அடுத்தடுத்து 2 சிறுகதைகள்!

1. வண்ணமும்… எண்ணமும்..! 2. தாய்மை
சிறுகதை | a mother and daughter and a stranger and woman
சிறுகதை | a mother and daughter and a stranger and womanImage credit: Chatgpt
ரெ. ஆத்மநாதன்

ரெ.ஆத்மநாதன், பொருளாதாரம், இதழியல்-மக்கள் தொடர்பியலில் முதுகலைப் பட்டங்கள் பெற்றவர். இவரது 4 நாடகங்கள் வானொலியில் ஒலிபரப்பாகியுள்ளன. அனுபவம் மிக்க எழுத்தாளர்.ஆக்கபூர்வமான கட்டுரைகள், சிந்திக்க வைக்கும் சிறுகதைகள், கவிதைகள் என்று இவரது எழுத்துகள் பல பரிமாணங்களைக் கொண்டவை. கடந்த பல வருடங்களாக கல்கி ஆன்லைனில் எழுதி வருகிறார்.

Updated on: 
MM strip
MM strip

1. வண்ணமும்… எண்ணமும்..!

சிறுகதை | a mother and daughter
சிறுகதை | a mother and daughter Image credit: Chatgpt

ஸ்கூல் பஸ் ரமாவின் வீட்டு வாசலிலேயே நிற்குமென அறிவித்திருந்தார்கள்.

அன்றைக்குத்தான் முதல் நாள். குறிப்பிட்ட நேரத்திற்குச் சரியாக வந்து விட்டது பஸ்.

வாசலில் நின்ற மம்மி-டாடி, ப்ரோவுக்கு டாடா காட்டி விட்டு அவள் பஸ்ஸில் ஏறினாள். மிடில் ஸ்கூலை முடித்து விட்டு ஹைஸ்கூலில் காலடி வைக்கிறாள். நயந்து க்ரேட்.

வழக்கம் போலப் பேருந்தின் உள்ளே பார்த்தாள். முந்தைய ஸ்டாப்பில் ஏறியவர்களும், அவள் ஸ்டாப்பில் ஏறியவர்களுமாகப் பஸ் நிரம்பி விட்டது.

பெரும்பாலானவர்கள் அமெரிக்கர்கள்தான். எல்லோருமே சிவப்பாக, நல்ல கலராக இருந்தார்கள். ஒரு சிலர் மட்டும் கறுப்பாக இருந்தார்கள். அவள் தன் கையைப் பார்த்தாள். ம்!சிவப்புமில்லாமல், கறுப்புமில்லாமல், கோதுமை கலரில் இருந்த தன் உடல் வண்ணத்தின் மீது ஏற்பட்ட வெறுப்பு அவளுக்கு வளர்ந்து கொண்டேதான் இருந்தது. தான் நல்ல கலராகப் பிறக்கவில்லை என்ற அசூயை, ஞாபகம் தெரிந்த வயதிலிருந்து எப்படியோ தோன்றி வெறுப்பாக உருவெடுத்து விட்டது. அடுத்த அரை மணி நேரத்தில் பள்ளி வந்து விடும். அங்கு மட்டும் என்ன?நிறையப்பேர் ப்ரைட் வண்ணத்தில்தான் இருப்பார்கள்.

ரமாவின் அம்மாவும் அப்பாவும் அண்ணா யுனிவர்சிடியில் படிக்கும்போதே படிப்பு சம்பந்தமான பல சந்திப்புகளில் அறிமுகமாகி, நேர்காணல்களுக்குச் செல்கையில் ஒன்றாகக் கலந்து பேசி, அப்புறம் காதலிக்க ஆரம்பித்து, பெற்றோர்களின் முழுச் சம்மதத்துடன் திருமணத்தை நடத்தியபின் அமெரிக்காவுக்கு ஆகாய விமானமேறினார்கள். அமெரிக்காவில் பிறந்த ரமா, அமெரிக்க சிடிசனாகவே ஆகி விட்டதில் அவள் அகமகிழ்ந்தாலும் அவள் வண்ணத்தின் மீது உள்ள ஆதங்கம் மட்டும் குறையவே இல்லை.

முதல் முறையாக அவள் தன் உடல் வண்ணத்தைப் பற்றித் தாயிடம் கேட்டபோது, தான் வேலை செய்து கொண்டிருந்த கம்ப்யூடரைத் தள்ளி வைத்து விட்டு, அவள் தாய் லதா சொன்னாள்... ”இந்த பாரு ரமா! நம்ம நாட்டுக் கண்ணன் சாமி இருக்காரே, அவரோட கலர் என்ன தெரியுமா? கார் மேக நீல வண்ணம்! கார் மேகம்னா, நீரைத் தாங்கி மழை பொழியும் கருமேகம்…கறுப்பும் நீலமும் கலந்த வண்ணமுடையவர் அந்தக் கண்ணன்! நீயும் அந்தக் கலர்லதான் இருக்கேன்னு நாங்க சந்தோஷப்பட்டா, நீ சிவப்பா இல்லேன்னு சங்கடப்படறே?”

