தீபாவளி சிறப்பு சிறுகதைகள் 2!

1. தீபாவளி 'சிரிப்பு' சிறுகதை: மிஸ்ஸிங் பட்டாசு பெட்டி! ​2. பலகார சிரிப்பு சிறுகதை: இரும்பு முறுக்கு சவால்!
சிறுகதை | Family and murukku
சிறுகதை | Family and murukku Image credit: Chatgpt
இந்திராணி தங்கவேல்

தஞ்சாவூரைச் சேர்ந்த இந்திராணி தங்கவேல், மங்கையர் மலரில் வெளியான முதல் கட்டுரை மூலம் எழுத்துப் பயணத்தைத் தொடங்கியவர், இன்று கல்கி ஆன்லைனில் தொடர்ந்து எழுதி வருகிறார். அருமையான சிறுகதைகளும் பயனுள்ள பல கட்டுரைகளும் எழுத வல்லவர்.

Updated on: 
MM strip
MM strip

தீபாவளினாலே புத்தாடை, பட்டாசு, பலகாரம் அப்புறம் கொஞ்சம் ரகளையான சிரிப்புதான்! பண்டிகைக் காலத்தில் வீடுகளில் நடக்கும் சின்னச் சின்ன கலாட்டாக்களையும், பலகாரம் செய்யும்போது நடக்கும் நகைச்சுவைச் சம்பவங்களையும் மையமாகக் கொண்ட இரண்டு ஜாலியான சிறுகதைகள் இதோ...

1. தீபாவளி 'சிரிப்பு' சிறுகதை: மிஸ்ஸிங் பட்டாசு பெட்டி!

சிறுகதை | family
சிறுகதை | family Image credit: Chatgpt

கார்மேகம் வீட்டில் தீபாவளிக் காலை வழக்கம்போல அமளிதுமளியாகத் தொடங்கியது.

அதிகாலை 4 மணிக்கே கார்மேகத்தை எழுப்பிய மனைவி சுமதி, "ஏங்க! சீக்கிரம் எந்திரிச்சு எண்ணெய் தேய்த்துக் குளிங்க... பசங்க பட்டாசு வெடிக்கக் காத்துக்கிட்டு இருக்காங்க!" என்று அவசரப்படுத்தினாள்.

​கார்மேகமும் அரைத்தூக்கத்திலேயே குளித்துவிட்டு, புத்தாடையைக் கட்டிக்கொண்டு வாசலுக்கு வந்தான். அவனது 8 வயது மகன் வருண், "அப்பா! நேத்து வாங்கிட்டு வந்தப் பெரிய பட்டாசுப் பெட்டியைக் காணோம்!" என்று கத்தினான்.

​"என்னது! பட்டாசுப் பெட்டியைக் காணோமா?" கார்மேகத்துக்குத் தூக்கம் பறந்துவிட்டது. ₹3000 கொடுத்து வாங்கிய 'மெகா ஃபேமிலி பேக்' பட்டாசுப் பெட்டி!

​வீடு முழுக்கத் தேடினார்கள். கட்டிலுக்கு அடியில் இல்லை, பீரோவுக்குப் பின்னால் இல்லை, சமையலறையிலும் இல்லை.

​​"ஒருவேளை ராத்திரி யாராவது திருடன் வந்து தூக்கிட்டுப் போயிருப்பானோ?" என்று கதறினாள் சுமதி.

​கார்மேகத்துக்கு லேசாக சந்தேகம் வந்தது. "இருங்க... ராத்திரி 12 மணிக்குக் பக்கத்து வீட்டுச் சொக்கலிங்கம் நம்ம வீட்டுக்கு வந்துட்டுப் போனானே? அவனா இருக்குமோ?"

சொக்கலிங்கமும் கார்மேகமும் எப்போதும் சின்னச் சின்ன விஷயத்துக்குப் போட்டி போட்டுக்கொள்பவர்கள். கார்மேகம் உடனே கோபத்தோடு பக்கத்து வீட்டுக்கு ஓடினான். சொக்கலிங்கம் வாசலில் காப்பி குடித்துக்கொண்டிருந்தார்.

​"சொக்கலிங்கம்! நேத்து ராத்திரி என் வீட்டுக்கு வந்துட்டுப் போனீங்களே... என் பட்டாசுப் பெட்டியைப் பார்த்தீங்களா?" என்று முறைத்தபடி கேட்டான் கார்மேகம்.

இதையும் படியுங்கள்:
தீபாவளி சிறப்பு சிறுகதை - தீபா'வலி'...!
சிறுகதை | Family and murukku

சொக்கலிங்கம் சிரித்துக்கொண்டே, "ஆமா கார்மேகம்... நேத்து உங்க வீட்டுக்கு வந்தப்போ அந்தப் பெட்டி சோபா மேலதான் இருந்துச்சு. ஆனா அது பட்டாசுப் பெட்டி இல்லையே!" என்றார்.

​"என்னது பட்டாசுப் பெட்டி இல்லையா? பொய் சொல்லாதீங்க!"

​சொக்கலிங்கம் உரக்கச் சிரித்துவிட்டுச் சொன்னார், "கார்மேகம்! நேத்து ராத்திரி நீங்க தூக்கக் கலக்கத்துல, பட்டாசுப் பெட்டின்னு நினைச்சு உங்களோட பழைய துணிமணிகள் வச்சிருந்த அட்டைப்பெட்டியைத்தான் ஹாலில் வச்சிருந்தீங்க! நிஜமான பட்டாசுப் பெட்டியைப் பூசையறையில சாமி படத்துக்குப் பக்கத்துல பத்திரமா வச்சதை நானே பார்த்தேனே!"

