வியாபார அரசியல் இருக்கிறது. விளம்பரங்கள் "சிவப்பாக இருந்தால் தான் வெற்றி" என்ற போலி பிம்பத்தை நம் மூளையில் திணித்தன.
இங்கேதான் ஒரு வேடிக்கையான முரண் ஒளிந்திருக்கிறது. தோல் நிறம் சிவப்பாக வேண்டும் என்று பல கிரீம்களைத் தேடும் நாம், அதே முகத்தில் இருக்கும் தலைமுடி மட்டும் 'அடர் கருப்பாக' இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறோம். தலைமுடியில் நரை தெரிந்தால் பதறும் நாம், தோலில் இருக்கும் அதே கருப்பைக் கண்டு மட்டும் ஏன் அஞ்சுகிறோம்? கருமை என்பது கூந்தலில் இருந்தால் அழகு, தோலில் இருந்தால் மட்டும் ஏன் அழுக்கு? இப்படி ஒரு விசித்திரமான முரண் நமக்குள் இருப்பதை நாம் உணர்வதே இல்லை!
நிழல் தரும் கவசம்... நிஜத்தில் ஏன் கசப்பு?
வெயிலின் தகிப்பில் இருந்து நம்மைப் பாதுகாக்கக் 'கருப்புக் குடையைத் தேடுகிறோம். நமது கண்களுக்குத் தெரியாமல் ஓடும் ரத்தத்தைக் காக்கும் 'கருப்பு விழிகளை' (Black eyes) போற்றுகிறோம். ஆனால், அதே அடையாளம் ஒரு மனிதனின் தோலில் இருக்கும்போது மட்டும் நம் சமூகம் ஏன் முகம் சுளிக்கிறது?
வடு:
திருமணச் சந்தையில், ஒரு பெண்ணின் "நிறம் கம்மி" என்று ஒரு ஒற்றை வரியில் நிராகரிக்கப்படும்போது அவளது பல ஆண்டுகால உழைப்பு சுக்குநூறாக்கப்படுகிறது. இப்படியான தருணங்களில் சிதைக்கப்படுவது ஒரு நிறம் மட்டுமல்ல, ஒரு மனுஷியின் நம்பிக்கையும் கூட.
ஒரு தோழியின் திருமணத்தில் அல்லது நண்பனின் பார்ட்டியில் குழுவாகப் புகைப்படம் எடுக்கும்போது, "லைட் உன் மேல படற மாதிரி நில்லு" என்று விளையாட்டாகச் சொல்லப்படும் ஒரு வரி, ஆண்பெண் பேதமின்றி இருபாலரின் மனதிலும் ஆழமான வடுக்களை உண்டாக்குகிறது.
நண்பனின் திருமண நிச்சயதார்த்த விழா ஒன்றில், தனது வருங்கால மனைவியிடம் தனது இரண்டு உயிர் நண்பர்களை அந்த நண்பன் அறிமுகப்படுத்துகிறான்.
அந்தப் பெண் அந்த நண்பர்களை அடையாளம் காணச் சொன்ன விதம் இன்றும் வலிக்கிறது. "அந்தக் கருப்பா இருக்கிறவர் பெயர் 'X', சிவப்பா இருக்கிறவர் பெயர் 'Y' தானா?" என்று அவர் கேட்டார்.
ஒரு மனிதனின் பெயரையோ, குணத்தையோ விட அவனது 'நிறமே' அவனுக்கான அடையாளமாக இங்கே முன்வைக்கப்படுகிறது.
நான்கு நண்பர்கள் கேரம் விளையாடிக்கொண்டிருந்த போது, உடன் விளையாடும் நண்பன் கேட்கிறான்: "நீ கருப்பா?" அவன் கேட்டது கேரம் காயைப் பற்றித்தான் என்றாலும், அந்தச் சொல்லாடல் அந்த மனிதனின் நிறத்தைப் பகடி செய்வது போலவே இருந்தது. இத்தகைய 'சொல்லப்படாத' வன்முறைகள் ஒரு மனிதனை வாழ்நாள் முழுவதும் துரத்துகின்றன.
