

“எனக்கு வேற வழியில்லை கீதாம்மா, சொன்னாப் புரிஞ்சுக்குங்க. நானும் என் மனசைக் கல்லாக்கிட்டுத்தான் உங்ககிட்டே இதைப் பேசிக்கிட்டிருக்கேன்..”
நிர்மல் நிதானமாக, உறுதியான குரலில் சொன்னான்.
கீதாவுக்கு, தான் அந்த ஹோட்டலில் வேலைக்கு சேர்ந்த, இருபது வருடங்களுக்கு முந்தைய அவன் நினைவுக்கு வந்தாள்.
“அப்போ நீ என் சேலையைப் பிடிச்சுக்கிட்டே இந்த ஹோட்டல் முழுக்க சுத்துவே. இனிப்பு பனியாரம்ன்னா உனக்கு உசிரு. நீ வந்தா என் கையால உனக்கு சுட்டுத் தருவேன். ரசிச்சு ரசிச்சு சாப்பிடுவே. அப்புறம் தேங்காய்ப் பாலு, நல்ல சூட்டோட தித்திப்பா இருந்தா ரொம்பப் பிடிக்கும் உனக்கு. இன்னும் இன்னும்ன்னு சொல்லி மூணு டம்ளர் சலிக்காம குடிப்பே.”
“பழங்கதை சொல்லி என்னைக் கொல்லாதீங்க கீதாம்மா..” நிர்மல் சலிப்பாக சொன்னான். “உங்களுக்கு நான் சொல்றது புரியலை. நான் இந்த ஹோட்டலை வேற மாதிரி மாத்த விரும்பறேன் கீதாம்மா. புதுசா, நவீனமா இந்தக் காலத்து ஜென்சீ ப்ளஸ் மாடல்ல.
முன்னாடி எலிவேசன் மாத்தி, ஹோட்டல் பெயரெல்லாம் ஸ்டைலாக்கி, இன்டீரியர் டிசைன்ல அசத்தி, பழைய மெனுவை தூக்கிக் கடாசிட்டு, புது ஐட்டம்ச இறக்கி.. இன்னைய தேதிக்கு ஏத்த மாதிரி புது உருவம் தர விரும்பறேன்...”
கீதா முகம் குறுகி பரிதாபமாக அவனைப் பார்த்தாள்.
“இப்போ இந்த ஹோட்டல் பிசினஸ் வேற லெவல்ல போயிட்டிருக்கு கீதாம்மா. காலத்துக்கு ஏத்த மாதிரி நாமளும் மாறலைன்னா ரொம்ப சீக்கிரம் காணாமப் போயிடுவோம்...”
“தம்பி...”
“உங்களோட சேர்த்து, கணக்கு வழக்கு பார்க்கிற சின்னச்சாமி அண்ணன், நிர்வாகம் கவனிக்கிற மேரி அம்மா, சமையல் உதவியாளர் செல்வாண்ணன்.. இப்படி நாப்பத்தி அஞ்சுக்கு வயசுக்கும் மேலான எல்லோரையும் உடனடியா நீக்கறேன். எனக்கு இந்த ஹோட்டல் வேற மாதிரி இருக்கணும். இளைய தலைமுறையோட லேட்டஸ்ட் ஐகானா இதை நான் மாத்த விரும்பறேன். புரிஞ்சுக்குங்க... வேற எந்த தப்பான எண்ணமும் இல்லை...”
கண்ணீரைத் துடைத்துக்கொண்டாள் கீதா. “இதை வேலை செய்யற இடமா நான் நினைக்கலைப்பா. இது இது என்னோட இன்னொரு தாய்வீடு!”
“நோ சென்டிமென்ட்ஸ் ப்ளீஸ். நஷ்டஈடா ஆளுக்கு ரெண்டு லட்சம் தர்றேன். சந்தோசமா, மனநிம்மதியோட போங்க. வருத்தம் வேணாம். அப்பாகிட்ட பேசி அவரையும் சம்மதிக்க வெச்சுட்டேன்.”
கீதா கை கூப்பினாள். அங்கிருந்து வெளியேறினாள். அவளைத் தொடர்ந்து அங்கே பல வருடங்களாக வேலை பார்த்த சிலரும் விலகினார்கள்.
பத்து தினங்கள் கடந்த நிலையில்..
வீட்டிலிருந்து காரில் ஹோட்டலுக்கு வந்து கொண்டிருந்தான் நிர்மல். காந்தி சிலை அருகே சிக்னலுக்காக காத்திருந்தான்.
போன் ஒலித்தது. எடுத்துப் பார்க்க.. பீட்டர்.
“பாஸ் ஃபால்ஸ் சீலிங்ல ஒரு சின்ன சேஞ்ச். நம்ம பழைய டிசைனோட ரா மெட்டீரில் கிடைக்கலை. அதனால அதைவிட சூப்பரா வேறொரு புது டிசைன் போட்டிருக்கேன். என்ன கொஞ்சம் காஸ்ட்லி. ஒன் லேக் எக்ஸ்ட்ரா ஆகுது.”
“பரவாயில்லை பீட்டர். ப்ரசீட் பண்ணிடு. பேங்க்லிருந்து லோன் அமவுன்ட் இன்னைக்கு அப்ரூவல் ஆகி வந்துடும், பார்த்துக்கலாம்...”
சிக்னல் க்ளியராகி வண்டியை நகர்த்தினபோது பத்துக்கு பத்து அளவில் வைக்கப்பட்டிருந்த அந்தப் பேனர் சட்டென கண்ணில்பட்டது.
‘நமது நகரில் ஒரு இனிய உதயம்! மாமியார் வீடு உணவகம்.. பாரம்பரிய வீட்டு சமையல் முறை’
பெரிய எழுத்தில் எழுதப்பட்டு... வண்டியை திருப்பும் அவசரத்தில் அதன் கீழே ‘உரிமையாளர் கீதா’ என இருந்ததைக் கவனிக்கத் தவறியிருந்தான் நிர்மல்.!