சிறுகதை: செண்பகமும் செம்பருத்திப் பூவும்...

Tamil short story  Senbagam and hibiscus
Tamil short story Senbagam and hibiscusImg credit: AI Image
Published on
MM strip
MM strip

செம்பருத்திப் பூ மேல் ஆசைப் பற்றிக் கொண்டது, செண்பகத்துக்கு.

பிளஸ் டூ முழு ஆண்டு பரீட்சை முடித்துவிட்டு விடுப்பில் இருந்த சமயம், ஒருநாள் கண்ணாடியில் முகம் பார்த்தபோதுதான் தலையில் ஆங்காங்கே வெள்ளைமுடிகள் எட்டிப் பார்த்ததைப் பார்த்துவிட்டாள், செண்பகம். அப்போதுதான் யோசனை வந்தது; நாமும் ஏன் முல்லையைப்போல செம்பருத்திப்பூவை அரைத்து தலைக்குத் தேய்த்து குளிக்கக்கூடாது என்று.

ஆனால், செம்பருத்திச் செடி எங்கே, யாருடைய வீட்டில் கிடைக்குமென்று தெரியவில்லை. அப்படி இருந்தாலும் அதில் பூ இருந்தால்தானே வாங்கிவந்து அரைத்து தலைக்குத் தேய்த்து குளிக்கமுடியும். குழம்பினாள் அவள். ஆனாலும் அந்த ஆசை அவளை விடவில்லை.

முல்லை அவளது பள்ளித் தோழி. பக்கத்து ஊர்க்காரி. பத்தாவது வரை இவளுடன் படித்தவள். அத்துடன் அவள் பள்ளிக்கு வராமல் நின்றுவிட, இவள் மேலும் ரெண்டு வருடம் படித்து முடித்துவிட்டாள்.

முல்லை அடிக்கடி சொல்லுவாள், "இன்னிக்கு செம்பருத்திப் பூவை அரைச்சு தலைக்கு தேய்ச்சுக் குளிச்சேன்...", "இன்னிக்கு மருதாணித் தலையை அரைச்சு தலைக்கு தேய்ச்சுக் குளிச்சேன்..." என்று.

அவளது தலை முடியெல்லாம் கன்னங்கரேல் என்று இருக்கும். காற்றடிக்கும்போது முடிகள் அலைக்கற்றைகளாய் பறக்கும். தலைமுடி நடிகையின் தலைமுடிபோல இருக்கும்.

எதிர்பாராதவிதமாய் ஒருநாள் அவளை கடைவீதியில் பார்த்துவிட்டாள், செண்பகம். அதே கருங்கூந்தல், இன்னும் அடர்த்தியாய்.

உடனே கேட்டாள் இவள், "ஏன்டி... எனக்கும் ஒரு செம்பருத்தி செடி கொடேன்... வளர்க்கறேன்... எனக்கும் அங்காங்கே வெள்ளை முடி எட்டிப் பார்த்து பயமுறுத்துது..."

மறுக்காமல், "சரி அதுக்கென்ன... எங்கண்ணன் வாராவாரம் பக்கத்து ஊர் சந்தைக்குத் தேங்காய் லோடு கொண்டுபோவான். அவன்கிட்ட கொடுத்தனுப்பறேன்... அவன் வரும்போது காத்திருந்து வாங்கிக்கோ. சரியா...?" என்றாள் அவள்.

இதையும் படியுங்கள்:
பொய் சொல்பவர்களைக் காட்டிக் கொடுக்கும் கண்களின் ரகசியம்!
Tamil short story  Senbagam and hibiscus

"செடியை அப்படியே நடனுமா..." கேட்டாள் இவள் கொஞ்சம் வெள்ளந்தியாய்.

சிரித்துவிட்டுச் சொன்னாள் அவள். "போடீ, இவளே... செடியை அப்படியே பிடுங்கி கொடுத்தனுப்புவேன்னு பார்த்தியா... ஒரு குச்சி போதுமடி... நல்லா செம்மண் போட்டு, குச்சியை நட்டு, மறக்காம தினமும் தண்ணியும் ஊத்து... ஆறேழு மாசத்துலயே பூ பூக்க ஆரம்பிச்சுடும்... அப்புறம் பூவ பறிச்சு அம்மில வச்சு அரைச்சு தலைக்குத் தேய்ச்சுக் குளி... கிடைச்சா மருதாணியும் கலந்துக்கோ, சோற்றுக் கற்றாழையும் கலந்துக்கோ, முடி சூப்பரா வரும்..." தனது தலைமுடியை ஸ்டைலாய் வருடிவிட்டுக்கொண்டே சொன்னாள் அவள்.

