

“இஸ்.. இஸ்” குஷியாய்க் கூப்பிட்டது அடுப்படியில் குக்கர்.
“எ.. என்னங்க, குக்கர் விசில் அஞ்சு அடிச்சதும், மறக்காம அணைச்சிடுங்க. இல்லைன்னா, இன்னைக்கு பூரா, பொங்கல் தான் நமக்கு...“
மனைவி பார்வதி வீட்டு வராண்டாவிலிருந்து எச்சரிக்க,
“ம், புரியுது. உன்னால எந்திரிச்சு வர முடியல. வயசு 70. எனக்கு உன்னை விட அஞ்சு வயசு கூட. எப்போதும் நமக்கு படியளக்கிற கேட்டரிங் ஸ்ரீதர் சார், அவருடைய பொண்ணுக்குக் கல்யாண வேலைன்னு மூன்று நாள் விடுமுறை விட்டுட்டாரு. இப்ப, ‘நமக்கு நாமே திட்டம்’. சாப்பாடு திட்டம்... திண்டாட்டம்.”
கபிலன் தன் இயலாமையைப் புலம்பி முடிப்பதற்குள்,
அடுத்த 'இஸ்' அழைப்பு வர,
“இதோ வந்துட்டேன்டா குக்கர் பையா..” நடை உதவிக் குச்சியை மெல்லப் பிடித்து எழுந்து, சமையலறை நோக்கி கபிலன் போக,
“என்னமோ, அடுப்பை அணைக்க இவ்வளவு பேச்சா?” புலம்பியவளாய்ப் பார்வதியும் எழுந்து வர,
"ம்., என்னைய நம்பமாட்டியே..." கபிலன்.
“ஆமா , உங்களை நம்பாமத்தான், 40 வருஷத்துக்கு மேல, குனிஞ்ச தலை நிமிராம உங்ககூட இருக்கேன் பாருங்க... காலையிலேயே ஆரம்பிக்காதீங்க. நம்மளோட ஒரே பையன் தவமணி. தவமாய்த் தவமிருந்து நான் பெத்தவன். இப்ப, பத்து நாளா அமெரிக்காவிலிருந்து பேச மாட்டேங்கிறான். அதுக்கு, நீங்க போட்ட சண்டை தான் காரணம்.” இலேசாய்ப் பார்வதி தன் தலையில் அடித்துக் கொள்ள,
“பாரு, இந்த பேச்சை நிறுத்து. உன் பையன் நம்மகிட்ட, பேச்சாவா பேசினான். வயசான அப்பா, அம்மாவைக் கவனிக்கறது, அவங்க வாரிசோடக் கடமைன்னு உணராத பேச்சு. அயல்நாட்டுப் பணம் அனுப்பினா மட்டும் போதுமா?.. பாசம் காட்ட, அருகே இருக்கவேண்டாமா?” கபிலன் கத்த,
“உங்ககிட்ட பேசுறதே நான் ஒருத்தி தான். நானும் நிறுத்திட்டா? அப்புறம் யாருயிருக்கா நமக்கு? எனக்கென்னவோ, அவன் தரப்பில, நியாயம் இருக்குமோன்னு தோணுது.”
“இங்கே பாரு.. பாரு. நமக்கு தவமணி பிறக்க, எத்தனையோ விரதம், கோவில், நதி, கடல் ஸ்நானம்னு அலையா அலைஞ்சோம். அவனைச் சின்ன வயசுலிருந்தே பொத்திப் பொத்தி வளர்த்தோம். வாசல்ல போய் விளையாடினா., தூசு படியும்னு வீட்டுக்குள்ளேயே உள்ளரங்க விளையாட்டு சொல்லிக் கொடுக்க, வீட்டுக்கே வாத்தியாரை வர வைச்சேன். நல்லாப் படிச்சு, நல்லா ரேங்க் வாங்கணும்னு ஸ்கூல்ல விட்டதும், தொடர்ச்சியா டியூஷன் வைச்சேன். அதுவும், இராத்திரி பத்து மணி வரைக்கும்.
அவன் ஒரு பொருள் கேட்டா, அதை இரண்டா வாங்கி தந்திடுவேன். கல்லூரி படிப்பும் ரொம்ப உயர்தரமா இருக்கணுமேன்னு, இலட்சக்கணக்கில செலவு பண்ணி, சீட் வாங்கி..”
