

மாலைக் குளியலை முடித்துவிட்டு தன் அறையில் உள்ள பூஜை அலமாரியில் உள்ள விளக்கில் திரியிட்டு விளக்கேற்றினார் சாந்தா. கடிகாரத்தை பார்க்க அது சரியாக 5.30 என்று காண்பித்தது. வழக்கம்போல் சில ஸ்லோகங்களை படித்துவிட்டு வெளியே வாக்கிங் கிளம்ப ஆயுத்தமானார்.
ஜில்லென்ற காற்று ஒரு நொடியில் முகத்தில் அடிக்க ஒரு நிமிடம் தன்னை மறந்தார். இந்த ஒரு நொடி காற்றுக்கு என்னவோ ஒரு சக்தி, பழைய கால வாசனையை நினைவூட்டும் சக்தி. இந்தக் காற்றின் சுகத்தை முன்பே அனுபவித்த மாதிரி. நினைத்துக்குகொண்டே படியில் இறங்கியவள், தான் வழக்கமாக செல்லும் 'வாக்கிங் ஏரியா'விற்குச் சென்றார். இங்கு இந்த 'சரணாலய இல்லத்திற்கு' வந்த 8 மாதங்களாய் இதை அவளின் வழக்கமாக்கிக்கொண்டார்.
காலை 6 மணிக்கு எழுந்தவுடன் குளித்து, விளக்கேற்றி தன் பூஜையை முடித்துக்கொள்வார். சரியாக 6.30 மணியளவில் பாலோ, காபியோ அறைக்கு வந்துவிடும். அதன்பின் சரியாக 8.30 மணிக்கு கீழே கிச்சனை ஒட்டிய அறையில் காலை உணவு இட்லி, பொங்கல் என்று ஏதாவது இருக்கும்.