

1. நன்னயம் செய்து விடல்:
சேரன் எக்ஸ்பிரஸ் கோவையிலிருந்து சென்னைக்கு தன் பயணத்தை துவங்க ஆயத்தமாக இருந்தது. ரயிலின் S8 கோச்சினுள் ஏறிய ராகவனும் அவர் மனைவி வசந்தாவும் தங்கள் உடமைகளை சீட்டின் கீழ் வைத்துக் கொண்டிருந்தனர்.
அப்போது அந்த கோச்சினுள் ஒரு வயதான பெண்மணியும் அவர் மகன் போல் இருந்த ஒரு இளைஞனும் ஏறி வந்தனர். ராகவன் அமர்ந்திருந்த சீட்டுக்கு பக்கவாட்டில் ஆர்.ஏ.சி யில் அவர்கள் இருவரும் அமர்ந்தனர்.
அந்த பெண்மணியின் முகத்தில் கவலையும் சோர்வும் பரவி இருந்தது. "என்னடா ஸ்லீப்பர் கிடைக்குமா?" என தன் மகனைக் கேட்டார் அந்த பெண்மணி. "டிடிஆர் வரட்டும் பார்க்கலாம்மா" என்றான் அந்த இளைஞன்.
ஒரு பெருமூச்சுடன் ரயில் கிளம்பியது. சற்று நேரத்தில் டிடிஆர் அங்கு வருகை தரவும் அந்த இளைஞன் அவரை அணுகி "சார் ஆர்ஏசிக்கு ஸ்லீப்பர் கிடைக்குமா?" என கேட்டான். "ரொம்ப கஷ்டம் சார்" என்று உதட்டை பிதுக்கியபடி டிடிஆர் மற்றவர்களிடம் நகர்ந்தார்.
டிடிஆரிடம் பயணச்சீட்டை காண்பித்து விட்டு ராகவன் வசந்தாவிடம் "அந்த ஏர் பில்லோவை எடும்மா படுக்கலாம்" என்றார். அனைவரும் அவரவர் இருக்கையில் படுத்ததும் அந்த இளைஞன் அந்த பெண்மணியிடம் "அம்மா நீ இங்க படுத்துக்க, நான் கீழே பேப்பர் விரிச்சி படுத்துகிறேன்" என்று கூறி நியூஸ் பேப்பரை இரண்டு லோயர் பெர்த் நடுவில் கீழே விரித்தான்.
"தம்பி இங்க படுக்காதப்பா லேடீஸ் பாத்ரூம் போக சிரமமா இருக்கும்" என உடனடியாக ராகவன் அவனிடம் ஆட்சேபித்தார். "சார் ஒரு ரெண்டு மணி நேரம் தான் படுப்பேன். அப்புறம் எழுந்திருச்சுடுவேன். நாளைக்கு எனக்கு ஒரு இன்டர்வியூ. அதனாலதான் இல்லனா படுக்க கூட வேண்டாம்" என மெல்லிய குரலில் பேசினான் அந்த இளைஞன்.
"அது உன் பிரச்னைப்பா" என்ற ராகவன் "பக்கத்துல ஜென்ஸ் படுத்திருப்பாங்க அங்க போய் படுப்பா" என அவனுக்கு ஆலோசனை வழங்கினார். "அம்மா கொஞ்சம் உடம்பு முடியாதவங்க. ஏதாவது உதவி தேவைன்னா நான் பக்கத்துல இருக்கணும்" என தயங்கியபடி கூறிய இளைஞனிடம் "எனக்கு கூடத்தான் முடியல" என்று கூறிய ராகவன் அந்த இளைஞன் என்ன சொல்லியும் அவனை கீழே படுக்க அனுமதிக்கவில்லை.
அந்தப் பெண்மணி தன் மகனின் கையை பற்றி மேலும் வாக்குவாதம் வேண்டாம் என்பது போல் அவனைப் பார்த்தார். அதனால் அவன் தன் அம்மாவை சீட்டில் படுக்க சொல்லி விட்டு சீட்டின் ஒரு ஓரத்தில் உட்கார்ந்து வந்தான். ட்ரெயின் சேலத்தை நெருங்கிக் கொண்டிருந்தது.
ராகவன் லேசாக இருமினார். சிறிது இடைவெளியில் திரும்பவும் இருமத் தொடங்கினார். அவர் மனைவி வசந்தா வாட்டர் பாட்டிலில் தண்ணீர் இருக்கிறதா என பார்த்தவள் இல்லை என அறிந்து மிகக் கவலையானார்.
