சிறுகதை: தங்கைக்கு நீதி...!

பல ஆண்டுப் போராட்டம், இழப்புகள், அவமானங்களுக்குப் பின் நீதிமன்றத்தில் சொத்து உரிமை வென்ற ஒரு பெண்ணின் சிறுகதை
சிறுகதை | sister, sister's daughter and brother
சிறுகதை | sister, sister's daughter and brotherImage credit: Chatgpt
ச. சிவபிரகாஷ்

ச. சிவபிரகாஷ் - மேல்நிலை கல்வி மட்டுமே பயின்ற இவர், சுயமாகத் தொழில் செய்து வருகிறார். கதை, கவிதை எழுதும் ஆர்வ மிகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட கவிதைகளையும், பதினைந்து சிறுகதைகளையும் எழுதியுள்ள இவர், Pothi.Com மூலமாக மூன்று புத்தகங்களைச் சுயமாக வெளியிட்டுள்ளார். மேலும், Amazon Kindle-ல் சில மின்புத்தகங்களையும் வெளியிட்டுள்ளார். இவரது படைப்புகள் திண்ணை, சொல்வனம் மற்றும் சிறுகதைகள்.காம் போன்ற பிரபல இணைய இதழ்களிலும் வெளியாகியுள்ளன. 2026 தீபாவளிக்கு, பாரம்பரியம் மிக்க கல்கி - மங்கையர் மலர் மின்னிதழில் "80 களில் தீபாவளி எப்படி தான் இருந்தது?" என்னும் இவரது கவிதை முதல் முறையாக கல்கி ஆன்லைன் தளத்தில் வெளியாகியுள்ளது.

Updated on: 
MM strip
MM strip

இன்று நீதிமன்றத் தீர்ப்புக்காகக் காத்திருக்கிறாள் லட்சுமி. பல ஆண்டுப் போராட்டங்களுக்குப் பிறகு கிடைக்கப் போகும் இந்தத் தீர்ப்பை எதிர்நோக்கி, அன்றைய காலைப்பொழுதில் தான் எப்போதும் நம்பிக்கையோடு செல்லும் கபாலீஸ்வரர் திருக்கோயிலுக்கு வந்தாள். அம்பாளையும் சிவனையும் வழிபட்டு, பிராகாரம் சுற்றி வந்து, நவராத்திரி மண்டபத்தில் அமர்ந்தாள். தியானத்துக்காகக் கண்களை மூடியவளுக்கு, பழைய நினைவுகள் அலைகளாய் வந்து மோதின.

​1970-களின் நினைவுகள்:

​எழுபதுகளில், துறைமுகத்தில் சரக்குகளைக் கையாளும் தனியார் நிறுவனத்தில் குமாஸ்தாவாகப் பணிபுரிந்து வந்தான் பாபு. நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவன்; கொஞ்சம் மிடுக்கான தோற்றம் கொண்டவன். தினமும் காலை வேலைக்குச் செல்லும் வழியில் உள்ள ஒரே டீக்கடையில் டீ குடித்துவிட்டு, சிகரெட் பிடிப்பது அவனது வழக்கம். அதே நேரத்தில், அருகிலுள்ள நர்சரி பள்ளிக்கு டீச்சராகச் செல்லும் லட்சுமி அந்தக் கடையைக் கடந்து போவாள். அவளது அழகில் மயங்கிய பாபு, சில மாத முயற்சிகளுக்குப்பிறகு அவளது காதலைப் பெற்றான்.

​லட்சுமியின் தந்தை கட்டிய மூன்று மாடி அடுக்குக் குடியிருப்பில் இரண்டு வீடுகள் வாடகைக்கு விடப்பட்டிருந்தன. ஒரு வீட்டின் வாடகையை அம்மாவும், மற்றொன்றை அண்ணன் பாஸ்கரும் எடுத்துக்கொண்டனர்.

கீழ்த்தளத்தில் பாஸ்கரும் அவனது மனைவியும் வசித்தனர்; அவர்களுக்குக் குழந்தைகள் இல்லை. அதனால் அம்மாவும் லட்சுமியும் ஒரே வீட்டில் குடும்பமாக இருந்தனர்.

​ஒருநாள் லட்சுமியும் பாபுவும் தனிமையில் பேசிக்கொண்டிருப்பதைப் பாஸ்கர் பார்த்துவிட, வீட்டில் பெரும் களவரம் வெடித்தது. "வாழ்ந்தால் பாபுவோடுதான் வாழ்வேன்" என்று லட்சுமி உறுதியாக நின்றாள். வசதியைக் காரணம் காட்டி அம்மாவும் அண்ணனும் சம்மதிக்கவில்லை. வேறு வழியின்றி வீட்டைவிட்டு வெளியேறிய லட்சுமி, அருகிலிருந்த சிறிய கோயிலில் பாபுவைக் கரம் பற்றினாள்.

