

“யம்மாடி... மருமகளே... நீ மாவடு ஊறுகாய் வச்சிருப்பியே. அந்த மாவடு ஊறுகாய்த் தண்ணி ஒரு ஸ்பூன் சப்பாத்தில விட்டு சாப்பிட்டா ரொம்ப நல்லாயிருக்கும். ஒரே ஒரு ஸ்பூன் மாவடு தண்ணி தரியா? அதை அப்படியே சப்பாத்தில தேய்ச்சு சுருட்டி சாப்பிட்டா சூப்பரா இருக்கும்.”
“மாமா, சும்மா இருங்க. என்னை வம்புல மாட்டிவிடறதே உங்களுக்கு வேலையாப் போச்சு. அத்தைக்குத் தெரிஞ்சா அவ்வளவுதான். மாவடுத் தண்ணியெல்லாம் கிடையாது. குருமா வச்சிருக்கேன், அதைத் தொட்டு சப்பாத்தி சாப்பிடுங்க.”
“உங்க அத்தை இப்பதான் கோயிலுக்குப் போயிருக்கா. வரதுக்கு பத்து நிமிஷம் ஆகும். அதுக்குள்ள நான் சாப்பிட்டு முடிச்சுடுவேன். மாவடுத் தண்ணி போட்டு சப்பாத்தி சாப்பிட்ட விஷயத்தை நான் வெளில சொல்லமாட்டேன். நீயும் என்னைக் காட்டிக்கொடுக்காம இரு மஞ்சு.”
“இப்படித்தான், நேத்து காலைல அடம்புடிச்சீங்க. ரவை உப்புமாவுக்கு எலுமிச்சை ஊறுகாய் போட்டு சாப்பிட்டா ரொம்ப நல்ல காம்பினேஷன்னு அடம்புடிச்சீங்க. அத்தைக்குத் தெரியாம சாப்பிட்டு முடிச்சுடுவேன்னு சொன்னீங்க. உங்களுக்கு ஊறுகாய் கொடுக்கக் கூடாதுன்னு அத்தை சொல்லியிருக்காங்கன்னு படிச்சுப் படிச்சு சொன்னேன். நீங்க கேட்கவே இல்ல. உப்புமாவை பிளேட்ல போட்டுட்டு கிச்சன்லயே நின்னு அடம்புடிச்சீங்க.
வேற வழியில்லாம உங்களுக்கு நான் ஊறுகாய் போட்டேன். ஆனா நீங்க சாப்பிட்டு முடிக்கறதுக்குள்ள அத்தை வந்துட்டாங்க. ஊறுகாய் சாப்பிட்டதுக்கு நீங்க திட்டு வாங்கினதோட இல்லாம, உங்களுக்கு ஊறுகாய் கொடுத்ததுக்காக எனக்கும் சேர்த்து திட்டு விழுந்தது.”
“என்னிக்கோ ஒரு நாள் ஆசைக்காக கொஞ்சமா ஊறுகாய் போட்டு சாப்பிட்டா பிரஷர் கூடாது. ஒரே ஒரு சப்பாத்திக்கு மட்டும் என் ஆசைக்காக மாவடு தண்ணி குடு. நான் சீக்கிரம் சாப்பிட்டு முடிச்சுடறேன்.”
“அடம் புடிக்கறீங்க மாமா. உங்க பேரனே பரவாயில்ல. அவனை மிரட்டி சமாளிச்சுடுவேன். உங்களை மிரட்டவும் முடியல, நீங்க சொல்றதைக் கேட்கவும் முடியல. தர்ம சங்கடமான நிலைக்கு என்னைத் தள்ளிவிடறீங்க மாமா.”
வேறு வழியில்லாமல் அவர் ஆசைப்பட்டதற்காக ஒரே ஒரு சப்பாத்திக்கு மட்டும் மாவடு ஊறுகாய்த் தண்ணியை எடுத்து ஊற்றியதும், சப்பாத்தி முழுவதும் அதை சீராகத் தேய்த்து, சப்பாத்தியை சுருட்டி ஒவ்வொரு கடியாகக் கடித்து ரசித்து ருசித்து சாப்பிட்டார் ராகவன். அவர் முகத்தில் தெரிந்த நிறைவும், சந்தோஷமும் பார்க்க நன்றாகத்தான் இருக்கிறது. ஏதோ ஆசைக்கு ஒரு நாள் சாப்பிடுகிறார் என்று நினைத்து சமாதானப்படுத்திக் கொண்டாள் மஞ்சு.