ஒரு வெள்ளிக்கிழமை செம்பருத்திக் குச்சி வந்து சேர்ந்தது. காம்பவுண்டுக்கு உட்புறம் குழி பறித்து, கொஞ்சம் செம்மண் போட்டு, தண்ணீர் விட்டு, குச்சியை அதில் நட்டு வைத்தாள் செண்பகம். தினமும் தண்ணீர் ஊற்றவும் செய்தாள்.

பின்னொரு நாள் இதைப்பற்றி வேறொரு தோழியிடம் சொல்லிக் கொண்டிருக்கும்போது, 'சாண எரு கொஞ்சம் வைத்தால் செடி நன்றாக வளரும். பூவும் நிறைய மலரும்' என்று ஐடியா கொடுத்துவிட்டு கூடவே கொஞ்சம் எருவையும் ஒரு பையில் போட்டு கொடுத்துவிட்டாள், அவள்.

குச்சியைச் சுற்றிலும் கொஞ்சம் குழி பறித்து சாண எருவைப் போட்டு மண்ணைப் போட்டு மூடி தண்ணீரும் விட்டாள் இவள். திடீரென்று ஒருநாள் அதில் மூன்று, நான்கு இடங்களில் துளிர் வந்திருந்தது. மிகவும் புளகாங்கிதம் அடைந்தாள் செண்பகம்.

நாளடைவில் அந்தத் துளிர்கள் செடிகளாய் உயர்ந்தன. சந்தோஷம் பொங்கியது இவளுக்குள்.

செடிகளைப் பார்க்கும்போதெல்லாம் பூ பூத்ததும் தலைக்குத் தேய்த்து குளிக்க வேண்டும், முல்லையைப்போல நமக்கும் தலைமுடியெல்லாம் கருப்பாக அலைக்கற்றைப் போல ஆகவேண்டும் என்று நினைத்துக்கொள்வாள் செண்பகம்.

இதையும் படியுங்கள்:
சிறுகதை: மறுவாழ்வு தந்த மழலை!
Tamil short story  Senbagam and hibiscus

ஒருநாள் தனது அம்மா மரிக்கொழுந்துவிடம் தன் ஆசையைச் சொன்னாள் செண்பகம். அவளோ, "எல்லாம் சரி... ஆனா முதல்ல பூக்கற பூவை சாமிக்கு கொண்டுபோய் வை... அப்புறமா வர்ற பூக்களை நீ தலைக்குத் தேய்ச்சுக்கோ..." என்றாள் அவள். தெய்வபக்தி அதிகம் அவளுக்கு.

வாய்க்காலுக்குக் குளிக்கப்போகும்போது எப்போதாவது யாராவது செம்பருத்திப் பூவை அரசமரத்தடி பிள்ளையார் முன் பூவை வைத்துவிட்டுச் சாமியை சுற்றிவருவதைப் பார்த்திருக்கிறாள் இவள். இப்போது தானும் அதேபோல முதலில் வரும் பூக்களைப் பறித்துக்கொண்டு போய் பிள்ளையாருக்கு வைத்துவிடலாம் என்று நினைத்துக்கொண்டாள்.

நான்கு கிளைகளுடன் நின்றிருந்த அந்தச் செடி மேலும் சில கிளைகளுடன் அடர்த்தியாய் வளர ஆரம்பித்தது. இலைகளும் கருபச்சையும் ஆங்காங்கே மெரூன் பார்டர்களுமாய் பளிச்சென ஆடின. எப்போது மொட்டுக்கள் வரும் என்று தினமும் காலையிலும் மாலையிலும் பார்த்துக்கொண்டே வந்தாள். ரோடில் போவோர் வருவோர்கூட, காம்பவுண்டுக்கு மேல் உயர்ந்து நின்ற அந்தச் செடியை பார்த்துக்கொண்டே போனார்கள்.

ஒரு நாள் எதிர்வீட்டு மல்லிகா அந்தச் செம்பருத்தி செடியையே உற்று உற்று பார்த்துக்கொண்டிருப்பதை பார்த்து எரிச்சல்பட்டாள் இவள். அவளை இவளுக்குப் பிடிக்காது. ஒரு வருடம் பெரியவள் அவள். படிக்கும்போது ஏற்பட்ட சண்டைக்குப்பிறகு பேசிக்கொள்வதே இல்லை..

ஒருநாள் காலையில் செடியை வந்துபார்த்த செண்பகம் எகிறிக் குத்தித்தாள். ஒரு கிளையின் நுனியில் ஒரு மொட்டு தெரிந்தது.

அவ்வப்போது எரு போட்டிருந்தாலும், இப்போது மறுபடியும் செடியைச் சுற்றிலும் புதிதாக கொஞ்சம் எருவை அள்ளிப் போட்டு மண்ணைக் கிளறிவிட்டு தண்ணீர் விட்டாள். இப்போது தண்ணீர் அதிகம் விடவேண்டியிருந்ததால், கரையையும் கொஞ்சம் உயர்த்திப் போட்டாள். நான்கைந்து நாட்களில் மேலும் இரண்டு மொட்டுக்கள் தெரிந்தன.

