சிறுகதை : காவிரிப் பெண்ணாள்!

வேலை மற்றும் வாழும் இடத்தால் கணவன் மனைவி இடையே ஏற்படும் ஈகோ மோதல்கள் பற்றிய சிறுகதை
சிறுகதை  | Husband and wife
சிறுகதை | Husband and wifeImage credit: Gemini AI

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆன்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on: 
MM strip
MM strip

மௌனத்தில் ஆழ்ந்திருந்தது வீடு. யாருக்கும் சாப்பிடத் தோணவில்லை. காலையில் வேலைக்குப் போகும்போது செய்து வைத்த சாப்பாடு ஆறிப்போய் இருந்தது.

“பெண்ணை அனுப்பச் சொல்றாங்க! இல்லன்னா அத்துவிடச் சொல்றாங்க!” வள்ளி அழுதபடி கணவன் முருகனிடம் அன்றைய நாளின் பத்தாவது முறையாகச் சொல்லிக்கொண்டிருந்தாள்.

“இதையே எத்தனை தரம் சொல்வ வள்ளி? இதற்கான பதிலை நம்ம பொண்ணு காவிரிதானே சொல்லணும்?”

“ஆமா... ஆனா இந்த விஷயத்தை எப்படி அவகிட்டப் பேச? அவ புகுந்த வீட்டின் பேச்சை எடுத்தாலே வானத்துக்கும் பூமிக்கும் குதிக்கறா. இவதான் குதிக்கறான்னா இவ வயித்துல பிறந்த அந்தச் சின்னப் பையன் வருணும்ல குதிக்கறான்?”

“இருந்திருந்து அருமை பெருமையா வளர்த்த ஒரே மகளை இங்கயே பெங்களூர்ல கட்டிக் கொடுக்காம சென்னைப் பையனுக்குக் கொடுத்தேன் பாரு. என்னைச் சொல்லணும். மாப்பிள்ளைக்கு இங்க வேலை இருந்தவரைக்கும் இங்க குடித்தனம் நல்லாதானே போச்சு. எப்ப வேலை சென்னைக்கு மாறிச்சோ அப்ப ஆரம்பிச்சுது விவகாரம். ம்ம்! நம்ம காவிரி மேலயும் தப்பு இருக்கு வள்ளி.”

“என்ன... என்ன தப்பு? அவ இங்கேயே பிறந்து வளர்ந்த பொண்ணு. இந்த ஊரைவிட்டு வரமாட்டேங்கறா. அதனால என்ன தப்பு? மாப்பிள்ளை கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணலாம்ல.”

“பண்ணிட்டுதானே இருந்தார். வருஷக்கணக்கா அவங்க அப்பா அம்மாவைக்கூடப் போய் பார்த்துக்காம இருந்தாரே. அதை மறந்துட்டியா வள்ளி?”

“ஆமாம். மாப்பிள்ளை தமிழழகன் மிக மிக நல்லவனாய் இருந்தான். காவிரி எப்பக்கம் இழுத்தாலும் வளைந்து கொடுப்பவனாகத்தான் இருந்தான். அவள் இடப்பக்கம் போனால் இவனும் இடப்பக்கம் போனான். அவள் வலப்பக்கம் போனால் இவனும் வலப்பக்கம் போவான். காவிரியின் மேல்கொண்ட காதலால் அவன் விட்டுக் கொடுத்தலை விதியாக வகுத்துக்கொண்டான். அவனின் அந்த குணம்தான் காவிரியை இப்போது பிடிவாதக்காரியாய் வளர்த்து விட்டிருக்கிறது. அதைப் புரிந்துகொள்ளவில்லை வள்ளி.

“அத்தனை நல்லவரு இப்படி பொண்டாட்டியையும் பிள்ளையையும் விட்டுடறேன்னு நோட்டீஸ் அனுப்பி இருக்காரே. இத என்ன சொல்றது?”

இதையும் படியுங்கள்:
சிறுகதை: வேலிப் பூ!
சிறுகதை  | Husband and wife

“ஏய்! நம்ம காவிரி அவர் பெண்டாட்டிடி. அவர்கூடத்தானே போய் வாழணும்?”

“நமக்கு அவ ஒரே பொண்ணுங்க. வயசான காலத்துல நம்மைப் பார்த்துக்க ஆள் வேணாமா?