“பார்த்தியா மருமகளே, எந்தத் தடயமும் வைக்காம கிச்சன்லயே நின்னு சப்பாத்தியை ஊறுகாய் போட்டு சாப்பிட்டு முடிச்சுட்டேன். இப்போ பிளேட்ல சப்பாத்தி குருமா போடு. நான் போய் உட்கார்ந்து சாப்பிடறேன். நடந்தது எதுவும் உங்க அத்தைக்குத் தெரியாது.”
அவருக்கு ப்ளேட்டில் சூடாக சப்பாத்தி குருமா போட்டதும், டைனிங் ஹாலில் போய் உட்கார்ந்துவர், வாசலை ஒருமுறை எட்டிப் பார்த்துவிட்டு மீண்டும் தன் பேச்சைத் தொடர்ந்தார்.
“மஞ்சு, அப்பெல்லாம் வீட்ல எல்லாவித ஊறுகாயும் இருக்கும். இப்போ இந்த ரெண்டு வருஷமாத் தான் உங்க அத்தை வீட்டுக்குள்ள ஊறுகாயே சேர்க்கறதில்ல. ஃப்ரிட்ஜ்ல ஒரு ஊறுகாய்கூட இல்லையே. நானும் எப்படியெல்லாமோ அவளை சமாளிச்சுப் பார்த்தேன். வீட்டுக்கு நாலு பேரு வர போக இருக்கும்போது, அவங்க யாராவது ஊறுகாய் கேட்டா அவசரத்துக்கு இருக்கட்டும். ஒரே ஒரு ஊறுகாய் பாட்டில் வாங்கி வைக்கலாம்னு சொல்லிப்பார்த்தேன். கேட்கலையே.
ஃப்ரிட்ஜ்க்குள்ள ஊறுகாய் இருந்தா எனக்குத் தெரியாம நீங்க எடுத்து சாப்பிடுவீங்க. அதனால இந்த வீட்ல ஊறுகாய்க்கு இனிமே அனுமதியே கிடையாதுன்னு கறாரா சொல்லிட்டா.
புடிச்சதை சாப்பிடக் கூடாதுங்கற அழுத்தம் தான் பிரஷரை அதிகப்படுத்தும் மருமகளே. என்ன நான் சொல்றது சரி தானே? என்னிக்கோ ஆசைக்கு கொஞ்சமா போட்டு சாப்பிடறதுனால எல்லாம் பிரஷர் கூடிடாது. நான் டாக்டர்கிட்ட கேட்டுட்டேன்.
ஆனா உங்க அத்தைக்கு பயம். அவளுக்கு என் மேல அவ்ளோ பாசம். அதனாலத்தான் அவ சொல்றான்னு எனக்குத் தெரியும். இருந்தாலும் அவளுக்குத் தெரியாம இப்படி ரகசியமா சாப்பிடுட்டு, அப்புறம் அவ அதைத் தெரிஞ்சுகிட்டு என்கிட்ட சண்டை போடுவா இல்ல, அதுல ஒரு தனி சுகம். அவ என்னைத் திட்டும்போது என் மேல எவ்வளவு அக்கறை வச்சிருக்காங்கறது அந்த வார்த்தைகளில் தெரிஞ்சுடும். அது இந்த மாதிரி ஊருக்கு வரும்போது தானே நடக்கும். வீட்டுல நாங்க ரெண்டு பேரும் தனியா இருக்கும்போது அதுக்கு வாய்ப்பே இல்ல.
இப்படித்தான், போன மாசம் சின்னவன் வீட்டுக்குப் போனப்போ, அங்கே கீதா மாங்காய்த் தொக்கு போட்டு வச்சிருந்தா. அவ போடற மாங்காய்த் தொக்கு ரொம்ப நல்லாயிருக்கும். ஒருநாள் உங்க அத்தை இப்படித்தான் வெளியில போயிருந்தா.
