தீபாவளி சிறப்பு சிறுகதை: இந்தத் தீபாவளிக்கு இது புதுசு?

தீபாவளி ஷாப்பிங் செய்யும்போது கடைகளில் நடக்கும் புதிய விற்பனை யுக்திகள் பற்றிய தீபாவளி சிறப்பு சிறுகதை
சிறுகதை |  Clothing store
சிறுகதை | Clothing storeImage credit: Chatgpt

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on: 
MM strip
MM strip

தீபாவளியை முன்னிட்டு அந்தத் துணிக்கடையில் தள்ளுபடி விலை மற்றும் குறிப்பிட்ட தொகைக்கு மேலே துணிகளை வாங்கினால் இலவச பரிசுகள் என்று அறிவிப்புகளை செய்திருந்தனர். அதனால் கூட்டமும் அதிகமாக இருந்தது. கடைக்கு வந்திருந்த பெண்கள் தங்கள் விருப்பப்படி வெவ்வேறு ரகத்தில் சேலைகளை எடுத்துப் பார்த்து, கலைத்து அவர்களுக்குப் பிடித்தமானவற்றைத் தேர்வு செய்துகொண்டிருந்தனர். கடை ஊழியர்களும் சலிப்பில்லாமல் வாடிக்கையாளரின் விருப்பப்படி துணிகளை எடுத்துக்காட்டினர்.

கமலமும் அப்படித்தான், ஒரு சேலை எடுப்பதற்குள் குறைந்தது பத்து இருபது சேலைகளை எடுத்து பிரித்து மேய்ந்துவிடுவாள். பிறகு இரண்டு மூன்று புடவைகளைத் தனியாக எடுத்து வைக்கச் சொல்லிவிட்டு, வேறு பிரிவுகள் பக்கம் போய் நோட்டம் விட்டுவிட்டு வருவாள். அதுபோல இன்றும் ஒரு நான்கு புடவைகளைத் தேர்வு செய்துவிட்டு, பட்டு சேலைப் பிரிவு வரை போய் சுற்றிப்பார்த்துவிட்டு வந்தாள்.

அவள் திரும்ப வந்ததும், கடை ஊழியர் அவள் தேர்வு செய்த புடவைகளை டேபிள் மேல் எடுத்து வைத்தார். அப்போது அவள் அருகில் நின்றிருந்த இரண்டு பெண்கள் அந்தப் புடவைகளைப் பார்த்ததும்,

“அடி, இதைப் பாருடி, நமக்கு இந்த மாதிரி சேலையெல்லாம் கண்ணுல படவே இல்லையே. இது நல்ல டிசைன்ல, அளவான பார்டரில் பளிச்சுன்னு இருக்கு. பேசாம இதையே நாம எடுத்துக்கலாமா?!” என்று ஒரு பெண் சொல்ல

"ஆமாடி... சூப்பரா இருக்கு. என்ன விலைன்னு பாரு, ஆளுக்கு ரெண்டு அள்ளிட்டு போயிடலாம்." என்று இன்னொரு பெண்ணும் சொன்னாள்.

அதைக் கேட்ட கமலத்துக்கு அதிர்ச்சியாக இருந்தது. அவள் அவசரமாக அந்தப் புடவைகளை தன் பக்கமாக நகர்த்தி வைத்தாள்.

சிறுகதை |  Clothing store
சிறுகதை | Clothing storeImage credit: Chatgpt

உடனே கடையின் ஊழியர்,

“இதெல்லாம் இந்த மேடம் எடுத்து வைத்திருக்காங்க,” என்றார்.

உடனே அந்தப் பெண்கள் கமலத்தைப் பார்த்து புன்னகை செய்துவிட்டு ஏமாற்றமான முகத்தோடு,

“அப்படியா, சரி. இதே டிசைன்ல வேற சேலை இருந்தா எடுத்துப் போடுங்க?”

“ம்... இந்த டிசைனில இருக்குது. ஆனா வேற கலர்தான் இருக்கும்” என்று அவர் சொல்ல, “சரி, அதைக் காட்டுங்க. பார்க்கலாம்” என்றனர்.

பிறகு அவர் காட்டிய வேறு சேலைகளைப் பார்த்துவிட்டு,

“இல்ல... இது அந்த அளவுக்கு இல்ல.”

“இவங்க எடுத்து வைத்திருக்கிற சேலைகள் எல்லாம் நல்லா இருக்கு! ஆனா இது மாதிரி வேற இல்லைன்னு சொல்றீங்க” என்றபடி கமலம் வைத்திருந்த சேலைகளையே ஏக்கமாகப் பார்த்தார்கள். அதைக் கவனித்த கமலாவின் முகத்தில் ஒரு சிறிய பெருமிதம் தோன்றியது.

“சரி, நாங்க அந்தக் காட்டன் சேலைப் பிரிவுக்குப் போய் பார்க்கிறோம்” என்று சொல்லிவிட்டு அவர்கள் நகர்ந்ததும், கமலா தன் முன் இருந்த சேலைகளைப் பார்த்தாள். அவள் முதலில் அந்த நான்கு புடவைகளில் ஏதாவது இரண்டை மட்டும் எடுக்க முடிவு செய்திருந்தாள். ஆனால் இப்போது,

இதையும் படியுங்கள்:
தீபாவளி சிறப்பு சிறுகதை - தீபா'வலி'...!
சிறுகதை |  Clothing store

‘இந்தச் சேலைகள் எல்லாமே நல்லா இருக்கு! அதனால்தான் அந்தப் பெண்களுக்கும் பிடித்து இருக்கிறது’ என்று அவளுக்குத் தோணியது.

"என்ன மேடம் யோசிக்கறீங்க! இந்தச் சேலைகள் எல்லாமே உங்களுக்குப் பொருத்தமாக இருக்கும். பில் போட்டுடலாமா?" என்று அந்த ஊழியர் திரும்பக் கேட்கவும்,

“சரி, பில் போடுங்க,” என்று சட்டென முடிவு எடுத்து, பில்லுக்கு உண்டான பணத்தைக் கொடுத்து அந்தச் சேலைகளோடு கமலம் திருப்தியாகக் கிளம்பினாள்.

இதையும் படியுங்கள்:
தீபாவளி சிறப்பு சிறுகதை - நரகாசுரனின் சிரிப்பு!
சிறுகதை |  Clothing store

அவள் கிளம்பிய சில நிமிடங்களில் அந்தப் பெண்கள் திரும்பவந்து அந்த ஊழியரைப் பார்த்துக் கேட்டார்கள்.

"அண்ணா! அவங்க அந்தச் சேலைகள்ல எதை எடுத்தாங்க?"

“அவங்க எடுத்த எல்லா சேலையையும் அவங்களே வாங்கிட்டுப் போயிட்டாங்க.”

"அப்படியா" என்று கேட்டுவிட்டு, ஒருவரையொருவர் பார்த்துச் சிரித்தனர்.

அந்த இரண்டு பெண்களும் கடைக்கு வருபவர்களிடம் இப்படிப் பேசி, விற்பனையை அதிகப்படுத்த நியமிக்கப்பட்ட ஊழியர்கள். விற்பனையான சேலைகளுக்கு, ஒரு குறிப்பிட்ட ஊக்கத்தொகையைப் அவர்கள் பெற்றுக்கொள்வார்கள். இந்தத் தீபாவளிக்கு புதுசா வந்த விற்பனை யுக்தி இது என்பது கமலத்துக்குத் தெரியாது.