சிறுகதை: சாவித்துவாரம்!

பாழடைந்த வீட்டின் நீலக் கதவு சொல்லும் நெகிழ்ச்சியான சிறுகதை!
சிறுகதை | Woman with her childhood memories
சிறுகதை | Woman with her childhood memoriesImage credit: Chatgpt
சாந்தி சந்திரசேகரன்

சாந்திசந்திரசேகரன் - மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார். கல்கி 'படம் சொல்லும் கதை' போட்டியில் முதல் பரிசையும், பேசும் புதியசக்தியின் சிறுகதைப் போட்டியில் ஆறுதல் பரிசையும் பெற்றுள்ளார். அன்னை ஸ்வர்ணாம்பாள் சிறுகதைப் போட்டி, அன்னை குருபாக்கியம் சிறுகதைப் போட்டி, அசோகமித்ரன் நினைவு சிறுகதைப் போட்டி ஆகியவற்றில் இவரது கதைகள் புத்தகப் பதிப்பிற்குத் தேர்வுபெற்று அச்சாகியுள்ளன. கோகுலம் கதிர், குமுதம் சிநேகிதி, கல்கி போன்ற இதழ்களில் இவரது கட்டுரைகள் வெளிவந்துள்ளன. தமிழக அரசின் திருச்சி இலக்கிய விழாவில் உரை நிகழ்த்தியுள்ளார்.

Updated on: 
MM strip
MM strip

அந்த வீட்டில் தற்போது யாரும் இல்லை. அதன் சாவித்துவாரத்தில் உங்கள் கண்களைப் பொருத்திப் பாருங்கள்.

படிக்கட்டுகள் சிதிலமடைந்திருக்கின்றன. சுவற்றின் சாந்து சிதைந்திருக்கிறது. சிமெண்ட் ஆங்காங்கு உதிர்ந்திருகிறது. முதுமையைக் காட்டும் வெள்ளைத்தாடி போல வீடெங்கும் சிலந்திகளின் வலைகள் சூழந்திருக்கின்றன. ஆனால் சங்கைப் போல, காற்றைக் கடன் வாங்கி, கதைகள் கோடி சொல்ல இன்னும் காத்திருக்கிறது..!

அது எனது வீடாக இருந்த போது அப்படியில்லை. காற்றையும் வெளியே அனுப்பாமல் தன்னுள் ரகசியமாய் புதைத்துக் கொள்ளும்.

காலை ஆறு மணிக்கு, சூரிய ஒளி முதலில் அந்த நீலக்கதவின் சாவித்துவாரம் வழி படுக்கையறையினுள் விழும். அம்மாவுக்கு அலாரம் தேவையில்லை. அந்த ஔி போதுமானதாக இருக்கும்.

எப்போதும் அதன் சாவி.. கழட்டப்பட்டு, பூட்டின் மீது தான் இருக்கும். சாவித்துவாரம், வரையப்பட்ட ரங்கோலி போல மிக அழகாக இருக்கும்.

"தலைல புள்ள முட்டி இரத்தமே வந்திருச்சி. அதனால... சாவிய மாட்டி வைக்காதீங்க" என்பார் அம்மா. என் மீது அத்தனை பாசம் என நினைத்திருந்தேன். 'சாவி வளைஞ்சிடும்னு தான் அம்மா எடுத்து வச்சாங்க . அக்கா வம்பிழுப்பாள்.

தம்பி வளர்ந்த போது நாங்கள் இருவரும் சேர்ந்து, ஆசை சாக்லேட் மிட்டாய்த்தாள்கள், மிட்டாய்களுடன் இலவசமாய் வரும் ஸ்டிக்கர்களை அந்தக் கதவில் ஒட்டி வைப்போம். அப்பா ஒரு முறை எங்களை விளாசிய பின், எங்கள் முதுகைப் போல அக்கதவின் முதுகும் பளபளப்பாய் மாறின.

சிறுகதை | Old blue door with Keyhole
சிறுகதை | Old blue door with KeyholeImage credit: Gemini AI

மாலையில் ஔிந்து விளையாடும் போது, கதவின் பின் ஔிந்து கொள்வேன். அந்த சாவித்துவாரம் வழி சாலையை நோட்டம் விடுவேன். குளிர்ந்த காற்று மெதுவாக என்னை வருடும்.

