

சுபா ஒரு டைலரஸ் கடை நடத்தி வருகிறார். அவர் கணவர் மாநகர பேருந்து நடத்துனர். அவர்கள் கீழ்த்தட்டு வர்க்கம். அவர்களுக்கு ஜெயா என்று ஒரு பெண் குழந்தை. வயது 12. அவள் இயற்கையாகவே பரத நாட்டியம் நன்கு ஆடுவாள்.
சுபாவின் அம்மா கோமதி. அவர் கல்யாணம் ஆகும்வரை மேடைகளில் பரத நாட்டியம் ஆடினார். கல்யாணத்திற்குப்பிறகு எல்லா பெண்களைப்போல தனது திறமை, உரிமை எல்லாம் இழந்தார். சுபாவிற்கு அம்மா என்றால் உயிர். கோமதி இறந்ததும் அவரால் அந்தச் சோகத்தை மறக்க முடியவில்லை. அம்மா பற்றி நினைவு வரும்போது எல்லாம், சுபா போட்டோ ஆல்பம் பார்ப்பார். அத்தனையும் கலர் போட்டோக்கள். வீடியோ எடுக்காதது எவ்வளவு பெரிய தவறு என்று இப்போது நினைத்தார். கலர் போட்டோவில் பல்வேறு விதமாக கோமதி ஆடிய படங்கள் இருக்கும். அபிநயம், முத்திரை எல்லாம் பக்கவாக இருக்கும்.
இப்போது ஜெயா அதேபோல் பரத நாட்டியம் ஆடுகிறாள்.
அவள் ஆடும்போது எல்லாம் அம்மா கோமதி ஞாபகம்தான் வரும். கூடவே கண்களில் கண்ணீரும் வரும்.
இப்போது ஜெயா பள்ளிக்கூடத்தில் ‘ஸ்கூல் டே’ அடுத்த வாரம் கொண்டாட போகின்றது என்ற செய்தி நோட்டீஸ் போர்டில் இருந்தது. ‘ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் பங்கு பெற விரும்பும் மாணவர்கள் ஸ்கூல் டீச்சர் அமுதாவிடம் பேர் கொடுக்கலாம்’ என்று சர்க்குலரும் வந்தது. டீச்சர் அமுதாவிடம் ஜெயா பரத நாட்டியம் ஆட பெயர் கொடுத்தார்.
மாலை இந்தத் தகவலை அம்மா சுபாவிடம் சொன்னாள்.
சுபாவுக்கு மிகவும் சந்தோஷம்.
அவர் “ஜெயா… என்ன உடையில் ஆட வேண்டும்? வேண்டும் என்றால் பரத நாட்டியம் உடையை வாடகைக்கு எடுத்துக்கொள்ளலாம்...!” என்று சொன்னார்.
சுபா யோசித்துப் பார்த்தார். பீரோவைத் திறந்தார். அதில் அம்மாவின் ஒரு 8 கஜ பட்டுப்புடவையைத் தேர்ந்து எடுத்தார். தான் ஒரு டைலர் என்பதால் பரத நாட்டியம் உடையை, ஜெயா சுலபமாக போட்டுக்கொள்ள ஏற்றவாறு தைப்பது என முடிவு எடுத்தார்.
இன்னும் 3 நாட்கள் மட்டுமே இருந்தன. அம்மாவின் புடவை சிவப்பு நிறம். பளபள என்று இருந்தது. இரவு பகல் பார்க்காமல் பரத நாட்டியம் உடையைத் தைத்துவிட்டார் சுபா.
ஸ்கூல் டே இன்று.
சுபா தைத்த பரத நாட்டியம் உடை ஜெயாவிற்கு கணக்கச்சிதமாகப் பொருந்தி இருந்தது.
ஜெயா நாட்டியம் சிறப்பாக ஆடினார். தில்லானா மோகனாம்பாள் திரைபடத்தில் பத்மினி (நாட்டிய பேரொளி) ஆடிய ‘மறைந்து இருந்து பார்க்கும் மர்மம் என்ன..?’ என்ற பாடலுக்கு நாட்டியம் ஆடினார்.
பார்வையாளர்கள் பிரமித்து விட்டார்கள். பத்மினி ஆட்டத்தைவிட சிறப்பாக ஆடினார். ஆடி முடித்ததும் பலத்த கரவொலி. கடி, அபிநயம், முத்திரை எல்லாம் சிறப்பாக ஆடினார். சுபா, ஜெயாவின் நாட்டியத்தை வீடியோ எடுக்க ஒரு வீடியோகாரரை ஏற்பாடு செய்தார்.
விழா மேடையில் ஜெயாவிற்கு ‘நாட்டிய குமாரி’ என்ற சிறப்பு பட்டம் கொடுத்து, ஒரு பெரிய கோப்பையும் பரிசாக வழங்கப்பட்டது. சுபாவிற்கு ஒரே சந்தோஷம்.
வீட்டிற்கு வந்ததும் ஜெயாவை கட்டிப்பிடித்து “ம்மா… ம்மா..!”
என்று தன் அம்மாவை நினைத்து முத்த மழை தந்தார்.
தனது அம்மாவேதான் ஜெயாவாக பிறந்து இருப்பதாக நினைத்தார்.
மறுநாள் வீடியோ வந்தது. சுபா, அதை பார்த்து அழுதுவிட்டார்.
அம்மாவின் நினைவுகள் அழிவதில்லை..!