

கீர்த்தனா பள்ளிக்கூடம் முடிந்து சைக்கிளில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தாள். எதிர்காற்று சைக்கிளை முன்னோக்கிச் செல்ல விடாமல் தடுத்தது, அதையும் மீறி சைக்கிளை மிதித்து ஒரு படியாக வீட்டை அடைந்தாள்.
புத்தகப் பையோடு வீட்டிற்குள் வந்தாள். கீர்த்தனாவுக்கு மேல் மூச்சு வாங்கியது. வீட்டின் கொல்லைப்புற வாசலையொட்டி, இடதுபுறத்தில் சமையலுக்கென்று தனியாக தென்னை ஓலையால் வேயப்பட்டிருந்த சிறிய குடிசைக்குள், விறகடுப்பில் டீ போட்டுக் கொண்டிருந்தார், அம்மாவான ரேகா.
ஊது குழலை வைத்து அடுப்பை ஊதும்போது, புகையால் ரேகாவிற்கு கண்கள் சிவந்து கண்ணீர் வந்தது. அதோடு இருமலும் சேர்ந்து வந்தது.
கீர்த்தனா தமது இரண்டு கையால் அமைதியாகப் பின்புறம் நின்று கொண்டு, அம்மாவின் கண்களைப் பொத்தினாள்.
ரேகா சிரித்தபடி, “வாயாடி ஸ்கூல் விட்டு வந்திருச்சு போல…!”
“நா வாயாடின்னா அப்ப நீ யாரு..?” என்றபடி செம்பை எடுத்து குடத்திற்குள் விட்டு தண்ணீரை அள்ளிக் குடித்தாள்.
“நானா? இந்த வீட்டோட மகாராணி..!”
தண்ணீரைக் குடித்து விட்டு, “ஷ்சொப்பா.. தாங்க முடியல.. பாதி வெள்ள முடி வந்துருச்சு, இருந்தாலும் மனசுல மகாராணின்னு நெனப்போ..!” என்றபடி உதட்டைப் பிதுக்கிக் கொண்டு, வீட்டிற்குள் சென்று சீருடையைக் கழற்றி, நைட்டியைப் போட்டுக் கொண்டாள்.
பிறகு இருவரும் திண்ணையில் உட்கார்ந்து டீயைக் குடித்தார்கள்.
“அம்மா நாளைக்கு எங்க ஸ்கூல்ல நடக்க போற விழாவுக்கு கலெக்டர் வர்றாரே.. அந்த கலெக்டரும் எங்க ஸ்கூல்ல தான் படிச்சாரம், எங்க டீச்சர் சொன்னாங்க..!”
“அந்த கலெக்டர் பேரு பிரதாப் தானே?”
“ஆமம்மா, கலெக்டர் பேரு பிரதாப்ன்னு தான் டீச்சர் சொன்னாங்க.”
“ஏங்கூட தான் அந்த கலெக்டரும் படிச்சாரு!”
“என்னம்மா சொல்ற உண்மையாவா? அந்த கலெக்டர் ஓங்கூடவா படிச்சாரு..!”
“ஆமா ஏங்கூட தா படிச்சாரு.. படிக்கிற காலத்துல நானும் அந்த கலெக்டரும் நல்ல ஃபிரண்டு! நான் ஐஏஎஸ் தான் ஆவேன்னு ஒத்த கால்ல நின்னாரு! நினைச்ச மாதிரியே நல்லா படிச்சாரு, 12thல மாவட்டத்தில முதல் ஆளு! நானும் அவருக்கு போட்டியா ஓரளவுக்கு படிப்பேன்!
அதுக்கப்புறம் அவர் நல்லா படிச்சு கலெக்டர் ஆயிட்டாரு! ஆனா என்ன, நா மட்டும் தான் வீட்டு சூழ்நிலையைப் பாத்து அம்மா, அப்பா பேச்சைக் கேட்டு சீக்கிரமா கல்யாணம் பண்ணி இப்படி ஆயிட்டேன்!”
“ம்மா கவலப்படாதமா.. நா இருக்கேன்! அந்த பிரதாப் கலெக்டர் மாதிரி நானும் ஒரு கலெக்டர் ஆகி உன்னைய பெருமைப்படுத்துவேம்மா!”
