

தொடையை இறுக்கிப்பிடித்த ஜீன்ஸ் மார்பில் கிரேசி பாய்ஸ் என்ற வாசகங்களுடன் டி-ஷர்ட் வலது மணிக்கட்டில் வாட்ச் கட்டி கண்ணாடி பார்த்த அனிதா கழுத்து வெறுமையாக இருப்பதைக் கண்டு கருப்பு பட்டையில் நடுவில் கல் பதித்த ஒரு சோக்கரை கழுத்தில் மாட்டிக்கொண்டு முகத்தைப் பார்த்தாள். காஜல் லிப்ஸ்டிக் ரூஜ் எல்லாம் சரியாக இருப்பதை பார்த்து பாப் தலையை சிலிப்பியபடி திருப்தி அடைந்தவள் கண்களில் ஒரு கூலரை அணிந்துகொண்டாள்.
வாசலுக்கு வந்து ஆபீஸ் போகும்போது போடுவதற்காக பிரத்தியேகமாக வாங்கி இருந்த ஹைஹீல்ஸ் ஷூக்களுக்குள் கால்களை நுழைத்தவள் எதிரில் வந்த அவள் தந்தை குணசீலனை பார்த்து 'பை டாட்' என்று கூறி விரைந்தாள். வீட்டினுள் நுழைந்த குணசீலன் ஆபீசுக்குப் புறப்பட்டுகொண்டிருந்த தன் மூத்த மகள் புவனாவின் உடை அலங்காரத்தை கவனித்தார். நீண்ட ஒற்றை பின்னலுடன் தழையக் கட்டிய புடவை முகத்தில் பவுடர் பூச்சுகூட இல்லாமல் நெற்றியில் சிறியதாக ஒரு ஸ்டிக்கர் பொட்டுடன் இருந்தாள். ஒரே வீட்டில் இரு வேறு குணங்களுடன் இருந்த தன் பெண்களைப் பார்த்து அங்கலாய்த்தார்.