பள்ளிகளில் "நிறம் குறைந்தவள்" என்று சக மாணவிகளால் ஓரங்கட்டப்படும் ஒரு சிறுமியின் மௌனமான அழுகையையும், "கறுப்பா இருக்கான்" என்று நண்பர்களால் கேலி செய்யப்படும் ஒரு சிறுவனின் தவிப்பையும் நாம் கவனிப்பதில்லை. பேருந்தில் தனக்கு அருகில் அமரத் தயங்கி எழுந்து செல்லும் ஒருவரின் பார்வையைச் சந்திக்கும்போது அந்த மனிதனின் இதயம் எப்படித் துடிக்கும்?
சமூகம் இழைக்கும் இப்படிப்பட்ட மௌனமான வன்முறைகள் ஏராளம். கண்ணுக்குத் தெரியாமல் மனதிற்குள் புதைந்து கிடக்கும் 'மனக்குமுறல்கள்' ஏராளம்.
பிரபஞ்சத்தின் அசல் நிறம்!
உண்மையில் கரிய (Black) நிறம் என்பது உழைப்பின் அடையாளம். வெயிலில் கருகிப் போய் உழைக்கும் ஒரு விவசாயியின் உடம்பில் இருப்பது கறை அல்ல, அது இந்த நாட்டின் வாழ்வாதாரத்திற்கான அத்தாட்சி. "வானம் கருப்பாக இருப்பதால்தான் நட்சத்திரங்களுக்கே ஒரு இருப்பு (Cosmic Connection) கிடைக்கிறது" என்பதே உண்மை.
அகக்கண் திறந்த 'அபூர்வ மனிதர்கள்'
இந்தச் சமூகத்தில் இன்றும் சில 'உன்னத மனிதர்கள்' ஒளி வீசுகிறார்கள். அவர்கள் எதார்த்தமானவர்கள். விளம்பரங்கள் காட்டும் 'ஸ்கின் டோன்' கொண்டு ஒருவரை எடைபோடாமல், அவர்களின் பேச்சில் இருக்கும் தெளிவையும், இதயத்தில் இருக்கும் ஈகையையும் தேடுபவர்கள். இவர்கள்தான் இன்றைய தலைமுறைக்குத் தேவையான உண்மையான முன்மாதிரிகள். பாரபட்சம் எனும் திரையை விலக்கிப் பார்க்கும் இவர்களால் தான் உலகம் இன்றும் அன்பால் இயங்கிக் கொண்டிருக்கிறது
கருப்பு (Black) - இது ஒரு நிறம் அல்ல, இது ஒரு தத்துவம். ஒரு மனிதனை அவனது தோலின் 'மெலனின்' அளவு கொண்டு எடைபோடுவது, ஒரு காவியத்தை அதன் 'அட்டைப் படம்' கொண்டு மதிப்பிடுவதற்குச் சமம்.
அடுத்த முறை ஒருவரை நாம் பார்க்கின்ற பொழுது, அவரது நிறம் (Color) கொண்டு நோக்காமல், அவரது திறன் (Skill) கொண்டு நோக்குவோம். நாமும் மாறி, நம் அடுத்த தலைமுறைக்கும் இந்தப் பாகுபாடற்ற பார்வையைக் கற்றுக்கொடுப்போம். அதேசமயம், இன்றும் பழைய மனநிலையுடன் நிறப் பாகுபாடு பார்க்கும் மூத்த தலைமுறையினருக்கும் இந்த நவீனப் பார்வையைப் பக்குவமாக எடுத்துரைத்து புரிய வைப்போம். மாற்றம் ஒன்றே மாறாதது.
மாற்றம் ஒன்றே மாறாதது.