நாட்டுப்புற சிறுகதை: காக்காய் கறியடி... கண்ணிலிடும் வெண்ணெயடி..!

வறட்சி காலத்தில் தன் மருமகனுக்கு அரிசி சோறு போட தாய் பட்ட கஷ்டங்களை விவரிக்கும் உருக்கமான கதை.
தமிழ் கதை | The Poor Woman and Her Son-in-Law
தமிழ் கதை | The Poor Woman and Her Son-in-LawAI Image
Updated on
MM strip
MM strip

அது ஒரு பழமையான காலம். அந்த வருடம் பருவ மழை பொய்த்து விட்டது. வழக்கமான மழை இல்லை. பயிர் பச்சை வளர வாய்ப்பில்லாமல் போனது. ஊர் முழுக்க பஞ்சம் தலை விரித்தாடியது. நெல்லுச் சோறு எனப்படும் அரிசிச் சோறு அரிதானது.

ஒரு சில செல்வந்தர்கள் தங்கள் சொந்த கிணறுகளை தூர் வாரி, ஆழப்படுத்தி, ஊறிய நீரை பொன்போல் பொத்திப் பாதுகாத்து, வயலுக்கு சிறுகச் சிறுக இறைத்து, வீட்டுக்குத் தேவையான நெல்லைப் பெற்று வழக்கமான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தனர்.

மற்றவர்கள் ஒரு வேளை சிறு தானிய உணவிற்கே சிரமப்பட்டுக் கொண்டிருந்தனர்.

சிவகாமி அந்த ஊரைச் சேர்ந்த ஓர் ஏழைப் பெண்மணி.

சிறு வயதிலேயே கணவனை இழந்த சிவகாமி தன் ஒரே மகளை கஷ்டப்பட்டு வளர்த்து ஆளாக்கினாள். பருவமடைந்த பெண்ணை எவ்வளவு காலம் உடன் வைத்திருப்பது என மனதிற்குள் மருகினாள்.

அப்போது எதேச்சையாக சிவகாமியின் வீட்டுக்கு உறவுக்காரப் பெண் ஒருத்தி வந்தாள். அவள் பெயர் செல்லம்மா. அவள் ஊர் ஐந்து மைல் தொலைவில் இருந்தது. சிவகாமியின் மகள் செல்வியைப் பார்த்துவிட்டு, "உன் மகள் நல்லா வளர்ந்துட்டாளே. கல்யாணத்துக்கு மாப்பிள்ளை பாக்குறியா?" எனக் கேட்டாள்.

"ஆமாம்" என்றாள் சிவகாமி.

"என் மகன் முருகனுக்கும் பெண் தேடிக் கொண்டிருக்கிறோம். உன் பெண்ணைத் தருவியா?" 'பட்' டென்று கேட்டுவிட்டாள் செல்லம்மா.

இதையும் படியுங்கள்:
சிறுகதை: இன்னொரு ஜானி...!
தமிழ் கதை | The Poor Woman and Her Son-in-Law

"படிப்பு அதிகம் இல்லையென்றாலும், வீட்டின் முன் பகுதியை பெட்டிக் கடையாக மாற்றி வியாபாரம் செய்துகிட்டு இருக்கான். பக்கத்து ஊர்களில் உள்ள பெரிய கடைகளிலிருந்து மொத்தமாக சாமான்களை வாங்கி வந்து சில்லறை வியாபாரம் பண்றான். நல்லா போயிட்டிருக்கு..." என்று மகனைப் பற்றி சிம்பிளாக கூறி முடித்தாள்.

அவளின் வெள்ளந்தியான பேச்சு பிடித்துப் போகவே, சிவகாமி தன் மகளை செல்லம்மாவுக்கு மருமகளாக்க சம்மதம் என்றாள். விரைவிலேயே செல்லம்மா தன் கணவர் மற்றும் மகனுடன் பெண் பார்க்க வந்தாள்.

வரதட்சணை, சீர் செனத்தி என எந்த கோரிக்கையையும் வைக்காமல், வந்த இடத்திலேயே தாம்பூலத் தட்டையும் மாற்றிக்கொண்டு சென்று விட்டனர் மாப்பிள்ளை வீட்டினர். விரைவிலேயே மணமுடித்து மாமியார் வீட்டிற்கு சென்றுவிட்டாள் செல்வி.

இரண்டு மாதம் ஓடியது. முருகன் சரக்கு வாங்கி வர வெளியே செல்லும்போது, அவன் தந்தை கடையைப் பார்த்துக் கொள்வதுண்டு. அவருக்கு சிரமம் கொடுக்காமல், அவரை ஓய்வெடுக்க சொல்லிவிட்டு, தானே கடையை நடத்தவும் பழகிக் கொண்டாள் செல்வி.

