சிறுகதை: இன்னொரு ஜானி...!

பக்கத்து வீட்டுக்காரரை பழிவாங்க ஆசையாக நாய் வாங்கிய முதியவரின் கதையும், அதனால் அவரது குடும்பத்தில் அரங்கேறிய எதிர்பாராத திருப்பங்களையும் படியுங்கள்.
தமிழ் கதை | old man and puppy
தமிழ் கதை | old man and puppyAI Image
Updated on
MM strip
MM strip

கந்தசாமிக்கு அவசரமாக ஒரு நாய்க்குட்டி தேவைப்பட்டது. அவசரம் மட்டுமில்லை. அவசியமும் கூட. ராஜேந்திரனை பழி வாங்க வேண்டும். அதற்குத்தான்.

தனக்குத் தெரிந்தவர்களிடமெல்லாம் சொல்லி வைத்திருந்தார். கிடைத்துவிட்டால் இழுத்துக்கொண்டு போய் தெருவில் விட்டால், அது மலம் கழிக்க வேண்டும்; அதுவும் அவர் சொன்ன இடத்தில். மிகவும் குறிப்பாக ராஜேந்திரன் வீட்டின் முன்னால்...

என்ன விலையில் வேண்டும் என்று கேட்டவர்களிடம், "என்ன விலையானாலும் பரவாயில்லை..." என்றார்.

அவரது மனைவி கனகவல்லியும் கூட ஒருதடவை எரிச்சலுற்று கேட்டாள், "ஏங்க... உங்களுக்கென்ன பைத்தியமா... அந்தாளை ஒரு ஆளுன்னு மதிச்சு நீங்க இப்படி பண்றதெல்லாம் நல்லாவா இருக்கு? நாய் வளர்க்கறது இப்போ ரொம்ப அவசியமா...? அதை தினம் வெளியே இழுத்துக்கிட்டுப் போகணும்... ஷாம்பூ போட்டு குளிப்பாட்டனும், வகை வகையா திங்கக் கொடுக்கணும். தடுப்பூசி போட்டுக்கிட்டே இருக்கணும். அதோட ஆச்சா.... நம்ம ரீட்டா இல்லே, அவளோட நாய்க்கு பிடிகிரியோ குடிகிறியோ... என்னவோ... மாசம் மூவாயிரத்துக்கு வாங்கறாளாம்... ஞாபகம் இருக்கா... உங்க பென்ஷனே முப்பதினாயிரம்தான்... ரொம்ப ஆடாம உட்காருங்க... வயசாகுது... அதையும் மனசுல வச்சுக்கங்க..."

"ஏ... நாய்க்குட்டி வாங்கலைனாத்தான் எனக்குப் பைத்தியமே பிடிக்கும்... இழுத்துட்டுப் போய் அவன்வீட்டு வாசல்ல அதை கக்கா போக வச்சே ஆகணும்... நான் விடறதா இல்லை..."

ஒரு சின்ன பிளாஷ்பேக்... பத்து நாட்கள் இருக்கும் அது நடந்து...

எதேச்சையாய் வெளியே வந்தார் கந்தசாமி. நான்கு வீடுகள் தள்ளி குடியிருக்கும் ராஜேந்திரன் இவரது காம்பவுண்டுக்கு அந்தப் பக்கமாக நின்றுகொண்டிருந்தான். அவனது பார்வை அங்குமிங்குமாய் அலை பாய்ந்து கொண்டிருந்தது. அவன் கையில் நாயைப் பிடித்துக்கொண்டு நிற்பதும் தெரிந்தது. நாய் அங்கே ஏதும் ஒதுங்குகிறதா என்று புரியவில்லை. ஆனாலும் போய் எட்டிப் பார்த்தால் நன்றாக இருக்காது என்று உள்ளே போய்விட்டார்.