அதுக்குத்தானே நாம வீட்டோட மாப்பிள்ளையா இவரைத் தேர்ந்தெடுத்தோம். மாப்பிள்ளையும் முன்ன அதுக்கு ஒத்துக்கிடத்தானே செய்தாரு.”

“இல்ல வள்ளி. எங்க அப்பா அம்மாவையும் பார்த்துக்கணும் மாமா.. அப்பப்ப அங்கயும் போய் இருக்கணும்ன்னு உண்மையைத்தான் எங்கிட்ட சொன்னாரு.”

“அப்ப காவிரிகிட்ட பொய் சொன்னாரா?”

“அவ அவர் சொன்னதைச் சரியா புரிஞ்சுக்கலை. இப்ப நீ இல்லையா என்கூட? கல்யாணம் முடிச்சு எனக்கு பெங்களூர்ல வேலைன்னதும் தமிழ்நாட்டுக் கடைக்கோடி கிராமத்தை விட்டுட்டு என் கூடயே வந்ததானே? அது ஏன்? புருஷன் இருக்கற இடத்துக்கு பெண்டாட்டி வரணும்னுதானே? ஏன் இப்ப உன் பொண்ணால முடியாதா? அவளால அவள் வேலையை அங்க சென்னைக்கு மாத்திக்கமுடியாதா? இல்ல கேட்கறேன். பெங்களூருல மட்டும்தான் அவளால வேலை பார்க்க முடியுமா? பிள்ளையை வளர்க்க முடியுமா? சொல்லு வள்ளி!”

“அது.. என் காலம் வேற. இப்ப நம்ம பொண்ணு காலம் வேற. இங்கயே படிச்சு வளர்ந்து வேலைக்குப் போற அவளால அப்படியே இன்னொரு இடத்துக்குப் போய் ஒட்டமுடியல. அதான் தயங்கறா. ஏன் அவ அவளுக்கு வந்த வெளிநாட்டு வேலையைக்கூட இந்த ஊரை விட்டுப் போக மாட்டேன்னுதானே வேணாம்ன்னு சொன்னா! ஞாபகமில்லையா?”

“என்ன சொல்லு வள்ளி. தமிழழகன் மாப்பிள்ளை நல்லவர்தான். காவிரி அங்கயும் இங்கயுமா இருக்கறதுதான் முறை.”

வள்ளி முகத்தைத் தூக்கி வைத்துக்கொண்டாள். காவிரி வேலைக்குப் போயிருக்க எட்டு வயதுப் பேரன் வருண் காய்ச்சல் காரணமாக வீட்டில் படுத்திருந்தான்.

“போ வள்ளி. போய் அடிக்கடி காய்ச்சலில் படுக்கிற வருணுக்குச் சாப்பாடு போட்டு மாத்திரையைக் கொடு. நம்ம பிரச்னையைப் பத்தி அப்புறம் கவலைப்படலாம்.” முருகன் அவளைக் கிளப்பினார்.

சிறுகதை | Husband and wife and their child
சிறுகதை | Husband and wife and their childImage credit: Gemini AI

“வருண்! உனக்கு அப்பா பிடிக்குமா? அம்மா பிடிக்குமா கண்ணு?” வள்ளி கஞ்சியை ஸ்பூனால் அவனுக்கு ஊட்டியபடி கேட்டாள்.

“அப்பா இடத்துல அப்பா! அம்மா இடத்துல அம்மா!”

“ஏண்டா?”

“இடம் மாறினா இரண்டு பேரும் சண்டை போட்டுக்கிறாங்க பாட்டி!”

சின்னப் பிள்ளை வரை வெளிச்சம் போட்டிருந்த தன் பெண் , மாப்பிள்ளையின் மனத்தாங்கலை நினைத்து வள்ளிக்குப் பெரும் கவலை ஏற்பட்டது.

அலுவலகத்தில் இருந்து மகள் காவிரி போன் செய்தாள்.

“எப்படிம்மா இருக்கு வருணுக்கு? அப்பப்போ ஏதாவது ஜூஸ் இல்ல கஞ்சி கொடுத்துட்டே இரு. நீர்ச்சத்து குறைஞ்சுடும் அப்புறம்.”

“நான் பார்த்துக்கறேன் காவிரி. வீட்டுக்கு ஒரு தபால் வந்திருக்குடி. உன் வீட்டுக்காரர் அனுப்பி இருக்காரு!”

“என்னவாம்? இங்க வந்துடறாராமா?”

