

பல ஆண்டுகளுக்கு முன்பு அந்த நகரத்தின் வங்கியில் பணி புரிந்தவரும் அவரது மனைவியும், அந்த ஊர் கோவிலின் அருகில், ஒரு வீட்டின் ஒரு பகுதியில் குடி இருந்தனர்.
இவர்களுக்கு ஊர் மெட்ராஸ். வேலை நிமித்தம் அந்த ஊரில் ஜாகை.
வீட்டின் ஓனர் அவரது கிராமத்தில் பிறந்து, பள்ளி படிப்பு படித்து விட்டு இந்த ஊரில் வேலை செய்து வந்தார். அவர் மனைவி வீட்டைப் பரமாரித்து வந்தார். அவர்களுக்கு ஒரே பெண். பள்ளி படிப்பை முடித்து இருந்தாள்.
பார்க்க களையான முகம். தையல் வேலை, சமையல் செய்வது, கோலம் போடுவது என்று எல்லாவற்றிலும் கெட்டிக்காரி. நன்றாக பாடவும் செய்வாள். அவளுக்கு திருமணத்திற்கு வரன் பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஒரு ஜாதகம் பொருந்தி அன்று அவளை பெண்பார்க்க பிள்ளை வீட்டிலிருந்து வருவதாக இருந்தது.
பெண் பார்க்க பையனும் அவன் அக்காவும் வருவதாக இருந்தது. பையன் கிராஜ்வெட், நல்ல அரசாங்க உத்தியோகம். தஞ்சை பக்கம் அவர்களது கிராமத்தின் அருகில் நகரத்தில் வேலை. ஒரு பையன், ஒரு பெண். அக்காவிற்கு திருமணம் ஆகிவிட்டது. பெற்றோர் கிடையாது. முக்கிய முடிவு அக்கா தான் எடுப்பார்.
இந்த பையன் தான், அந்த பெண்ணுக்கு முதல் முதலாக பெண் பார்க்க வருபவன். அந்த பெண் மற்றும் அவளது பெற்றோருக்கு பதட்டமாக இருந்தது.
குடியிருக்கும் கணவன், மனைவி தைரியம் அளித்து எல்லா உதவிகளையும் முன் நின்று செய்தனர்.
குடியிருப்பவரின் மனைவிக்கு சமையல் செய்வது மிகவும் பிடிக்கும் என்பதால் பெண் பார்க்கும் படலத்தின் முக்கிய ஐட்டங்கள் ஆன சொஜ்ஜி (ஸ்வீட்), பஜ்ஜி ( காரம்) காபி இவைகள் தயாரிக்கும் பொறுப்பை அவரே ஏற்றுக் கொண்டார்.
மாலை பெண் பார்க்க வருவதாக இருந்தவர்கள், காலை 10:30 மணிக்கே வருவதாக தகவல் அனுப்பி விட்டனர். எதுவும் ரெடி ஆகவில்லை.
நோ சொஜ்ஜி. நோ பஜ்ஜி!
என்ன செய்வது என்று பரிதவிக்க, இப்பொழுது தான் முக்கியமான ஆசாமி சீனில் என்டர் ஆகிறான். குடியிருப்பவரின் கசின். அவன் பிறந்து, வளர்ந்து, படித்தது எல்லாம் வட இந்தியாவில்.
உத்தியோகம் அங்கு தான். அவன் மிகவும் ஸ்மார்ட் ஆசாமி. வாயினால் வடை மட்டும் அல்லாமல் ஊத்தப்பம் கூட சுட்டு விற்று காசக்கி விடுவான்.
அவனுக்கு தமிழ், ஆங்கிலம், இந்தி, பஞ்சாபி, பெங்காலி போன்ற பல மொழிகள் அத்து படி. விற்பனை பிரிவில் சக்கைப் போடு போட்டு வந்தவனுக்கு ப்ரோமோஷன் கொடுத்து தமிழ் தெரிந்த காரணத்தினால் தென் இந்தியாவிற்கு அனுப்பி விட்டனர்.
இந்த ஊருக்கு அன்று காலை வந்த அவன், அந்த தருணத்தில் போன் செய்தான், இவர்கள் வீட்டிற்கு வரப் போவதாக.