“போதும் நிறுத்துங்க. நீங்க செஞ்ச காரியத்திலேயே, பெரிய தப்பு அது. பாவம், அவனைக் கண்காணாத மாதிரி தூரமா, ஹாஸ்டல்ல போய் சேர்த்தீங்களே, அதான். நடுநடுவில, அவன் நம்மள பார்க்க வரட்டுமான்னு ஆசையாக் கேட்டாக்கூட , படிப்பு தான் முக்கியம்னு நீங்க அனுமதி கொடுக்க மறுத்தீங்க. இப்படி பாசமே தெரியாம, பணமே வாழ்க்கைன்னு அவனுக்கு பாடம் நடத்தியது நீங்கதான். பத்து நாளைக்கு முன்னாடி, நம்மள அவன் என்னமா கேள்வி கேட்டான் பாருங்க..”
“ஆமா கேட்டாண்டி. அவன் வாழ்க்கையை, அவன் இஷ்டப்படி நாம வாழ விடாம, ஒரு சிறைக் கைதி மாதிரி அவனை நடத்தினதா, சண்டை போட்டான். அப்ப ஒரு தகப்பனா, என் பையன் வசதியா வாழட்டுமேன்னு... நானும், நீயும் செஞ்ச தியாகம் எல்லாம் வீணா? இப்ப, இந்த இறுதிக்காலத்தில , ‘வாட்ஸ் –அப்’ல வீடியோ அழைப்பில், பார்த்து கையாட்டி, ‘டாட்டா’ சொல்றான். சொல்லிட்டான்...” சோகமாய்க் கபிலன்.
“எனக்கு ஒரு விஷயம் புரிஞ்சிடுச்சிங்க. என்னதான் பெத்தவங்கனாலும், அவங்க வாரிசோட இரசனைக்கும், இலட்சியத்திற்கும் முக்கியத்துவம் தரணும்.
நம்ம விருப்பங்களை, நாம அடைய நினைச்சு முடியாததை, அவனை வச்சு அடைய நினைக்கிறது மகா தப்பு. அதுவும், இந்தக்காலத்துல, ஒரே ஒரு வாரிசா வளரும் போது, அவங்களுக்கு பாசம், கஷ்டம் எல்லாம் புரியாம, தெரியாம போகுது...” வருத்தமாய்ப் பார்வதி.
“பாரு., கண்ணைக் கசக்காதே பாரு. நானும், நீ சொல்றதை ஒத்துக்கிறேன். அதை இப்பதான் உணர்றேன். இனிமே நம்ம தவமணி, எப்ப தான் நம்ம கிட்ட பேசுவானோ?”
சொல்லும்போதே, ‘வாட்ஸ் –அப்பில், வீடியோ கால் அழைப்புத் திரையில் தவமணி.
"ய...யப்பா.. தவமணி. நல்லா இருக்கியா?” பாசமாய் பார்வதியும், கபிலனும் உருக,
“நல்லா இருக்கேன். நீங்க ரெண்டு பேரும் எப்படி? என்னைய ரெண்டு பேரும் மன்னிச்சுடுங்க. அன்னைக்கிருந்த மன வேதனை, ஆதங்கத்தில, என்னுடைய சின்ன வயசு வருத்தங்களை, ஒரேடியா உங்க ரெண்டு பேர் மேலேயும் ஆத்திரமாக் கொட்டிட்டேன். ஆனா, உங்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி...”
“அனேகமா., அடுத்த மாசமே, என் கம்பெனியில பேப்பர் கொடுக்கத் தீர்மானிச்சிட்டேன். அதாவது, ராஜினாமா செய்ய முடிவெடுத்திட்டேன். கூடவே, நம்ம நாட்டுக்கு குடும்பத்தோட வந்திடப் போறேன்.
என்ன இந்த மாற்றமோன்னு யோசிக்கிறீங்களா? என் பையன், அதான் உங்க பேரன், கார்த்திக் தான் இதுக்கு காரணம். அவன் ஆறு மாசத்துக்கு முன்னாடி, வருடாந்திர விடுமுறைக்கு, அங்கே வந்ததிலிருந்தது, ரொம்பவே மாறிட்டான். நம்ம நாட்டு பாரம்பரிய வாழ்க்கை முறை, கலாச்சாரம், அவனுக்கு ரொம்பப் பிடிச்சுப்போச்சு. பிடிவாதமா, நம்ம நாட்டுக்கே திரும்பி போகணும்னு அடம் பிடிக்கிறான். முதல்ல நானும், உங்க மருமகளும் எவ்வளவோ மறுத்தோம். நல்லா தீவிரமா யோசிச்சதுக்கப்புறம், அப்பா பண்ணின அதே தப்பை, நானும் திரும்ப பண்ண விரும்பல . அதனால, கூடிய சீக்கிரமே நாம, மறுபடியும் ஒரே குடும்பம் ஆயிடலாம்” எனத் தவமணிக் கூறக் கூற,
பேச வார்த்தையில்லாமல், கண்களில் வழிந்த ஆனந்தக் கண்ணீருக்கிடையே, அமைதியாகிப் போனார்கள் கபிலன், பார்வதி தம்பதியினர்.