“போங்க மம்மி! இப்படி ஏதாவது சொல்லி என்னைச் சரிக்கட்டப் பார்க்காதீங்க! இங்க கலரா உள்ளவங்கள்லாம் சிவப்பு, நீலம்னு டார்க் கலர் ட்ரெஸ் போட்டுக்கிட்டு எவ்வளவு எடுப்பா இருக்காங்க! நான் லைட் கலராத்தானே போட வேண்டி இருக்கு.”

“அந்த லைட் கலர் ட்ரஸ்ல நீ எவ்வளவு க்யூடா இருக்கே தெரியுமா?ஒன்னோட ப்ரண்ட்ஸ் யாரும் ஒங்கிட்ட சொல்றது இல்லையா?கறுப்பு சிவப்பெல்லாம் கலர்கள் மட்டுமே! ஆண்டவன் யாரையும் அவசியமில்லாம படைக்கிறதில்லே! ஒன்னாலயும் இந்த உலகம் பயனடையும் காலம் வரும். பார்த்துக்கட்டே இரு. நான் சொல்றது நடக்கத்தான் போகுது!”

அந்தத் தாயுள்ளம் மகளின் வருத்தத்தில் கலந்து வெம்பினாலும், ரமாவை அந்த வண்ண எண்ணத்திலிருந்து மாற்ற என்ன செய்யலாமுன்னு தீவிரமாக யோசிக்க ஆரம்பித்தது.

பள்ளி திறந்து ஒரு மாதம் ஓடிப் போயிற்று! அந்தப் புற நகர்ப் பகுதியின் பக்கத்துத் தெருவிலுள்ள தனது க்லாஸ்மேட்டைப் பார்க்கப் புதிதாக வாங்கிய, நின்று கொண்டே ஓட்டும் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை எடுத்துக் கொண்டு போனாள் ரமா!

சிமெண்ட் நடை பாதையின் ஓரத்தில் உயர்ந்திருந்த பார்டரின் மீது வண்டியேறி இடற, நிலை தடுமாறிய வண்டியைக் கண்ட்ரோல் செய்யமுடியாமல் வண்டியுடன் கீழே விழுந்தாள். மண்டையில் பலமாக அடிபட்டு விட, ரத்தம் விரைந்து வெளியேறி வீணாகியது!

இதையும் படியுங்கள்:
சிறுகதை: என் அக்கா…!
சிறுகதை | a mother and daughter and a stranger and woman

அடுத்த பத்தாவது நிமிடத்தில் ஐசியூ வில் அட்மிட் ஆகி விட, அவளின் ரத்த வகையான ஏபி நெகடிவ் அரிதான வகையைச் சேர்ந்ததால் ரத்தம் வழங்க டொனார்களுக்கு அவசர அழைப்பு போக, ஒருவர் உடனடியாக ஓடி வந்து ரத்தம் கொடுத்து விட்டார்.

நான்கைந்து நாட்களுக்குப் பிறகு டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பக் கார் ஏறிய போதுதான் அவர் வந்தார்.

“மிஸ் ரமா! ஹௌ ஆர் யூ? ஆர் யூ ஓகே நௌ?” கருப்பாக, உயரமாக இருந்த அவருக்கு 40 வயதிருக்கலாம். ரமாவுக்கு முதலில் பட்டது அவர் கறுப்பு வண்ணந்தான்!

‘இவருக்கு எப்படி நம் பெயர் தெரிந்தது? ஹாஸ்பிடல் ஸ்டாஃப்போ?’ என்று எண்ண,

லதா அவசரமாக அவரை ரமாவுக்கு அறிமுகப்படுத்தினாள்.

“இவர் மிஸ்டர் பென்னி. இவர்தான் உனக்கு அவசர நேரத்தில் ரத்தம் கொடுத்துக் காப்பாற்றியவர். தேங்க் ஹிம்” என்று மகளிடம் கூறி விட்டு,

“குட் மார்னிங் சார்! வீ ஆர் ஆல் மச் தேங்க்புல் டு யூ! அவர் ப்ரேயர்ஸ் டு த அல்மைட்டி டு கிவ் யூ லாங்க் லைப்!”

“ஓ! தேங்க்ஸ் மேம்."

