

இது கதையல்ல நிஜம். இதை ஜீரணிப்பது சற்று கடினம். என் அக்கா உமா பற்றி தான் எழுத போகிறேன். உமா பட்ட கஷ்டம் கொஞ்சநஞ்சமல்ல. 1980 களில் உமாவிற்கும் வருவாய் துறையில் வேலை பார்த்து வந்த கண்ணன் அவர்களுக்கும் திருமணம் நடந்தது.
திருமணம் என்பது சுப காரியம். மகிழ்ச்சியுடன் செய்வது. ஆனால் உமா திருமணம் சண்டை சச்சரவு என்று ஆகி விட்டது. திருமணத்திற்கு குதிரை வண்டியில் வந்த கண்ணன் மாமா “எங்கே…? காசு கொடுத்து விட்டு மறுவேளை பார்க்கட்டும்“ என்று கோபமாக கத்தினார். மாப்பிள்ளை வீடு என்றால் பெண் வீடு அடிமையாக இருக்க வேண்டும் என்பது சிலரது நியதி.
கண்ணன் தாய் விதவை. கண்ணனுக்கு ஒரு அக்கா (விஜயா) இரண்டு தங்கைகள் (ஆனந்தி மற்றும் பார்வதி).
கல்யாணத்தின் போது அவர் கொல்கத்தாவில் இருந்தார். மண்டபம் வந்ததிலிருந்து ஒரே சண்டை தான். வேண்டும் என்றே குறை கண்டுபிடித்து கண்ணன் அம்மா, ஆனந்தி மற்றும் பார்வதி அமர்க்களம் செய்தார்கள்.
கண்ணன் இருந்த ரூமுக்கு பக்கத்தில் ஒரு நாய் ஓடி வர, அங்கே வந்து சமையல்காரர் கத்து கத்து என்று கத்தினார்.
அந்த சமையல்காரர் தன்னை நாய் என்று சொல்லி விட்டான் என புளுகு மூட்டையை செய்தார் கண்ணனின் அம்மா. கண்ணன் பெரியப்பா ஒரு எஸ். பி. அவர் ஒன்றும் தெரியாமல் இருக்கும் சமையல்காரரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று அடித்து உள்ளார்.
இது எனக்கும் என் சகோதரருக்கும் தெரிய வர, கோபம் வந்தது. நாங்கள் இரண்டு பேரும் போலீஸ் நிலையம் போய் அவரை மீட்டு வந்தோம்.
கல்யாணம் முடிந்து உமாவிற்கு இரண்டு குழந்தைகள் பிறந்தன. வீட்டில் கண்ணன் அம்மா, ஆனந்தி மற்றும் பார்வதி அக்காவை கொடுமை படுத்தி வந்தனர்.
அக்கா கூச்ச சுபாவம் உள்ளவர். அவர்கள் திட்டி தீர்ந்த பின்னும் உமா மெளனமாக இருப்பார்.
நானும் அண்ணனும் உமா வீட்டிற்கு போனோம். வரவேற்க கூட இல்லை. உமா வெளியே வந்து பேசினார்.
நாங்கள், "உனக்கு இஷ்டம் என்றாலும் விவாகரத்து செய்யலாம்" என்று சொன்னோம். அதற்குள் கண்ணன் அம்மா, வந்தது நாங்கள் தான் என்று தெரிந்த போதும்…
“வெளியில் எந்த ஆம்புளைக்கூட பேசறாய்…?“ என்று விஷத்தை கக்கினார்.
உமா மன்றாடி கேட்டதால் நாங்கள் திரும்பி விட்டோம். உமா குழந்தைகளுக்கு காபி. பார்வதி குழந்தைக்கு பூஸ்ட். மூவரும் சேர்ந்து உமாவை சித்திரவதை செய்து உள்ளனர்.
உமா வாயை திறக்கவே இல்லை. அடிக்கடி தாய் வீடு வந்து விடுவார். ஒரு முறை அம்மாவுடன் சினிமாவிற்கு போய் இருந்தார். எதோ கொலை செய்தது போல் மூவரும் சண்டைக்கு வந்தார்கள்.
நான் எதுவாக இருந்தாலும், "வீட்டிற்கு உள்ளே வந்து பேசுங்கள்" என்று மட்டும் தான் சொன்னேன்.
நடு தெருவில் கூச்சல் போட்டு, “வரட்டும்.. நாங்கள் பார்க்கிறோம்..!“ என்று கோபமாக கத்தினார்.
மறைந்து போனவர்கள் பற்றி பேசுவது சரியல்ல என்று ஒரு செய்தி உண்டு.
இப்போது கண்ணன் அம்மா, ஆனந்தி மற்றும் பார்வதி மூவரும் மரணம் அடைந்து விட்டார்கள். சரி. முடிக்கிறேன்.
உமா திருமணம், பின்னர் அவள் கண்ணன் வீட்டில் வாழ்ந்தது எல்லாம் ஒரு துக்க விஷயம்.
வாழும் போது நல்லவர்களாக இருந்தால்…
ஏன்…? குறை சொல்ல வேண்டும்…??