

அருண் மதுரை மருத்துவ கல்லூரியில் எம். பி. பி. எஸ். பட்டம் முதல் வகுப்பில் பெற்றார். அவருக்கு ஏழைகளுக்குச் சிகிச்சை செய்ய ஆர்வம். அவர் வேலை தேடினார். ஆனால் கிடைக்கவில்லை. எனவே, கிராமத்திற்குச் சென்று கிளினிக் ஆரம்பிக்க முடிவு செய்தார்.
அவரது பூர்விகம் புதுக்கோட்டையில் இருந்து சுமார் 12 கிலோ மீட்டர் தொலைவில் கொத்தமங்கலம் கிராமம். அங்கு அவருக்கு பூர்வீகச் சொத்தாக 3 ஏக்கர் நிலம் இருந்தது. அங்கு ஒரு மருத்துவமனை கட்டவேண்டும் என்று அவருக்கு லட்சியம். ஆனால், கையில் பணம் இல்லை.
அவர் கொத்தமங்கலம் சென்றார். அங்கே ஒரு ஆலமரத்தின் அடியில் ‘மருத்துவமனை’ என்று ஒரு பலகையைத் தொங்கச் செய்தார்.
முதல் நாள் யாரும் வரவில்லை.
இரண்டாம் நாள் ஒரு மூதாட்டி வந்தார். அவருக்கு காய்ச்சல் மற்றும் தலை வலி. நன்கு பரிசோதனை செய்து இந்த மாத்திரைகளை புதுக்கோட்டை சென்று வாங்கிக் கொள்ளுங்கள் என்று சொன்னார்.
பாட்டி “ப்பா.. ஃபீஸ் எவ்வளவு...?” என்று கேட்டார்.
அருண் “பணம் வேண்டாம்” என்று மறுத்தார்.
பாட்டி பேர் கேட்டார். மீனாட்சி என்றும், எல்லோரும் தன்னை “மீனு பாட்டி” என்றுதான் கூப்பிடுவார்கள் என்றும் சொன்னார். மீனு பாட்டி கட்டாயமாக ரூபாய் 10 தந்தார். அவரின் வற்புறுத்தலால் அருண் பணத்தை வாங்கி கண்களில் ஒத்துக்கொண்டு வாங்கினார். அவரது முதல் வருமானம். அந்த 10 ரூபாயை போட்டோவாக எடுத்து தனது அறையில் மாட்டினார்.
நாட்கள் ஓடின. மாதங்கள் பறந்தன. வருடங்கள் நகர்ந்தன.
அருணுக்கு அரசு வேலை கிடைத்தது. வருமானத்தைச் சேமித்தார். நன்கு யோசித்து தனது நிலத்தை அடமானம் வைத்து, லட்சக்கணக்கில் பணம் பெற வங்கியில் கடன் உதவி கேட்டார். அவரது திட்டம் வங்கிக்குப் பிடித்து இருந்தது. லோன் கிடைத்தது. அருண் மகிழ்ச்சி அடைந்தார்.
தனது வேலையை விடாமல், கொத்தமங்கலம் கிராமத்தில் ஒரு பெரிய மருத்துவமனை கட்டத் துவங்கினார். அது 100 படுக்கைகள் வசதி உடைய மருத்துவமனை.
சுமார் 6 வருடங்களுக்குப் பிறகு மருத்துவமனை கட்டி முடிக்கப்பட்டது. இடையில் எவ்வளவோ சோதனைகள். எல்லாவற்றையும் தனது உறுதியான மனதால் ஏற்றுக்கொண்டு மருத்துவமனையைக் கட்டிமுடித்தார்.
அவருக்கு கிராம மக்கள் சிகிச்சை பெற்று நலமுடன் வாழவேண்டும் என்பதே நோக்கம். ஏழைகளைக் கண்டு மனம் இரங்கினார்.
அருண் கல்யாணம்கூட செய்துகொள்ளவில்லை. ஆனால், தனது லட்சியத்தில் கண்ணும்கருத்துமாக இருந்தார். அவரது கனவு பலித்தது. தனது லட்சியத்தை அடைந்தார்.
அவர் தனது மருத்துவமனையைத் திறந்துவைக்க கொத்தமங்கலம் மீனு பாட்டியின் பேரனைதான் மருத்துவமனையைத் திறக்க வைத்தார். பேரன் மிகவும் சந்தோஷம் அடைந்தார். பேரன் மருத்துவமனையைத் திறந்தது அருணுக்கு மிகவும் பிடித்து இருந்தது. மருத்துவமனையில் தான் முதல்முறையாக மீனு பாட்டியிடம் வாங்கிய ரூபாய் 10 யை ஃப்ரேம் போட்டு மாட்டி இருந்தார்.
இப்போது அவருக்கு கீழே 9 டாக்டர்கள். மூன்று பேர் பெண்கள்.
அவரது மருத்துவமனை பிரபலம் ஆனது. புதுக்கோட்டை மட்டும் அல்ல மதுரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும் மருத்துவமனைக்கு நோயாளிகள் வந்தார்கள்.
அருண் வரவேற்பு அறையில் மீனு பாட்டி படம் வைத்து மாலை போட்டு இருந்தார். அதாவது நிரந்தர சந்தன மாலை.
அருணின் மருத்துவமனையின் பெயர்
மீனு பாட்டி மருத்துவமனை..!