“நீ கண்டிப்பா நல்லா வருவ கீர்த்தனா. அம்மாக்கு தெரியும்! இப்போ கவனம் எல்லாம் படிப்புல மட்டும் தான் இருக்கணும்!”
“சரிம்மா”
“கலெக்டர் கிட்ட பேசுற வாய்ப்பு கிடைச்சுச்சுனா, அம்மாவோட பேர சொல்லு அவருக்கு நல்லா தெரியும்!”
“சரிமா சொல்றேன்.”
இந்நேரத்தில் வேலையை முடித்துவிட்டு, மது போதையில் டிவிஎஸ் வண்டியில் வீட்டின் முன்பு வந்து இறங்கினார், முருகேசன்.
கணவர் தள்ளாடியபடி வருவதைப் பார்த்த ரேகா உடனே எழுந்து வீட்டிற்குள் சென்றார்.
முருகேசன் திண்ணையில் தனது மகளின் பக்கத்தில் உட்கார்ந்து, “என்ன தாயி ஸ்கூலுக்கு போயிட்டு வந்துட்டியா..?”
அப்பாவிடமிருந்து சரக்கு வாடை குப்பென்று அடித்தது, கீர்த்தனா ஒன்றும் பேசாமல் எழுந்து வீட்டிற்குள் சென்றாள்.
முருகேசன் அப்படியே திண்ணையில் படுத்துக் கொண்டார்.
“சனியனுக்கு சீக்கிரம் சாவும் வந்து தொலைய மாட்டேங்குது.. தெனமும் குடிச்சிட்டு வந்து உசுர வாங்குது..!” என்று அம்மா திட்டுவதைக் கேட்டு, அப்பாவை நினைத்து கீர்த்தனாவிற்குக் கண்கள் கலங்கியது.
இரவு உணவை மூவரும் கீழே அமர்ந்து சாப்பிட்டார்கள்.
சாப்பிட்டும் போது முருகேசனால் மனைவியின் முகத்தை ஏறெடுத்து பார்க்க முடியவில்லை.
சாப்பிட்டு முடித்துவிட்டு ரேகா டிவி பார்க்க ஆரம்பித்தார். செய்தி சேனலில், 'ஒரு சிறுவன் கொடுத்த மனுவால் மாறிய கிராமம்' என்ற தலைப்புச் செய்தி வந்ததைக் கீர்த்தனா கேட்டாள்.
‘நாம ஏன் ஒரு மனு எழுதி நாளைக்கு வர்ற கலெக்டருக்கிட்ட கொடுத்தா என்ன?’
உடனே கீர்த்தனா ஒரு A4 தாளை எடுத்து,
திரு.பிரதாப் கலெக்டர் அவர்களுக்கு;
வணக்கம். என் பெயர் மு.கீர்த்தனா. புதுக்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படிக்கிறேன்.
என்னுடைய அம்மாவின் பெயர் ரேகா. நீங்களும் என்னுடைய அம்மாவும் ஒன்றாக படித்ததாக என் அம்மா என்னிடம் சொல்லியிருக்கிறார். அம்மாவும், அப்பாவும் கூலி வேலைக்குச் செல்கிறார்கள். அப்பா மிகவும் குடிக்கு அடிமை. இதனால், அப்பாவின் உடல்நிலை ஒரு மாதமாக சரியில்லை. எவ்வளவு கூறியும் அப்பா கேட்கவில்லை.
நீங்கள் நேரில் வந்து அறிவுரை கூறினால் என்னுடைய அப்பா கேட்பார் என்று நான் நினைக்கிறேன். அதுமட்டுமில்லாமல், எங்கள் ஊரில் சாலைகள் குண்டும், குழியுமாக இருக்கிறது.
தெருக் குழாயில் தண்ணீரும் சரியாக வருவதில்லை.வாரத்திற்கு இரண்டு நாள் தண்ணீர் வருவதே பெரிய அதிசயம். இதில் ஒரு சில குழாய்கள் உடைந்திருக்கின்றன. தண்ணீர் பற்றாக்குறை நேரங்களில் தண்ணீர் எடுக்க இரண்டு கிலோ மீட்டர் வரை நடந்து செல்வோம்.
