

மாலை நேரத்துச் சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்தின் சத்தம் எதுவுமே பிரகாசத்தின் காதுகளில் விழவில்லை. தன்னுடைய கோச்சிலிருந்து பிரகாஷ் அவனை காப்பாற்றிய என். ஜி. ஓ மணிந்தர் சிங் இருவரும் இறங்கினார்கள்.
அவனது கண்கள் பிளாட்பாரத்தின் ஓரத்தில் நரைத்த தலைமுடியோடு, அழுக்குச் சேலையைக் கட்டிக்கொண்டு அங்கும் இங்குமாகத் தவிப்புடன் தேடிக்கொண்டிருந்த அந்த முதிய உருவத்தின் மீதே நிலைத்திருந்தன.
இருபத்தி ஒன்று ஆண்டுகள்... கிட்டத்தட்ட கால் நூற்றாண்டு காலம்!
நினைவுகள் இருபத்தி ஒன்று வருடத்துக்கு முன்பு சென்றது.
அன்று பிரகாசமும் அவன் தம்பி சுந்தரும் வீட்டுக்கு தெரியாமல் ஸ்கூல் கட் அடித்துவிட்டு மன்னார்குடி சாந்தி தியேட்டரில் ரஜினி படம் சந்திரமுகி மேட்னி பார்த்து வந்ததை அம்மாவிடம் தன் தம்பி போட்டுக்கொடுக்க தம்பியை கண்டிக்காமல் தன்னை மட்டும் அம்மா பூவரசு குச்சி மூலம் அடித்ததை வேடிக்கை பார்த்த பிரகாஷ் தம்பியின் பாட புத்தகங்களை கிழித்து விட்டு கோபத்தில் ஊரை விட்டு வெளியே வந்தவன் சென்னை ரயில்யேறி திருட்டு ரயில் மூலம் பாட்டியாலா.
வந்ததும் கண்ட இடத்தில் சுற்றி பஞ்சாபின் ஒரு தொலைதூர கிராமத்தில் இருந்த அந்தப் பெரிய பால் பண்ணையில் வேலை கிடைத்தும் அந்த வேலை அவனது வாழ்வையே அடிமையாக்கிப் பூட்டி வைத்திருந்தது.
காலை நான்கு மணிக்குத் தொடங்கும் மாட்டுச் சாணம் அள்ளும் வேலை, நள்ளிரவு தாண்டியும் தொடரும். சாட்டையடி, பசி, சுட்டெரிக்கும் குளிரிலும் வெயிலிலும் சரியான உடைகளின்றி மாட்டுக் கொட்டகையிலேயே உறக்கம்... வெளி உலகத்தோடு எந்தத் தொடர்பும் இன்றி, ஒரு சொட்டுச் சுதந்திரமும் இல்லாமல் கொத்தடிமையாகச் சிக்கிக் கொண்டது.
நாட்கள் மாதங்களாகி, மாதங்கள் வருடங்களாகி, இருபத்தி ஒன்று ஆண்டுகள் நரக வேதனையில் கழிந்தன.
இந்த நரகத்திலிருந்து பிரகாசத்திற்கு விமோசனம் கிடைக்குமா என்கிற நேரத்தில் கடவுளின் பார்வை பிரகாஷ் மேல் பட்டது ஒரு தற்செயலான நிகழ்வு.
அந்தப் பால் பண்ணைக்கு ஆய்வுக்காக வந்த பஞ்சாப் மாநிலத் தொண்டு நிறுவனத்தின் (NGO) தன்னார்வலர் மனிந்தர் சிங் கண்ணில் பிரகாசத்தின் பரிதாப நிலை பட்டது.
நிச்சயம் பிரகாஷ் பஞ்சாபி அல்ல என்பதை தெரிந்துகொண்ட அவன் இரகசியமாகத் தகவல்களைச் சேகரித்து, காவல்துறையின் உதவியோடு அதிரடிச் சோதனை நடத்தி, அந்தப் பண்ணையிலிருந்து பிரகாசத்தை மீட்டான்.
அவன் வீட்டை விட்டு கிளம்பும் போது 7 வயது. ஓரளவுக்கு தான் மன்னார்குடி ஆனால் தெரு ஞாபகமில்லை என்றான்.
அதே சமயம் கடந்த 21 ஆண்டுகளாக தாய்க்கு மகன் உயிரோடு இருக்கிறானா இல்லையா என்பதே தெரியாது. "என் மகன் வருவான்" என்று அவள் ஊர் ஊராகக் கேட்டுத் தேடாத இடமில்லை. இந்த சோகத்தில் கணவரும் இறந்து போக இளைய மகனுடன் ஊர் ஊராக தேடி வந்தவருக்கு அவனது அடையாளங்களை வைத்து, தமிழ்நாட்டிலிருக்கும் அவனது தாயைக் கண்டுபிடித்துத் தகவல் கொடுத்ததே அந்த NGO தான்.