"பிள்ளையாரப்பா... இந்த மூணு பூவும் உனக்குத்தானப்பா.." என்று மானசீகமாய் சொல்லிக்கொண்டாள் செண்பகம்.

ஒருநாள் வாய்க்காலுக்கு குளிக்கப் போயிருந்தபொழுது பிள்ளையாரைப் பார்த்தாள். அப்போது நினைத்துக்கொண்டாள்' "ஏன் இப்போலாம் யாரும் செம்பருத்திப் பூ வைக்கறதில்லை, அருகம்புள் மட்டுமே வைக்கிறார்கள்..." என்று. "யார் வீட்டிலும் செம்பருத்தி பூக்கவில்லையோ... நல்லவேளை நமது வீட்டில் பூக்க ஆரம்பித்துவிட்டது."

இதையும் படியுங்கள்:
சிறுகதை: அன்பெனும் மழையிலே!
Tamil short story  Senbagam and hibiscus

மூன்று மொட்டுக்களுக்குப் பிறகு வேறு மொட்டுக்கள் வரவில்லை. கொஞ்சம் கொஞ்சமாய் அந்த மொட்டுக்கள் விரிய ஆரம்பித்தன. இப்போது வெளியே வரும்போதெல்லாம் செடிகளை எட்டி எட்டி பார்த்துக்கொண்டாள் செண்பகம்.

திடீரென்று ஒரு யோசனை வந்தது. செம்பருத்தியுடன் மருதாணியும், சோற்றுக் கற்றாழையும்கூட தலைக்குத் தேய்த்துக் குளிக்கலாம், அந்தக்கலவை முடியை கருப்பாக்கும் என்று முல்லை ஏற்கனவே சொல்லியிருந்தது நினைவுக்கு வந்தது. எங்காவது கற்றாழையும் மருதாணிச் செடியும் கிடைத்தால்கூட வாங்கிவந்து நட்டு வைக்கலாமே என்று யோசனை வந்தது.

ஒருநாள் திடீரென்று மேலும் மூன்று மொட்டுக்கள் கிளைச்செடிகளில் எட்டிப் பார்த்தன. ரொம்பவும் சந்தோஷம் இவளுக்கு. அம்மாகூட சொன்னாள், "ஏன்டி... பூதான் நல்ல மலர்ந்துடுச்சே... பறிச்சிக்கிட்டுப் போயி அரசமர பிள்ளையாருக்கு வைக்கலாமில்லையா...?" என்று.

இவளும், "நாளைக்கு காலையில குளிக்கப் போகும்போது பறிச்சிக்கிட்டு போறேம்மா... நானும் நினைச்சுக்கிட்டுதான் இருந்தேன்..." என்று சொல்லிவைத்தாள்.

காலையில் எழுந்ததும் வெளியே வந்தவளுக்கு 'பகீர்’ என்றது. பூக்களைக் காணவில்லை. பதறிக்கொண்டு ஓடிவந்து செடியை உற்று உற்றுப் பார்த்தாள். பிறகு அங்கிருந்தே அம்மாவைக் கூப்பிட்டாள். வந்து பார்த்த அம்மாவோ, "அட விடுடி... யாரோ ஆசைப்பட்டு பறிச்சிக்கிட்டுப் போயிட்டாங்க போல... ரோடுமேல செடி இருந்தா ஜனங்களோட கண்ணு படத்தான் செய்யும், விடு..." என்று சொல்லிவிட்டு போய்விட்டாள். போய்க்கொண்டே, "அதான் இன்னும் மூணு நாலு மொட்டு வருதில்ல... அதைக் கொண்டுபோய் வை..." என்றும் சொல்லிக்கொண்டும் போனாள்.

"பிள்ளையார்கிட்ட பூ கொண்டுவந்து வைக்கறேன்னு வேண்டிக்கிட்டிருந்தேனே... இன்னிக்கு பிள்ளையாரைப் பார்க்கும்போது என்ன காரணம் நான் சொல்லுவேன்..." என்றபடியே குளிக்கப் போனவளுக்கு அதிர்ச்சி.

பிள்ளையாரின் தோள்பட்டையில் இரண்டு செம்பருத்தி பூக்களும் தரையில் அவருக்கு முன்னாள் ஒரு பூவும் இருந்தது.

அப்போதுதான் கவனித்தாள், எதிர்வீட்டு மல்லிகா ஈரத்தலையுடன் அரசமரத்தைச் சுற்றி வந்துகொண்டிருப்பதை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com