கார்மேகத்துக்கு தூக்கிவாரிப் போட்டது. ஓடிப்போய் பூசையறையைப் பார்த்தால்... அங்கே சாமி படத்துக்குக் கீழே 'மெகா ஃபேமிலி பேக்' கம்பீரமாக வீற்றிருந்தது!

​இதைப் பார்த்த சுமதியும் வருணும் விழுந்து விழுந்து சிரித்தார்கள். கார்மேகம் அசட்டுச் சிரிப்புச் சிரித்துக்கொண்டே, "ஹிஹி... சாமி கும்பிடும்போது பட்டாசுக்கும் சேர்த்து ஆசிர்வாதம் கிடைக்கட்டுமேன்னு அங்க வச்சேன்டி!" என்று சமாளித்தான்.

*************************

​2. பலகார சிரிப்பு சிறுகதை: இரும்பு முறுக்கு சவால்!

சிறுகதை | Family and murukku
சிறுகதை | Family and murukku Image credit: Chatgpt

​தீபாவளிக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, கோமதிபாட்டி வீட்டில் பலகாரம் செய்யும் 'மகா யாகம்' தொடங்கியது.

​கோமதி பாட்டி முறுக்கு மாவு பிழிய, அவருடைய மருமகன் ரமேஷ் அடுப்படியில் நின்று எண்ணெயில் பொரித்து எடுத்துக்கொண்டிருந்தான். ரமேஷுக்குச் சமையலில் பெரிய அனுபவம் கிடையாது. ஆனால் "நான் ஆம்பளை... என்னால முடியாததா?" என்று கெத்தாகக் கோதாவில் இறங்கியிருந்தான்.

​பாட்டி சொன்னார், "ரமேஷ்! மாவு பதம் ரொம்ப முக்கியம். கொஞ்சம் தண்ணி அதிகமானாலும் முறுக்கு நமுத்துடும்!"

​ரமேஷ் யோசித்தான்... 'ஓ! தண்ணி அதிகமனா நமுத்துடும்னா... அரிசி மாவையும் உளுந்த மாவையும் நல்லா இறுகப் பிசையணும் போல!' என்று நினைத்து, மாவில் தண்ணீரைக் குறைவாக ஊற்றி, இரும்பு போலக் கெட்டியாகப் பிசைந்துவிட்டான்.

​அடுப்பில் எண்ணெய் காய்ந்தது. பாட்டி பிழியும் கட்டையைக் கொடுத்து, "பிழியுப்பா!" என்றார்.

​ரமேஷ் கட்டையைக் கையில் எடுத்து மாவைப் போட்டுப் பிழிய முயன்றான். கட்டை அசையவே இல்லை! ரமேஷ் தன் முழு பலத்தையும் போட்டு, பல்லைக் கடித்துக்கொண்டு அமுக்கினான். முகத்தில் வேர்வை வழிந்தது.

​"ஏன்ப்பா இவ்ளோ கஷ்டப்படுற?" என்று பாட்டி கேட்க, "இல்ல பாட்டி... மொறுமொறுன்னு வரணும்ல, அதான்!" என்று சமாளித்தபடி, ஜிம்மில் வெயிட் தூக்குவது போலக் கத்தி அமுக்கினான்.

​ஒருவழியாக நாலைந்து முறுக்குகள் எண்ணெயில் விழுந்து, சிவந்து வெளியே வந்தன. பார்க்க தங்க நிறத்தில் பளபளவென இருந்தன.

​ரமேஷ் பெருமையோடு, "பார்த்தீங்களா பாட்டி! என் முறுக்கு எவ்வளவு அழகா இருக்கு!" என்று சொல்லி, அதைச் சுவைத்துப் பார்க்கத் தன் மாமனார் சாமினாதனிடம் கொடுத்தான்.

​சாமினாதன் சந்தோஷமாக ஒரு முறுக்கை வாங்கி, 'நறுக்' என ஒரு கடி கடித்தார்!

​'டங்க்!' என்று ஒரு சத்தம் கேட்டது.

சாமினாதன் வாயைப் பிடித்துக்கொண்டு கத்தினார்! "ஐயோ... என் பல்லு போச்சே!"

"என்ன ஆச்சுங்க?" என்று மாமியார் ஓடிவந்தார்.

​சாமினாதன் வாயிலிருந்து உடைந்த முறுக்குத் துண்டும், கூடவே அவருடைய செயற்கைப் பல்லும் வெளியே வந்தது!

​"ரமேஷ்! இது முறுக்கா இல்ல இரும்புச் சுற்றா? கடிச்சா பல்லு உடைஞ்சு தொங்ங்குது!" என்று சாமினாதன் கத்தினார்.

இதையும் படியுங்கள்:
சிறுகதை: அன்னவாசல் பசுமாடும் அறிவியல் அற்புதமும்!
சிறுகதை | Family and murukku

​பாட்டி அந்த முறுக்கை எடுத்துத் தரையில் போட்டார். அது 'டப்' எனச் சத்தம் போட்டுக்கொண்டு உடையாமல் உருண்டது!

​பாட்டி சிரிப்பை அடக்க முடியாமல், "ரமேஷ்! மாவை இப்படிப் பாறை மாதிரிப் பிசைஞ்சு வச்சா முறுக்கு வருமா? இது முறுக்கு இல்லைப்பா... சுய பாதுகாப்புக்கு வச்சுக்கிற ஆயுதம்!" என்றார்.

​கடைசியில், அந்த 'இரும்பு முறுக்குகளை' யாரும் சாப்பிட முடியவில்லை. வீட்டின் காவலுக்கு நின்ற நாய்க்குக் கொடுத்தார்கள். அதுவும் ஒரு கடி கடித்துப் பார்த்துவிட்டு, ரமேஷை ஒரு மாதிரி முறைத்துவிட்டு ஓடிவிட்டது!