

அம்மா இன்னும் நீ பெரியம்மா வீட்ல இருந்து கௌம்பலையா ? உன்ன எப்பவே கௌம்ப சொன்னேன்…. இன்னும் என்ன பண்ற நீ? என்று எதிர்முனையில் இரைந்தான் ரவி…
இல்லடா ரவி… நீ காசு போட்டு விடரேன்னு சொன்னியே டா….
போடுறேன் உனக்கு எப்பவும் நா ஏ.டி.எம் மெஷின் தான…. இரைந்தபடி போனைத் துண்டித்தான்…
ரவியின் அப்பா அவனுக்கு 8 வயதிருக்கும் போதே தவறிவிட்டார். அவனது தாய் வீட்டு வேலைகளுக்கு சென்று தனது தாய் வீட்டு ஆதரவும் மாமியார் வீட்டு ஆதரவு இரண்டுமின்றி அவனை ஒற்றை ஆளாய் வளர்த்திருந்தாள்… இன்று அவன் வேலைக்குச் சென்று இன்று கைநிறைய சம்பாதிக்கிறான்.. எனினும் தாய் அவனுக்குப் பாரமாக மாறியிருந்தாள்… அதை கமலாவும் அறிந்திருந்தாள்…
இல்ல அவனுக்கு கொஞ்சம் வேலை இருக்கு போல என்று சமாளித்தாள்… மகனுக்குத் தன்மேல் அன்பு இல்லாமலில்லை என்பது அவளது நம்பிக்கை..
அவள் அக்காவுக்கு அத்தனையும் புரிந்தாலும் புரியாதது போல இருந்தாள்… ஏய் கமலா காபி போடுறியா? என்று நிலையை இயல்பாக்க முயன்றாள்..
சுசிலாவின் மகள் வீட்டில் எப்போதும் கமலாதான் அனைத்தும் செய்வாள்… இதன் காரணம் அவள் தங்களிடம் தாழ்வுணர்ச்சி கொள்ளக் கூடாது என்பதுதான் காரணம்… இது அனைவருக்கும் தெரியும்…. தெரிந்தாலும் யாரும் அதனை வெளிக்காட்டுவதில்லை… அவளது வீடுபோல உணர செய்வதற்காக எப்போதும் அவள் செய்வதுதான் சமையலாக இருக்கும்..
இந்தாக்கா உனக்கு எத்தன காபிக்கா?? என்று திட்டியபடி காபியை நீட்டினாள்….
அக்கா இன்னக்கி நைட்டு நான் ஊருக்குக் கௌம்புறேன்கா….
ஏன்டி இன்னும் ரெண்டு நாள் இருந்துட்டு போயேன்…
இல்லக்கா ரவிக்கு கொஞ்சம் வேல இருக்காம்… சாப்பாட்டுக்கு வேற கஷ்டப்படுவான் அதான்கா….
"அப்படியா சரி.. சரி.." என்றாள் அக்கா
கமலா தனக்குள் கலங்கினாள்… துணி துவைப்பதற்கும் அவனுக்கான பணிவிடைகள் செய்வதற்குமே அவன் தன்னை அழைக்கிறான் என்பதை அறிந்தே இருந்தாள்…
“அன் ரிசர்வ்டு டிக்கெட்ல வந்துடு” என்று சொல்லியிருந்தான்…
அவன் படுக்கை வசதியோடு கூடிய பேருந்தில் அசைவ விருந்து உணவோடு பயணம் செய்து சென்றிருந்தான்.. அதை ஒப்பிடும்போது கமலாவுக்கு அவன் செலவழிப்பது மிகவும் சொற்பமான பணம் மட்டுமே” இருந்தும் அவனுக்கு சிறிது கூட அம்மா மீது இரக்கம் வரவில்லை…
மாலை முதல் கமலா புலம்பத் துவங்கினாள்.. அக்கா இந்த ராம் எப்ப வருவான்கா என்னைய கொண்டு போய் இரயில்வே ஸ்டேஷன்ல விடனும்கா… சீட் கெடைக்காதுகா….