பிறகு ஊருக்குள் வரும் டவுன் பஸ்ஸில் சரியான பராமரிப்புகள் இல்லை. மழைக்காலத்தில் பஸ்ஸின் மேற்புறத்திலிருந்து மழை நீர் ஒழுகும். இதைவிட கொடுமை என்னவென்றால், பெரும்பாலானோர் வீட்டில் கழிவறை வசதியில்லை. ஒரு நாள் என் அம்மா, இரவில் பொட்டல் காட்டிற்குச் சென்றபோது, அம்மாவை ஒரு பாம்பு கடித்து விட்டது.
மருத்துவமனையில் அம்மா உயிருக்குப் போராடி உயிர் பிழைத்தார். இப்படி பல பிரச்சினைகள் உள்ளன. கலெக்டர் சார் அவர்களே.. தயவு கூர்ந்து இது போன்ற பிரச்சினைகளை சரி செய்யுமாறு உங்களை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
இப்படிக்கு கல்லாங்குடி ஊர்மக்கள் சார்பாக, மு.கீர்த்தனா.
அம்மாவின் போன் நம்பர்: 89257580**
நன்றி..! என்று எழுதி அந்தப் பேப்பரை மடித்துப் புத்தகத்திற்குள் வைத்தாள்.
எப்படியாவது இந்த நிலைமையை கலெக்டரின் பார்வைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற வைராக்கியதில் கீர்த்தனா எழுதிய அந்தக் கடிதம் அவளுக்கு மனுவாகவே தெரிந்தது.
மறுநாள் காலையில் பள்ளிக்குச் சென்றாள். பள்ளியின் கலையரங்கத்தில், தேசிய இளைஞர்கள் தினத்தை முன்னிட்டு; மாணவர்களின் இன்றைய முயற்சி..நாளைய வெற்றி..! என்ற தலைப்பில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா இனிதே ஆரம்பமானது.
இறுதியில் கலெக்டர் பேசினார். அனைத்து மாணவ மாணவிகளும் ஆர்வமாகக் கேட்டார்கள்.
இந்த மனுவை கலெக்டரிடம் எப்படியாவது கொடுத்து விட வேண்டும் என்கிற பதட்டத்தோடு இருந்தாள்.
இறுதியாக விழா முடிந்தவுடன், பெரும்பாலான மாணவர்கள் கலெக்டருக்கு கை கொடுத்தார்கள். இதற்கிடையில், கீர்த்தனா அந்த மனுவை கலெக்டரின் கையில் கொடுத்தாள்.
கீர்த்தனா மடித்துக் கொடுத்த அந்தக் காகிதத்தை கலெக்டர் பக்கத்தில் இருந்த உதவி ஆய்வாளரிடம் கொடுத்தார். பிறகு கலெக்டர் ஜிப்பில் கிளம்பினார்.
மனுவை கொடுத்து விட்டோம் என்ற மன நிம்மதியில் பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்து, அம்மாவிடம் இந்த விஷயத்தைக் கூறினாள்.
“ஏண்டி அப்படி எழுதுன..! சரி பாப்போம் மாற்றம் நடக்குதானு..!”
ஒரு வாரம் ஆனது,
கலெக்டரிடமிருந்து எந்த ஒரு பதிலும் வரவில்லை. கீர்த்தனா கலெக்டரின் போனுக்காக ஒவ்வொரு நாளும் ஏக்கத்தோடு காத்திருந்தாள்.
பிறகு ஒருநாள்; மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு, ஒரு அம்மா தனது பையனுடன் கலெக்டரைப் பார்க்க வந்தார். அந்தச் சிறுவன் கலெக்டரிடம் மனுவைக் கொடுத்தான். சிறிது நேரம் கலெக்டர் அவர்களின் குறைகளைக் கேட்டார். பிறகு அவர்களும் கிளம்பிச் சென்றார்கள்.
இப்போது கலெக்டர் பிரதாப்பிற்கு ஒரு ஞாபகம் வர, உதவி ஆய்வாளரை கூப்பிட்டு, “அன்னைக்கு ஸ்கூல்ல ஒரு பொண்ணு ஒரு லெட்டர் கொடுத்துச்சுல்ல..! அது உங்க கிட்ட தான இருக்கு, எங்க?” என்றார்.
