

சென்னை கடற்கரையில் உள்ள ஓர் உணவகம். ஜில்லென்ற மாலைக் காற்று மேஜையில் ஆவி பறக்கும் மசால் தோசையும் ஃபில்டர் காபியும், பரிமாறப்பட்டன. பசியோடு இருந்த அப்பாவும், அண்ணன் கார்த்திக்கும் தோசையைப் பிக்கக் கையை நீட்டினார்கள்.
"யாரும் தொடாதீங்க!" - பிரியாவின் குரல்? எல்லாரும் கையைத் திரும்ப எடுத்துக்கொண்டார்கள். தன் ஸ்மார்ட்போனை உயர்த்தி, தோசையையும் காபியையும் விதவிதமான கோணங்களில் படம் பிடிக்கத் தொடங்கினாள் பிரியா.
"காபி ஆறிடப் போகுது. அப்பாக்கு ரொம்ப பசிக்குதுல்ல பிரியா.."
"இரு கார்த்தி! இந்த ஃபில்டர்ல லைட்டிங் சரியில்லை. அப்பா, நீங்க கொஞ்சம் தள்ளி உக்காருங்க... ஃபிரேம்ல உங்க தலை மறைக்குது!"
அவளது விரல்கள் வேகவேகமாகக் கோணங்களையும் ஃபில்டர்களையும் மாற்றிக்கொண்டிருந்தன. நிமிடங்கள் நகர்ந்தன. காபி குளிர்ந்துபோனது. தோசையின் சூடு தணிந்தது. ஒருவழியாகப் போட்டோ எடுத்து முடித்து இன்ஸ்டாகிராமில் பதிவேற்றிய பிறகே, குடும்பத்தினர் சாப்பிட அனுமதிக்கப்பட்டார்கள். ஆறிப்போன உணவைக் குடும்பத்தினர் அமைதியாகச் சாப்பிட்டு முடித்தார்கள்.
சாப்பிடும்போதும் பிரியாவின் கண்கள் தட்டிலில்லை; போன் திரையிலேயே நிலைத்திருந்தன. ஒவ்வொரு வினாடியும் திரையை 'ரீஃப்ரெஷ்' செய்து பார்த்துக்கொண்டிருந்தாள். "என்னம்மா?" அம்மா மெதுவாகக் கேட்டார்.
"பத்து லைக்தான் வந்துருக்கு. ச்சே... இந்த ஃபில்டர் போட்டுருக்கக் கூடாது. மூடு அவுட் ஆகுது!" - பிரியாவின் முகத்தில் அப்பட்டமான எரிச்சலும் ஏமாற்றமும் தாண்டவமாடின.
உணவகத்தை விட்டு வெளியே வந்து, அலைகள் ஓடிவரும் கடற்கரை மணலில் "வாயேன் பிரியா, கொஞ்ச நேரம் அலைகிட்டபோய் கால நனைச்சுட்டு உக்காரலாம்" என்று கார்த்திக் ஆசையாகக் கூப்பிட்டான்.
பிரியா அவனைக் கவனிக்காமல் போனை உயர்த்தினாள். "எல்லாரும் ஒண்ணா சேர்ந்து ஒரு ஃபேமிலி செல்ஃபி எடுத்திடலாம்! அப்பா, நீங்க கொஞ்சம் தள்ளி நில்லுங்க... அம்மா, நீங்க பின்னால வராதீங்க!"
அலையின் ஓசையையும், குடும்பத்தின் அருகாமையையும் அனுபவிக்க வேண்டிய அந்த மாலை நேரம், "சரியான செல்ஃபி"க்கான போராட்டக் களமாக மாறியது.
திடீரென்று... போன் திரை கறுப்பாகி, 'Battery 1% - Shutting Down' என்ற செய்தி தோன்றி மறைந்தது. போன் ஆஃப் ஆகிவிட்டது!. பிரியா பதறிப்போனாள். "அய்யோ... போன் ஆஃப் ஆயிடுச்சே! இன்னும் 50 லைக்ஸ் கூட வரலையே!" என்று ஆத்திரத்தோடு திரையைத் தட்டினாள். ஆனால், கறுப்புத் திரை வெளிச்சம் தராமல், ஒரு சிறிய கண்ணாடி போல அவளது சொந்த முகத்தையே பிரதிபலித்தது.
அந்தக் கறுப்புத் திரையில் தெரிந்தது ஃபில்டர்கள் இல்லாத அவளது நிஜ முகம்... சோர்ந்துபோன கண்கள், போலி புன்னகையின் களைப்பு, ஒப்பனைக்கு பின்னால் ஒளிந்திருந்த கவலை. பிரியா ஒரு கணம் உறைந்துபோனாள். மெதுவாகப் போனைக்கீழே இறக்கி, தலைநிமிர்ந்து எதிரே பார்த்தாள்.
அங்கே... ஈர மணலில் அப்பாவும் அம்மாவும் கைகோர்த்து நடந்து கொண்டிருந்தார்கள். ஒரு பெரிய அலை வந்து பாதங்களை நனைத்ததும், அம்மா அலற, அப்பா குழந்தையைப்போலச் சிரித்தார். பக்கத்தில் அண்ணன் கார்த்திக், சுடச்சுடச் சுண்டல் பொட்டலத்தோடு ஓடிவந்து, "பிரியா... உனக்காக சூடா சுண்டல் வாங்கிட்டு வந்திருக்கேன்" என்று அன்போடு நீட்டினான். அவள் மீது யாரும் கோபப்படவில்லை. அவளது எரிச்சலைதாண்டி, அங்கே நிபந்தனையற்ற அன்பு மட்டுமே நிறைந்திருந்தது.
அந்த நொடியில், சடாரென்று கடற்கரைக் காற்று அவளது முகத்தில் அறைந்தது. அலைகளின் ஓசை முதன்முறையாக அவளது காதுகளில் தெளிவாகக் கேட்டது.
பிரியா தன் கையிலிருந்த ஆஃப் ஆன போனை தன் ஹேண்ட்பேகிற்குள் ஆழமாகத் திணித்தாள்.
"கார்த்திக்... சுண்டலைக் குடு" என்றபடி, செருப்பைக் கழற்றிவிட்டு, ஓடிச்சென்று அலை நுரையில் கால்களை நனைத்தாள். அப்பா, அம்மாவின் கைகளைப் பிடித்துக்கொண்டு, பல மாதங்களுக்குப் பிறகு முதன்முறையாக மனதார உரக்கச் சிரித்தாள். திரையின் வெளிச்சத்தைக் காட்டிலும், குடும்பத்தினரின் இந்த புன்னகைதான் ‘ரியல் லைக்ஸ்!’ ('Real Likes!') என்று தெளிவாகப் புரிந்தது!