'அந்த வீட்டில் வளர்ந்த ஒவ்வொரு குழந்தையின் சிரிப்பும், ஓட்டமும், அந்க சாவித்துவாரம் வழி அக்கதவு கேட்டுக் கொண்டு இருக்கும்' என்றான் அண்ணன்.

ஒரு நாள்… நான் மழையில் நனைந்தபடி கதவின் மீது சாய்ந்து நின்றேன்.

“அம்மா கோபப்படுவாளோ?” என்ற பயத்துடன் நனைந்த பாதங்களை சுத்தம் செய்து உள்ளே சென்றேன். வாசல் முதல் வீடு வரை நான் வைத்த சகதிக் கிருஷ்ணன் காலச்சு அத்தனை அழகாய் இல்லை போல.

இதையும் படியுங்கள்:
சிரி(று)கதை: புனிதா எனும் நியூஸ் சேனல்!!
சிறுகதை | Woman with her childhood memories

அன்றைய தினம் நான் கதறி அழுத குரலும், பின்னர் அம்மா ஆறுதல் கூறிய மென்மையான குரலும் அச்சாவித்துவாரம் சேமித்து வைத்திருக்கலாம். ஏனெனில் வெளியே விளையாடிய நண்பர்களின் செவிகளுக்கு அவை செல்லவில்லை.

காலம் ஓட.. படித்து வேலைக்குச் செல்லத் துவங்கிய இளம் பெண்ணாணேன். என் முதல் சம்பளம் கிடைத்த நாளன்று, சாவித்துவாரத்தின் வழி நான் காணும் போது, கதவைத் தட்டும் முன்னே அது திறந்து கொண்டது.

“அப்பா, நான் வந்துட்டேன்!”. அப்பாவின் பெருமிதக் கண்கள் அந்தத் துவாரத்தின் இடுக்குகளில் ஒளிந்துகொண்டன.

ஒரு மாலை…

வீட்டில் சண்டை. கோபத்தில் சத்தமிட்டு கதவை மூடினேன். உள்ளே விழுந்த கண்ணீர் சொட்டுகள் தரையில் விழுந்த சத்தத்தைக் கூட வெளியே விட்டுவிடாமல் பெறக்கிக் கொண்டது என் சாவித்துவாரம்.

அதே இரவு, ஒரு சிறிய மன்னிப்பு. அதன் பிறகான சிரிப்பு. அனைத்தும் மண் உண்டியல் போல தன்னுள் பாதுகாப்பாய் புதைத்துக் கொண்டது.

இன்று ரத்தம் சிந்தி வீட்டைக் கட்டிய அப்பாவும் இல்லை. வீட்டைப் பொக்கிஷம் போல பாதுகாத்த அம்மாவும் இல்லை. ஆண்டுகள் பல ஓடி… இதோ இந்தக் கோலத்தில் உள்ளது.

பிள்ளைகள் எங்களால் வீடு புதுப்பிக்கப்பட உள்ளது. பல பழைய பொருட்கள் மாற்றப்பட்டன. ஆனால் கதவை மட்டும் மாற்றவில்லை.

இதையும் படியுங்கள்:
சிறுகதை: தூது சொல்ல ஒரு தோழி!
சிறுகதை | Woman with her childhood memories

“அது நம் வீட்டின் அதிர்ஷ்டக் கதவு” என்றோம். அதைவிட உண்மை — அது எங்களின் ஆயிரமாயிரம் பொக்கிஷங்களை சுமந்து நிற்கும் நினைவுகளின் சாவித்துவாரம்.

இன்று…

என் குழந்தையும் அக்கதவின் சில்லுகளில் விரலை ஓட்டி விளையாடுகிறது. 

இது வெறும் சாவித்துவாரம் மட்டுமல்ல..

என் குடும்பத்தின் காலப் பெட்டி. என் ஒவ்வொரு தட்டுலையும், ஒரு நினைவின் துடிப்பாய் அது சுமந்து திரிகிறது..!