

சீனாவின் ஒரு சிறிய கிராமத்தில் மாலியாங் என்ற ஏழைச் சிறுவன் வாழ்ந்து வந்தான். அவன் மிகவும் திறமையான ஓவியன். ஆனால், தூரிகை வாங்கக்கூட அவனிடம் காசு இருக்கவில்லை. அதனால், மரக்குச்சியைக் கொண்டு மண்ணிலும், ஆற்று நீரைக் கொண்டு பாறைகளிலும் ஓவியங்களை வரைந்து பயிற்சி பெற்றான்.
ஒரு நாள் இரவு, மாலியாங் தூங்கும்போது அவனது கனவில் ஒரு முதியவர் தோன்றினார். அவர் மாலியாங்கிடம் ஒரு மாய தூரிகையைக் கொடுத்து, "இந்தத் தூரிகை ஏழை மக்களுக்கு உதவுவதற்காக மட்டுமே பயன்பட வேண்டும்" என்று கூறி மறைந்தார். மாலியாங் விழித்துப் பார்த்தபோது, அவன் கையில் உண்மையில் ஒரு அழகான தூரிகை இருந்தது.
அவன் உடனே ஒரு பறவையை சுவரில் வரைந்தான். என்ன ஆச்சரியம்! அந்தப் பறவை உயிர் பெற்று வானில் பறந்தது. மாலியாங் மகிழ்ச்சியடைந்தான். கிராம மக்கள் உணவு அல்லது உழைப்புக் கருவிகள் இன்றி கஷ்டப்படும்போதெல்லாம், மாலியாங் அவற்றுக்கான ஓவியங்களை வரைந்து அவற்றை உண்மையாக்கி மக்களுக்கு உதவினான்.
இந்தச் செய்தி அந்த ஊர் பேராசை பிடித்த நிலக்கிழாருக்குத் தெரிந்தது. அவன் மாலியாங்கைத் தன் ஆட்களை வைத்து கடத்தி வந்தான். "எனக்கு தங்க மலை ஒன்றை வரைந்து கொடு!" என்று அதட்டினான். ஆனால், ஏழைகளுக்கு மட்டுமே உதவுவேன் என்ற மாலியாங் மறுத்துவிட்டான். சினமடைந்த நிலக்கிழார் அவனைச் சிறையில் அடைத்து, அந்த மாய தூரிகையைப் பிடுங்கிக் கொண்டான்.
நிலக்கிழார் தானாகவே தூரிகையை எடுத்து தங்க நாணயங்களை வரைந்தான். ஆனால் அவை தங்கமாக மாறாமல் வெறும் கற்களாக மாறின. அவனால் அந்தத் தூரிகையின் மாயாஜாலத்தைப் பயன்படுத்த முடியவிலலை.
வேறு வழியின்றி, மாலியாங்கைச் சிறையிலிருந்து வெளியே அழைத்து வந்து, "நீ எனக்குத் தங்க மலை வரைந்து கொடுத்தால் உன்னை விடுவித்து விடுகிறேன்" என்றான்.
மாலியாங் ஒரு தந்திரம் செய்தான். ஒரு பெரிய கடலை வரைந்தான். அதன் நடுவே ஒரு தங்க மலையை வரைந்தான். "நான் மலையை வரைந்துவிட்டேன் " என்றான். "ஆனால் நான் அங்கே போக ஒரு கப்பல் வேண்டுமே!" என்றான், நிலக்கிழார்.
மாலியாங் ஒரு பெரிய கப்பலை வரைந்தான். நிலக்கிழாரும் அவனது ஆட்களும் மகிழ்ச்சியுடன் கப்பலில் ஏறி தங்க மலையை நோக்கிப் புறப்பட்டனர்.
கப்பல் கடலின் நடுவே சென்றபோது, மாலியாங் வேகமான காற்றையும் பெரிய அலைகளையும் வரைந்தான். கடல் சீற்றமடைந்தது.
நிலக்கிழார் "போதும், காற்றை நிறுத்து!" என்று அலறினான். ஆனால் மாலியாங் நிறுத்தாமல் மேலும் பலத்த காற்றை வரைந்தான். இறுதியில், நிலக்கிழாரின் கப்பல் கடலில் மூழ்கியது. பேராசை பிடித்த நிலக்கிழார் அழிந்தான்.
மாலியாங்கின் இந்த வீர தீரச் செயல் கிராமம் முழுதும் பரவியது. நிலக்கிழாரின் கொடுங்கோல் ஆட்சியிலிருந்து விடுதலை பெற்ற மக்கள் அவனைத் தங்கள் நாயகனாகக் கொண்டாடினர். ஆனால், மாலியாங் தலைக்கனம் கொள்ளாமல், தன் கடமையை உணர்ந்து மீண்டும் ஏழை எளிய மக்களுக்கு உதவத் தொடங்கினான்.
மழை பொய்த்து வறட்சி ஏற்பட்ட காலங்களில், அவன் செழிப்பான மேகங்களையும் குளிர்ந்த மழைத்துளிகளையும் வரைந்து மக்களின் தாகத்தைத் தீர்த்தான். வயல்களில் விளைச்சல் பெருக கால்வாய்களையும் நீரோடைகளையும் உருவாக்கி விவசாயிகளின் முகத்தில் சிரிப்பை வரவழைத்தான். உழைக்க இயலாத முதியவர்களுக்குக் கதகதப்பான ஆடைகளையும், பசியால் வாடிய குழந்தைகளுக்குச் சத்துள்ள உணவுகளையும் வரைந்து கொடுத்து அவர்களை அரவணைத்தான்.
காலங்கள் உருண்டோடினாலும், தன் கனவில் தோன்றிய முதியவர் கூறிய "ஏழைகளுக்கு மட்டுமே உதவ வேண்டும்" என்ற சொல்லைக் கடைசி வரை அவன் மீறவேயில்லை.
அவனது புகழைக் கேள்விப்பட்டு நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் பேராசை பிடித்த அதிகாரிகளும் மாளிகை மன்னர்களும் அந்தத் தூரிகையைக் கைப்பற்ற முயன்றனர். ஆனால், மாலியாங் தன் சமயோசித புத்தியாலும் கூர்மையான திறமையாலும் அவர்களைத் தொடர்ந்து தோற்கடித்தான்.
அவனது மாயத் தூரிகை வெறும் சித்திரங்களை மட்டும் வரையவில்லை; வறுமையில் வாடிய ஒரு முழு கிராமத்தின் எதிர்காலத்தையே அழகிய வண்ணங்களால் புதிதாக வரைந்து அமைதியை நிலைநாட்டியது.
அதன்பின்னர், மாலியாங் கிராம மக்களுக்குத் தொடர்ந்து தன் மாய தூரிகையால் உதவி செய்து, ஏழை எளிய மக்களின் நல்வாழ்விற்காகத் தன் வாழ்நாளைச் செலவிட்டான்.