“இல்லடி!”

“வழக்கம் போல எங்களை அங்க வரச் சொல்வாரு! விடும்மா! தன்னால இங்க வந்து சேருவாரு!”

“இல்ல காவிரி. உங்களை அத்து விடறதா நோட்டீஸ் அனுப்பி இருக்காரு!” வள்ளி சட்டென்று தேங்காயை உடைத்துவிட்டாள். அந்தப் பக்கம் மௌனம்.

“காவிரி!*

“இருக்கேன் மா!”

“யோசி காவிரி. வருணுக்கும் அப்பா வேணும்!”

“இப்ப கிளம்பி வீட்டுக்கு வரேன்மா. பேசலாம்!” வைத்துவிட்டு ஆபீஸரிடம் லீவு சொல்லி வீட்டுக்குக் கிளம்பி விட்டாள் காவிரி.

வரும் வழியெல்லாம் அவளுக்குத் தமிழழகன் ஞாபகங்களே.

“சென்னைக்கு வா காவிரி. பெங்களூரு மட்டும் என்ன உசத்தி!” ஒருதடவை சண்டை போட்டான்.

அதிலிருந்து ஆரம்பித்ததுதான் பிரிவு. தெரியாத ஊரில்தான் எப்படி போய் வாழ்வது? அது அவளின் வாதம். தெரிந்துகொண்டா எல்லாம் நடக்கிறது? பழகப் பழகப் பாதை புரியும் என்பது அவனின் எதிர்வாதம். இருக்கும் இடமே சுகம் என இருப்பது அவள் வாதம்.

பழகினால் எந்த இடமும் சுகம் என்பது அவன் எதிர்வாதம். வருண் இந்த ஊரில் மட்டும்தான் இருப்பான் என்பது அவள் வாதம். ஏன் எங்கள் ஊரிலும் இருக்கலாமே என்பது அவனின் எதிர்வாதம்.

என்னமோ இன்னொரு ஊர்க்காரரை கல்யாணம் பண்ணிக்கொண்டு கோடு கிழித்தாற்போல் அவர் அந்தப் பக்கமும் இவள் இந்தப் பக்கமுமாய் வாழ்க்கை. வருண்தான் பாவம் எப்பக்கம் போவதென்று அல்லாடுகிறான். இதிலேயே காய்ச்சல் வந்துவிட்டது அவனுக்கு.

இதையும் படியுங்கள்:
சிறுகதை: காணாமல் போன சங்கிலி...!
சிறுகதை  | Husband and wife

பஸ் பிரயாணத்தில் இருவர் பேசிக்கொண்டனர்.

“கர்நாடகா கவர்ன்மென்ட் தமிழகத்துக்கு வினாடிக்கு 3500 டி.எம்.சி தண்ணீர் திறந்து விட்டுட்டாங்களாம்ப்பா. தண்ணி பொதுதானே. இப்ப ரெண்டு மாநிலத்துக்கும் இலாபம்தானே!”

காவிரிக்கு சுரீர் என உறைத்தது. வருண்.. வருணும் மழைபோல் நீருக்குண்டான பெயர்தானே. அவனும் இருவருக்கும் பொதுதானே? அவனை எப்படி அவன் அப்பாவோடு போகாதே என்று சொல்லலாம்? இல்லை அப்பாவோடு இருக்கும்போது அம்மாவை விட்டு விடு என்று எப்படி சொல்லலாம்? அவன் எதிர்காலத்திற்காகவாது இருவரும் சேர்ந்திருக்கத்தான் வேண்டும். தான் ஏன் காடாறு மாதம் நாடாறு மாதமாய் வாழக்கூடாது?

முடிவெடுத்தவள் வீட்டிற்கு வந்ததும் முதல் வேலையாக அந்த டைவர்ஸ் பேப்பரைக் கிழித்துப்போட்டாள். வருணை அழைத்துக்கொள்ளுமாறும் தான் அவர்களுடன் சென்னையிலும் தன் பெற்றோருடன் பெங்களூரிலும் மாறி மாறி இருப்பதாயும் தமிழழகனுக்குப் போன் செய்தாள். காவிரி பிரச்னை தீர்ந்ததென்று வள்ளியும் முருகனும் பெருமூச்சு விட்டார்கள். இனி வருணின் காட்டில் மழைதான். காய்ச்சல் இல்லை.

logo
Kalki Online
kalkionline.com