சிந்திக்க வைக்கும் சிறுகதைகள் 2!

சில விசித்திரமான மனிதர்கள் மற்றும் சில விசித்திரமான நம்பிக்கைகள் பற்றிய சுவாரசியமான சிந்திக்க வைக்கும் இரண்டு சிறுகதைகள். 1. என்ன சொல்ல.. என்ன சொல்ல..? 2. பிடித்த ஆவி!
தமிழ் கதை | Female server, customer and A woman is taking a steam inhalation
தமிழ் கதை | Female server, customer and A woman is taking a steam inhalationAI Image
Updated on
MM strip
MM strip

1. என்ன சொல்ல.. என்ன சொல்ல..?

தமிழ் கதை | Female server and customer
தமிழ் கதை | Female server and customerAI Image

ஓபனிங்க்கிலேயே சர்வர் சுந்தரம் படத்தில் கஸ்டமர் ஒருவரைப் பார்த்துச் சொல்வார், “நீ ஏன் கையைக் கழுவறே?"னு.

ஆறுமுகத்துக்கு அதுதான் ஞாபகத்துக்கு வந்தது எதிரில் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த அவரைப் பார்த்ததும்.

அவர் சாப்பிட்டுக் கொண்டே… “உனக்கு எத்தனை மணி வரைக்கும் வேலை?" என்றார் சர்வரைப் பார்த்து… கருணா மூர்த்தியாக! காரணம் அந்த சர்வர் ஆணல்ல! ஒரு பெண்.

அவள் "பத்து மணியாயிடும்!" என்றாள்.

"வேலை முடிஞ்சு எப்ப வீட்டுக்குப் போவே?"

"கடைசி பஸ் பத்தரைக்கு. அதுலதான் போவேன்."

"ஏன் டூவீலர் வச்சுக்கறதுதானே? எந்நேரமானாலும் வீடு போலாமே?" இது அவர்.

"டூவீலர்லாம் வாங்க வசதி இல்லை."

"வீட்டுக்காரர் என்ன வேலை பார்க்கிறார்?"

"அவரில்லை. செத்து மூணு வருஷமாச்சு."

"குழந்தைகள்?"

"ரெண்டிருக்கு. எல்லாம் பள்ளிக் கூடத்துல படிக்குதுங்க!"

அவருக்கான பில்லைக் கொண்டு வந்து வச்சாள் அந்தப் பெண்.

'சே! வந்தமா சாப்பிட்டமா போனோமான்னு இல்லாம, என்ன கருணை மனுஷனுக்கு? சாப்பிட்டு முடித்த கை விரல்களைக் கழுவத் தேவை இல்லாத அளவுக்கு உறிஞ்சி எடுத்தார்.'

சர்வர் சுந்தர நாகேஷ் நினைவுக்கு வந்தார்.

அவளைப் பார்த்து, "நூறு நூத்தைம்பது ரூபாய்க்குப் பழைய சைக்கிளாவது வாங்கி வச்சுக்கலாமே?" என்றார் கருணை பொங்க.

ஆறுமுகம் மனசில் அவர் படிப்படியாய் பரமபத ஏணியாய் ஏறினார். ஏதோ.. ஐநூறோ ஆயிரமோ கொடுப்பார்னு தோணிச்சு.

பில் அமவுண்டைக் கொடுத்து அனுப்பிவிட்டு, தலையைக் குனிந்து ஆறுமுகத்தைப் பார்த்துக் கொண்டே சொன்னார்… “நல்ல வேளை புருஷன் போய்ச்சேர்ந்தான். டாஸ்மாக்குல குடிச்சுச் சாகாம!" என்றார்.

நொறுங்கிப் போனார்கள் ஆறுமுகமும் அந்தப் பெண் சர்வரும்.

********

2. பிடித்த ஆவி!

தமிழ் கதை | A woman is taking a steam inhalation
தமிழ் கதை | A woman is taking a steam inhalationAI Image

ஏழிலரசி ரெண்டு மூணு நாளாவே எரிந்து எரிந்து விழுந்தாள். சுந்தருக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. டவுணுக்குக் குடிவந்து ஆறு மாதம் கூட ஆகவில்லை. புரோக்கர் மூலம் வீடு பிடித்துக் குடி வந்தார்கள். கல்யாணமான புதிது வேற.

இதையும் படியுங்கள்:
சிறுகதை: கண்ணன் - முதிர் கண்ணன்!
தமிழ் கதை | Female server, customer and A woman is taking a steam inhalation

வீடு எப்படி? என்ன? முன்னாடி, குடி இருந்தவர்கள் ஏன் காலி செய்தார்கள்? னெல்லாம் விசாரிக்கத் தெரியவில்லை. வீட்டுக்கு வரும் வழியில் ஒரு எலக்ட்ரிக் கிரிமிடோரியம். எப்பவும் சொர்க்க ரதம் வந்த வண்ணமாகவே இருக்கும். அதைத் தாண்டித்தான் அவர்கள் வீடு போகணும், வரணும்.

அங்கே எழிலரசி என்னைக்கோ எதையோ பார்த்திருக்காள் போல!

விசாரிக்கையில் ஒரு பூசாரி, எதையோ சொல்லி வைக்க, பயம் பற்றிக் கொண்டது.

‘ஆவி அடிச்சிருக்கும்னு அடிச்சுவிட்டார்.'

சுந்தர் நொந்தே போய்விட்டான். இதுக்குப் பரிகாரம், பூஜைனா ஒரு இருபதாயிரம் ஆகும்னு வேற சொல்லி பயமுறுத்தினார்!

சொந்த ஊருக்கு விவரம் சொல்ல, பதறிப் போனவனை சரிசெய்ய பட்டிக்காட்டிலிருந்து மாமா - அத்தை வந்தார்கள்.

இதையும் படியுங்கள்:
அடுத்தடுத்து 2 அசத்தல் கதைகள்..!
தமிழ் கதை | Female server, customer and A woman is taking a steam inhalation

எழிலரசியை ஒரு பக்கம் உட்காரச் சொல்லிவிட்டு, வீட்டுல முருங்கை மரம் இருக்கான்னு கேட்டாள் வயதான அத்தை.

சுந்தர் நினைத்தான் ‘சரிதான் எதோ வேதாளத்தை முருங்கை மரத்தில் ஏற்றிவிடப் போகிறாளோ? இல்லை இறக்கிவிடப் போகிறாளோ? போகுமா? போனால் சரி! இருபதாயிரம் மிச்சம்'னு நினைத்துக் கொண்டான். நல்லவேளை வீட்டின் கொல்லையில் வளர்ந்த முருங்கை மரமிருந்தது. இருட்டுக் கட்ட, போய் அதில் சில ஈர்க்குகளை உருவிவந்தாள் அத்தை. அதைக் கொதிக்கும் தண்ணீரில் போட்டு, ரெண்டுசொட்டு நீலகிரித் தைலமும்விட்டு எழிலரசியை போர்வை போர்த்தி ஆவி பிடிக்கச் சொன்னாள். பிடித்ததில் போய்ச் சேர்ந்தது. பிடித்த ஆவியாய் நினைத்திருந்த தலை பாரம்!

எந்த ஆவியும் அவளை அடிக்கவுமில்லை பிடிக்கவுமில்லை! நீராவி பிடிச்சதுல போய்ச் சேர்ந்தது தலைபாரமும் மன பயமும்!

logo
Kalki Online
kalkionline.com