வீட்டை விட்டு வரும்போது வயது 7. அதே பிரகாசம் தான் இன்று நிற்கிறான். ஆனால், அன்று இருந்த உடலமைப்போ, கள்ளமில்லாச் சிரிப்போ அவனிடம் இல்லை.
இப்போது, இரயிலை விட்டு மெல்ல இறங்கி அந்த முதியவளின் முன்னால் போய் நின்றான் பிரகாசம்.
அவளது நலிந்த கண்கள் அவனையே பார்த்தன. அவளுக்கு முன்னால் பிரகாசம் ஒரு முதியவனைப் போல நின்றிருந்தான்.
ஆனால், அவனது இடது புருவத்திற்கு மேல் இருந்த அந்தச் சிறிய தழும்பு...
"பிரகாசம்..."
அந்தத் தாயின் தொண்டையிலிருந்து கிளம்பிய குரல் வார்த்தையாக வரவில்லை; ஒரு கதறலாகத்தான் வெளிவந்தது.
"அம்மா..." என்றான் பிரகாசம். 21 ஆண்டுகளுக்குப் பிறகு தாய்மொழியில் அவன் பேசிய முதல் வார்த்தை அது!
அடுத்த கணம், அந்த தாய் தன் கூன் விழுந்த உடம்பையும் பொருட்படுத்தாமல் பாய்ந்து வந்து தன் மகனைக் கட்டியணைத்துக் கொண்டாள்.
இருபத்தி ஒன்று ஆண்டுகளின் ஏக்கம், கண்ணீர், வேதனை, ஆத்திரம் அத்தனையும் அந்த ஒற்றைக் கட்டிப்பிடித்தலில் பெருக்கெடுத்து ஓடியது.
அவனது முகத்தை இரு கைகளாலும் ஏந்தி, "என் ராசா... உன்னை என்னடா பண்ணி வச்சிருக்காங்க? உன்னை எங்கடா கொண்டு போய் வச்சிருந்தானுங்க?" என்று கதறி அழுதாள். அவளது கைகள் அவனது கன்னங்களையும், காயத்துப் போன வடுக்களையும் தடவிப் பார்த்தன.
சுற்றி இருந்த பயணிகள், தன் தம்பி சுந்தர் இரயில்வே காவலர்கள் என அனைவரின் கண்களிலும் கண்ணீர் துளிர்த்தது.
கொத்தடிமைத் தனம் அவனது வாலிபத்தைப் பறித்திருந்தது; அவனது ஆரோக்கியத்தைச் சிதைத்திருந்தது. ஆனால், அந்தத் தாயின் மடியின் சூடும், தலையை வருடிக் கொடுத்த அவளது தாய்மையின் கரங்களும் பிரகாசத்திற்குள் ஒரு புதிய நம்பிக்கையைக் கொடுத்தன.
"இனி உன்னை யாருக்காகவும் எதற்காகவும் விட்டுக்கொடுக்க மாட்டேண்டா என் செல்லமே..." என்று அவள் அவனது நெற்றியில் முத்தமிட்டபோது, பிரகாசம் தன் 21 ஆண்டுகாலச் சிறைவாசத்திலிருந்து முழுமையாக விடுதலையானதை உணர்ந்தான்.
“அண்ணா என்னால் தானே இப்படியெல்லாம் நடந்துப்போச்சு என்னை மன்னிச்சிடு அண்ணா “என்று பிரகாசத்தை கட்டி அழுதான் சுந்தர்.
21 வருடங்களுக்குப் பிறகு, தங்களின் இரத்தம், தங்களின் உயிரிலிருந்து உதித்த தன் மகனை ஒரு தாய் மீண்டும் பார்க்கும்போது, அங்கு எழும் உணர்வுகளை வெறும் வார்த்தைகளால் விவரித்துவிட முடியாது. அது சோகமா, பேரானந்தமா, அதிர்ச்சியா அல்லது ஆறுதலா என்றே வரையறுக்க முடியாத உணர்ச்சிகளின் பெருவெள்ளம்!
காலம் மனிதர்களைப் பிரித்து, அவர்களைச் சிதைக்கலாம். ஆனால், ஒரு தாயின் அன்பையும், அவளது காத்திருப்பையும் எந்தக் கொத்தடிமைச் சங்கிலியாலும் பிணைத்து வைக்க முடியாது" என்பதற்கு பிரகாசத்தின் இந்த மீட்சியும், அவரது தாயின் சந்திப்பும் ஒரு நெகிழ்ச்சியான சான்றாகும்!