இதையும் படியுங்கள்:
சிறுகதை: ஓ ப்ரியா…!
தமிழ் கதை | old man and puppy

ராஜேந்திரன் பத்துப் பதினைந்து நாட்களாகத்தான் நாய் வளர்க்கிறான் என்பது இவருக்கும் தெரியும். தினமும் காலையிலும் மாலையிலும் நாயை வாக்கிங் கூட்டிக்கொண்டு போய்விடுகிறான்.

எப்போதாவது பார்க்கும்போதெல்லாம் கந்தசாமி நினைத்துக் கொள்வார், ‘வீட்டைப் பார்த்துக்கொள்வதுதான் நாய்க்கு வேலை. இப்போலாம் அந்த நாயை பார்த்துக்கறதே மனுஷனுக்கு வேலையாப் போச்சு...‘ என்று.

ஒன்பது மணி சுமாருக்கு ஸ்கூட்டரை கொண்டுபோய் வெளியே நிறுத்தும்போதுதான் சட்டென ஞாபகம் வந்தது.

ராஜேந்திரன் காலையில் இந்தப் பக்கம்தானே தனது நாயைப் பிடித்துக்கொண்டு நின்றிருந்தான் என்று... சட்டென அவரது பார்வை அந்தப் பக்கம் போனது.

அவ்வளவுதான் ஜிவ்வென்று மண்டைக்குள் ஏறியது கோபம். அங்கே கருப்பு கலரில்... காய்ந்து போய்...! கண்டிப்பாக அது நாயின் மலம்தான். அதுவும் ராஜந்திரனின் நாயுடையதுதான். இதே இடத்தில்தான் அவன் சங்கிலியைப் பிடித்துக்கொண்டு நின்றிருந்தான் திருதிருவென்று முழித்தபடி. அவரால் சரியாக யூகிக்க முடிந்தது.

திடீரென்று ஒரு குழப்பம். அது நாயுடையதுதானா... அல்லது பூனையா...?

அவர் கேள்விப்பட்டிருக்கிறார்... பூனை அவ்வளவு சாதாரணமாக மலம் கழிக்காதாம். லேசாய் குழி போல பறித்து, அதில் மலம் கழித்து, பிறகு மண்ணைத் தள்ளி மூடிவிடுமாம். பூனைகள் தங்களின் மலம் மற்றும் சிறுநீரின் வாசனையை மறைப்பதன் மூலம், தாங்கள் இருக்கும் இடத்தை மற்ற பெரிய வேட்டையாடும் விலங்குகளுக்கு காட்டிக் கொடுக்காமல் இருக்கத்தான் அப்படி செய்கின்றனவாம்.

ஆனால் இது பூனையின் மலம் போலவும் தெரியவில்லை.

‘நான்தான் பார்த்தேனே... அவன் இந்த இடத்தில்தானே தனது நாயைப் பிடித்துக்கொண்டு நின்றிருந்தான்... ‘

யோசிக்கையில் ரத்தம் மண்டைக்குள் பாய்ந்தது. வேகமாய் அவனது வீட்டை நோக்கி நடந்தார்.

காம்பவுண்ட் கேட் உள்பக்கமாய் தாழிடப் பட்டிருந்தது. அதன் கொண்டியைப் பிடித்து மடேர் மடேர் என்று நான்கு தட்டுத் தட்டினார். சத்தம் கேட்டு ராஜந்திரனின் மனைவி வெளியே ஓடிவந்து எட்டிப்பார்த்தாள்.

ராஜேந்திரனைப் பிடித்து நறுக்கென்று நான்கு கேள்விகள் கேட்கவேண்டுமென்று நினைத்து வந்தவருக்கு, ராஜேந்திரனின் மனைவியை பார்த்ததும் வேகம் கொஞ்சம் குறைந்தது.

இதையும் படியுங்கள்:
மரணத்தை வென்ற வாக்குறுதி - (அல்பேனியா நாட்டுப்புறக் கதை)
தமிழ் கதை | old man and puppy

ஏற்கனவே அவள் ஒரு வாயாடி என்று தெரு பூராவும் ஒரு பேச்சு உண்டு. இவளிடம் நாயின் மலம் பற்றிச் சொல்லப் போக அவள் பிடி பிடியென்று பிடித்துக்கொண்டால்...