​சில மாதங்களில் லட்சுமி கருவுற்ற செய்தி அறிந்ததும், அம்மாவின் கோபம் கரைந்து பரிதவிப்பு பிறந்தது. மகளைப் பார்க்கத் துடித்த அம்மா, மகன் பாஸ்கரிடம் அனுமதி கேட்டாள்.

இதையும் படியுங்கள்:
சிறுகதை: இயற்கை கொடுத்த பரிசு!
சிறுகதை | sister, sister's daughter and brother

ஆத்திரமடைந்த பாஸ்கர், "நாமெல்லாம் வேண்டாம்னுதான் அந்த ஓடுகாலி போனாள். அப்புறம் எதுக்குப் பார்க்கணும்? உனக்குப் பாசம் விடலைன்னா போய்ப் பாரு. ஆனா, அந்த வீட்டு வாசற்படியை மிதிச்சிட்டா, திரும்ப இங்கே வந்து இந்த வாசற்படியை நீ மிதிக்க முடியாது" என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டான். மகனின் கோபத்துக்கு ஆளாகி, வயதான காலத்தில் தனக்கு ஏதேனும் ஆனால் யார் பார்ப்பது என்ற பயத்தில் அம்மா அமைதியானாள்; ஆனால் அவளது மனமெல்லாம் மகளைச் சுற்றியே இருந்தது.

​லட்சுமிக்குப் பெண் குழந்தை பிறந்தது. மகன் வேலைக்குச் சென்றதும், மருமகளுக்குத் தெரியாமல் போய் மகளையும் பேத்தியையும் பார்த்துவிட்டுச் செல்வதை அம்மா வழக்கமாக்கிக் கொண்டாள்.

இதை அறிந்த மருமகளும் அப்போது கருவுற்றிருந்தாள். "என்னைக் கவனிக்காமலும் சமையலுக்கு உதவாமலும் அடிக்கடி அங்கே போறாங்க" என்று பொறாமையால் கணவர் பாஸ்கரிடம் போட்டுக் கொடுத்தாள்.

​சினங்கொண்ட பாஸ்கர், "எச்சரித்தும் மகளைப் பார்க்கப் போகிறாயா?" என்று அம்மாவையே வீட்டை விட்டு வெளியேற்ற முயல, சத்தம்கேட்டு அக்கம்பக்கத்தினர் தலையிட்டுச் சமாதானம் செய்தனர்.

சில மாதங்களில் பாஸ்கரின் மனைவிக்கு ஆண் குழந்தை பிறந்தது. நீண்ட வருடங்களுக்குப் பிறகு அண்ணன் வீட்டில் பிறந்த முதல் ஆண் வாரிசைக் கண்டு லட்சுமிக்கும் மகிழ்ச்சி. "அண்ணன் என்ன சொன்னாலும், என் குழந்தையை வந்துப் பார்க்கலைனாலும் பரவாயில்லை; ஒரு எட்டு போய் அவன் குழந்தையை என் மருமகனைப் பார்த்துவிட்டு வருகிறேன்" என்றாள். பாபு தடுத்தும் கேட்காமல் சென்றாள். அண்ணன் பாஸ்கர் அவளை உள்ளே விடாமல் துரத்தினான். இதைத் தாங்க முடியாத அம்மா, மகனிடம் சண்டையிட்டுக் கோபித்துக்கொண்டு லட்சுமியுடனே வந்துவிட்டாள்.

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு லட்சுமிக்கு இரண்டாவது பெண் பிறந்தது. செலவீனங்கள் அதிகமானதால் குடும்பக் கஷ்டங்கள் தலைதூக்கின. அம்மா சேமித்து வைத்திருந்த வாடகைப் பணத்தை அவ்வப்போது கொடுத்துச் சமாளித்தாள். வருமானம் குறைவாக இருந்தாலும், அவர்களின் அன்பில் குறைவில்லை.

இதையும் படியுங்கள்:
சிறுகதை: ரியல் லைக்ஸ்?
சிறுகதை | sister, sister's daughter and brother

இரண்டு பெண்களும் வளர்ந்து, பாபுவின் தலை நரைத்த பிறகும் லட்சுமிக்கு மூன்றாவது பெண் பிறந்தாள். ஊர்ப் பேச்சின் நையாண்டியையும், அம்மாவின் ஆத்திரத்தையும் தாங்கிக்கொண்டு குடும்பத்தை நடத்தினர். கஷ்டத்தின் மத்தியிலும் இரண்டு மகள்களைக் கல்லூரி வரை எப்படியோ படிக்க வைத்தனர்; இளையவள் பள்ளியில் இறுதி ஆண்டு படித்து வந்தாள். இதில் நடுப்பெண்ணான பிருந்தா, சுட்டித்தனத்தோடு வாழ்க்கையின் யதார்த்தத்தையும் புரிந்துகொண்டு, பெற்றோருக்குத் துணையாகவும் ஆறுதலாகவும் நின்றாள்.

