சிறுகதை: எங்கிருந்தோ வந்தவள்...!

வதந்திகளுக்கு மௌனத்தால் பதிலடி கொடுத்து மகளை சாதனையாளராக மாற்றிய பெண்ணின் எழுச்சியான சிறுகதை
சிறுகதை | Daughter and mother
சிறுகதை | Daughter and motherImage credit: Chatgpt

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on: 
MM strip
MM strip

சுற்றிலும் பசுமை போர்த்திய வயல்களும், மாலையில் மயில் கூவும் சத்தமும் கேட்கும் ஒரு அழகான கிராமம் அது. அந்த ஊரின் ஒரு கோடியில் இருந்தது இளங்கோவன் - சுமதி தம்பதியரின் வீடு. அன்பிற்கு இலக்கணமாக வாழ்ந்துவந்த தம்பதி அவர்கள்.

இளங்கோவனின் பெற்றோரும் சுமதியை தங்கள் சொந்தமகள் போலவே நடத்தினார்கள். அந்த வீட்டில் மகிழ்ச்சிக்குப் பஞ்சமே இல்லை. ஆனால், திருமணமான ஐந்தாண்டுகளாகியும் அவர்களுக்கு ஒரு குழந்தை பிறக்கவில்லை என்ற ஒரே ஒரு குறை மட்டும் அந்த வீட்டின் சுவர்களில் மௌனமாக ஒட்டிக்கொண்டிருந்தது.

வீட்டு மனிதர்கள் காட்டிய அன்பு சுமதியின் மனதை ஆற்றியதே தவிர, ஊராரின் கண்கள் அவளைச் சும்மா விடவில்லை.

"என்னதான் இருந்தாலும் ஒரு தொட்டில் சத்தம் கேட்காத வீடு பாழடைந்த வீடுப்பா..."

"விசேஷத்துக்கு முன்னாடி வந்து நிக்க வைக்காதீங்க, அது அபாக்கியம்..."

பண்டிகை நாட்களிலும், சுபகாரியங்களிலும் ஊர் மக்கள் வீசிய இந்த வார்த்தை அம்புகள் சுமதியின் இதயத்தை ரத்தமடையச் செய்தன. வீட்டுக்குள் நுழையும்போது கண்ணீரைத் துடைத்துக்கொண்டு, கணவன் முன்னால் புன்னகைக்க பழகியிருந்தாள் சுமதி.

ஒருநாள், இளங்கோவன் சுமதியின் கைகளைப் பற்றிக்கொண்டு சொன்னான், "சுமதி, நம் அன்பைப் பகிர்ந்துகொள்ள ஒரு குழந்தை நமக்கு வேண்டும், அவ்வளவுதானே? அது நம் ரத்தத்தில்தான் பிறக்க வேண்டும் என்று அவசியமில்லை. நாம் ஏன் ஒரு குழந்தையைத் தத்தெடுக்கக் கூடாது?"

இந்த வார்த்தை சுமதிக்கு இருண்ட அறையில் ஏற்றிய விளக்காக இருந்தது. மாமனாரும் மாமியாரும்கூட, "நெஞ்சார அள்ளி அணைக்கப்போற குழந்தை நம்ம ரத்தம்தான்மா," என்று பச்சைக்கொடி காட்டினர்.

அடுத்த சில வருடங்களில், அவர்கள் ஒரு ஆதரவற்றோர் இல்லத்திலிருந்து, ஏற்கனவே பதிவு செய்ததினால் முறைப்படி மூன்று மாத பெண் குழந்தையைத் தத்தெடுத்தனர். அக்குழந்தைக்கு 'கலா' என்று பெயரிட்டனர். கலாவின் வருகை அந்த வீட்டையே திருவிழா கோலமாக்கியது. கலாவின் மழலைச் சிரிப்பும்,

பிஞ்சுக்கைகளின் தீண்டலும் சுமதியின் தாய்மைத் தாகத்தைத் தீர்த்தன.

