

“அத்தை, என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க?”
“ஏம்மா, பார்த்தா தெரியலையா? மணக்க மணக்க சமைச்சுக்கிட்டு இருக்கேன்.”
“இல்லை, ஏதாவது உதவி செய்யலாம்னுதான் கேட்டேன்.”
“அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம். உன்னோட புருஷன் படுக்கையை விட்டு எழுந்தானான்னு போய் பாரேன்.”
“ஏன், உங்க பிள்ளை என்று சொல்ல மாட்டீங்களா?”
“அப்படி இல்லம்மா. என் பிள்ளைதான், இல்லைன்னு சொல்லல. ஆனா, இப்போ உன்னோட புருஷன், அதான் அப்படி சொன்னேன்.”
இந்த பேச்சு சமையல் அறையில் நீண்டுகொண்டே போனது. கமலத்தின் மருமகள்தான் இந்தக் கிரிஜா. 'தாமரை இலைத் தண்ணீர் போல ஒரு சுத்த கர்நாடகம்' என்று பேச்சு வழக்கில் சொல்லுவோமில்லையா, அது அப்படியே கமலத்துக்குப் பொருந்தும். கமலம், வேரைப்போல் ஒரு பழங்காலப் பாரம்பர்யத்தைக் கடைப்பிடிக்கக் கூடியவள். ஆனால் கிரிஜாவோ, இந்த நூற்றாண்டின் நவநாகரிகப் பெண்களில் ஒருத்தி.
கமலம் எப்போதும் விசேஷ நாட்களில் மடிசாரும், மற்ற ஏனைய நாட்களில் புடவையும்தான் அணிந்திருப்பாள். கிரிஜாவோ, வண்ணத்துப்பூச்சி போல மாடர்ன் டிரஸ் போடக்கூடியவள். அலுவலகம் செல்லும்போது தினம் ஒரு டிரஸ், கவுனில் தொடங்கி திங்கள் முதல் சனி வரை தினம் ஒரு பிரத்தியேக டிரஸ் போடக்கூடியவள் கிரிஜா.
கமலம் அந்தக் காலப் பாரம்பர்யத்தைக் கடைப்பிடிப்பவளாச்சே, எப்படி கிரிஜாவை விட்டுவைக்கிறாள்? கமலம் அவளது மருமகளுக்கு, பரந்த வானம் போல, முழு சுதந்திரமும் கொடுத்து வைத்திருக்கிறாள். கிரிஜா வீட்டில் இருக்கும் சமயங்களில் சுடிதார் அணிந்துகொள்வாள். செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சாயங்காலம் புடவைக்கு மாறிவிடுவாள். ஏனென்றால், கமலம் பயபக்தியுடன் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வீட்டில் பூஜை செய்வது வழக்கம். அதில், கமலத்தின் கணவர் உட்பட, வீட்டில் உள்ள அனைவரும் தவறாமல் கலந்துகொள்வர்.
வேங்கடம், கமலத்தின் கணவர், ஓய்வுபெற்ற போஸ்ட் மாஸ்டர். திடகாத்திரமான உடல், மாநிறம், கமலத்தைக் காட்டிலும் சற்றுக் குள்ளமானவர். 'மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது' என்பார்களே, அது அவருக்குப் அளவெடுத்து செய்ததுபோல் பொருந்தும். எப்போதும் கம்பீரமாக, சிங்கத்தைப் போல, மற்றவர்களை அதட்டி வேலை வாங்கக்கூடிய ஆசாமி. அவரது வீட்டிலும் அப்படித்தான். கமலத்திடம் ஏதாவது சொல்லிக்கொண்டே இருப்பார்.
ஏதாவது வேலையைக் கமலத்திற்குக் கொடுத்துக்கொண்டே இருப்பார். விடியற்காலையில் படுக்கையை விட்டு எழுந்தார் என்றால், பல் துலக்கிக் கை, கால்களை எல்லாம் சுத்தம் செய்த பிறகு, காப்பியில் ஆரம்பித்து, குளிக்க வெந்நீர் போடுவதிலிருந்து, காலை உணவு ஏற்பாடு செய்வது, அவருடைய துணிகளை இஸ்திரிப்பெட்டியின் உதவியுடன் தேய்த்துக் கொடுப்பது வரை அவளது வேலைதான்.
