சிறுகதை: தாத்தா ஆவதே எனது ஆசை!

அரசுப் பள்ளிக்கு வந்த கலெக்டர் மூர்த்தி முன், சீக்கிரம் தாத்தாவாக வேண்டும் என ஒரு மாணவன் சொன்ன சுவாரஸ்யமான காரணம் பற்றிய சிறுகதை
சிறுகதை | Collector and student
சிறுகதை | Collector and studentImage credit: Gemini
ரெ. ஆத்மநாதன்

எழுத்தாளர் ரெ.ஆத்மநாதன் பொருளாதாரத்திலும், இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியலிலும் முதுகலைப் பட்டங்கள் பெற்றவர். கதை, கவிதை, நாடகம் என்று முத்தமிழுக்கும் பணி செய்பவர். கதை, கவிதைகளை மாத,வார, ஆன்லைன் இதழ்களில் எழுதி வருபவர். இவரின் 4 நாடகங்கள் சென்னை, திருச்சி வானொலி நிலையங்களால் ஒலி பரப்பப் பட்டன. இளங்கலை முதலாண்டு மதுரைத் தமிழ்ச்சங்கத் தேர்வில் (1972-73) மாநில முதன்மை பெற்றவர்.பட்டி மன்றம், கவியரங்கம் ஆகியவற்றில் பங்கேற்பவர். அமெச்சூர் நாடகங்களில் நடித்தவர். தமிழக அரசின் மதிப்பீடு மற்றும் செயல்முறை ஆராய்ச்சித் துறையில் ஆராய்ச்சி முன்னவராகச் சேர்ந்து, அத்துறையின் பொறுப்பு இயக்குனராக ஓய்வு பெற்றவர். “தொடர்கதைகளும் முற்றும்” என்ற சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டவர்.

Updated on: 
MM strip
MM strip

அது ஐந்தாவது வரை மாணாக்கர்கள் படிக்கும் தொடக்கப்பள்ளி, அன்று படு சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. கீழப்பெருமழை கிராமத்தில் பல ஆண்டுகளாக இயங்கும் மிகப் பழைய பள்ளி அது! எத்தனையோ தலைமுறைகளைக் கண்டது. தலைமையாசிரியை வழக்கத்திற்கு மாறாக முன்னதாகவே வந்துவிட, உடன் பணியாற்றும் ஆசிரியர்களும் வந்து ஆளுக்கொரு பணியாக மேற்பார்வை இட்டனர். குப்பைகள் அகற்றப்பட்டு, பெஞ்சுகள் துடைக்கப்பட்டு, குடிநீர் கேன்கள் சுத்தப்படுத்தப்பட்டு முன்பேயிருந்த ஒழுங்குக்கு, மேலும் அழகு சேர்க்கப்பட்டது.

பெற்றோர் ஆசிரியர் சங்கத்தலைவர் சோமசுந்தரமும், செயலாளர் பக்கிரிசாமியும், பொருளாளர் துரைசாமியும் இதர உறுப்பினர்களுங்கூட வந்து கூடிவிட்டனர். எதிரே இருந்த திருக்குளம்கூட அலைகளை மேலெழுப்பி உற்சாகம் காட்டியது. பக்கத்திலுள்ள சிவன் கோயிலில் சிறப்பு பூஜைக்கு ஏற்பாடு செய்துவிட்டு, நடராஜக் குருக்கள் வாசலிலேயே காத்திருந்தார். இவ்வளவு ஏற்பாடுகளும் நடக்கக் காரணம் இதுதான்.

பள்ளியைப் பார்வையிட வருவது கலெக்டர் மூர்த்தி! இதே பள்ளியில் படித்தவர்! ஏழை விவசாயக் குடும்பத்தில் பிறந்த இவரின் தந்தையார் வேலாயிதத்திற்குச் சொந்த நிலம்கூட இல்லை. தாயும், தந்தையும் கூலி வேலை செய்தே மூர்த்தியைப் படிக்க வைத்தார்கள்.

மூர்த்திக்கு ஆசிரியராக இருந்த வெங்கட்ராமன் வாத்தியார்தான் அவனுக்கு வாழ்க்கையின் முன்னேற்றப்படிகளை அறிமுகம் செய்து வைத்தார். அவனும் அதனைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு முன்னேறினான்.

இதையும் படியுங்கள்:
சிறுகதை: மாறிய மனம்!
சிறுகதை | Collector and student

பக்கத்து மாவட்டத்திற்குக் கலெக்டராகவும் ஆன பிறகு, தன் பள்ளியைப் பார்ப்பதில் ஆர்வம் காட்டினான். சிவன் கோயில் மண்டபத்தில் ஆசனம் சொல்லிக் கொடுத்து அவன் ஆன்மிகத்தையும் வளர்த்ததில் பெரும்பங்கு நடராஜக் குருக்களுக்கும் உண்டு.