சின்ன மருமககிட்ட தயிர் சாதம் நல்லா தாளிச்சுக் கொட்டித் தரச் சொல்லி, அதுகூட மாங்காய்த் தொக்கு வச்சு சாப்பிட்டேன். என் நேரம், உன் அத்தை சீக்கிரம் வந்துட்டா. சரியான டோஸ் அன்னிக்கு. ஆனாலும் எனக்குப் பிடிச்சதை சாப்பிட்ட திருப்தியும், என் பங்கஜத்துகிட்ட நல்லா வாங்கிக் கட்டின திருப்தியும் அன்னிக்கு ரொம்ப நல்லா நிறைவா இருந்துச்சு.
அதே மாதிரி ஒரு நாள் நைட், உங்க அத்தை டிவிதான் பார்த்துட்டிருந்தா. சரி, அந்த சீரியல் முடியற வரைக்கும் அவ எந்திரிச்சு வரமாட்டான்னு தெரியும். கீதா தோசை சுட்டுக் கொடுத்தா. ஒரே ஒரு தோசைக்கு நெல்லிக்காய் ஊறுகாய் கொடு மருமகளேன்னு கேட்டேன். அத்தைக்குத் தெரியாம சாப்பிட்டுருங்க மாமான்னு அவளும் நெல்லிக்காய் ஊறுகாய் கொடுத்தா.
என்னதான் சட்னி சாம்பார் வச்சு தோசை சாப்பிட்டாலும், ஒரு தோசைக்கு நெல்லிக்காய் ஊறுகாய் தொட்டு சாப்பிடும்போது இருக்கற சந்தோஷம், நிறைவு, அது தனி. இப்படி அப்பப்போ நமக்குப் பிடிச்சதைத் திருட்டுத்தனமா சாப்பிடறது ஒரு தனி சுகம்தானே மருமகளே, என்ன நான் சொல்றது?
சரி, இந்த ஊறுகாய் கதையை இதோட மறந்துடு. பங்கஜம் வந்தா இது எதுவுமே நடக்காத மாதிரி இருந்துக்கோ. என்னைக் காட்டி கொடுத்துடாதே.”
“மாமா... நான் காட்டிக்கொடுக்க வேண்டாம். நுணலும் தன் வாயால் கெடும்னு சொல்ற மாதிரி நீங்களே எல்லாத்தையும் உளறிட்டீங்க. அங்கே பாருங்க, அத்தை வந்து அஞ்சு நிமிஷம் ஆச்சு. நானும் அஞ்சு நிமிஷமா இங்கேயிருந்து சைகை காட்டிட்டே இருக்கேன். நீங்க ஊறுகாய் உலகத்துல இருந்ததால எல்லாத்தையுமே மறந்துட்டீங்க. எதையும் கவனிக்கல.”
குறும்பு செய்துவிட்டு பெரியவர்களிடம் மாட்டிக்கொண்டதும் அப்பாவியாக முழிக்கும் குழந்தை போல ராகவன் பங்கஜத்தைப் பார்த்ததும் அப்பாவியாக விழித்தார்.
“எப்போ நான் வெளில போவேன்னு காத்துட்டிருந்து ரெண்டு மருமககிட்டயும் இப்படித்தான் கேட்டுக் கேட்டு ஊறுகாய் சாப்பிடறீங்களா? என்னை ஏமாத்தறதுல உங்களுக்கு ஒரு சந்தோஷம், அப்படித்தானே?”
“உன்னை ஏமாத்தல பங்கஜம். உன்னை ஏமாத்த நினைப்பேனா? அப்படி நினைச்சாலும் அது நடக்குமா? நீ எவ்வளவு திறமைசாலின்னு தான் மருமககிட்ட சொல்லிட்டிருந்தேன். அப்படித்தானே மருமகளே?”
அத்தையையும், மாமாவையும் மஞ்சு பரிதாபமாகப் பார்க்க, அடுத்த பதினைந்து நிமிடங்களுக்கு பங்கஜத்தின் அர்ச்சனை தொடர்ந்தது. பரிதாபமாக முகத்தை வைத்துக்கொண்டு ராகவன் அதைக் கேட்டுக்கொண்டிருந்தார்.