திக் திக் திக்... தொடர்கதை: மூன்றாவது கண் - அத்தியாயம் 1

இயற்கையைக் காக்க வேண்டிய அவசியத்தை உணர்த்தும் ஒரு நல்ல திகில் கதை!
Tamil series story | Moonravathu Kann
Tamil series story | Moonravathu Kann Image credit: Chatgpt
சூர்ய ரத்னா

சிங்கப்பூரின் முதல் பெண் தமிழ் நாவலாசிரியர் (மேற்கே உதிக்கும் சூரியன்), முன்னாள் ஆசிரியர், பயிலரங்கு பயிற்றுவிப்பாளர். அனுபவம் வாய்ந்த எழுத்தாளர். வானொலி, தொலைக்காட்சி நடிப்பு, குரல் நடிப்பு (2020, 2023 சிங்கப்​பூர்த் தேர்தல்கள் உள்பட), மொழிபெயர்ப்பு, சிறுகதைகள், நாவல்கள், தொலைக்காட்சி/ வானொலி கதை வசனம், கல்வி அமைச்சின் கதைநூல்கள் மற்றும் பெரிய புத்தகங்கள் உள்பட சுமார் 60க்கும் மேற்பட்ட சிறுவர் கதைகள் படைத்துள்ளார். 2023-ல் நந்தவனம் பெளண்டேஷனின் ‘சாதனைப் பெண்கள் விருது (சிங்கப்பூர்)’ பெற்றார். சொந்த யூடியூப் சேனல் ந​டத்துகிறார். (Cozy Library, Ratham Singapore True Crime Stories). தற்போது கல்கி ஆன்லைனில் எழுதி வருகிறார்.

Updated on: 
MM strip
MM strip

திக் திக் திக்... சிறுகதை: மூன்றாவது கண் - அத்தியாயம் 1

‘நேச்சர் ட்ரெக்கில்’ ஒரு நடை போகலாம் என்பது நீண்ட நாட்களாகவே அனிதாவும் ஜானுவும் போட்டிருந்த திட்டம். அன்று அமைந்துவிட்டது. கொசுக்கடியிலிருந்தும் வெயில் தாக்கத்திலிருந்தும் ஓரளவு பாதுகாப்பு தரும் லெக்கிங்ஸ், சன்ஸ்கிரீன், கல்லுக்கும் முள்ளுக்கும் ஏதுவான காலணிகள், பூச்சி ரிப்பெல்லண்ட், பெரிய தண்ணீர்ப் பாட்டில் மற்றும் நூறு கிலோ உற்சாகத்தோடு அனிதா கிளம்பினாள்.

என்ன, மாதவிடாய் வராமல் இருந்திருக்கலாம். மூன்றாவது நாள். அனிதாவுக்கு மாதவிடாய் தேதி ஓரிரு நாள் முன்பின் வரும். மற்றபடி வலி மிகுந்தோ அதிக இரத்தப்போக்குடனோ இருந்தது கிடையாது. மாதவிடாய் நேரத்தில் நீச்சலடிக்கவே போயிருக்கிறாள்; டாம்பொன்ஸ் அணிந்து. அதனால், இதற்காக நடைதிட்டத்தைத் தள்ளி வைக்க அவள் விரும்பவில்லை.

நேச்சர் ட்ரெக்கில் இருந்த சிறிய சாலையை முதலில் அடைந்தவள் அனிதா. அதன் நுழைவாயிலில் செல்ஃபிகளை எடுத்துத் தன் சமூக வலைதளத்தில் பதிவேற்றினாள். சிறிது நேரத்தில், ‘பார்த்துப் போ. என்ஜாய் பண்ணு. யாரோட போறே? என்னை ஏன் கூப்பிடவில்லை?’ போன்ற வழக்கமான பதில் பதிவுகள். ஒரு பதிவு மட்டும், 'பல வருஷத்துக்கு முன்னால் அங்கே ஒரு பெண்ணை கொன்று போட்டாங்க. அவள் ஆவி அங்கே சுத்திட்டு இருக்காம். ஜாக்கிரதை,' என்றிருந்தது.

அப்படி யாரும் அந்த இடத்தில் கொல்லப்பட்டதாக அனிதா கேள்விப்பட்டதில்லை. கூகுளிலும் செய்தி இல்லை. குறும்புக்காரப் பதிவு என எண்ணிப் புன்னகைத்தாள்.