வேங்கடம் அப்பவே அப்படி என்றால், இப்போது ஓய்வுபெற்ற பின்னரும் துருப்பிடிக்காத இரும்பைப் போல அப்படியேதான் காணப்படுகிறார். கமலமும் அந்த உபசரிப்பைத் தினம் தன் கணவனுக்குச் செய்துவருகிறாள்.
“அத்தை, ஏன் மாமாவிடம் நீங்க எதையும் சொல்ல மாட்டேங்கிறீங்க?”
“ஏம்மா, என்ன சொல்லச் சொல்ற? நான் ஏதாவது சொல்லி, பிறகு ஏன் வீண் வம்பு என்று தான் அப்படியே விட்டு விடுகிறேன்.”
“அத்தை, ஆனாலும் உங்களுக்கு கடலை விட ஆழமான இவ்வளவு பொறுமை ஆகாது.”
“சரி, உன் ஆம்படையான் எழுந்தானா படுக்கையைவிட்டு? ஞாயிற்றுக்கிழமையானா போதும், எட்டு மணிவரை படுக்கையில் புரண்டுகிட்டே இருக்கான். நீயாவது இதற்கு ஓர் முடிவு கொண்டு வருவ என்று பார்த்தால், நீயும் அவன் இழுக்கிற இழுப்புக்கெல்லாம் போயிட்டே இருக்க! கொஞ்சம் அவனிடத்தில் சொல்லக்கூடாதா?”
“எப்படி சொல்லச் சொல்றீங்க? உங்க வயசுக்கு நீங்களே கேட்கலாம் அவரிடத்தில், ஆனால் கேட்கமாட்டீங்க! பின் நான் எப்படி அவரிடத்தில்! அதுவும் இன்னைக்கு ஞாயிற்றுக்கிழமை வேற. எங்காவது நான் போய் அவரை எழுப்பி, பின் அவர் எரிமலை போல வெடிக்கவா? ஒருநாள் தானே அத்தை, கொஞ்சம் தூங்கிட்டுப் போறாரு. அத்தை உங்ககிட்ட ஒண்ணு சொல்லணும்”
“என்ன? சொல்லு.”
"அத்தை, இத்தனை வருஷமா எப்படி மாமாவோட எல்லா செயலையும் பொறுத்துக்கொண்டு பொறுமையா அவருடன் காலத்தை தள்ளுகிறீர்கள்? இப்ப இருக்கிற பெண்களுக்கு எல்லாத்துக்கும் கோபம் வருது; சரிக்கு சரி மல்லுக்கு நிக்கிறாங்க. கேட்டா 'எங்க சுதந்திரம், ஆணும் பெண்ணும் சமம். அதனால நீங்க கோபப்பட்டீங்கன்னா நாங்களும் கோபப்படுவோம். அந்த காலம் மாதிரியெல்லாம் இல்லை' என்றுதான் பதில் வருகிறது. அதான் தெரிந்துகொள்ளலாமே என்று இன்று உங்க கிட்ட கேட்டுட்டேன்.”
“கிரிஜா, நல்லா கேட்டுக்கோ. முன்கோபம் என்பது கையில் பிடித்த நெருப்பு போல முதலில் நம்மையே சுட்டுவிடும். உங்க இந்த காலத்து பொம்பளைங்க எத்தனை பேருக்கு முன்கோபத்தை கட்டுப்படுத்தத் தெரியும்? சரி அதை விடு. நாங்கெல்லாம் மனசு சஞ்சலமா இருந்தா பக்திப் பாடல்கள் கேட்போம். அதையும் தாண்டி கோவிலுக்குப் போவோம். அங்கு பகவான் சன்னிதானத்துல உக்கார்ந்து கண்ணை மூடி தியானம் செய்வோம். பிறகு கோவிலை விட்டு வெளியே வரும் போது மனசு, பஞ்சு போல, அப்படியே லேசா இருக்கும்.”