அவள் இவரை உற்றுப் பார்த்தாள். அதை சமாளிக்கும் விதமாய், "உங்க வீட்டுக்காரர் இல்லையாம்மா...?" என்றார்.

"இல்லேயே... ஆபீஸ் கிளம்பிட்டாரே..." என்றாள் அசால்ட்டாய்.

பொங்கிக்கொண்டு வந்த கோபம் பலூனில் இருந்து காற்று இறங்கியதுபோல ஆனது இவருக்கு.

வந்த விஷயத்தை இவளிடம் சொல்லி, இவள் ஏதாவது விபரீதமாக பேச, நாம் ஒன்று சொல்ல, அவள் ஒன்று சொல்ல... தேவையா... எதுவானாலும் காரியக்காரனிடமே பேசிக்கொள்ளலாம் என்றெண்ணி, "சரிம்மா... சாயந்திரம் பேசிக்கறேன்... ' என்றுவிட்டு மடமடவென திரும்பிவிட்டார்.

தெருவில் இவரது ஆபீஸ் பியூன் இவரைப் பார்த்ததும் ஓடிவந்தான்.

"ஸார்... நீங்க ஒரு நாய்க்குட்டி கேட்டீங்கல்ல... எங்க பக்கத்து வீட்டு நாய் குட்டிப்போட்டு ஒரு வாரம் ஆச்சாம். நானும் போய் பார்த்தேன். கொழு கொழு மொழு மொழு அழகழகா நாலு குட்டிங்க, கருப்பும் வெள்ளையுமா... சாயங்காலம் எங்க வீட்டுப் பக்கம் வாங்க... ஒரு குட்டியை தூக்கிக்குடுத்துடறேன். அவங்களும் தர்றேன்னு சொல்லிட்டாங்க... ‘

தமிழ் கதை | Old man see the Dog chain
தமிழ் கதை | Old man see the Dog chainAI Image

புளகாங்கிதமடைந்தார் இவர்...

சாயங்காலம் நாய்க்குட்டியுடன் வந்து சேர்ந்தார் கந்தசாமி. முகத்தைச் சுழித்தாள் கனகவல்லி.

"நான் அவ்வளவு சொல்லியும் நீங்க கேட்கலை இல்லே... எக்கேடோ கெட்டுப் போங்க... என்கிட்டே இதுபத்தி எதுவும் சொல்லக்கூடாது..."

சங்கிலி ஒன்று வாங்கி வந்தார். அதன் கழுத்தில் கட்டினார். அது நடக்க முடியாத போதும் அதை தூக்கிக்கொண்டும் போனார்.

‘ச்சே... இது நடந்தால்தானே கக்கா போகும். இதை நாம் தூக்கிப் பழக்கினால் எப்படி அது நடக்கப் பழகும்...?"

ரொம்பக் கஷ்டப்பட்டு அதை நடக்கப் பழக்கினார். நடக்க ஆரம்பித்தது. ஓடவும் ஆரம்பித்தது. இவரால்தான் தாக்குப்பிடிக்க முடியவில்லை. சிலசமயம் மூச்சும் வாங்கியது. அதனுடன் ஓட்டத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் போனபோது இவர் சுண்டி இழுக்க அதன் கழுத்தில் சங்கிலி இருக்கவும் கத்த ஆரம்பித்தது.

ராஜேந்திரனின் வீட்டுப்பக்கம் போகும்போது அது மலம் கழிக்க வேண்டும் என்பதற்காகத்தானே அதை வாங்கிவந்ததே. எப்படி பழக்குவது?

அதனுடைய பாஷை இவருக்குத் தெரியாது. இவருடைய பாஷை அதற்குப் புரியாது. அவர் சொல்லும் இடத்தில் மலம் கழிக்காமல் வராந்தாவில் மட்டும் மலம் கழித்தது.

