

"வினோ... படிச்சு முடிச்சாச்சா? டின்னர் சாப்பிட வா. அப்பா உனக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கார் பாரு...?" அம்மா சரோவின் குரல் போனில் தோழியுடன் பேசிக்கொண்டு இருந்த வினோதினியின் தோழி காதுவரை கேட்க, "சரி வினோ… நீ சாப்பிட போ… நம்ப சம்மர் வெகேஷன் ப்ளான் பத்தி உங்கப்பா அம்மாகிட்ட கேளு.
டிக்கெட் புக் பண்ணனும். பை" என்று போனை வைத்துவிட்டாள் தோழி "ஏம்மா இப்படி கத்திப் பேசறே? கூப்டா வர மாட்டேனா?" கூறியபடியே டைனிங்டேபிளில் அமர்ந்தாள் வினோதினி..
"அப்பா.. இந்தச் சம்மர் வெகேஷனுக்கு என் ப்ரண்ட்ஸ் எல்லாரும் சேர்ந்து கொடைக்கானல் போலாம்னு இருக்கோம். நீங்க எப்போதும்போல எங்களுக்கு காட்டேஜ் புக் பண்ணிடுங்க..." என்று சப்பாத்தி சாப்பிட்டபடியே சொல்ல... "வினோ... பாட்டியும் தாத்தாவும் உன்னைப் பார்த்துப் பலவருஷங்கள் ஆச்சு.. உன்னோடு இருக்கணும்னு சொல்றாங்க மா."
"ஓகே... இங்க வரச் சொல்லுங்க பா..."
"அவங்க வயசுக்கு இவ்வளவு தூரம் வரது கஷ்டம். தவிர பெரியவங்க. அவங்கள நாம்தான் போய்ப் பார்க்கணும். உன் சித்தப்பா, சித்தி, மாமா, அத்தைங்க எல்லாரயும் பார்த்தமாதிரி இருக்கும். நான் கார்ல கொண்டுபோய் விடறேன். ஒரு வாரம் இருந்துட்டு வா வினோ" என்று கூறிய அப்பாவின் பேச்சைத் தட்ட முடியாமல்,
"ஆனா ஒரு கண்டிஷன்... ஒரு வாரம்தான் இருப்பேன். அப்புறம் நீங்க கூப்பிட வரலைன்னா..." சொல்லி முடிப்பதற்குள் "கண்டிப்பா வரேன்" என்றார் அப்பா. லீவும் விட்டாச்சு. சொன்னபடியே அப்பா ரமேஷ் வினோதினியை கிராமத்தில் கொண்டுபோய் விட்டுவிட்டு வந்தார்.
அவளுக்குத்தான் பிடிக்கவே இல்லை. பாட்டி காலையில் கம்பு கஞ்சி குடிக்கக் கட்டாயப்படுத்துவதும் தாத்தா தோட்டத்திற்குத் தானும் வர வேண்டும் என்று கூறுவதும் சலிப்பாகவே இருந்தது வினோதினிக்கு.
அடுத்தத் தெருவில் இருக்கும் மாமாவும் அத்தையும் மாலை ஆனால் கோயிலுக்கு அழைத்துச் செல்வதும் மாமா ஆசிரியராக இருப்பதால் மாலையில் டியூஷன் எடுக்கும்போது, "வினோ... இந்தப் பாடத்தை நீ சொல்லிக் கொடும்மா" என்று சொல்வதும் கடுப்பாக இருந்தது.
அத்தை ஆற்றங்கரைக்குச் சென்று தண்ணீர் எடுத்து வரும்போது, "வினோ வா. நீயும் அந்த ஆத்தங்கரையில் ஆடிக்கிட்ட வர தண்ணியை பாரு... என்று கரையில் அமர்ந்து பழங்கதைகள் சொல்வதும் வாடிக்கையானது. படிக்கும் காலத்தில் ஆற்றங்கரையில் குளித்து மகிழ்ந்த கதை, விளையாட்டாக கிண்டல் செய்யும் பக்கத்து வீட்டு பசங்க, அத பார்த்து எச்சரிக்கும் அக்கம்பக்கத்து பாட்டிமார்கள் கதை..." என எதுவுமே ரசிக்கவில்லை வினோதினிக்கு..
ஒரு வாரம் கழித்து அழைக்க வந்த அப்பாவிடம் அனைவரும் "அடுத்த லீவுக்கும் வினோவை இங்க அனுப்புபா..." என்றதும்,
"சரி... சரி" என்று கூறி தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஊர் வந்து சேர்ந்தாள்.
"இனிமே இந்தக் கிராமம் அப்படி இப்படின்னு கூப்டீங்க, இனிமே நான் வரமாட்டேன் சரியான போர்..."
வினோதினியின் புலம்பலுக்குப் பதிலாக அவள் கையில் கொடைக்கானலில் தன் நண்பன் நடத்தும் காட்டேஜ் புக் செய்ததற்கான சிலிப்பைத் தந்துவிட்டு ஆபீஸ் கிளம்பிவிட்டார் வினோதினியின் அப்பா. கொடைக்கானல் ட்ரிப் முடிந்து ஊருக்கு வந்து இரண்டு நாள் சளி, இருமல் என படுத்துவிட்டாள்.
வினோதினி, "அம்மா... என்னம்மா எனக்கு சளி, ஜூரம் இருக்கு. நீ கண்டுக்காம மாத்திரைய வச்சுட்டுப் போறே?"
"பின்ன என்ன வினோ செய்யணும்?" என்ற அம்மாவிடம் "கிராமத்தில்கூட ஆத்தில குளிச்சு இதே மாதிரி ஜூரம் வந்தது. பாட்டி கஷாயம் கொடுத்து, மிளகு ரசம் செஞ்சு குடுத்து, வெந்நீர் ஒத்தடம் கொடுத்து எப்படி பாத்துகிட்டாங்க தெரியுமா?
காலைல தோட்டம் சாயந்தரம் ஆத்தங்கரை அப்புறம் மாமாவோட சேர்ந்து ஸ்கூல் பசங்களுக்கு டியூஷன் எடுக்கறது... ராத்திரி ஆனா திண்ணைல உட்கார்ந்து அவங்க பேசற அந்தக் கால கதைங்களை கேக்குறது. அது வேற ஒரு உலகம் மா.
இனிமே வருஷமா வருஷம் கொடைக்கானல்தான். இல்ல இல்ல... சிரித்தபடியே நம்ப பொன்னவனூர் கிராமம்தான் அம்மா" என்று கட்டிப்பிடித்த வினோதினியைப் பார்த்தாள்.
அம்மாவின் மனது ‘சொந்த ஊர் உறவுகள் தரும் அருமையான அனுபவத்தை இப்போதாவது தன் பெண் புரிந்துகொண்டாளே’ என்று மகிழ்ந்து போனது.
எத்தனை நாடுகள் எத்தனை அனுபவம் கிடைத்தாலும் இந்த அனுபவம் வாழ்க்கையில் அனுசரித்து வாழ உறவுகளுடன் உரிமையுடன் பழக இன்னும் பல நல்ல எண்ணங்கள் உருவாக வழி வகுக்கும் வினோ என்ற அம்மாவின் முகத்தில் ஒரு பெருமிதம் பூத்தது..