"அத்தை, இப்பொழுது இருக்கிற பெண்களுக்கு எல்லாம் வீட்டிலும் மற்றும் வேலை செய்யும் இடத்திலும் நிறையவே நெருக்கடி இருக்கிறது. ஒரு நாள் இல்லையென்றால் ஒரு நாள் யாரிடமாவது அவளது ஆதங்கத்தை அல்லது கோபத்தைக் காட்டித்தான் ஆகவேண்டும். ஏன் பெண் மட்டும் எப்போதும் விட்டுக்கொடுத்துப் போகவேண்டும்? கணவன், மனைவிக்காக விட்டுக்கொடுத்துப் போக மாட்டானா? இந்தக் காலகட்டத்தில் தவறு இருவர் பக்கமும் இருக்கிறது. இரண்டு பேரும் யோசித்துச் செயல்பட்டாலே போதும்."
“ஏனம்மா, நமக்கு கடவுள் வாழ்க்கையை ஒரு முறையே கொடுத்திருக்காரு. ஒவ்வொரு பொண்டாட்டியும் அவளுடைய கணவனோடு எவ்வளவு வருஷம் இருந்திடப் போறா! இருக்கப் போறது சொற்பகாலம். அதையும் நாம இப்படி சண்டையும் சச்சரவுமாகக் கழிச்சோமேயானால் எப்படி வாழ்க்கை இனிக்கும்? யாராவது ஒருவர் விட்டுக்கொடுத்துப் போலாமே! நாம விட்டுக் கொடுத்துப் போவதால் ஒண்ணும் ஆகாது. இதில் ஏன் தேவையில்லாமல் பிடிவாதம் பிடித்துக்கொண்டு மேலும் மேலும் சண்டையைப் போட்டுக்கிட்டு இருக்கணும்? நல்லா யோசிச்சுப் பாரேன். தினம் ஒரு வீட்டில சண்டை என்றால் அந்த வீட்டில் எப்படி நிம்மதி இருக்கும். நீயே தனியா சிந்தித்துப் பாரு, உனக்கே புரியும். எதையும் ஆரம்பிக்கும் போது கஷ்டமாத்தான் இருக்கும். பிறகு அதுவே பழகிப் போய்விடும். நான் சொல்றதால நீ அதைக் கடைப்பிடிக்க வேண்டாம். நீயே யோசிச்சுப் பார்த்தபின் சரி என்று உன் மனசு சொல்லிச்சுன்னா, ok."
“அத்தை, என்னையும் மன்னிச்சுடுங்க.”
“ஏம்மா, நீ என்ன தப்பு பண்ணின, உன்னை நான் மன்னிக்க?”
“இல்ல அத்தை, இப்ப நீங்க சொன்ன பிறகுதான் எனக்கு ஒரு தெளிவு வந்தது.”
“என்ன சொல்ற, ஒண்ணும் புரியலையே?”
“அத்தை, நான் கூட சில சமயங்களில் உங்க பிள்ளை மீது கோபப்பட்டு, பேசாமல் இருந்திருக்கிறேன். சண்டைப் போட்டிருக்கிறேன், முரண்டு பிடித்திருக்கிறேன். ஆனால், இதை ரெண்டு பேரும் வெளியில் உங்களிடத்தில் காட்டிக்கொள்ளாமல் இருந்திருக்கிறோம். இப்பதான் நான் செஞ்சது தப்பு என்று எனக்குப் புரிகிறது. நீங்க சொல்ற மாதிரி அன்பை மட்டும் உங்க பிள்ளைக்குத் தரப்போகிறேன். இதனால் அவரும் என்னிடம் அன்பைத் தவிர வேறு எதையும் கொடுக்க மாட்டார் என்று உணர்ந்துகொண்டேன்.”
"ஆமாம் கிரிஜா, வாழ்க்கை என்பது அழகான ஓடம் போல! நீ அந்த ஓடத்தில் பயணம் செய்வதும் அல்லது துடுப்புப் போடத் தெரியாமல் தண்ணீரில் மூழ்குவதும் உன் கையில்தான் உள்ளது. ஒரு விதையைப் போல, அன்பை மட்டும் பிறருக்குக் கொடுத்துப் பாரேன், அதே அன்பு ஒரு விருட்சத்தைப் போல இரட்டிப்பா உனக்கே திரும்பி வரும்.”