உதவி ஆய்வாளர் திருதிருவென முழித்தபடி, “சார் அது வந்து அந்த லெட்டரை எங்க வச்சேன்னு தெரியல..! ஆனா அந்த லெட்டர்ல உங்கள பத்தி தான் எழுதி இருந்துச்சு சார், நா படிச்ச வரைக்கும்..!” என்று சமாளித்தார்.
ஆனால், உண்மையாகவே உதவி ஆய்வாளர் அந்த லெட்டரை தொலைத்து விட்டார்.
“சரி அந்த லெட்டர் கிடைச்சுச்சுன்னா கொண்டு வாங்க..!”
“சரிங்க சார்..!”
சில நாள்களுக்குப் பின், கல்லாங்குடியில் ரோடு போடுவதற்கான பணிகள் நடைபெற்றன.
பள்ளிக்கூடம் விட்டு வீட்டிற்கு வந்த கீர்த்தனா சந்தோஷமாக அம்மாவிடம் சென்று, “அம்மா.. நம்ம ஊர்ல புதுரோடு போட போறாங்க..! நா கொடுத்த மனு வீணா போகலாம்மா..!”
“அடியே.. நீ மனு கொடுத்ததுனால நடக்கல.. எலெக்சனுக்கு இன்னும் மூணு மாசம் தான் இருக்கு, அதான் ரோடு வேல நடக்குது..!”
“அதெல்லாம் இல்ல.. என்னால தான் நடக்குது!”
“உன்னால நடந்துச்சுன்னா, அந்த கலெக்டரு லெட்டர படிச்சு பாத்துட்டு போன் பண்ணி இருக்கணும்ல ஏன் பண்ணல?”
“ஆமம்மா! போன் பண்ணவே இல்ல, இல்லாட்டி அந்த கலெக்டர் நா கொடுத்த மனுவ படிக்காம விட்டுட்டாரோ?”
“ஆமாண்டி அப்படியா கூட இருக்கலாம் யாருக்கு தெரியும்!”
இருந்தும் இந்த நிலைமையை ஏற்றுக் கொள்ள கீர்த்தனாவின் மனம் மறுத்தது.
இரவானது ரேகாவிற்கு வயிறு கலக்குவது போல் இருந்தது.
“கீர்த்தனா அம்மா வெளியிருக்க போய்ட்டு வரேன்! தோசை ஊத்தி வச்சிருக்கேன், அப்பாவ சாப்புட சொல்லு, போயிட்டு வந்துர்றேன்”
“அம்மா…நா வேணா கூட வரவா..!”
“இல்லடி வேணா” என்றபடி கையில் டார்ச் லைட்டை எடுத்துக் கொண்டு பொட்டல் காட்டை நோக்கி ரேகா நடையைக் கட்டினார்.
திண்ணையில் உட்கார்ந்திருந்த கீர்த்தனா, ‘கடவுளே எங்க அம்மாவுக்கு ஒன்னும் ஆகக் கூடாது..’என்று வேண்டியபடி அம்மா நடந்து சென்ற பாதையை பார்த்தபடி இருந்தாள்.
வீட்டிற்குள் அப்பா ஏதோ பேசியபடி புலம்பிக்கொண்டு படுத்திருந்தார்.
அப்பாவின் புலம்பல் சத்தமும் அம்மாவின் குமுறல் சத்தமும் சேர்ந்து கீர்த்தனாவின் மனதின் சத்தத்தை தட்டி எழுப்பியது.
ஒரு கணம் கீர்த்தனா கண்ணை மூடி கண்ணை திறந்து வானிலுள்ள நட்சத்திரங்களைப் பார்த்து மனதிற்குள் மீண்டும் மீண்டும் ஒரு வார்த்தையை சொல்லிக் கொண்டாள் அது, ‘நானும் கண்டிப்பா கலெக்டர் ஆவேன்! நானும் கண்டிப்பா கலெக்டர் ஆவேன்!’
உடனே வீட்டிற்குள் சென்று புத்தகப் பைக்குள் இருந்த தமிழ்நோட்டை எடுத்து கடைசித் தாளில் பென்சிலால்,
மு. கீர்த்தனா IAS என்று எழுதி இருந்ததன் மேல் பேனாவால் மீண்டும் அழுத்தி எழுதினாள்.
நன்றி!