‘சும்மா அள்ளி விடறது!’ ஜானு வந்துவிட்டாள்.

அதிகம் நவீனப்படுத்தப்படாத அந்த நேச்சர் ட்ரெக்கைத் தேர்ந்தெடுத்திருந்தார்கள். எளிய நடைபாதைகள் இருந்தாலும், காலம் காலமாக நடந்து திரிந்த காலடிகளால் உருவான மண்பாதைகளில் வளைந்து நெளிந்து நடந்து செல்வதே சுகம்.

வாரநாள் காலை என்பதால் அதிகம் பேர் இல்லை. இயற்கையின் ஊட்டச்சத்தில் பெரணிச் செடிகள் வஞ்சனையின்றிப் பெரிது பெரிதாகப் பல இடங்களில் விரிந்திருந்தன. சிறிய, பெரிய பழுப்பு நிறப் பாம்புகளின் நீளமான முதுகுகளைப் போலப் புல்தரையின் ஊடே தெரிந்த தொன்மையான மரங்களின் வேர்கள், பரந்து ஒன்றோடொன்று பின்னிய கிளைகள், கிளைகளின் இடைவெளிகளுக்கிடையே வடிகட்டி விழுந்த சூரிய ஒளி, ஆங்காங்கே காலுக்கடியில் நறநறவெனச் சரளைக் கற்கள், போக்குவரத்து இரைச்சலுக்கு மாற்றாகப் பறவைகளின் அழைப்பொலிகள்.... பொன்னும் பச்சையும் பழுப்பும் கலந்த அழகானதோர் ஓவியத்துக்குள் ஜானுவும் அனிதாவும் பேசிக் கொண்டே சென்றனர்.

அரைமணி நேரம் சென்றிருக்கும். தாழ்வான மணல் மேடு ஒன்றின்மீது இரண்டு வெள்ளைக்காரப் பெண்கள் ஓய்வாக அமர்ந்திருந்தனர். எட்டிலிருந்து பத்து வயதுக்குள் இருந்த அவர்களின் மூன்று குழந்தைகளும் களைப்பாகத் தென்பட்டாலும், அந்த வயதுக்கே உரிய உற்சாகம் குறையாமல் இருந்தனர். சிறுவர்களோடு இருந்ததால் அவர்கள் வந்தது சிறிய டிரேய்ல் பாதையாக இருக்கலாம் என நினைத்துக் கொண்டாள்.

“இண்டர்நேஷனல் ஸ்கூலில் படிக்கிற பிள்ளைங்க போல. இப்போ அவங்களோட விடுமுறை, இல்ல?” என்ற அனிதா, பொன்னிறச் சுருள்முடிச் சிறுமியின் அழகை மிகவும் ரசித்தாள்.

இரண்டு சிறுவர்கள் ஓடிக் கொண்டிருந்தாலும் அதிகச் சேட்டை செய்யவில்லை. ஒருவன் பழரசத்தைக் குடித்துவிட்டுப் பாக்கெட்டைக் கீழே வீசினான். அவன் தாய் ஓர் அதட்டலைப் போட்டதும், பழரசப் பாக்கெட்டை அவள் வைத்திருந்த பிளாஸ்டிக் பையில் போட்டான். இன்னொரு சிறுவன் அவனாகவே தன் பழரசப் பாக்கெட்டைப் பையில் போட்டான்.      

“சோ கியூட்’ல?” என்றாள் அனிதா சாதாரணமாக. எது சாதாரணமாக ஜானுவுக்குத் தோன்றவில்லை என்றால், சிறுமி எதையோ பார்த்துப் பார்த்துச் சொந்தமாகப் பேசுவதும் சத்தமின்றிச் சிரிப்பதும்.

தன்னுடைய பழரசப் பாக்கெட்டை எதனிடமோ நீட்டினாள். தாய் அழைத்ததும் ஓடி வந்தாள். திரும்பிப் பார்த்துப் புன்னகைத்தாள். தாய்கள் தங்களின் உரையாடலில் ஆழ்ந்திருந்ததால், சிறுமியின் செயல்களைப் பெரிதுபடுத்தவில்லை.