இதையும் படியுங்கள்:
சிறுகதை: எங்கே என் ஜீவனே...?
தமிழ் கதை | old man and puppy

ஒரு யோசனை வந்தது. மாடுகளை அதட்டி ஓட்டுவதற்கு சாட்டையை வைத்துக்கொண்டு முதுகில் தட்டுவார்களே, அதுதானே மாடுகளுக்கு சமிக்ஞை. அதுபோல நாமும் ஒரு குச்சி வைத்துக்கொண்டு நாய்க்குட்டியின் முதுகில் தட்டிக்கொடுக்கலாம். ஒருவேளை அதை உணர்ந்து நாம் சொல்லும் இடத்தில் மலம் போகிறதா என்று பார்க்கலாம் என்று ஒரு குச்சி ஏற்பாடு செய்தார்.

லேசாய் அடித்துப் பார்த்தார். அது கக்கா போகவே இல்லை. ஒருமுறை செம கோபம் வந்து அதன் காலில் அடித்துவிட்டார். அது வலியால் கத்தியது. நொண்டவும் ஆரம்பித்துவிட்டது.

அடுத்த நாள் அதை நடக்க கூட்டிப்போக நினைத்தபோது நொண்டிக்கொண்டே வந்தது. ராஜேந்திரன் வீட்டின் முன்னால் போகும்போது இன்றைக்கு இதை மலம் கழிக்க வைத்தே ஆகவேண்டுமென்று குச்சியால் லேசாய் தட்டி சமிக்ஞை கொடுத்தார். அது கக்கா போகவே இல்லை. மறுபடியும் அடிக்க ஓங்கினார். கோபம் உச்சிக்கு ஏற போட்டார் நான்கு.

மறுநாள் அது எழுந்துகொள்ளவே இல்லை. தூக்கிகொண்டா வாக்கிங் போகமுடியும்? வெறுத்துப் போனார்.

இதையெல்லாம் கண்ட கனகவல்லி அவர் மேல் எரிந்து விழுந்தாள்.

"ஏங்க... உங்களுக்கு கொஞ்சமாவது மண்டையில இருக்கா... ஒரு வாயில்லா ஜீவனை இப்படி அடிச்சு நொண்டியாக்கி இருக்கீங்களே... அந்தப் பாவம் உங்களை சும்மா விடுமா...?"

மறுநாள் வெளியே வந்தவர் அதிர்ந்து போனார். சங்கிலி மட்டுமே இருந்தது. நாயைக் காணவில்லை.

இதையும் படியுங்கள்:
சிறுகதை: திருப்பு முனை
தமிழ் கதை | old man and puppy

"ஏண்டி.... இதென்னடி கொடுமையா இருக்கு... ஜானியை காணோமேடி.." என்று உள்பக்கம் திரும்பி குரல் கொடுத்தார்.

அவளோ அங்கிருந்தே, "எனக்கென்ன தெரியும். நீங்களாச்சு உங்க நாயாச்சு. நான் ஏற்கனவே சொல்லியிருக்கேன். என்கிட்டே இதுபத்தி எதுவும் சொல்லவும் கூடாதுன்னு..."

சுற்றித் தேடினார். எங்கும் அதைக் காணவில்லை.

கனகவல்லி நமட்டுச் சிரிப்பு சிரித்துக்கொண்டாள். அந்த நாய் நோன்டுவதைக் காண சகிக்காமல், தனது மகன் மூலம் அதை ரயில் தண்டவாளம் தாண்டி ரொம்பவும் தூரமாய் கொண்டுபோய் விடச் சொல்லி தூக்கிக் கொடுத்ததே அவள்தானே.

அது தெரியாமல், மவுனமாய் வீட்டுக்குள் திரும்பியவர், "சரி, இன்னொரு ஜானி கிடைக்காமலா போகும்...?" என்று முனகிக்கொண்டார்.

logo
Kalki Online
kalkionline.com