அப்புறம் அவர் ஆங்கிலத்தில் பேசியதன் தமிழ் அர்த்தம் இதுதான்... ஒரு காலத்ல இந்தக் கறுப்பு உடம்பை நானும் வெறுத்தேன். நாம மட்டும் ஏன் கறுப்பாப் பொறந்தோம்னு நெனச்சி வருத்தப்பட்டிருக்கேன். ஒரு தடவை எனக்கு ஆஸ்பத்திரியில ரத்தம் செலுத்த வேண்டிய அபாயகரமான விபத்தில சிக்கிட்டேன். அப்ப ஒரு சிவப்பு அமெரிக்கர் வந்து எனக்கு ரத்தம் கொடுத்துக் காப்பாற்றினார்.

அப்ப டாக்டர் சொன்னாரு. ’தம்பி! ஒன்னோட ரத்த வகை அபூர்வமானது. ஒடம்பை ஒழுங்காப் பார்த்துக்க… பின்னால ஒன்னால பல பேர் உயிர் பெறலாம்.’ அது எனக்குள்ள இருந்த தாழ்வு மனப்பான்மையைத் தவிடு பொடி ஆக்கிடிச்சி.

உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேன்னு ஒங்க நாட்டுப் பெரியவர் ஒருத்தர் சொன்ன மாதிரி நானும் ஒடம்பை வளர்த்து உயிர் வளர்க்கிறேன்! என்னோட உயிரை மட்டுமில்ல… பல பேரின் உயிர்களை! ரமா, நீங்களும் பிற்காலத்ல பல பேர் உயிரைக் காப்பாற்றப் போறீங்க! டேக் கேர்! ஆல் த பெஸ்ட்!” சொல்லி விட்டு அவர் விடை பெற்றுக் கொண்டார்.

அனைத்தையும் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்த ரமாவின் எண்ணத்தில் மாற்றம் வந்திருக்க வேண்டும். அதைப் பறை சாற்றுவது போல அவள் முகத்தில் ஒரு மகிழ்ச்சி வெள்ளம் பரவுவதை, ஒரு தாயாக லதாவால் நன்கு உணர முடிந்தது.

விபத்துக்களும் நன்மை பயக்கவே ஏற்படுகின்றனவோ!

ரமாவும் லதாவும் திருப்தியான எண்ணங்களில் லயித்தபடி காரில் ஏற, அது மெல்ல வேகமெடுத்தது!

******************************

2. தாய்மை:

சிறுகதை |  women with baby
சிறுகதை | women with baby Image credit: Chatgpt

மைலாப்பூரின் முக்கியச் சாலையில் அரண்மனை போன்ற வீடு. அப்பா, அண்ணன் அரசு உயர் பதவிகளில்!

அவள் பணி செய்யும் பாரீஸ் கார்னரிலுள்ள வங்கிக்குச் சென்று வர, ஆடி கார். வங்கியிலும் உயர் பதவி.

இவ்வளவையும் கொடுத்த இறைவன் கூடுதலாகச் சேர்த்துப் போலியோவையும் கொடுத்து, சூம்பிய கால்களைப் பரிசாகவும் கொடுத்துவிட்டான்.

நடப்பதில்தான் சிரமம்!

‘ஓடி விளையாடு பாப்பா!’ என்ற முண்டாசுக் கவிஞனின் வேண்டுகோளுக்கு அவளால் ஒத்துழைக்க முடியாதது மட்டுமல்ல; அடுத்த வரியான ‘ஓய்ந்திருக்கலாகாது பாப்பா!’ என்பதற்கு அப்போசிட்டாகவே அவளால் செயல்பட முடிந்தது.

அன்று திங்கட்கிழமை என்பதால் வங்கிக்குப் புறப்படத் தயாரானாள்! டிரைவர் ரவி அப்பொழுதுதான் மொபைலில் கூப்பிட்டான்.

”சாரி மேடம்! பள்ளிக் கூடத்திற்குக் கிளம்பிய பையன் வாசலில் தடுக்கி விழுந்து அடி பட்டிடுச்சி! அவசரமா ஆஸ்பத்திரிக்குப் போக வேண்டியதாயிடிச்சி!”

“நோ ப்ராப்ளம்! பாருங்க! கையில காசு இருக்கா? ஜி பேயில ஓர் ஐயாயிரம் போட்டு விடறேன். நான் ஆபீசுக்குப் போயிடறேன். நீங்க ஆஸ்பத்திரிக்கிப் போயிட்டு அப்புறம் அப்டேட் பண்ணுங்க!”

இதையும் படியுங்கள்:
சிறுகதை: சம்மதம்!
சிறுகதை | a mother and daughter and a stranger and woman

“ரொம்ப நன்றி மேடம்!”

வீட்டு வாசலிலேயே பஸ் ஸ்டாப்! வங்கிக்கு அருகிலேயே பேருந்து நிறுத்தம்.

