

சனிக்கிழமை ஸ்கூல் விட்டதும் ஜெ. ஷீலா வீட்டுக்குப் போவதென்று ஏற்கனவே முடிவு செய்திருந்தோம். அவள் வெகு நாட்களாக அழைத்துக்கொண்டிருந்தாள். வே. கல்பனா, வி.லதா ஜி. சீதா, மைமூனா மற்றும் வி. எஸ் ஆகிய நான் எல்லாரும் போவதாக ஏற்பாடு.
நாங்கள் எட்டாவதில் இருந்தோம். அப்போதெல்லாம் அவரவர்கள் இனிஷியலோடு அழைத்துக்கொள்வோம். து.பாமாவை ‘டி பி’ ஜி. சீதாவை ‘ஜி.எஸ்’ மைமூனாவை ‘என்நிலவா’ என்று பின்னாளில் பெயர் மாற்றம் செய்தது நான்தான்.
நேற்றும் இன்றும் ஜெ.ஷீலா பள்ளிக்கு வரவில்லை. அலைபேசி பிறக்காத ராஜாக்கள் காலம் அது. ஏன்? எதற்கு விடுப்பு...? என்று எந்தத் தகவலும் வரவுமில்லை.
அவள் கிழக்குத் தாம்பரம் சந்தோஷபுரத்தில் இருந்தாள். எங்கள் பள்ளியிலிருந்து இரண்டு கிலோமீட்டர். பல்லவன் பேருந்து எண் 55ல் வருவாள். அவள் ஏன் வரவில்லை என்று ஆராய்ச்சியில் ஈடுபடாமல் பள்ளி மணியடித்ததும் பஸ் ஏறிவிடலாம் என்று முடிவு செய்தோம். அப்போது வீடுகள் மிகக் குறைவு என்பதால் முகவரியும் ஜிபிஎஸ்சும் இன்றி வீட்டைக் கண்டுபிடிப்பது வெகு சுலபம்.