

இரவு நேரம்...
தெரு அடங்கியிருந்தது.
மழை சிறு தூறலாக ஜன்னல் கம்பிகளில் விழுந்துகொண்டிருந்தது. தெருவில் எங்கோ ஒரு நாய் குரைத்துக்கொண்டிருந்தது.
“ஏங்க... கொஞ்சம் ஏசியை ஆஃப் பண்ணுங்க... குளுருது...” என்று சந்திரா செல்லமாகப் பாலனிடம் கேட்டாள்.
“குளுருனா என்னைக் கட்டிக்கோ... இதுக்கு எதுக்கு ஏசியை ஆஃப் பண்ணணும்?” என்று கூறிய பாலன், சந்திராவை இன்னும் இறுக்கமாக அணைத்துக்கொண்டான்.
“அடச்சீ... விடுங்க... மணியாகப்போகுது... எந்திரிக்கலையா?”
“ம்... ம்... எந்திரிக்கணும்... நீ டீ போடு... நான் குளிக்கப் போறேன்...” என்று கூறியபடியே படுக்கையிலிருந்து எழுந்தான் பாலன்.
நல்ல கருத்த நிறம். திடகாத்திரமான தேகம். முறுக்கு மீசை. முண்டா பனியனுக்குள் முறுக்கேறிய உடல்வாகு என ஆண்மைக்கே உரிய லட்சணங்களுடன் இருந்தான் பாலன்.
‘பாலன் ஸ்டோர்ஸ்’ என்ற பெயரில் சிறிய மளிகைக் கடை ஒன்றை நடத்தி வந்தான்.
சந்திராவின் அத்தை மகன்தான் பாலன்.
சிறுவயதிலிருந்தே இருவருக்கும் ஒருவர்மீது ஒருவர் கொள்ளைப் பிரியம். வயது வளர வளர அந்தப் பிரியம் காதலாக மாறியிருந்தது.
ஆனால், அவர்களுடைய காதலுக்குச் சந்திராவின் தந்தை சம்மதிக்கவில்லை.