​மூத்த மகளுக்குத் திருமணம் செய்ய முடிவெடுத்தனர். தங்களது திருமணம் எளிமையாக நடந்ததால், மகளின் திருமணத்தையாவது விமர்சையாக நடத்த வேண்டும் என்று கடன் வாங்கிச் சிறப்பாகச் செய்தனர். ஆனால், விதி வேறுவிதமாக இருந்தது—திருமணமான இரண்டே மாதங்களில் மருமகன் விபத்தில் உயிரிழக்க, அந்தத் துக்கம் தாங்காமல் சில மாதங்களிலேயே மகளும் இறந்து போனாள். குடும்பம் நிலைகுலைந்தது.

கடன்காரர்களுக்குப் பதில் சொல்ல முடியாமல் தவித்த நேரத்தில், அம்மா சொல்லியபடி அண்ணன் பாஸ்கரிடம் சென்று மன்னிப்புக் கேட்டு உதவி கேட்டாள் லட்சுமி. வயதான காரணத்தால் சற்று நிதானப்பட்டிருந்த பாஸ்கர், "என் மகனுக்கு உன் இரண்டாவது பெண்ணைக் கட்டிக் கொடு" என்று நிபந்தனை வைத்தான். லட்சுமி சம்மதித்தாலும், பழைய அவமானங்களை மனதில் சுமந்திருந்த பிருந்தா கறாராக மறுத்துவிட்டாள். இதனால் உதவி செய்ய பாஸ்கரும் மறுத்துவிட்டான்.

இந்நிலையில் கம்பெனியில் இருந்து பாபுவை வயதைக் காரணம் காட்டி, பார்த்து வந்த வேலையை விட்டு அனுப்பி விட்டனர். இதனால்  குடும்பத்தில் கஷ்டம் அதிகமானது. 

இதை அறிந்து சில மாதங்களுக்குப் பிறகு, பாட்டியின் ஊக்குவிப்பால் பிருந்தா தன் தாயுடன் மாமா பாஸ்கரிடம் சென்று, நியாயமான சொத்தின் பங்கைப் பிரித்துக் கொடுக்குமாறு கேட்டாள்.

​இதைக் கேட்ட பாஸ்கர், லட்சுமியிடம் "உன் பொண்ணு படிச்ச திமிரில் கேள்வி கேட்கிறாளா? என்னை மிரட்டிப் பார்க்கிறீங்களா? என்கிட்டே இருந்து ஒரு நயா பைசா வாங்க முடியாது. கிளம்புங்க" என்று வெளியே அனுப்பினான்.

​சில நாட்களிலேயே வயது மூப்பால் அம்மாவும், கடன் சுமையும் மன அழுத்தமும் தாங்காமல் பாபுவும் தற்கொலை செய்து இறந்து விட குடும்பத்தினர் தலையில் இடி விழுந்தது போலானது.

பாபு தற்கொலை செய்துக்கொண்டதால் போலீஸ் கேஸாகி விடுகிறது. தற்கொலை வழக்கு விசாரிக்க வந்த காவல் ஆய்வாளர் சுரேஷ், பிருந்தாவின் கல்லூரித் தோழி சாந்தியின் இளைய அண்ணன்; திருமணமாகாதவர். வீட்டுக்கு வந்து குடும்பச் சூழலையும் காரணத்தையும் விரிவாக விசாரித்து, எந்தச் சிக்கலும் இல்லாமல் வழக்கை முடித்து வைக்க உதவினார்.

​சில மாதங்களில் குடும்பம் மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பியது. பிருந்தா ஒரு நிறுவனத்தில் கணக்காளராகப் பணியில் சேர, சாலை ரோந்துப் பணியில் இருந்த சுரேஷை அடிக்கடி சந்திக்கும் சூழல் உருவானது. இருவருக்கும் இடையே காதல் மலர, இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடந்தது.

​கணவர் சுரேஷின் வழிகாட்டுதலில், மாமா பாஸ்கரிடம் இருந்து தனது தாய்க்குச் சேர வேண்டிய சொத்துப் பங்கைச் சட்டப்பூர்வமாக மீட்டெடுக்க வழக்கறிஞர் மூலம் வழக்குத் தொடர்ந்தனர். சில மாதங்களாக நடந்த அந்த வழக்கின் தீர்ப்பு இன்று வரவிருக்கிறது.