அவர்களை அனிதாவும் ஜானுவும் கடந்ததும், “அந்த பொண்ணு சொந்தமா பேசிட்டிருக்கு, யாருகிட்டேயோ ஜுஸ்ஸை நீட்டுது, கவனிச்சியா?” என்று ஜானு கேட்டாள்.

“கவனிச்சேன். அந்த ரெண்டு பயலுங்களும் அதை விளையாட்டிலே சேர்த்திருக்க மாட்டானுங்க. அதனாலே அதுவே ஒரு கூட்டாளியைக் கற்பனை பண்ணி இருக்கும். ஒரே பிள்ளையா இருக்கலாம், பாவம்.”

‘அனி சொல்றதும் சரிதான்.....’

அடுத்த இருபது நிமிடங்களுக்கு அனிதா, தன் பாய்பிரண்டோடு சண்டை போட்ட கதையைப் பகிர்ந்து கொண்டிருந்தாள். பல்கலைக்கழக மாணவர்களைப் போலத் தோன்றிய மூன்று ஆண்களும் இரு பெண்களும் வேறொரு பாதையிலிருந்து இணையவிருந்தது தெரிந்தது.

Tamil series story | Moonravathu Kann
Tamil series story | Moonravathu Kann Image credit: Chatgpt

கேலியும் கிண்டலும் சிரிப்புக்கும் இடையில், அதிகச் சத்தமும் சேட்டையுமாக ஓர் இளைஞன் இருந்தான். தாழ்வாகப் பூத்துக் குலுங்கிய ஒரு மெல்லியக் கிளையை ஒடித்தான்.

“ஏய், லாம்! செய்யாதே, சிசிடிவி இருக்கப் போகுது. அப்புறம் வாண்டலிஸ்ம் பண்ணதுக்கு மொய் எழுதணும்!” என எச்சரித்தாள் கூட்டத்திலிருந்த ஒருத்தி.

“மெயின் பாதைகளிலே வேணா சிசிடிவி இருக்கும். இங்கே இருக்காது,” என்றவாறு எச்சரித்தவளிடமே பூங்கொத்துக் கிளையை அவன் நீட்டினான். மகிழ்ச்சிக் கூப்பாடுகள், விசில் சத்தம். ஜானுவின் முகம் மாறியது.

“கொட்டமடிக்குதுங்க.... சிசிடிவி இருந்தாதானே பயம் இருக்கும்?”

“சும்மா ‘ஃபன்’தானே பண்ணிட்டிருக்குதுங்க. ஏன் சீரியசா எடுத்துக்கிறே? இருந்தாலும் கிளையை உடைக்காமல் இருந்திருக்கலாம்.” 

லாம், தனது காலி மினரல் வாட்டர் பாட்டிலை ஒரு மரத்தை நோக்கி வீசினான். மரத்தின் பட்டையில் ஆடாமல் அசையாமல் ஒட்டிக் கொண்டிருந்த ஒரு குட்டி ஓணான் திடுக்கிட்டுக் குதித்தோடியது. அவனைக் கிண்டலடித்து, மற்றவர்களிடமிருந்து ஒரு குபீர் சிரிப்பு.

ஜானுவுக்குக் கோபமான கோபம்.

“சரியான அறுந்த வால்! தூக்கிப் போட்டு இரண்டு மிதி மிதிச்சாதான் புத்தி  வரும்.”  

லாம் ஓணானைத் தேடிப் பாதையை விட்டு விலகிப் போக, நண்பர்களும் மெதுவாகப் பின்தொடர்ந்தனர். அப்போதுதான் ஜானு கவனித்தாள்.

மங்கலாகக் கானல் நீர் போன்று ஏதோ........ இளைஞர்களுக்குப் பின்னால். மரங்களின் நிழல்கள் நீண்டனவா, என்ன? 

கண்களைச் சுருக்கிப் பார்த்தாள். இளைஞர்கள் நகரும்போது, அவர்களைத் தொடர்ந்து அந்த நிழலுருவமும் நகர்ந்தது. 

“அனி! அவங்க பின்னாலே பாரேன். என்னவோ நகர்ந்து போகுதுதானே? நிழல் மாதிரி.”

அனிதா உற்று நோக்கினாள்.   

“ஹ?”  

