

சீதாவின் குடும்பம் வறுமையின் பிடியில் வாடிக்கொண்டிருந்தது.
சீதாவும் அவளுடைய தாய், தந்தை மூவருமே விவசாயம் செய்து, அதில் வரும் வருமானத்தில் குடும்பம் நடத்தி வந்தனர்.
அவளுடைய தாய், தந்தை மிகவும் கஷ்டப்பட்டு அவளை 12 ம் வகுப்பு வரை படிக்க வைத்தார்கள். அவள் அந்தப் படிப்பிற்கு ஏற்ப கடைகளில் கணக்கு எழுதும் வேலை செய்துவந்தாள். சம்பளமோ மிகவும் குறைவு. காசு இல்லாத காரணத்தினால் அவளால் மேற்படிப்பைப் படிக்க முடியவில்லை,
அவளுடைய வீட்டில் வருவாய்க்கு ஏற்ப செலவு இருந்தது. வீட்டில் வருங்காலத்திற்கு சேமிப்பு என்று ஒன்றும் கிடையாது. சீதாவிற்கு நகை என்று ஒரு தங்கத்தோடு மட்டுமே அவளுடைய பெற்றோர்கள் சேமித்து வைத்திருந்தார்கள்.
ஏழ்மையின் காரணமாக அவளுக்கு வாழ்வில் படிப்பு, பிடித்த ஆடை, நகை, சமுதாயத்தில் மரியாதை, மன அமைதி என்று எதுவுமே கிடைக்கவில்லை.
இந்த வறுமையைக் காரணமாக காட்டி அவளது குடும்பத்தைச் சமுதாயம் மற்றும் உறவினர்கள் இழிவாகவே நடத்துவார்கள்.
சீதாவும் அவளது குடும்பமும் உழைத்துப் பிழைப்பவர்கள். யாருடைய பொருட்களும் அவர்கள் ஆசைப்படுவதில்லை. இருப்பினும் அவளுடைய வீதியில் எந்த நல் நிகழ்வுகளிலும் அவர்கள் அழைக்கப்படுவதில்லை.
சீதாவிடமே அவர்களுடைய உறவினர்கள் ‘நீங்கள் இல்லாதவர்கள்தானே’ என்று ஏளனமாகப் பேசுவார்கள்.
இவ்வாறு வறுமை மற்றும் ஏழ்மையின் காரணமாக ‘மனிதர்களிடத்தில் உள்ள நல்ல குணம்கூட பலரால் மதிப்பற்றதாகவே பார்க்கப்படுகிறது.’
காலங்கள் கடந்தன; சீதா திருமண வயதை அடைந்தாள்.
அவள் உறவினர்கள் இடத்திலேயே அத்தை மகன், மாமன் மகன் என பல மாப்பிள்ளைகள் இருந்தபோதிலும், அவர்கள் சீதாவிடம் உள்ள ஏழ்மையைக் காரணம் காட்டி அவளைத் திருமணம் செய்யாமல் தட்டிக் கழித்தார்கள்.
சீதாவிடம் ஒழுக்கம், அழகு, நல்ல குணம் என அனைத்துமே இருந்தது. ஆனால் திருமணம் என்று வந்தபோது, அவளுடைய நகை, பணம், சீர்வரிசை, சொத்துக்கள் என இவை மட்டுமே மாப்பிள்ளை வீட்டாரிடாரிடத்தில் எதிர்பார்க்கப்பட்டது.
பணம் இல்லாத காரணத்தினால் அவள் மண வாழ்க்கை காலம் கடந்துகொண்டே சென்றது.
இறுதியாக அவளை பெண் பார்க்க ஒரு மாப்பிள்ளை வீட்டார் வந்தனர்.
அவன் பிஎஸ்சி முடித்திருந்தான்.
சீதாவை பார்த்த மாத்திரமே அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது.
அவன் சீதாவின் தாய் தந்தையிடம் ''தங்களுடைய மகளை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது'' என்று கூற, மாப்பிள்ளையின் தாய் தந்தையர் சீர்வரிசை பற்றி மேற்படி பேசத் தொடங்கினர்.
சீதாவின் தாய் தந்தையோ ''அவளுக்குத் தங்கத்தில் தோடு மட்டுமே உள்ளது, மேற்படி நாங்கள் எங்களால் இயன்றவரை சீர்வரிசை வாங்கித் தருகிறோம்'' என்று கூறினார்கள்.
இருப்பினும் மாப்பிள்ளை வீட்டாரின் எதிர்பார்ப்பு வழக்கத்தைப்போல பெரிதாகவே இருந்தது.
இரு விட்டாரும் பேச்சு வார்த்தை நடத்தி, இறுதியாக மாப்பிள்ளை வீட்டாரோ; ''ஊருக்குப் போய் தகவல் சொல்கிறோம்'' என்று கூறிவிட்டு கிளம்பினர்.
சீதாவிற்கு அந்த மாப்பிள்ளை பிடித்திருந்தது. ஆனால், அவளுக்குத் தெரியும், இந்தத் திருமணம் நடக்காது என்று.
சீதாவின் வாழ்வில் ஏழ்மை அனைத்தையும் பறித்தது... அவளுடைய மன அமைதியையும்!
பணத்தால் அனைத்தையும் வாங்கமுடியாது என்று கூறுவார்கள், ஆனால் 'பணம் இல்லாத மனிதனுக்கே தெரியும், அந்தப் பணம் இல்லாததால் வாழ்வில் எத்தனை சந்தோசங்கள் பறிபோய் உள்ளன என்று'
ஏழையின் வாழ்வில், ஏழ்மை ஏக்கத்தை மட்டுமே, பலமுறை பரிசாகக் கொடுக்கிறது.
இந்தக் கதையை வாசிப்பதன் மூலம், வறுமையை வென்று சுயமரியாதையுடன் வாழும் வழிகளைத் தேடும் தெளிவையும், சமுதாயத்தின் முத்திரைகளை உடைத்தெறியும் மன வலிமையையும் வாசகர்கள் பெறுவார்கள்.