இதையும் படியுங்கள்:
சிறுகதை: சாவித்துவாரம்!
சிறுகதை | Daughter and mother

ஆனால், ஊராரின் ஏச்சுப் பேச்சு குறையவில்லை; மாறாக வடிவம் மாறியது.

"யாரு பெத்த புள்ளையோ... கொண்டு வந்து வளர்க்குறாங்க. வளர்த்துப் பாரு அப்ப தெரியும் புத்தி எங்க போகுதுன்னு!"

"சொந்த ரத்தம் மாதிரி வருமா? நாளைக்கு இது வளர்ந்துட்டு யாரையாவது இழுத்துட்டுப் போனா என்ன பண்ணுவாங்க?"

தெருவில் நடந்துபோகும் போது விழுந்த இந்த வசவுச் சொற்கள் சுமதியின் மனதை அடியோடு உலுக்கின.

ஒருநாள், பக்கத்து வீட்டுப் பெண்மணி நேரடியாகவே, "எதுக்குடி இந்த வேண்டாத வேலை? பெத்தவங்களே கைவிட்ட புள்ளயைக் கொண்டு வந்து வச்சுக்கிட்டு, நாளைக்கு அதுக்கு ஏதாவது நோய் நொடி வந்தா என்ன பண்ணுவ? உனக்கு எதுக்கு இந்த இழுக்கு?" என்று முகத்திற்கு நேரே கேட்டார்.

சிறுகதை | parents
சிறுகதை | parentsImage credit: Chatgpt

அன்று இரவு சுமதி உடைந்து போனாள். கலாவை நெஞ்சோடு அணைத்துக்கொண்டு கதறி அழுதாள். "நான் என்ன தப்பு செய்தேன்? ஒரு குழந்தைக்கு தாயாவது பாவமா? இந்த ஊர் என்னை ஏன் இப்படி வதைக்கிறது?" என்று கணவனிடம் கேட்டு விம்மினாள்.

இளங்கோவன் அவளை அமைதிப்படுத்தினான். "சுமதி, ஊராரின் பேச்சு என்பது ஒரு நிழல் போன்றது. அதற்கு உருவம் உண்டு, ஆனால் உயிர் இல்லை.

நீ அதற்கு பயந்தால் அது உன்னைத் துரத்தும். நீ அதைத் திரும்பிப் பார்க்காமல் வெளிச்சத்தை நோக்கி நடந்தால், அந்த நிழல் உனக்குப் பின்னால் மறைந்துவிடும். நம் கலாவுக்குத் தேவை உன் கண்ணீர் அல்ல, உன் தைரியம்," என்றான்.

கணவனின் வார்த்தைகள் சுமதியின் மனதில் ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்தின. அன்று முதல் அவள் தன் பாதையை மாற்ற முடிவு செய்தாள். அழுகையை நிறுத்திவிட்டு, அறிவை ஆயுதமாக்கினாள்.

மௌனமே முதல் ஆயுதம் என்று புரிந்துகொண்டாள். ஊரார் பேசும் வதந்திகளுக்கும், ஏளனப் பேச்சுகளுக்கும் சுமதி பதில் பேசவே இல்லை. யாராவது குத்தலாகப் பேசினால், அவர்களைப் பார்த்து ஒரு புன்னகையை மட்டும் உதிர்த்துவிட்டுத் தன் வேலையைப் பார்க்கப் போனாள். பதில் கிடைக்காத வார்த்தைகள் தானாகவே மடிந்துபோகும் என்பதை அவள் உணர்ந்தாள்.

ஊராரின் பேச்சில் கவனம் செலுத்துவதை விடுத்து, தன் முழுக் கவனத்தையும் கலாவின் வளர்ப்பில் திருப்பினாள். அவளுக்குச் நல்ல ஒழுக்கத்தையும், கல்வியையும், தைரியத்தையும் ஊட்டினாள்.