​தியானத்திலிருந்து கண் விழித்த லட்சுமியின் அருகே வந்த வயதான மூதாட்டி ஒருவர், "உன் வேண்டுதல் நிறைவேறப் போகுது. கற்பகாம்பாளை நம்பினால் என்னிக்கும் கைவிட மாட்டா; இது சத்தியம்" என்று சொல்லிவிட்டுச் சென்றார். அம்பாளே நேரில்வந்து ஆசிர்வதித்ததுபோல உணர்ந்த லட்சுமி, மீண்டும் ஒருமுறை வணங்கிவிட்டுக் கிளம்பினாள்.

சிறுகதை | two old women meet in temple
சிறுகதை | two old women meet in templeImage credit: Chatgpt

காலை 11 மணி. நீதிமன்ற அறைக்கு வெளியே லட்சுமியும், பிருந்தாவும், சுரேஷும் காத்திருந்தனர். மறுபுறம், இதுவரை அனுபவித்து வந்த சொத்தும் அந்தஸ்தும் கைநழுவுமோ என்ற பதற்றத்திலும் சோகத்திலும் நின்றிருந்தான் பாஸ்கர்.

​நீதிபதி தீர்ப்பை வாசிக்கத் தொடங்கினார். "வாதி லட்சுமிக்கும் அவரது தாயாருக்கும் உரிய சொத்துக்களைப் பாஸ்கர் சட்டவிரோதமாக அபகரித்து அனுபவித்துவந்தது உறுதியாகிறது. குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் உரிய பங்கை மனுதாரருக்குத் திருப்பித் தந்து, ஆவணங்களை மாற்றித் தர வேண்டும். தவறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தீர்ப்பளித்தார்.

​பாஸ்கரின் கண்கள் கலங்கின. தான் காப்பாற்ற நினைத்தது கண்முன்னே கைமாறுவதைக் கண்டாலும், தாயையும் சகோதரியையும் அவமதித்ததும் அவர்களின் கண்ணீரும் அவன் மனசாட்சியைச் சுட்டன. தாமதமாகக் கிடைத்தாலும், நீதி நியாயத்தின் பக்கம் நின்றதை எண்ணி லட்சுமி நிம்மதிப் பெருமூச்சு விட்டாள்.

வெளியே வந்ததும் பிருந்தா நேராக மாமா பாஸ்கரிடம் சென்றாள். தலைகுனிந்து நின்ற அவரிடம் அமைதியாகப் பேசினாள்:

​"மாமா... இது படிப்புத் திமிர் இல்ல; நியாயத்துக்காகக் கேட்கிற உரிமை. அம்மாவை அன்னைக்கு நீங்க துரத்தினப்போ அவங்களுக்கு எவ்வளவு வலி இருந்திருக்கும்? அதைக் கேட்டு நாங்க எவ்வளவு துடிச்சிருப்போம்? போதும்... பட்ட அவமானங்களும் கஷ்டங்களும் போதும். நாங்க உங்களைப் பழிவாங்க வரலை; எங்க உரிமையைத்தான் மீட்டோம்.

​இத்தனை வருஷம் நீங்க கட்டிக்காத்த சொத்து போன வருத்தம் உங்களுக்கு இருக்கலாம். ஆனா, அது உங்க உடம்பை பாதிச்சிடக் கூடாது. எங்களை மன்னிச்சிடுங்க; உடம்பைப் பார்த்துக்குங்க. எங்களை உங்க வீட்டுல சேர்க்கலைனாலும் பரவாயில்லை. நாங்க எப்பவும் உங்களை மாதிரி இருந்ததில்லை; இருக்கவும் மாட்டோம். நீங்க எப்ப வேணும்னாலும் எங்க வீட்டுக்கு வாங்க; தங்கையை மனசார ஏத்துக்கிட்டு உரிமையா வந்து பாருங்க."

​தன்னை வெறுக்காமல் மன்னிக்கும் பெருந்தன்மையைக் கண்ட பாஸ்கரின் கண்கள் குளமாகின. வார்த்தைகள் வராமல் மௌனமாகத் தங்கையின் கையைப் பற்றி மன்னிப்புக் கோரினான்.

அதே நாள் மாலை. கபாலீஸ்வரர் கோயில் நவராத்திரி மண்டபத்தில், காலை சோகத்தோடு அமர்ந்திருந்த அதே இடத்தில், இப்போது பிருந்தாவும் சுரேஷும் அருகிருக்க மகிழ்ச்சியோடு அமர்ந்திருந்தாள் லட்சுமி.

​தன் குடும்பத்தைக் கைவிடாமல் காத்த இறைவனுக்கும், தான் பாட்டியாகப் போகும் செய்திக்கும் மனதார நன்றி சொல்லி எழுந்தனர். மருமகன், தான் அப்பா ஆகப்போகும் மகிழ்ச்சியைக் கொண்டாட, மாடவீதியில் உள்ள பிரபல உணவகத்தில் உணவருந்திவிட்டு வீடு செல்லலாம் என்று அழைத்தான் சுரேஷ். புன்னகையோடு அனைவரும் கிளம்பினர்.