இந்நிலையில் ஒரு நாள் முருகன் செல்வியிடம், "இன்னிக்கு நான் உன் அம்மா வீட்டுப் பக்கம்தான் சரக்கு வாங்கப் போகிறேன்" என்றான்.

இதையும் படியுங்கள்:
சிறுகதை: இரு துருவங்கள்..!
தமிழ் கதை | The Poor Woman and Her Son-in-Law

"அப்படியா... அப்ப அம்மா வீட்டுக்குப் போய் அம்மாவப் பார்த்துட்டு, அவங்க கையால மதிய உணவை சாப்டுட்டு வாங்க" என்றாள்.

"சரி" யென்று சொல்லிவிட்டு வெளியேறினான் முருகன்.

சரக்கெடுக்கும் கடையில் ஆர்டர் கொடுத்து விட்டு சிவகாமியைப் பார்க்கச் சென்றான். மருமகனை சற்றும் எதிர்பாராத சிவகாமிக்கு கையும் ஓடல. காலும் ஓடல.

"வாங்க மாப்ள... கொஞ்ச நேரம் இருங்க. சாப்டுட்டு போகலாம் என்றாள். "ஆமா அத்தை... செல்வியும் சொல்லி அனுப்பினாள்" என்றபடி அங்கிருந்த திண்ணை ஒன்றில் துண்டை விரித்துப் படுத்துக் கொண்டான்.

சிவகாமி இரண்டு பானை மற்றும் வாளி ஒன்றை எடுத்துக் கொண்டு வெளியேறினாள். சிறிது நேரத்தில் இடுப்பில் ஒரு பானையிலும் கையில் ஒரு பானையிலும் நீர் நிரப்பித் தூக்கிக் கொண்டு வந்தாள். அவள் உடுத்தியிருந்த புடவை முழுதும் நனைந்திருந்தது.

பானைகளை வைத்துவிட்டு எதிர் திசையிலிருந்த ஒரு பெரிய வீட்டுக்குள் நுழைந்தாள். அந்த வீட்டின் முற்றத்தில் காய்ந்து கொண்டிருந்த நெல்லின் மீது கால் இடறி விழுந்ததுபோல் உட்கார்ந்து இப்படியும் அப்படியும் திரும்பிவிட்டு எழுந்து வந்து விட்டாள். ஈரப் புடவை முழுக்க நெல் அப்பிக் கொண்டிருக்க, அதை உதறி எடுத்து உரலிலிட்டு குத்திப் புடைக்க அரிசியானது.

தமிழ் கதை | An elderly woman is winnowing paddy.
தமிழ் கதை | An elderly woman is winnowing paddy.AI Image

பின் இன்னொரு வீட்டுக்குள் சென்று, "யக்கா, கண்ணு ரெண்டும் வீங்கியிருக்கு.. கொஞ்சம் வெண்ணெய் இருந்தா குடு... தடவிப் பாப்போம்" என்றாள். அவளும் நூறு கிராம் அளவுக்கு வெண்ணெய் தர, வாங்கிக் கொண்டுவந்து வீட்டிற்குள் வைத்தாள். அப்போது ஒரு காக்கா மாமிசத் துண்டு ஒன்றை தூக்கிக் கொண்டு வந்து வாசலில் அமர, அதை துரத்திவிட்டு, அது விட்டுச் சென்ற இறைச்சியை பொறுக்கி எடுத்துக் கொண்டாள்.

இது அனைத்தையும் தூங்குவதுபோல் கண்ணை மூடிக் கொண்டு கவனித்துக் கொண்டிருந்தான் முருகன். சிவகாமி மதிய உணவு தயாரித்து மருமகனுக்குப் பரிமாறினாள்.

வீடு திரும்பிய முருகனிடம், "என்னங்க, அம்மாவ பாத்தீங்களா? சாப்டீங்களா?" என கேட்டாள் செல்வி.

அதற்கு அவன், "காக்கா கறியடி.. கண்ணிலிடும் வெண்ணெயடி.. உண்டேனடி உண்டேன்... நெல்லுச்சோறு உண்டேன்.. உங்க அம்மா பின் பக்கத் திறனாலே..." என்றான்.

"என்ன சொல்றீங்க.. வெவரமா சொல்லுங்க" எனக் கேட்டாள் செல்வி.

அவன் நடந்ததை விவரிக்க செல்வியின் கண்கள் குளமாயின.

logo
Kalki Online
kalkionline.com