தன் கண்முன்னே வளர்ந்த மூர்த்தியைக் கலெக்டராகப் பார்ப்பதில் அவருக்கு ஏகப்பட்ட மகிழ்ச்சி! மூர்த்தியின் வரவை எல்லோரையும்விட அதிகமாக அவர் எதிர்பார்த்துக் காத்துக் கிடந்தார். மெல்ல ஊர்மக்கள் சாலையெங்கும் கூடிவிட்டனர். ஊரே விழாக்கோலம் பூண்டுவிட்டது.

சிறுகதை | Collector and student
சிறுகதை | Collector and studentImage credit: Gemini AI

பி.டி.ஓ தன் பரிவாரங்களுடன் வர, பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகளும் வந்துவிட்டனர். மூர்த்தியின் கார் சரியாகக் குறித்த நேரத்திற்கு வர, முன்பே செய்தி தெரிவித்தபடி சிவன் கோயில் வாசலுக்குக் கார் செல்ல, எல்லோரும் வரவே, காரிலிருந்து இறங்கிய மூர்த்தி நடராஜக் குருக்களை ஆரத்தழுவி அவர் பாதங்களை வணங்கிட, தன் முடியாத வயதிலும் மூர்த்தி கைகளைப் பிடித்தபடி அவர் உள்ளே சென்றார். அகிலாண்டேசுவரி சமேத ஆத்மநாத சுவாமியை வணங்கிய பிறகு பள்ளிக்கு வந்தனர்.

வரவேற்புச் சம்பிரதாயங்கள் முடிந்ததும், அனைவருடனும் அளவளாவிய கலெக்டர் மூர்த்தி, மூன்றாம் வகுப்புக்குச் சென்று மாணாக்கரிடம் சகஜமாகப் பேசி, அவர்களின் வருங்கால எண்ணம் பற்றிக் கேட்டார்.

ஒரு மாணவன் தான் டாக்டராகி எல்லோருக்கும் உதவுவேன் என்றான்.

அடுத்தவனோ ‘உங்களைப்போல் நானும் கலெக்டராக வேண்டும் என்றான்! மூன்றாவது பையனோ, விஜய்போல முதலமைச்சராகப் போவதாகக் கூறினான்! டீச்சராக, பைலட்டாக, கிரிக்கெட் வீரராகப்போகவேண்டுமென்று பலரும் பலவாறாகக் கூற, எல்லாவற்றையும் புன்முறுவலுடன் கேட்டுக்கொண்ட மூர்த்தி, கடைசி மாணவனிடம் வந்தார்.

“சார்! நான் சீக்கிரம் வயசாகித் தாத்தா ஆகணும்!” என்றான்.

அவனின் பதில் மூர்த்தியை வியப்படையச் செய்ய, விரிந்த கண்களுடன் அவனிடம் அதற்கான காரணத்தைக் கேட்டார்!

அவனோ அடுக்க ஆரம்பித்தான்!” ஆமா சார்! எங்க தாத்தாவைப் பாருங்க! எப்ப பெட்டை விட்டு எழும்பறாரு! எப்ப தூங்குறார்னே தெரியலை! அவரு இஷ்டத்துக்குத் தூங்கறாரு! விருப்பத்துக்கு எழும்பறாரு! என்ன விரும்பறாரோ அதைச் சாப்பிடறாரு!

இதையும் படியுங்கள்:
சிறுகதை: கடைசிக் கடிதம்!
சிறுகதை | Collector and student

நாங்க சாக்லட் பக்கம் போனாலே பல்லு கெட்டிடும்! ஒடம்பு பருத்திடும்னு பயமுறுத்திடறாங்க. எங்களுக்கோ டிவி பார்க்க ரெஸ்ட்ரிக்ஷன்! எங்களை ஸ்கூலுக்கு அனுப்பிட்டு ஜாலியா அவரு டிவி பார்க்கறாரு! நாங்க இருந்தா செல்லுலயோ, டேப்லட்டிலயோ ரூம்ல உட்கார்ந்திடறாரு!

நண்பர்கள் வந்துட்டா பார்க் பக்கம் கூட்டிக்கிட்டு போயி மணிக்கணக்கில கதை பேசறாரு! அவருக்கு ஹோம் ஒர்க் எல்லாம் கிடையாதே! பஸ்ஸில வேற இலவசமா ஊர் சுத்தறாரு! கையில காசு வந்தா டூர் கெளம்பிடறாரு! ரயில்ல வேற கன்சஷன் இருக்காம்ல! என்னைப் பொறுத்த வரைக்கும் எங்க தாத்தா மாதிரி சுதந்திரமா இருக்கணும்னு ஆசைப்படறேன்! அதனாலதான் சார் சொல்றேன்! சீக்கிரமா வயசாகித் தாத்தா ஆகணும்னு!”

அந்தக் குட்டிச் சிறுவன் அடுக்கிய காரணங்களைக் கேட்டு கலெக்டர் மூர்த்தி வியந்து நின்றார்!

இவ்வளவு சுதந்திரத்தை அனுபவிக்கும் தாத்தாக்கள் சந்தோஷப்படலாமே!

logo
Kalki Online
kalkionline.com