

அது பண்ணை...
சின்ன முதலாளி கதிரேசன், அரிசி மில்லுக்கான, கணக்கு வழக்குகளைப் பார்த்துக்கொண்டிருந்தார்.
போன் ஒலித்தது...
ஓடிப்போய், கால் அட்டென்ட் செய்தான் வேலைக்காரன் சோமு.
“ஹலோ’’…. இது சோமு.
“ஏய் சோமு... உடனே கதிரேசனை வரச்சொல்லு...”
“சோமு யார் போன் அது?” – கதிரேசன்
“உங்க அண்ணன்தாங்க பேசறாரு.”
“அய்யோ வேணாம்... அவரைச் சமாளிக்க முடியாது. நான் இல்லேன்னு சொல்லிடு.”
“அப்ப எங்க போயிருக்கான்னு கேட்பாருங்களே?” - இது சோமு
“‘ப்ச்’. வெளியே போயிருக்கேன்னு சொல்லு...”
“முடியாதுங்கய்யா... வெளியிலனா ‘எங்கன்னு’ சொல்லுன்னு கடிந்துப்பாருங்களே...”
“சரி... கோயிலுக்குன்னு சொல்லு.”
“முடியாதுங்கய்யா. நீங்க பொதுவா கோயிலுக்கெல்லாம் போற பழக்கம் கிடையாதுன்னு அவருக்குத் தெரியும். பொய்யா இருந்தாலும் பொருந்தச் சொல்லணுமேங்களே.”
“மவ துளசிதான் கட்டாயப்படுத்தி, அழச்சிட்டு போச்சுன்னு சொல்லு.”
“ஓ...! பெங்களுர்லே வேலை செய்யும் மகள் வந்திருக்கா? என்கிட்ட ‘பெரியப்பா’ன்னு, ஒரு வார்த்தை கூப்பிட்டு, பேசலியேன்னு அதையும், திட்டுவாருங்களே.”
“ஆமாம். சரிதான்... அப்ப, நான் ரோட்டரிக்குப் போயிருக்கேன்னு சொல்லு.”
“இன்னிக்கு ரோட்டரி மீட்டிங் கிடையாதுங்களே. அவரே டிஸ்டிரிக்ட் ரோட்டரி பிரசிடெண்ட் ஆவாருங்களே.”
“அப்படினா எப்படி அண்ணனைத் தவிர்க்கிறது? சரிடா... இப்படிச் சொல்லிடு. அடுத்தத் தெருவில, வீட்டு அம்மாவுக்குத் தெரிஞ்ச ஒரு வயதான கிழவி,. இறந்திடுச்சு. அதுக்காக சின்னய்யாவும், அம்மாவும் போயிருக்காங்கன்னு சொல்லிடு.”
“சரிங்க...” என்றவன் சொல்ல ஆரம்பிக்கும்போதே, எப்பவும் சாப்பிட்ட பிறகு, இலையில் சோறு போட்டு, வாயிலில் இருக்கும் தெரு நாய்க்கு போட, சின்னம்மா கதவை திறந்து, ஒரு ஆச்சர்யம் மற்றும் உணர்ச்சி கலந்த குரலில் “வாங்கண்ணே, வாங்க... எப்ப வந்தீங்க? ஒரு வார்த்தை சொல்லக்கூடாதா?” என்றதும்,
உள்ளே பெட்டியுடன் நுழைந்தவர், “எங்கம்மா சொல்ல விட்டானுவ. நானும் ஒரு அரைமணி நேரமா வாசல்ல அம்போன்னு காத்துட்டு இருக்கேன். போன் செய்தாலும் பேச மாட்டேங்கிறான். அழைப்பு பெல் அழுத்த, அழுத்த, கைவிரல்தான் உள் ஒயருக்கே போகுதே தவிர, பெல் அடிக்கவே இல்லை.”
"ஒருமணி நேரமாக, கரண்ட் இல்லீங்க அண்ணா.”
“அப்ப, அதை இன்வெர்ட்டர் கனெக்ஷனிலாவது, கொடுத்திருக்கணுமா இல்லியா?” என்று கூறி உள்ளே நுழைந்தார்.
அப்படியே ‘தொப்', ‘தொப்’ இரண்டு பெரும் சத்தம்.
சோமு, டெலிபோன் ரிசீவரை கீழே போட்டு விழுந்தான்.
சின்னய்யா, லேப்டாப்பை கீழே போட்டு, “அண்ணே வாங்கன்ணே...” என்றதும், கோபமடைந்த அண்ணன், “ஏன்டா ஒரு ஹலோவுக்கு இத்தனை பொய்களா.? த்தூ வெட்கமா இல்லை. ‘சரி’ ‘சரி’ நான் சாப்பிடறேன்” என்று கால், கைகள் கழுவிக்கொண்டு கிச்சனுக்குச் சென்றார். சோமு, மரியாதையுடன், பயந்து கொண்டே பெரியவர் காரைத் துடைக்க வாசலுக்கு ஓடிவிட்டான்.
“ஏய் கதிரேசா, நான் வந்தது, நம்ம குலதெய்வக் கோயிலுக்கு, அழச்சிட்டுப் போகத்தான். உன் மகளுக்கு அப்பத்தான் திருமண வாழ்வு சிறக்கும்னுட்டு பெரியவங்க எல்லோருமே சொல்லிட்டாங்க. என்னதான், பெரிய வேலையில் இருந்தாலும், நீ எத்தினி நாளைக்கு இருக்கப்போறே? உன் பொண்டாட்டி எத்தனை நாளைக்கு. அப்ப அவளுக்குனு ஒரு துணை வேண்டாம். அவ பெண்டா. அதுவும் அழகா வேற பெத்திருக்கியே.
இப்ப ஐந்து வயசு பெண் குழந்தையையே பாலியல் பலாத்காரம் செய்யறானுவ கொடூர புத்திகார கஞ்சாப்பயலுவ. அப்ப, உன் மகள் நிலையை நினைத்துப்பாரு. என்னதான், ஒரு வாட்டி திருமணம் ஆகி, அது விவாகரத்துல முடிந்தாலும், அவளுக்கு மறுமணம் முக்கியம்டா.
நேத்து கனவுல நம்மைப் பெத்தவங்க வந்து இதைத்தான்டா சொன்னாங்க. உடனே குலசாமி கோயிலுக்கும் போகச் சொன்னாங்க. அதுக்குத்தான்டா காலையிலேயே கிளம்பி ஓடிவந்தேன். ஆனா நீ என்னடான்னா சோமுப்பயலோட என்ன புளுகலாம்னுட்டு ஒத்திகை பார்த்துட்டு இருக்கே.”
அவ்வளவுதான், நூறாயிரம் உலக்கைகள், கதிரேசன் இதயத்தைப் போட்டு குத்தவும், ‘அண்ணா’ என்று தன் தவறை உணர்ந்து அழுதுகொண்டே, அண்ணன் காலைப்பிடித்து, கதறினார் கதிரேசன்.
“உலகில் இன்னமும் சாகாதது மனசாட்சிதான்”.