இரயில்வே ஸ்டேஷனின் சூழலும் கூட்டமும் கமலாவை தன்னையறியாது கலங்கடித்துக் கொண்டிருந்தது…
அவள் புலம்பலைக் கேட்டுக் கொண்டிருந்த அக்காவுக்கு அழுகை வந்தது… தன் தங்கைக்கு 60 தொடப் போகும் வயது.. இந்த வயதில் தங்கையின் நிலை அவளை எதுவோ செய்தது… தன்னால் எதுவும் செய்ய முடியவில்லை என்ற வருத்தமும் இருந்தது..
மகன் வரும்வரை பொறுத்திருந்தாள்.. மகனிடம் மெல்ல கூறினாள்… சித்திக்கு ஏதாவது பஸ் டிக்கெட் போட முடியுமானு பாருடா.. என்றாள்..
ராம் சற்று எரிச்சலடைந்தான்… என்னம்மா நீ மாசக்கடைசில…. அவ பையன் எதுவும் பண்ண மாட்டான்… நீ மட்டும் எப்ப பார்த்தாலும் என் உயிர வாங்கிட்டே இருக்கம்மா… என்று சிடுசிடுத்தான்…
"சரிடா சரிடா டிக்கெட் போடலனா கூட பரவாயில்ல.. கத்தாத டா… அவ சங்கடப்படுவா டா…" சுசீலாவுக்கும் தங்கையின் நிலையினை எண்ணி மனம் வலித்தது..
கமலா எப்படியாவது கூட்ட நெரிசலில் சிக்காமல் இன்று பயணம் அமையுமா என்ற எதிர்பார்ப்போடு சுற்றிக் கொண்டிருந்தாள் …
"வா சித்தி டைம் ஆச்சு" என்றான் ராம்…
"இதோ வரேன்டா…" என்றபடி வெளியில் வந்து அனைவரிடமும் விடைபெற்றுக் கொண்டாள்…
அவளுக்கு கேட்பதற்கும் ஒரு மாதிரியாக இருந்தது… பஸ்சுக்கா என்று கேட்டால், டிக்கெட்டிற்கு பணம் கேட்டால் என்ன செய்வது என்ற தயக்கம்? இரயில்வே ஸ்டேஷனில் விட்டால்…. நினைக்கவே அவளுக்கு திகிலடித்தது…. அமைதியாக அவனுடன் சென்று கொண்டிருந்தாள்…
வீட்டிலிருந்து கிளம்பிய வண்டி ஒரு பரோட்டா கடையில் நின்றது… அவள் எதற்கு நிற்கிறான் என்று தெரியாமல் தயங்கினாள்..
"இறங்கு சித்தி ரவி உனக்கு பரோட்டா பிடிக்கும்னு சொல்லியிருக்கான்.. சாப்பிட்டு போலாம்" என்றான்…
அவளுக்கும் ஆசையாகத்தான் இருந்தது எனினும் நேரமானால் கூட்டத்திற்குள் சிக்கி இடம் கிடைக்காது என்ற கவலை வருத்திக் கொண்டிருந்தது…
"என்ன யோசிக்கிற வேணுமா? வேணாமா? வா வா வயசாயிடுச்சில்ல போலாம்.. இதெல்லாம் சீரணமாகாது" என்று கிண்டல் செய்தான்…
"டேய் என்னடா அதெல்லா இல்லை…" என்றபடி பரோட்டாவை ருசித்தாள்… மீண்டும் பைக்கில் ஏறியதும் இப்படியே வீட்டுக்கு போயிடாலா என்று கூட தோன்றியது… பலவாறான யோசனைகளில் இருந்தவளை "சித்தி இறங்கு" என்ற குரல் நிகழ்விற்கு திருப்பியது..
பேருந்து நிலையத்திற்குள் வண்டி நுழைந்திருந்தது… கமலாவுக்கு மூச்சுவந்தது.