சிறுகதை: பேட்டி!

Tamil short story | Interview
Tamil short story | InterviewCredit: AI Image
Updated on
MM strip
MM strip

“சுஷ்மா.. உன்னை எம்.டி மேடம் கூப்பிடறாங்க.”

சுஷ்மா உள்ளே நுழைந்ததும், எம்.டி அமரச் சொல்லிச் சைகை காட்டினார். போனில் யாருடனோ பேசிக்கொண்டிருந்தவர், அழைப்பு முடிந்ததும் பேசத் தொடங்கினார்.

“சுஷ்மா, நீங்க பேட்டி காணப்போற ஆள் சாமானியப்பட்டவர் இல்லே. எதிரி நாட்டில் இருபது வருஷம் பிச்சைக்காரன், ரிக்‌ஷா ஓட்டி, ஆட்டோ டிரைவர் எனப் பல வேஷங்களில் உலவி, நம் தேசப் பாதுகாப்புக்கு பல முக்கியத் தகவல்களை அளித்துப் பத்திரமாகத் திரும்பியவர். உங்க கேள்விகள் அவரிடமிருந்து சுவாரஸ்யமான விஷயங்களைக் கறக்க வேண்டும்.”

“ஓகே மேடம்!”

சுஷ்மாவும் சாமானிய நிருபர் அல்ல; கொக்கி போட்டு விஷயத்தை வாங்கிவிடுவாள்.

சுப்ரமணிய ராஜுவின் அலுவலகத்தில் பலத்த பாதுகாப்பு. பெண் இன்ஸ்பெக்டர் ஒருவரால் பலத்த சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்பே சுஷ்மா உள்ளே அனுப்பப்பட்டார். உதவியாளர் ஒருவர் அறையை நோக்கிக் கைகாட்டி அவளை அமரச் சொன்னார்.

“உங்களுக்குப் பதினொன்று முப்பத்தி நாலுக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. சரியாக இருபது நிமிஷங்கள்தான்; அதற்குள் பேட்டியை முடித்துக்கொள்ள வேண்டும்.”

சரியாக 11:34 மணிக்கு அவளை உள்ளே அனுப்பினார்கள். சுப்ரமணிய ராஜு ஒரு விநாடி சுஷ்மாவை நிமிர்ந்து பார்த்துவிட்டு, அமரச் சொன்னார். வீடியோ எடுப்பவர் இருவரையும் கேமராவில் கவர் செய்தார்.

“வாங்க... உங்க கேள்விகள் நாட்டுப் பாதுகாப்பு சம்பந்தமாக இருக்கக் கூடாது. மற்றபடி என்ன வேண்டுமானாலும் கேளுங்கள்.”

சுஷ்மா அவருடைய தீர்க்கமான பார்வையின் வீச்சைத் தவிர்க்க முயன்றாள்.

“சார், நீங்க ஒரு ஐ.பி.எஸ் ஆஃபீஸர். இந்த உளவுத்துறையில் எந்த வருஷம் சேர்ந்தீங்க?”

“2006, ஜூன் 14. அப்புறம்... உங்க பத்திரிகையில் எத்தனை நிருபர்கள்?”

“பத்து பேர் இருக்கோம் சார்.”

“ம்... உங்க பணி கஷ்டமானதுதான். உண்மையை வெளிக்கொணரச் சிரமப்படுவீங்க. சென்சிட்டிவான விஷயங்களை ஆராய்ந்து உண்மைகளை வெளிக்கொண்டு வந்திருக்கீங்க. உங்களைப் பற்றி முழுமையாகத் தெரிந்து கொண்டேன். உங்களுக்கு அப்பா, அம்மா, ஒரு தங்கை. ஜர்னலிஸத்தில் பி.எச்.டி முடித்திருக்கீங்க. சில முக்கிய வழக்குகளின் பின்புலத்தை ஆராய்ந்து உண்மையை நிரூபித்திருக்கீங்க. அதில் மாமல்லபுரம் விடுதியில் இறந்த ஒரு பெண்ணின் மரணம் இயற்கையானது அல்ல, ‘போலோனியம்’ பயன்படுத்திச் செய்யப்பட்ட கொலைன்னு கண்டுபிடிச்சீங்க. குற்றவாளியும் அகப்பட்டான். பாராட்டுக்கள்!”

“தேங்க்யூ சார்!”

இதையும் படியுங்கள்:
குட்டிக் கதை: மீண்டும் ஒரு வசந்தம்!
Tamil short story | Interview

“அரசியல்வாதி ஒருத்தரின் மர்ம மரணத்தைப் பற்றி முன்னேற்றம் இல்லைன்னு நீங்க எழுதின கட்டுரை படிச்சேன். சில ‘லீட்’கள் சொல்றேன், நீங்களா எழுதற மாதிரி எழுதுங்க. அந்த வழக்கு ‘சால்வ்’ ஆக வாய்ப்பு இருக்கு.”

ஆர்வமாக அவர் சொன்னதைக் குறிப்பு எடுத்துக்கொண்டாள் சுஷ்மா. அப்போது வீடியோ எடுப்பதை நிறுத்தச் சொல்லியிருந்தார் ராஜு. உதவியாளர் வந்து நிற்க, “ஓகே மேடம், தேங்க்யூ. ஆல் தி பெஸ்ட்!” எனச் சொல்லி ஏதோ சைகை காட்டினார்.

உதவியாளர் வீடியோ எடுத்தவரிடம் கேமராவை வாங்கிச் சென்றார். பதிவானவற்றை ஆய்வு செய்வதற்காக.

சுஷ்மா அந்த வீடியோவை எம்.டி-யிடம் காட்ட, அவர் சிரித்தார். “என்ன சுஷ்மா, நீ அவரைப் பேட்டி கண்டியா? இல்லே அவர் உன்னைப் பேட்டி கண்டாரா? இருந்தாலும் சுவாரஸ்யமாகத்தான் இருக்கு. போய் அவர் சொன்ன டிப்ஸை வச்சு எழுது.”

சுஷ்மா, சுப்ரமணிய ராஜுவைப் பற்றிய வியப்பு இன்னும் அகலாமல் ஒரு பொம்மையைப் போல நடந்து சென்றாள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com