சுமதி சும்மா இருக்கவில்லை. கிராமத்துப் பெண்களுக்கு, தான் கற்ற தையல் கலையைக் கற்றுக்கொடுக்க ஒரு சிறிய மையத்தைத் தன் வீட்டிலேயே தொடங்கினாள்.

இதன் மூலம் பல பெண்களுக்கு வாழ்வாதாரம் கிடைத்தது. ஊரில் சுமதிக்கான மதிப்பும், மரியாதையும் மெல்ல உயரத் தொடங்கியது.

ஆண்டுகள் உருண்டோடின. கலா கல்வியிலும், விளையாட்டிலும் சிறந்து விளங்கினாள். சுமதி அவளுக்கு ஒரு தாயாக மட்டுமல்லாமல், ஒரு சிறந்த தோழியாகவும் வழிகாட்டியாகவும் இருந்தாள்.

தான் தத்தெடுக்கப்பட்ட குழந்தை என்ற உண்மையை கலாவிடம் சுமதி மறைக்கவில்லை. மாறாக, "நீ என் வயிற்றில் பிறக்கவில்லை, என் இதயத்தில் பிறந்தாய்" என்று கூறி வளர்த்தாள். அது கலாவுக்கு கூடுதல் தன்னம்பிக்கையைத் தந்தது.

இதையும் படியுங்கள்:
சிறுகதை: மனிதர்கள்!
சிறுகதை | Daughter and mother

பதினைந்து ஆண்டுகள் கழிந்தன...

மாநில அளவிலான பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின. அன்று அந்த கிராமமே ஸ்தம்பித்தது. தொலைக்காட்சிகளும், செய்தியாளர்களும் இளங்கோவனின் வீட்டின் முன்னால் குவிந்தனர். ஆம், கலா மாநில அளவிலான தேர்வில் முதலிடம் பிடித்திருந்தாள்!

செய்தியாளர்கள் கலாவிடம் கேட்டனர், "உன் இந்த இமாலய வெற்றிக்கு யார் காரணம்?"

கலா மைக்ரோஃபோனைப் பிடித்து, கூட்டத்தில் நின்ற தன் தாய் சுமதியைச் சுட்டிக்காட்டி உரத்த குரலில் கூறினாள்: "என் அம்மாதான்! நான் ஒரு அனாதையாகக் கிடந்தபோது, எனக்கு முகமும் முகவரியும் கொடுத்த தேவதை அவர்தான்.

இந்த ஊர் என் அம்மாவை ஏசியபோது, அவர் வதந்திகளுக்குப் பதில் சொல்லாமல், என்னை ஒரு சாதனையாளராக மாற்றிக் காட்டப் போராடினார். இன்று நான் பெற்றிருக்கும் இந்த வெற்றி, என்னை வளர்த்த என் அம்மாவின் தூய்மையான அன்பிற்கும், அவதிப்பட்ட நாட்களிலும் அவர் காட்டிய தைரியத்திற்கும் கிடைத்த வெற்றி!"

கூட்டத்தில் இருந்த ஊர் மக்கள் அனைவரும் தலைகுனிந்து நின்றனர். அன்று சுமதியை 'மலடி' என்றும், கலாவை 'யாரோ பெத்த பிள்ளை' என்றும் ஏசிய அதே வாய், இன்று "சுமதி கொடுத்த வளர்ப்பு... கொடுத்து வச்சவள்" என்று பாராட்டியது.

சுமதியின் கண்களிலிருந்து ஆனந்தக் கண்ணீர் வழிந்தது. ஆனால், அது பலவீனத்தின் கண்ணீர் அல்ல, விடாமுயற்சியின், வெற்றியின் கண்ணீர்.

அவள் ஊராரின் ஏச்சுப் பேச்சு என்ற இருளை, தன் மௌனம், அன்பு மற்றும் உழைப்பு என்ற ஒளியால் வென்றிருந்தாள். அவளது சிறிய குடும்பம் இப்போது அந்த ஊருக்கே வழிகாட்டும் ஒரு பெரிய ஒளியாக மாறியிருந்தது.