அவளுக்குப் பஸ்ஸில் பயணிக்க ஆசை அதிகம். ஆனால் வீட்டார் விடுவதில்லை.

இன்று எப்படியும் பஸ்ஸில் ஏறி விடுவதென்று முடிவெடுத்தாள்!

அம்மா கேப்பில் செல்ல வற்புறுத்தியதற்குப் பதிலாக “நான் பாத்துக்கறேம்மா! நீ கவலைப்படாத!” என்றபடியே மெல்ல நடந்து பேருந்தில் ஏறிவிட்டாள்!

கூட்டம் குறைவாக இருந்ததால், உட்கார இடம் கிடைத்துவிட்டது.

அடுத்த ஸ்டாப்பில் அதிகக் கூட்டம்! கைக்குழந்தையுடன் ஏறிய பெண் மணிக்கு அவள் இடந்தர எழ, அவளைப் பார்த்த அந்தப் பெண்மணி “மேடம்! நீங்க உட்காருங்க! பரவாயில்ல!” என்றபடி கூட்டத்தில் இடிபட, ”குழந்தையைக் கொடுங்க!” என்று அவள் கை நீட்ட, அந்தக் குழந்தையோ தாயுடன் மேலும் ஒட்டிக்கொண்டு, அவளிடம் வர மறுத்தது.

நேற்றுகூட மீண்டும் அவர்கள் வந்திருந்தார்கள்-அவளைப் பெண் கேட்டு.

அவள்தான் வேண்டாமென்று மறுத்து விட்டாள்!

அவர்கள் போனதும் அம்மா விசனப்பட்டாள்! ”நானும் அப்பாவும் எவ்வளவு நாளைக்கி இருக்கப் போறோம்? நீ இப்படியே வேண்டாம்! வேண்டாம்னு மறுத்தா அந்த வருத்தத்திலேயே நாங்க போய்ச் சேர்ந்திடுவோம்! அப்புறம் நீ தனி மரமாயிடுவ! கொஞ்சம் யோசிச்சிச் சொல்லு!”

மனதில் அது நிழலாட, மீண்டும் அவள் பார்வை அந்தக் குழந்தைப் பக்கம் திரும்பியது. இவள் பார்வை அதன்மீது படும்போதெல்லாம், அது தாயை இறுகப் பிடித்துக்கொண்டது.

திடீரென மனதில் ஒரு மின்னல். நமக்கு ஒரு குழந்தை பிறந்தால் அதுவும் இப்படித்தான் நம்முடன் ஒட்டிக் கொள்ளுமல்லவா? நம்மை மட்டுமே உலகமாக நினைக்குமல்லவா? அம்மாவும், அப்பாவும் திருப்தி அடைந்து,சந்தோஷப் படுவார்கள் அல்லவா? இது ஏன் நமக்கு இவ்வளவு காலம் மனதில் தோன்றவில்லை?

அவர் கூட அன்று, ”உங்கள் எல்லாக் குறைகளுடனும் உங்களை நான் காதலிக்கிறேன்! ஊனம், நீங்கள் செய்த தவறல்ல. அதனைப் புறந்தள்ளி, நீங்கள் இவ்வளவு முன்னேறி இருக்கிறீர்களே! அந்தச் சாதனைக்காகவே உங்கள் கரம் பிடிக்க நான் ஆசைப்படுகிறேன்” என்றாரே. அவரின் கூற்று சரியானதுதானே! நாம் ஏன் தயங்க வேண்டும்? பெண்மையின் உச்சம் தாய்மைதானே! அதனை அனுபவிக்க வேண்டாமா?

மடை திறந்த வெள்ளமாக அவள் மனம் திருமணப் பயிரை நோக்கி ஓடியது! அந்த நினைவுகளில் முழுதுமாக அவள் லயித்துப்போக, பஸ் பாரீஸ் கார்னரை நெருங்கியதைக்கூட அவள் கவனிக்கவில்லை.

அந்தக் கண்டக்டர் அவள் அருகில் வந்து, ”ஸ்டாப் வந்திடிச்சி மேடம்!” என்றதுந்தான் அவள் சுயநினைவுக்கு வந்தாள்.

“சாரி! தேங்க்ஸ்” என்று இறங்கியவள், வங்கிக்குச் சென்றதும் முதல் வேலையாக

அம்மாவை மொபைலில் கூப்பிட்டு, ”அவர்களுக்கு ஓகே சொல்லி விடு!” என்றதும், வயதான அந்தத் தாய்க்கு, மகிழ்ச்சி பெருக்கெடுத்தது!

ஆனந்தத்தில் கணவனைக் கூப்பிட்டபடி ஹாலுக்கு ஓடினாள்!