ராத்திரி நேரம் தானே தண்ணிய வேற எதுக்கு சுமந்துகிட்டு பாதி பாட்டில் போதும் என ராகவன் கூறியதால் கொஞ்சமாக தண்ணீர் எடுத்து வந்ததை நினைத்து வசந்தாவுக்கு தன் மீதே கோபம் வந்தது. ராகவனுக்கு தொடர் இருமல் கடுமையாகியது. அங்கு தூங்காமல் அமர்ந்திருந்த அந்த இளைஞன் எழுந்து தன் பையில் இருந்த பிளாஸ்க்கை எடுத்து வசந்தாவிடம் நீட்டி "அம்மாவுக்கு தேவைப்படும்னு சுடு தண்ணி எடுத்துட்டு வந்தேன். சாருக்கு கொடுங்கம்மா, இருமல் நின்னுடும். தொண்டைக்கு இதமா இருக்கும்" என்றான்.
இருமிக் கொண்டிருந்த ராகவனும் பிளாஸ்க்கை வாங்கிய வசந்தாவும் இதற்கு பதில் ஏதும் கூற முடியாமல் வெட்கத்தில் தவித்துப் போயினர்.
2. காய்ச்சல்:
"உங்க தங்கச்சி செய்யறது எதுவும் எனக்கு பிடிக்கலைங்க. ஆனா ஊனா புகுந்த வீட்டிலிருந்து நம்ம வீட்டுக்கு கிளம்பி வந்துடறா. மாப்பிள்ளை வீட்டில ஏதாவது புகார் சொல்லப் போறாங்க. அவளை எப்படிங்க திருத்தறது?" மீனாட்சி தன் நாத்தனாரை நினைத்து நிஜமான கவலையில் தன் கணவன் குமாரிடம் அங்கலாய்த்தாள்.
"எல்லாம் உன்ன சொல்லணும். அவ எனக்கு மகனு சொல்லி செல்லம் கொடுத்த. நம்ம வீட்ல இருக்கிற வரைக்கும் தாங்க இப்படி இருக்க முடியும்னு அவள சோம்பேறியா வளர்த்துட்ட. புகுந்த வீட்லயும் அப்படியே இருந்தா சரிப்படுமா?" என்றான் குமார் கோபமாக.
மீனாட்சி புகுந்த வீட்டுக்கு வந்த போது மாதவி ஐந்து வயது சிறுமி. அவளும் அண்ணி என மீனாட்சியிடம் ஒட்டிக் கொண்டாள். கொஞ்ச வருடங்களில் குமாரின் பெற்றோரும் நோயில் ஒருவர் பின் ஒருவராய் இறந்து போனதால் மாதவியை தன் மகளாகவே ஏற்றுக் கொண்டாள் மீனாட்சி. அவள் தனக்கு குழந்தை பிறக்காததைப் பற்றி கவலைப் படவும் இல்லை.
அன்று காலை விடியும் போதே வாசலில் ஆட்டோ சத்தம் அவர்களுக்கு மாதவியின் வரவை கட்டியம் கூறியது.
உள்ளே நுழைந்து சோபாவில் அமர்ந்த மாதவி "அண்ணி காபி கொண்டாங்க" என்று செல்லமாக குரல் கொடுத்தாள்.
"உங்க அண்ணிக்கு உடம்புக்கு முடியலம்மா. காய்ச்சலா இருக்கு. நான் டிக்காஷன் இறக்கிட்டேன். கொஞ்சம் மூணு பேருக்கும் நீயே காப்பி கலந்து எடுத்துட்டு வாம்மா" என்றான் குமார்.
"போச்சுடா, அங்கதான் வேலையா இருக்குதுன்னா இங்கேயுமா?" என்றாள் மாதவி கோபத்துடன்
அன்று முழுவதும் மாதவிக்கு வீட்டில் சரியான வேலை கொடுத்தான் குமார். காலை டிபன், மதிய சாப்பாடு, துணி துவைத்தல், பாத்திரம் கழுவுதல் என அனைத்தையும் மாதவியே செய்ய வேண்டியிருந்தது. மாலையில் தன் பெட்டியில் துணிகளை அடுக்கிய மாதவி தன் புகுந்த வீட்டுக்கு கிளம்பினாள். அவள் மனதில் என் மாமியார் மாமனாரே பரவாயில்லை போல. இந்த அண்ணன் என்ன இப்படி இருக்காரு. அண்ணிக்கு தான் உடம்பு முடியல. இவராவது கொஞ்சம் என்னோட கூடமாட வேலை செய்யலாம் இல்ல என்று புலம்பினாள்.
மாதவி அவர்கள் வீட்டுக்கு புறப்பட்டுச் சென்றதும், மனைவிக்கு உடம்பு சரியில்லை என மாதவியிடம் நடித்த தங்கள் யோசனை பலித்ததில் கணவனும் மனைவியும் 'வெற்றி' என்று கூறி மகிழ்வுடன் கை குலுக்கி கொண்டனர்.