

“என்ன ரம்யா, இப்ப பார்த்திருக்கற வரனுக்கு என்ன குறைச்சல்? பையன் நல்ல வேலைல இருக்கான், நல்ல சம்பளம். குடும்பமும் நல்ல மாதிரியாத் தெரியறாங்க. இப்படி பார்க்கற வரனை எல்லாம் ஏதோ ஒரு காரணம் சொல்லி தட்டிக் கழிச்சுட்டே இருந்தா எப்பதான் கல்யாணம் பண்ணிக்கப் போறே?”
“அம்மா, நீங்க பார்த்திருக்கற பையன் நல்ல வேலையில இருக்கலாம். நல்லா சம்பளம் வாங்கறவனா இருக்கலாம். ஆனா எனக்கு ஏத்தவனா இருக்கானான்னு எப்படிக் கண்டுபிடிக்கறது? கொஞ்சம் பழகிப் பார்த்தாதானே ரெண்டு பேரோட எண்ணங்களும் ஒத்துப் போகுதா, வாழ்க்கை முழுக்க சேர்ந்து வாழ முடியுமா அப்படிங்கறது தெரியும். முன்னபின்ன பழக்கமே இல்லாத ஒருத்தனைக் கைகாட்டி கல்யாணம் பண்ணிக்கோன்னு சொல்றீங்க. சரியான புரிதல் இல்லைனா எங்களுக்குள்ள காதலே வளராதே மா. அப்புறம் கல்யாண வாழ்க்கை எப்படி நல்லதா இருக்கும்?”
“இப்போ என்னதான் பண்ணணும்னு சொல்றே?”
“எனக்கு டைம் கொடுங்க. நீங்க இப்போ பார்த்திருக்கற அந்த விக்ரமை நான் நேர்ல பார்த்துப் பேசணும். அவனைப் புரிஞ்சுக்க எனக்குக் கொஞ்சம் டைம் வேணும்.”
“எவ்வளவு நாள் வேணும்?”
“ஆறு மாசமாவது நானும் விக்ரமும் பழகிப் பார்க்கறோம். எனக்கும் அவனுக்கும் ஒத்துப்போகுதுன்னா நான் சொல்றேன். அப்போ கல்யாணம் பண்ணி வைங்க.”
“ஆறு மாசம் பழகி விக்ரம்கூட உனக்கு ஒத்துப் போகலைன்னா என்ன பண்றது?”
“சிம்பிள், கல்யாணம் வேண்டாம். அதுக்காகத்தானே பழகிப் பார்க்கறது.”
“என்ன ரம்யா பேசறே? பழகிப் பார்க்கறதுன்னா என்ன? டெய்லி நீயும் அவனும் வெளில சுத்துவீங்களா?”
“ஆமா, ஃபோன்ல பேசிப்போம். ஃப்ரெண்ட்ஸா பழகுவோம். அவனோட குணம் என்னன்னு நான் தெரிஞ்சுக்கறேன். என்னோட குணம் என்னன்னு அவன் தெரிஞ்சுக்கட்டும். எங்க ரெண்டு பேரோட டேஸ்ட், லட்சியம் இதெல்லாம் ஒத்துப் போகுதான்னு பார்ப்போம். வாழ்க்கை முழுக்க சேர்ந்து வாழப் போறோம். ஒருத்தருக்கு ஒருத்தர் ஒத்து வராம கல்யாணம் பண்ணிக்கிட்டு, வேண்டா வெறுப்பா காலத்தை ஓட்டினா எங்களுக்குள்ள லவ்வே இருக்காதே மா. காதலே இல்லாம கல்யாணம் பண்ணிட்டு நரக வேதனை அனுபவிக்க முடியுமா? அதான், ஆறு மாசம் பழகறதுலயே அவன் எனக்கு செட் ஆவானா இல்லையான்னு தெரிஞ்சுரும்.”
“எப்படி ரம்யா, ஆறு மாசம் பழகினதுக்கப்புறம் ஒத்து வரலைன்னா அப்படியே ஒதுங்கிட முடியுமா? அப்புறம் அடுத்த வரன் பார்க்கும்போதும் இதேதான் பண்ணுவியா? எந்த எதிர்பார்ப்பும் இல்லாம வரக்கூடியது தானே காதல். எங்க கல்யாணத்தன்னிக்கு தான் உங்க அப்பாவை நான் நேர்ல பார்த்தேன். அதுக்கு முன்னாடி ஃபோட்டோல மட்டும்தான் பார்த்திருந்தேன். இந்த மாதிரி அப்போ ஃபோன் வசதியும் கிடையாது. நான் அவர் ஃபோட்டோவைப் பார்த்தேன், அவர் என் ஃபோட்டோ பார்த்தாரு, அவ்வளவுதான். அப்பா அம்மா பார்த்தா சரியாதான் இருக்கும்னு நானும் கல்யாணத்துக்கு ஒத்துகிட்டேன். ஆரம்பத்துல அவரைப் புரிஞ்சுக்கறது கஷ்டமாதான் இருந்தது. ஆனா போகப்போக அவரோட குணம் எப்படின்னு நான் புரிஞ்சுகிட்டேன். நான் இப்படித்தான்னு அவர் புரிஞ்சுகிட்டாரு. கல்யாணமாகி முப்பது வருஷம் ஆச்சு. வருஷங்கள் கூடக்கூட எங்களுக்குள்ள காதல் அதிகமாயிட்டுதான் இருக்கு.
"நீ என்னன்னா, பார்க்கணும், பேசணும், புரிஞ்சுக்கணும். ஒத்து வரலைன்னா வேண்டாம்னு ஒதுக்கிட்டு அடுத்த வரன் பார்க்கணும்னு சொல்றே. அந்த மாதிரி வர காதல் உண்மையாவே இருக்காது ரம்யா.
என்னவோ, இந்தக் காலத்துப் பிள்ளைங்க நிறைய படிச்சிருக்கோம், எங்களுக்கு எல்லாம் தெரியும்னு சொல்றீங்க. ஆனா, என்ன, பார்த்து ஃபோன்ல மணிக்கணக்கா பேசி, ஆடம்பரமாக கல்யாணம் பண்ணிக்கிட்டு ஆறே மாசத்துல விவாகரத்துன்னு வந்து நிக்கறீங்க.
காதலோட உண்மையான அர்த்தமே தெரியாம இருக்கீங்களே. நான் நானா இருக்கறதை அப்படியே அவர் ஏத்துக்கறதும், அவர் அவரா இருக்கறதை நான் அப்படியே ஏத்துக்கறதும் காதல். அப்புறம் அந்தக் காதலுக்காக ஒருத்தருக்கு ஒருத்தர் விட்டுக் கொடுத்து, சில விஷயங்களை அனுசரிச்சு, அவங்களுக்காக நம்மளைக் கொஞ்சம் மாத்திக்கிட்டு வாழும் போது அந்தக் காதல் இன்னும் ஆழமா வேர்விட்டுப் படர்ந்துருது. அதுதான் உண்மையான காதல். என் அறிவுக்கு எட்டினதை சொல்லிட்டேன். யோசிச்சுக்கோ ரம்யா.”
காணாமலே வந்த காதலின் ஆழத்தைப் பற்றி அம்மா சொன்னதைக் கேட்ட ரம்யாவுக்கு ஆச்சரியமாக இருந்தது. அம்மா பேசுவது பத்தாம்பசலித்தனமாக இருக்கும் என்று எப்போதும் சொல்லும் ரம்யாவை, இந்த விளக்கம் யோசிக்க வைத்தது.