அனிதாவைப் போலவே லாமின் நண்பர்களுக்கும் அந்த ‘என்னவோ’ தெரியவில்லை என அவர்களின் யதார்த்தமான உடல்மொழி சொன்னது. லாம் வேறு எதன் மீதோ ஒரு கல்லை விட்டெறிந்தான். அவன் பின்னாலிருந்த மங்கலான நிழலுருவம் இப்போது சுமார் எட்டு அல்லது ஒன்பது அடி உயரத்துக்கு அடர்த்தியாகத் தெரிந்தது. 

அனிதாவின் பக்கம் நடுக்கத்துடன் திரும்பி, “ஒழுங்கா பாரு, அங்கே என்னவோ இருக்கு,” என்றாள். இருவரும் திரும்புவதற்குள் அந்த ‘என்னவோ’ லாமின் முதுகை வேகமாக உதைத்தது. ஒரு கதறலுடன் முன்னால் இருந்த மரத்தில் அவன் பலமாக மோதி விழுந்தான்.

‘என்னவோ’ மறைந்தது.

லாமின் அடிபட்ட மூக்கிலிருந்தும், கிழிந்த உதட்டிலிருந்தும் இரத்தம். கன்னத்தில் இரத்தக்கீறுகள். அனிதாவும் ஜானுவும் உதவ ஓடினார்கள். வலியும் அவமானமும் ஒருசேர, “யார் என்னைத் தள்ளிவிட்டது?” என ஆத்திரத்தோடு லாம் கத்தினான். நண்பர்கள் குழம்பினர்.

“நாங்க இங்கே நிற்கிறோம், எங்களைச் சொல்றே? பெரிய பெரிய வேர்களா இருக்கு, ஒழுங்கா பார்க்காம நீயாதானே தடுக்கி விழுந்தே?” 

லாம் கெட்ட வார்த்தைகளை உதிர்த்தான். தள்ளிவிடவில்லை என அவர்கள் சொன்னதை அவன் நம்பாமல் இருந்திருக்கலாம். அல்லது வலியின் வெளிப்பாடு.

டீசர்ட் எல்லாம் இரத்தம். பெண்கள் தங்களிடமிருந்த டிஷ்யூ தாள்களைத் தந்தனர். ஆண்கள் தண்ணீர்ப் பாட்டிலிலிருந்த நீரால் லாமின் இரத்தக்காயங்களைத் துடைத்து விட்டனர்.   

லாமின் காதில், “பெ..ர்..கி...,” (pergi) என ஒரு குரல் கிசுகிசுத்தது. அடிபட்டதில் முகம் வீங்கத் தொடங்கியிருந்ததால், வலியில் லாம் அதற்கு முக்கியத்துவம் தரவில்லை. நண்பர்கள் ஏதோ சொன்னார்கள், காதில் சரியாக விழவில்லை என எண்ணி விட்டுவிட்டான். மீண்டும் கேட்டது. இந்த முறை சற்று ஆழமாக. 

“பெர்கி!”

லாம் கண்டுகொள்ளவில்லை.

உடனே- “பெர்கி!”

கோபத்துடன் அலறிய அந்தச் சொல், எதிரொலி அதிர்வுகளை ஏற்படுத்தியது. லாம் பயத்தில் துள்ளி எழுந்தான். தடுமாறி மீண்டும் விழுந்தான். ஆண் நண்பர்களிடம், “என்ன, சும்மா பெர்கி, பெர்கி’னு? வாட் தி ஹெல் இஸ் பெர்கி? பிராங்க் பண்றீங்களா?” எனக் கீச்சாகக் கத்தினான். நண்பர்கள், ஜானு ஒருவரையொருவர் புரியாமல் பார்த்தனர்.    

பெர்கி என்ற சொல்லை அவர்கள் கேள்விப்பட்டதே இல்லை. பின், அதைச் சொல்வது எப்படி? அவனைப் பிராங்க் செய்வது எப்படி?  

“நாங்க ஒன்னும் சொல்லலையே?”

“பெர்கி’னா வெளியேறு’னு அர்த்தம். மலாய், இந்தோனிசியா மொழியில்......” என்ற அனிதாவை அனைவரும் ஒரே நேரத்தில் பார்த்தனர்.

(அத்தியாயம் 2 தொடரும்...)

இதையும் படியுங்கள்:
திக் திக் திக்... தொடர்கதை: மூன்றாவது கண் - அத்தியாயம் 2
Tamil series story | Moonravathu Kann
logo
Kalki Online
kalkionline.com