குடியிருந்தவருக்கு விடி வெளி போல் வெளிச்சம் தெரிந்தது. அவனிடம் நிலைமையை கூறி, பெண் பார்க்கும் படலத்திற்கு தேவையான ஸ்வீட், காரம் வாங்கி வர சொல்ல, அவனும் ஜமாய்து விடலாம் என்று போனை வைத்து விட்டான். இவர்களுக்கு மகிழ்ச்சி முகங்களில் தாண்டவமாடியது. சிறிது நேரத்தில் பெண் பார்க்க அவர்கள் இருவரும் வந்து விட்டனர்.
நம்ம ஆசாமிக்காகவும், முக்கியமாக ஸ்வீட், காரம்காகவும் வெய்ட்டிங்! பெண் அலங்காரம் முடிந்து வெய்ட்டிங்!
நல்ல வேளை நம் ஆசாமி வந்து விட்டான். நிலைமையை புரிந்துக்கொண்டு, உள்ளே சென்று ஸ்வீட், காரம் கொடுத்து விட்டு, ஹாலில் வந்தவர்களோடு சேர்ந்து அமர்ந்துக்கொண்டு அவனது நகைச்சுவை பேச்சுக்களால் இடத்தை கலகலப்பாக்கினான்.
பெண் பார்க்கும் படலம் துவங்கியது. உள்ளே இருந்து வந்த பெண் எல்லோரையும் முறைப்படி நமஸ்கரித்து விட்டு நின்று கொண்டிருத்தாள். பையனின் அக்கா பெண்னை உட்கார சொல்ல அவள் தரையில் விரித்து இருந்த பவானி ஜமக்காளத்தில் பவ்யமாக அமர்ந்துக் கொண்டாள்.
பையனின் அக்கா மற்றும் குறிப்பாக பையனுக்கும் பெண்ணை பிடித்து விட்டது. அவர்கள் முகங்களில் தோன்றிய முக மலர்ச்சி காட்டிக் கொடுத்தது.
பெண்ணிற்கும் அவ்விதமே.
மேலும் அவள் பாடிய பாட்டில் எல்லோரும் மயங்கி விட்டனர்.
வந்தவர்களும் தட்டுகளில் பாங்காக வைத்து பெண் கொண்டு வந்து கொடுத்த ஸ்வீட் , காரம் மற்றும் வீட்டில் தயார் ஆன டிக்காஷன் காபி இவற்றை டேஸ்ட் செய்து வெகுவாக பாராட்டி விட்டு அவர்களுக்கு பெண் மிகவும் பிடித்து இருக்கிறது என்று பச்சை கொடி வேறு காட்டி விட்டு சென்றார்கள்.
இரண்டு மாதங்களில் திருமணம் இனிதாக நடைப்பெற்றது. நமது ஆசாமி லீவ் போட்டு விட்டு வந்து முன் நின்று எல்லா உதவிகளையும் செய்து திருமணம் நன்கு நடக்க அசத்தினான்.
திருமணத்தில் அதே ஸ்வீட், காரம் ஸ்பெஷல் ஐட்டங்களாக இடம் பிடித்து விருந்தினர்களின் பாராட்டுதல்களை பெற்றன. அவைதான் லாலா கடை சோன் பப்டி, பகோடா.
அன்று போனில் கூறும் பொழுது பெண் பார்க்க வருபவர்களுக்கு கொடுக்க தேவையான அளவு ஸ்வீட், காரம் வாங்கி வா என்று நம் ஆசாமியிடம் கூறப்பட்டது.
நம் ஆசாமி போன் பேசி வைத்ததும் எதிரில் தென்பட்டது வட இந்திய சேட் ஸ்வீட் ஸ்டால்.
அங்கு சென்று சரளமாக இந்தியில் பேசி சாம்பிள் டேஸ்ட் செய்து அட்டகாசமாக வாங்கி வந்தது அவனுக்கு தெரிந்த நல்ல ஸ்வீட் , காரம் தான் சோன் பப்டி, பகோடா.
ஜொஜ்ஜி, பஜ்ஜி இல்லா விட்டால் என்ன? இருக்கவே இருந்தது சோன் பப்டியும், பகோடாவும்... சுமுகமாக பெண் பார்க்க வைத்து விட்டது அல்லவா!