

அன்று காலை அம்மா வீட்டில் கண் விழித்த போது மணி எட்டைத் தொட்டிருந்தது. அரையாண்டுத் தேர்வு விடுமுறைக்காகச் சீதா, அம்மா இருக்கும் சென்னைக்கு வந்து ஒரு வாரத்தை நோக்கி நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தன.
"அம்மா... காபி தரியாமா?" என்றபடி படுக்கையறையில் இருந்து வெளியே வந்தாள் சீதா.
"என்னம்மா சீக்கிரம் எழுந்துட்ட? அங்கதான் ஓய்வில்லாம ஓடுறே... இங்க கொஞ்ச நேரம் தூங்க வேண்டியதுதானே மா?" என்றாள் தாய் மல்லிகா.
"இல்லம்மா, நாளைக்குக் கிளம்பணும். அவ்வளவுதான், விடுமுறை முடிஞ்சிடுச்சு. அங்க போயும் அப்புறம் தூக்கம் வரும், சீக்கிரம் எழுந்திருக்க முடியாது," என்று சலித்துக் கொண்டாள் சீதா.
"அம்மா... இவளுக்கு வேற வேலையே இல்லைம்மா. வந்ததுல இருந்து இதையே சொல்லிப் புலம்பிட்டு இருக்கா," என்றான் தம்பி சூர்யா.
"உனக்கென்னடா தெரியும் என் கஷ்டம்?" என்றாள் சீதா.
"நடிக்காத! அங்க போயிட்டா எங்ககிட்ட பேசக்கூட நேரமிருக்காது," என்று சீண்டினான் சூர்யா.
சீதா அவனை முறைத்தாள். அதற்குள் வெளியில் இருந்து, "அம்மா!" என்றபடி உள்ளே வந்தான் மகன் கிருத்திக்.
"ஹேய் குட்டிமா! அதுக்குள்ள எழுந்து எங்க போனீங்க நீங்க?" என்று மகனைத் தூக்கிக் கொஞ்சினாள் சீதா.
"தாத்தா கூட கடைக்குப் போனேன்மா. அங்க டீ கூட ஒரு பிஸ்கட் சாப்பிட்டேன்மா, செம டேஸ்ட்! நம்ம அப்பாவுக்கும் வாங்கிட்டுப் போலாம் மா," என்றான்.
"பாத்தியாம்மா... அவனுக்கு அப்பாவுக்கு வாங்கித் தரணும்னு தோணுது பாரு," என்று மீண்டும் சீண்டினான் சூர்யா.
"அம்மா... அவனைச் சும்மா இருக்கச் சொல்லும்மா!" என்று கத்தினாள் சீதா.
"சரி சரி, கிளம்புங்க... கோவிலுக்குப் போலாம்," என்று பேச்சை மாற்றினார் அப்பா.
"கோவிலுக்கா? நான் வரலை, வேலை இருக்கு," என்று நழுவினான் சூர்யா.
"நினைச்சேன்டா..." என்று சலித்தபடி வெளியேறினார் அப்பா.
சீதா கெஞ்சத் தொடங்கினாள், "டேய் பிளீஸ் டா, வாடா... கிருத்திக்கைத் தனியா சமாளிக்க முடியாதுடா."
"ஆமாமா, குழந்தையை வச்சுட்டு கஷ்டம்டா, நீயும் வாடா," என்று அப்பாவிடமிருந்து உத்தரவு பிறந்தது.
"சரி வரேன்," என்றான் சூர்யா.
கார் கிளம்பியது. அம்மா மதிய உணவையும் சேர்த்துப் பொட்டலமாகக் கட்டி எடுத்துக்கொண்டு வந்தாள். திரும்பும் வழியில் மர நிழலில் அமர்ந்து சாப்பிட வேண்டும் என்பது அவள் எண்ணம்; அவளுக்கு அது மிகவும் பிடிக்கும்.
கார் கிளம்பிய சிறிது நேரத்திலேயே சீதா ஆரம்பித்தாள், "நாளைக்கு இந்நேரம் நான் கிளம்பிருவேன் இல்லம்மா?"
"ஆமாடி, அதுக்கென்ன? அடுத்த விடுமுறைக்கு வா," என்றாள் அம்மா.
"இல்லம்மா, போகணும்னு நினைச்சாலே எரிச்சலா வருது," என்று புலம்பினாள்.
"ஏய்! உனக்கு வேற வேலையே இல்லையா? வந்த நாள்ல இருந்து இதையேதான் புலம்பிட்டு இருக்க," என்றான் சூர்யா.
"விடுமா, வருத்தப்படாதே," என்று அப்பா தேற்றினார்.
"அப்பா... என்னப்பா நீங்க அவளுக்குச் சமாதானம் சொல்றீங்க?" என்றான் சூர்யா. பிறகு அக்கா மகனிடம், "உங்க அம்மாவுக்கு ஊருக்கு வர இஷ்டம் இல்லையாம், உங்க அப்பாகிட்ட சொல்லு," என்றான் சிரித்தபடி.
இந்த உரையாடல்களுக்கு மத்தியில் கோவிலும் வந்துவிட்டது. சாமி தரிசனம் முடித்துவிட்டு காருக்குத் திரும்பிய போது மணி ஒன்றைத் நெருங்கிக் கொண்டிருந்தது.
"இங்கேயே மரம் நிறைய இருக்கு, இங்கேயே சாப்பிட்டுப் போயிடலாம்," என்றாள் அம்மா.
"ஓகே மா," என்றபடி சூர்யா உற்சாகமாகச் செல்பி எடுக்கத் தொடங்கினான். ரசித்து ரசித்து அக்கா மகனை மாற்றி மாற்றிப் புகைப்படம் எடுத்தான்.
இதில் எதிலும் ஒன்றாதவளாய் அமர்ந்திருந்தாள் சீதா. "ஏய் சாப்பிடுடி!" என்று அம்மா அதட்டிய பிறகு நினைவுக்குத் திரும்பியவள், "நாளைக்கு இந்தச் சாப்பாடு கிடைக்காதுல்ல மா?" என்றாள்.
இப்போது அப்பாவும் கூட எரிச்சல் அடையத் தொடங்கினார்.
"அம்மா... இதை அப்படியே கட்டிக் குடும்மா. கொண்டு போயிட்டு நாலு நாளைக்கு வச்சுச் சாப்பிடுவா," என்றான் சூர்யா. சீதா அவனை முறைத்தாள்.
மறுநாள் அவளையும் குழந்தையையும் அழைத்துச் செல்லக் கணவன் கார்த்தி வந்திருந்தார். பைகளை எடுத்துக்கொண்டு கிளம்ப ஆயத்தமானாள் சீதா.
சூர்யா அக்காவிடம் வந்தான். "நீ இங்கிருந்து போற நாளை எண்ணிச் சொன்ன மாதிரி தெரியல... அங்கிருந்து இங்க வந்த நாளைச் சொன்ன மாதிரிதான் இருக்கு! சந்தோஷமா கிளம்புக்கா," என்றான்.
சீதா புரியாமல் விழித்தாள்.
தனது வீட்டிற்குள் நுழைந்த போது தம்பி சொன்னதின் அர்த்தம் லேசாகப் புரியத் தொடங்க, தனக்குள் சிரித்துக் கொண்டாள் சீதா.